Thursday, September 19, 2013

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும்
திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதரர்களும் சகோதரிகளும் விடை தேட வேண்டிய முக்கியமான ஐந்து கேள்விகள் காணப்படுகின்றன. அவை எப்போது, ஏன், யார், எங்கே,எவ்வாறு?  என்ற கேள்விகளாகும். இவற்றிற்கு மிகச் சரியாக விடையளிக்கின்ற பொழுது, அவர்களிடம் திருமணத்திற்கான முறையான ஒரு திட்டம் தயாராக இருக்கும். இவ்வாறான ஒரு திட்டம் இளமையின் ஆரம்பப் பருவத்திலேயே காணப்படுவது, மிகவும் வரவேற்கத்தக்கதாகும். நபியவர்கள் கூறினார்கள், ஒருவன் தனது இளமைப் பருவத்தின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்கின்ற பொழுது,  ஷைத்தானுக்குரிய பாதை தடை செய்யப்பட்டு விடுகிறது. அப்போது ஷைத்தான் சொல்லுவான் ஐயோ,  எனக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விட்டதே. இவன் என்னிடத்திலிருந்து தனது மார்க்கத்தின் மூன்றில் இரண்டு பகுதியை பாதுகாத்துக்கொண்டு விட்டானே,  மீதமுள்ள மூன்றில் ஒன்றில் அவன் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும் என்பான். – தபரானி -
இந்த ஹதீஸ் இளமைப் பருவத்தின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்வதன் முக்கியத்துவத்தையும் அதன் பயனையும் வலியுறுத்துகிறது. அந்தவகையில் அதற்கான திட்டமும் ஆரம்பத்திலேயே அமைவது மிகவும் பயனுள்ள ஒரு விடயமாக இருக்கும்.
கடந்த அமர்வுகளில் எப்போது என்ற கேள்விக்குப் பதில் தேடும் போது,  அங்கு திருமண வயது குறித்தும்,  பொருளாதார வசதிகள் குறித்தும் சில விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இன்றைய அமர்வில்,  திருமணத்திற்காக சகோதரிகள் பெற்றிருக்க வேண்டிய முதிர்ச்சி நிலை தொடர்பில் சற்று கவனம் செலுத்தலாம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் இன்றைய அமர்வு சகோதரர்களை விடவும் கூடுதலாக சகோதரிகளுக்கு அதிகம் பயனளிக்கலாம் என நினைக்கிறேன்.
எம்மில் சில பெற்றோர்கள், தமது பெண் பிள்ளைகளை,  வீட்டில் இளவரசி போல் வளர்க்க முற்படுகின்றனர். வீட்டில் அவர்களாக எதையும் செய்ய மாட்டார்கள். மாற்றமாக எல்லாமே அவர்களுக்கு செய்து கொடுக்கப்படும். மற்றும் சில வீடுகளில் அவள் இன்னும் சின்னப் பிள்ளை என்ற மனோநிலை பெற்றோர்களிடத்தில் காணப்படும். சில சமயம் தமது பிள்ளை இருபத்தி ஐந்து வயதைக் கடந்த பின்னரும் இதே மனநிலையுடன் இருப்பவர்கள் இன்னும் காணப்படுகிறார்கள்.  இன்னும் சில வீடுகள்,  மகள் படிக்கிறாள் அவளை சிரமப்படுத்தக் கூடாது என்று அவளது போக்கிலேயே அவளை விட்டு விடுகிறார்கள்.
இந்த மூன்று நிலைகளுமே பிள்ளை வளர்ப்பில்,  குறிப்பாக பெண் பிள்ளை வளர்ப்பில் விடப்படுகின்ற தவறு என்பதை அவர்கள் உணரத் தவறி விட்டிருக்கிறார்கள்.
