Monday, April 4, 2016

திருமணத்தில் தெரிவும் பொறுத்தப்பாடும்

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் விடை தேட வேண்டிய கேள்விகளுள் யார்என்ற கேள்வி குறித்தே கடந்த பத்திகளில் கலந்துரையாடி வருகின்றோம். இன்று அந்தக் கேள்வியின் மற்றொரு பதிலான பொறுத்தப்பாடு என்ற காரணி குறித்து சற்று உரையாடலாம் என்றிருக்கிறோம்.

குடும்பவியல் அறிஞர் அக்ரம் ரிழா அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு தடவை என்னிடம் வந்த ஒருவர், ‘தான் திருமணம் செய்யும் போது,  என்னை விடவும் தரத்தில் குறைந்த ஒரு பெண்ணையையே தெரிவு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அவளை எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்என்றார். அவரது வார்த்தைகள் எனக்கு சிரிப்பை வரவழைத்தன.

 பொறுத்தப்பாட்டுப் பண்புகளில் ஆண் மேலே இருக்க வேண்டுமா? பெண் மேலே இருக்க வேண்டுமா? என்ற விவாதத்தைத் தாண்டி,  திருமணம் என்பதை ஒரு ஆணும் பெண்ணும் இணைதல் என்ற எல்லையுடன் மாத்திரமே அவர் பார்க்கிறார். அவரைப் பார்த்து நான் திருமணத்தில் நீங்கள் ஒரு பெண்ணை மாத்திரம் தெரிவு செய்யவில்லை,  மாற்றமாக அவளது வேர்களையும் சேர்த்தே தெரிவு செய்கிறீர்கள்என்றேன்,  அதற்கவர் வேர்களைத் தெரிவு செய்தல் என்றால்…?’ என வினவ,  ‘வேர்கள் என்பது அவளது குடும்பம்,  உறவுகள்என்றேன். 

நபியவர்களது ஒரு ஹதீஸை நான் அவருக்கு விளங்கப்படுத்தினேன். ஒரு நீண்ட ஹதீஸின் தொடரில் நபியவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்,  “யார் தனது பார்வையைத் தாழ்த்தவும்,  கற்பைப் பாதுகாக்கவும்,  குடும்பத்தினரை இணைந்து நடக்கவும் திருமணம் செய்கிறாரோ அல்லாஹ் அவரது வாழ்வில் பரகத்தை ஏற்படுத்துவான்என்றார்கள்.

இங்கு குடும்பத்தினரை இணைந்து நடத்தலை திருமணத்தின் நோக்கங்களில் ஒன்றாக நபியவர்கள் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம் திருமணம் என்பது தனித்து ஒரு ஆணும் பெண்ணும் இணைவது மாத்திரமல்ல மாற்றமாக இரண்டு குடும்பங்கள் இணைகின்ற ஒரு விடயம். எனவே நீங்கள் ஒரு பெண்ணைத் தெரிவு செய்கிறீர் எனின்,  அதன் பொருள் உங்கள் பிள்ளைகளுக்கான தாயைத்  தெரிவு செய்கிறீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கான பாட்டன்,  பாட்டி,  மாமா,  சாச்சி போன்ற உறவுகளை எல்லாம் தெரிவு செய்கிறீர்கள் என்றுதான் பொருள். எனவே,  அங்கு மார்க்கம்,  கல்வி,  சமூக அந்தஸ்த்து,  பொருளாதார மட்டம்,  உயர் பண்பாடுகள், கலாச்சாரப் பண்புகள் போன்ற பல விடயங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்ற பொழுதே குடும்ப வாழ்வு சிறக்கிறது என்று அவருக்கு விளக்கமளித்தேன்என்றார்கள்.

