Tuesday, September 3, 2013

கணவனும் மனைவியும் ஒரு வரைவிலக்கணம்


அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் கூறுகிறான் : அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்று, உங்களிலிருந்தே உங்களுக்குரிய சோடியைப் படைத்திருக்கின்றான், ஒருவர் மற்றவரிடத்தில் அமைதியை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அவன் உங்களுக்கிடையில் அன்பையும் அருளையும் ஏற்படுத்தினான், சிந்திப்பவர்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. -  ரூம் - 21

இந்த அல் குர்ஆன் வசனம் கணவன், மனைவி என்ற இரு பாத்திரங்களுக்குமான வரைவிலக்கணங்களை முன்வைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

இங்கு கணவன் மனைவி இருவருக்குமிடையில் பரிமாறப்பட வேண்டிய மூன்று முக்கிய அம்சங்களை இவ்வசனம் அடையாளப்படுத்துகின்றது.

முதலாவது: அமைதியளித்தல்.

இரண்டாவது: அன்பு.

மூன்றாவது: அருள்.

இந்த இடத்தில் அன்பு, அருள் என்ற இரு சொற்கள் குறித்து சற்று விளக்கிச் செல்வது பொறுத்தம் என்று நினைக்கிறேன்,  அன்பு என்பது மவத்தா என்ற அறபுச் சொல்லாலும் அருள் என்பது ரஹ்மா என்ற அறபுச் சொல்லாலும் குறிக்கப்பட்டுள்ளன. இந்த இரு சொற்களையும் வேறுபடுத்துகின்ற போது இமாம்கள் பலகோணங்களில் விளக்கங்களை முன்வைத்திருக்கிறார்கள் எனினும் அவற்றில் ஒரு விளக்கத்தை மட்டும் குறித்துக் காட்ட விரும்புகிறேன்.

சமதரத்தில் இருக்கின்ற இருவருக்கு மத்தியில் நடக்கின்ற பரிமாற்றத்திற்குப் பெயர் மவத்தா. அந்தவகையில் இங்கு ஊடல்கள் இருக்கும், சிறு சிறு சண்டைகள் இருக்கும், நீங்கள் தரவில்லை எனவே நானும் தர மாட்டேன் போன்ற பொய்க் கோபங்கள் இருக்கும்.

ஒருவர் மானசீகமாய் உயர்ந்து நின்று மற்றவரைக் கருணைக் கண்ணோடு பார்த்து வழங்குகின்ற அன்புக்குப் பெயர் ரஹ்மா. அந்த வகையில் இங்கு தவறுகளும் மன்னிப்போடு பார்க்கப்படும், உரிமைகளும் விட்டுக் கொடுப்போடு பார்க்கப்படும், குறைகளும் தயாளத்துடன் பார்க்கப்படும், இங்கு அரவணைப்பும் ஆறுதல் வார்த்தைகளும் வருடிக் கொடுப்புகளும் மேலோங்கியிருக்கும்.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அம்சங்களும், அதாவது அமைதியளித்தல், அன்பு, அருள் என்பனவே, கணவன் அல்லது மனைவி என்பதற்கான வரைவிலக்கணமாகும்.

ஏனெனில் மேற்குறிப்பிட்ட அல்குர்ஆன் வசனத்தில் சோடி என்ற மொழிபெயர்ப்பைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல் " ஸெளஜ் " என்பதாகும். மொழியில் இந்த சொல் கணவன் அல்லது மனைவி என்ற கருத்தைக்கு குறிக்கும்.

இங்கு அல்லாஹ்தஆலாவின் மொழிப்பிரயோகத்தில் ஒரு நுணுக்கம் இருக்கின்றது, அமைதியை அடைந்து கொள்ளும் வகையில் ஆணையும் பெண்ணையும் படைத்தான் என்று சொல்லாமல் கணவனையும் மனைவியையும் படைத்ததான் என்றுதான் கூறியிருக்கிறான்.

இதன் மூலம் கணவனாகவும் மனைவியாகவும் தொழிற்படுதல் என்பதன் பொருள் அமைதியளித்தலும் அன்புப் பரிமாற்றமும், அருள் பரிமாற்றமுமாகும் என்கிறது.

அவர்கள் இருவரிடையே இந்தப் பரிமாற்றங்கள் காணப்படாவிட்டால் அவர்கள் கணவன் மனைவியன்றி வெறுமனே ஒரு ஆணாகவும் பெண்ணாகவும் மாத்திரமே இருப்பார்கள் என்பதே இந்த வசனத்திலிருந்து புரிந்து கொள்ளும் கருத்தாகும்.

No comments:

Post a Comment