இன்றைய மிக முக்கிய பிரச்சினை, ஒரு புறத்தில் இன்றைய திறந்த உலகம் இளைஞர்களிடத்திலும் யுவதிகளிடத்திலும் காதலையும் காமத்தையும் ஆரம்பப் பருவத்திலேயே தூண்டி விடுவதில் பெரும் பங்களிப்புச் செய்கின்றது. ஆனால் மறுபுறத்தில் குடும்ப வாழ்வை ஒரு பொறுப்பாகச் சுமந்து,  வீட்டை நிர்வகிக்கும் திறன் கொண்டவர்களாக அவர்கள் தயார்படுத்தப்படுவதில்லை. எனவே, இளைஞர்கள் திருமணத்தை வெறுமனே காதலாகவும் காமமாகவும் மாத்திரமே பார்க்கப் பழகியிருக்கிறார்கள்.  அதனை ஒரு பொறுப்பாகப் பார்ப்பதில்லை. இந்த இடைவெளியை பாடசாலைகளோ, பல்கலைக்கழகங்களோ நிரப்பியதாகத் தெரியவில்லை. பள்ளிவாயல்களும் நிச்சயமாக நிரப்பவில்லை. ஊடகங்கள் இடைவெளியை இன்னும் அதிகரிக்கவே உதவுகின்றன. வீடுகளும் அந்தப் பணியை சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டன என்பதைத்தான் நான் மேலே அடையாளப்படுத்திக் காட்டிய பெற்றோர்களின் மனோநிலைகள் சொல்கின்றன.
திருமணம் என்பது ஒரு பொறுப்பு. குடும்ப வாழ்வு என்பது ஒரு பொறுப்பு. நிச்சயமாக அந்தப் பொறுப்பை நாம் மிகச் சரியாக நிறைவேற்றினோமா?  என்பது குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம். அல்லாஹ்தஆலா கூறுகிறான் ஈமான் கொண்டவர்களே,  உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்…” (தஹ்ரீம் - 06) நரகத்திலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வது மாத்திரமல்ல எனது குடும்பத்தைப் பாதுகாத்துக் கொள்வதும் எனது பொறுப்பாகும் என்று இந்த அல்குர்ஆன் வசனம் கூறுகிறது.
நபியவர்கள் கூறினார்கள் நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். உங்கள் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவீர்கள். ஒரு ஆண் தனது குடும்பத்திற்குப் பொறுப்பானவன். ஒரு பெண் தனது கணவனுடைய வீட்டிற்கும் அவனது பிள்ளைகளுக்கும் பொறுப்பானவள். இவர்கள் தமது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்கள்.” – புஹாரி-
இந்த ஹதீஸ் மிகத்தெளிவாக குடும்பப் பொறுப்பை வலியுறுத்துகிறது. இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வி இதுதான். குடும்பம் ஒரு பொறுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எமது இளைஞர்களும் யுவதிகளும் அந்தப் பொறுப்பை சுமக்கத் தகுதியானவர்களாக காணப்படுகிறார்களா?
இங்குதான் முதிர்ச்சி என்ற கருதுகோள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த விடயத்தில் வீடுகளின் பங்களிப்பு தான் மிகவும் முக்கியமானது. இளைஞர்களிடத்தில் இந்த முதிர்ச்சியை உருவாக்குவதற்கான உழைப்பு என்ற காரணி குறித்து கடந்த அமர்வில் விரிவாக கலந்துரையாடினோம். இந்த அமர்வில் சகோதரிகளின் பக்கம் சற்று கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது.
பொதுவாக வீட்டினுள்ளே ஒரு பெண்ணின் பாத்திரம் குறித்து இஸ்லாம் வலியுறுத்தியுள்ள சில உண்மைகளை உதாரணத்திற்காகத் தருகிறேன்.
நபியவர்கள் கூறினார்கள் ஒரு அடியான் இந்த உலகில் பெற்றுக் கொள்ளக்கூடிய மிகவும் பயனுள்ள பொருள் ஸாலிஹான மனைவியாகும். அவளைக் காண்கின்ற போதே அவன் சந்தோஷம் கொள்வான். அவன் வீட்டில் இல்லாதபோது, தன்னையும் தனது கணவனது செல்வத்தையும் பாதுகாப்பாள்என்றார்கள்.
இந்த ஹதீஸ் சொல்லுகின்ற சில உண்மைகளை அவதானியுங்கள்.
-           மனைவி என்பவள் ஆணுக்குப் பயனளிக்கக் கூடியவளாகக் காணப்படல் வேண்டும். ஆணுடைய வாழ்வுக்குப் பாரமானவளாகவன்றி அவனுக்கு உந்துசக்தியாய் இருக்க வேண்டும். அவனுடைய வாழ்வை முழுமைப்படுத்துபவளாக இருக்க வேண்டும்.
-           இத்தகைய ஒரு பயனுள்ள மனைவியைத்தான் ஸாலிஹான மனைவி என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.
-           கணவனுக்குப் பயனளித்தல் என்பதன் பொருள் என்ன? அல்லது ஸாலிஹான மனைவி என்பதன் பொருள் என்ன என்பதை இந்த ஹதீஸ் மூன்று கோணங்களில் விளங்கப்படுத்துகிறது.
1.         அவளைப் பார்த்தாலேயே சந்தோசம் வரும்,  இங்கு சந்தோஷம் என்பது வெறுமனே புற அழகில் மாத்திரம் தங்கியிருக்கும் ஒரு விடயமல்ல. மனைவியின் புற அழகு கணவனைப் பொறுத்தவரை முக்கியமானதுதான். ஆனால் கணவனின் சந்தோஷம் அதில் மாத்திரம் தங்கியிருக்க மாட்டாது. மாற்றமாக அந்தப் பெண்ணின் நடத்தை,  பேச்சு,  வீட்டை சுத்தமாக வைத்திருத்தல்,  பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்த்தல் என்ற பல விடயங்களில் தங்கியிருக்கிறது. வீட்டின் அசுத்தமும் ஒழுங்கீனமும் கணவனின் கோபத்திற்கும் அமைதியின்மைக்கும் ஒரு முக்கிய காரணம் என உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுவார்கள். வீட்டில் கணவன் சந்தோஷமாக இருப்பதே சமூக வாழ்வில் அவனை ஒரு சிறந்த தலைவனாக மாற்றுகிறது. இதனைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. அருளாளனின் அடியார்கள் சொல்வார்கள் எமது இரட்சகனே, எமது மனைவி பிள்ளைகள் மூலம் எமக்கு கண்குளிர்ச்சியை ஏற்படுத்துவாயாக. எம்மை முத்தகீன்களுக்கு தலைவர்களாகவும் ஆக்கி வைப்பாயாக”- புர்கான் 74-
2.         அடுத்து கணவன் உடன் இல்லாத சமயங்களில் அவள் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடியவளாகக் காணப்படல் வேண்டும். இங்கு தன்னைப் பாதுகாத்தல் என்பது ஒழுக்கம் சம்பந்தப்பட்டது என்பது போல்,  சூழ்நிலைகளை வெற்றி கொள்ளும், திறனையும் குறித்து நிற்கின்றது.
3.         கணவனது சொத்துக்களைப் பாதுகாக்கக் கூடியவளாகக் காணப்படல் வேண்டும். இங்கு சொத்துக்களைப் பாதுகாத்தல் என்பது, வீண்விரயம் என்ற பண்பு காணப்படக் கூடாது என்ற கருத்து மாத்திரமன்றி, சொத்துக்களை நிர்வகித்தல்,  மேற்பார்வை செய்தல்,  பாதுகாத்தல்,  வளர்த்தல் என்ற எல்லாக் கருத்துக்களையும் குறித்து நிற்கிறது.
எனவே,  ஸாலிஹான மனைவி என்பவள் அல்லது கணவனுக்குப் பயனளிப்பவள் வீட்டில் அவனுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அளித்து அவனை சமூக வாழ்வில் சாதிக்க வைப்பவள். கணவன் உடன் இல்லாத போதும்,  தனது ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் காத்து நிலைமைகளை சமாளிக்கத் தெரிந்தவள். கணவனது சொத்துக்கள் அழிந்து விடாமல் நிர்வகிக்கத் தெரிந்தவள்.
இங்கு உதாரணத்திற்காக ஒரு ஹதீஸ் மாத்திரமே குறித்துக் காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் பணியை விளங்கப்படுத்தக் கூடிய இது போன்ற பல நூறு ஹதீஸ்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் எங்களுக்குச் சொல்லும் உண்மை இதுதான்.
மனைவி என்ற பாத்திரம் மிகவும் பொறுப்பு வாய்ந்த ஒரு பாத்திரம். அதனை சுமக்கத் தகுதியான முதிர்ச்சியை இன்றைய சகோதரிகள் பெற்றுக்கொள்வதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை வழங்குகின்ற இடங்களாக எமது வீடுகள் மாற வேண்டும்.
அனஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள்,  ஸஹாபாக்கள் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்போது,  அவள் தனது கணவனுக்குப் பணிவிடை செய்வது பற்றியும், கணவனுடைய உரிமைகளைக் காப்பது பற்றியும், பிள்ளைகளை வளர்ப்பது பற்றியும் அவளுக்குக் கற்றுக் கொடுப்பார்கள் என்றார்கள்.
எனவே,  ஒரு பெண்ணை குடும்ப வாழ்க்கைக்குத் தயார்படுத்துகின்ற பணி குடும்பங்களையே சார்கின்றது. அந்தவகையில் ஒரு குடும்பம் தனது பெண் பிள்ளையிடம் முதிர்ச்சியை ஏற்படுத்துவதற்கான சில ஆலோசணைகளைக் கீழே தருகிறேன்.
•           சிறுபராயம் முதலே பெண் பிள்ளைகளை வீட்டு வேலைகளில் இணைத்துக் கொள்வது முக்கியமானது. இந்த விடயத்தில் தாயின் பணியே முதன்மையானது.
•           பிள்ளை சற்று வளர்கின்ற போது,  வீட்டின் நிர்வாக விடயங்களிலும் அவர்களைப் பங்கெடுக்கச் செய்யுங்கள். குறிப்பாக வீட்டின் நிதியை நிர்வகிக்கின்ற விடயத்திலும் அவர்கள் பங்கு கொள்வது சிறந்தது.
•           குடும்பத்தின் கஷ்டங்கள்,  பிரச்சினைகள் போன்றவற்றை முழுமையாக பிள்ளைகளை விட்டு மறைக்காதீர்கள். பிரச்சினைகளின் ஆழ அகலங்களை அவர்களது வயதிற்கு ஏற்ப புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமளியுங்கள்.
•           குடும்ப விவகாரங்களில் தீர்மானம் மேற்கொள்கின்றபோது அவர்களது கருத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள். சில சமயங்களில் வளர்ந்தவர்களின் கருத்துக்களை விடவும் அவர்களது கருத்து பெறுமதி வாய்ந்ததாக அமையவும் வாய்ப்பிருக்கிறது.
•           சில சமயங்களில் ஓரிரு தினங்கள் தாய் வீட்டில் இல்லாதிருந்து வீட்டின் முழுப் பொறுப்பையும் மகளிடத்தில் ஒப்படைத்துப் பாருங்கள். வீட்டின் நிர்வாகத்தை அவள் சிறந்து புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக இது காணப்படும். குறித்த நாட்களில் உங்கள் மகளின் சாதனையை கட்டாயம் பாராட்டுங்கள். ஏன் பரிசில்கள் கூட வழங்கி கௌரவிக்கலாம்.
•           திருமண வயதை நெருங்குகின்ற பொழுது சில மாதங்களுக்கு வீட்டின் பொறுப்பை முழுமையாக மகளிடத்தில் ஒப்படைத்துப் பார்க்க வேண்டும். அங்கு விடப்படும் தவறுகள் கண்டிப்பாக சிறந்த முறையில் சுட்டிக் காட்டப்பட்டு திருத்தப்படல் வேண்டும்.
•           திருமணம்,  கணவன், குடும்ப வாழ்க்கை போன்றனவற்றில் கற்பனையான ஒரு உலகிலேயே அதிகமான யுவதிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்வின் யதார்த்தத்தைப் புரிய வைப்பது தாயின் மீது காணப்படும் ஒரு முக்கிய பொறுப்பாகும். இதற்காக உங்கள் மகளுடன் கருத்துப் பரிமாறுவதற்கான சந்தர்ப்பங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். சமயலறையில் இணைந்து வேலை செய்யும் சந்தர்ப்பங்கள் இதற்கு மிகவும் பொறுத்தமானவை.
•           இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விடயம் என்ன தெரியுமா?  வீட்டில் தாய் ஒரு சிறந்த முன்மாதிரியாய் நடந்து கொள்வதாகும். தாய்மார்களே,  நீங்கள் ஒரு சிறந்த மனைவியாய் தொழிற்பட்டால் உங்கள் மகள் ஒரு சிறந்த மனைவியாய் செயற்படுவதை உங்களிடம் கற்றுக் கொள்வாள். நீங்கள் வீட்டை சிறந்து நிர்வகித்தால் உங்கள் மகளும் உங்களைப் பார்த்துக் கற்றுக் கொள்வாள். குறிப்பாக உங்கள் கணவன் மீதான கோபங்களை உங்கள் மகளின் முன்னே வெளிப்படுத்தாதீர்கள்.
திருமணத்திற்குத் தயாராகக் காத்திருக்கும் சகோதரிகளே,  கடைசியாக உங்களிடம் சில விடயங்களைச் சொல்ல வேண்டும். உண்மையில் இந்தப் பத்தியை உங்களை நோக்கி மாத்திரமே எழுதியிருக்க வேண்டும். ஆனால் இந்தத் தலைப்பு உங்களுடன் தொடர்புபடுவதுபோல் உங்கள் குடும்பத்துடனும் தொடர்புபடுவதால் குடும்பத்தை நோக்கி அதிகமாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனாலும் இங்கு பேசப்பட்டுள்ள எல்லா விடயங்களும் உங்களைச் சுற்றித்தான் சுழலுகின்றன. இந்த மாற்றங்கள் அனைத்தும் உங்களில்தான் ஏற்பட வேண்டும். இந்த முதிர்ச்சியும் அனுபவமும் பெற்றவர்களாக மாற வேண்டியவர்கள் நீங்கள்தான்.
இந்த மாற்றங்களின் ஆரம்பத் திறவுகோள் எது என்று கேட்கிறீர்களா?
நிச்சயமாக உங்களுடைய உளரீதியான தயார்நிலையே இங்கு மிகவும் அவசியமானதாகும். அல்லாஹ்தஆலா கூறுகிறான் ஒரு சமூகம் தனது உள்ளத்தை மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ் அந்த சமூகத்தை மாற்றப் போவதில்லை” (ரஃத் - 11) எனவே. மாற்றம் ஆரம்பிக்க வேண்டிய இடம் உங்களது உள்ளம். குடும்ப வாழ்வை சுமக்கத் தகுதியான ஒரு பெண்ணாக நான் மாற வேண்டும் என்ற விருப்பம் இருக்கின்ற பொழுது நிச்சயமாக நல்ல மாற்றத்தைக் கண்டுகொள்வது சாத்தியமாகிறது. மாத்திரமன்றி,  அதற்கான உண்மையான ஈடுபாடும் உங்களிடத்தில் காணப்பட வேண்டும். உள்ளத்தில் விருப்பமும் உண்மையான ஈடுபாடும் காணப்படுகின்ற போது நிச்சயமாக குடும்ப வாழ்வை சுமக்கத் தகுதியான ஒரு பெண்ணாக நிச்சயம் நீங்கள் மாறுவீர்கள்.
அடுத்ததாக, மற்றொரு விடயம் பற்றியும் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் செல்வது பொறுத்தம் என்று நினைக்கிறேன். குடும்ப வாழ்வுக்கான முதிர்ச்சியைத் தருவதில் தொழில் அல்லது வருமானம் உழைத்தல் எனும் செயற்பாட்டிற்கு ஒரு முக்கிய பங்கிருக்கிறது. இது சகோதரர்களுக்கு மாத்திரமன்றி நிச்சயமாக சகோதரிகளுக்கும் பொறுந்தும். அந்தவகையில் ஆரம்பம் முதலே வருமானத்திற்கான ஒரு உழைப்பு உங்களிடத்தில் காணப்படுவது சிறந்தது. நிச்சயமாக குடும்பத்திற்காக செலவு செய்தல் கணவனின் கடமைதான். இருப்பினும் இன்றைய வாழ்வொழுங்கில் குடும்பப் பாரத்தை சுமப்பதில் மனைவிக்கும் ஒரு பங்கு காணப்படுவது சிறந்தது.
பூபக்ர் (றழி) அவர்களின் மகள்,  அஸ்மா (றழி) அவர்கள் தனது கணவருடன் இணைந்து குடும்ப பாரத்தை சுமந்திருக்கிறார்கள். ஒரு தடவை இரண்டு அன்ஸாரிப் பெண்கள் நபியவர்களிடம் வந்து எங்களது ஸதகாவை கணவருக்கு வழங்கலாமா?  எனக் கேட்டபோது,  நபியவர்கள் ஆம் எனப் பதிலளித்ததுடன்,  அவர்களுக்கு இரண்டு வகையான கூலி கிடைக்கும் என்றார்கள். ஒன்று உறவைப் பேணிய கூலி. மற்றது ஸதகா செய்த கூலி என்றார்கள். புஹாரி-
எனவே, ஒரு பெண்ணின் உழைப்பு என்பது வாழ்க்கை பற்றிய அனுபவத்தையும் முதிர்ச்சியையும் அவளுக்கு வழங்குகிறது என்பதற்கப்பால் கணவனுடன் இணைந்து குடும்ப செலவை சுமக்கக்கூடிய தகைமையையும் அவளுக்கு வழங்குகிறது.
சகோதரிகளே,  இந்த அனைத்து தகைமைகளுடனும் நீங்கள் குடும்ப வாழ்க்கைக்குள்ளே நுழைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்


No comments:

Post a Comment