கலாநிதி அக்ரம் ரிழா அவர்களுடைய வார்த்தைகளில் பொறுத்தப்பாடு எனும் விடயம் தனித்து ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல,  அது இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டதும் கூட என்பதை வலியுறுத்துகிறார்கள். பல சமயங்களில் காதல் திருமண முன்மொழிவுகளின் போது,  குடும்பங்களின் உடன்பாடின்மை இந்தப் புள்ளியில்தான் காணப்படுகிறது. எமது குடும்பத்திற்கு இது ஒத்துவராதுஎன்பார்கள். சம்பந்தப்பட்ட ஆணோ பெண்ணோ இந்த ஒத்துவராதுஎன்பதன் பொருள் தெரியாமல்,  திமிரிக் கொண்டு செல்ல முற்படுவார்கள். எல்லாக் கட்டுப்பாடுகளையும் வழக்காறுகளையும் உடைத்தெரிய வேண்டும் என்று நினைப்பார்கள். இங்குதான் பொறுத்தப்பாட்டுப் பெறுமானங்களைப் புரியாத அவர்களது சிறுபிள்ளைத்தனம் வெளிப்படுகிறது அல்லது பொருத்தம் என்பதை தனித்து விருப்பம் அல்லது உள்ளங்கள் ஒத்துப்போதல் என்பதுடன் மாத்திரம் சுருக்கி ஒரு வித சினிமாத்தனமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். விருப்பத்தைத் தாண்டி,  சமூகப்பொறுத்தப்பாட்டுப் பண்புகள் மிகவும் முக்கியமானவை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.

அந்தவகையில் தெரிவின்போது மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய பொறுத்தப்பாட்டுப் பண்புகள் குறித்து சற்று கவனம் செலுத்தப்பட வேண்டியிருக்கிறது. அந்தப் பண்புகளை அடையாளப்படுத்துவதற்கு முதலில் ஒரு விடயத்தை நாம் விளங்கியிருத்தல் அவசியமாகிறது.

அதாவது,  திருமண வாழ்வில் மிகவும் முக்கியமான விடயம் புரிந்துணர்வு என்ற அம்சமாகும். பொறுத்தப்பாடு கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் இவற்றைத் தாண்டி குடும்ப வாழ்வில் சந்தோசம் நிலைக்கக் காரணமாக இருப்பது புரிந்துணர்வுதான். எனவே பொறுத்தப்பாட்டுப் பண்புகளின் அவசியம் குறித்துப் பேசுகின்ற பொழுது,  அவற்றின் மூலம் மாத்திரமே குடும்ப வாழ்வின் ஸ்திரத்தன்மை பேணப்படுகிறது என்பதல்ல,  எவ்வளவு பொறுத்தம் இருந்தாலும் அல்லது கொஞ்சம் பொறுத்தமின்மைகள் இருந்தாலும் புரிந்துணர்வு என்ற காரணி மிகவும் முக்கியமானது. அதன் மூலமே குடும்ப வாழ்வின் சந்தோசமும்,  ஸ்திரத்தன்மையும் பேணப்படுகிறது.

அடுத்து,  ஆண்,  பெண் என்ற எல்லையிலும் சரி,  குடும்பம் என்ற எல்லையிலும் சரி பேண வேண்டிய சில பொறுத்தப்பாட்டு பண்புகள் குறித்து நோக்குவோம்.

1.       மார்க்க ரீதியான பொறுத்தப்பாடு

இதன்மூலம் இரண்டு விடயங்கள் நாடப்படுகின்றன. முதலாவது ஹதீஸ்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது போல்,  ஆணும் சரி,  பெண்ணும் சரி,  தனது துணையைத் தெரிவு செய்யும் போது,  மார்க்கம் (தீன்) என்ற காரணி முக்கியமானது. அதாவது அவர்களது வாழ்வில் மார்க்கம் எந்தளவு கடைபிடிக்கப்படுகிறது அதனை நம்பிக்கையாகவும்,  நடைமுறையாகவும் எந்தளவு ஏற்று செயற்படுகிறார்கள் என்பது. இந்தப் பொறுத்தப்பாடு தெரிவில் முக்கியமானது. இல்லாதபோது வாழ்வே சீரழிந்து செல்வதற்குக் காரணமாகலாம் என்பது ஹதீஸ்கள் வலியுறுத்தும் உண்மையாகும்.

இரண்டாவது விடயம்,  இன்று நடைமுறையில் காண்கின்ற இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதிலும்,  தஃவா செய்வதிலும் இருக்கின்ற பல்வேறு சிந்தனைப் பாரம்பரிய வேறுபாடுகள். தெரிவின்போது இந்த வேறுபாடுகள் கருத்தில் கொள்ளப்படுவதும் ஒருவிதத்தில் முக்கியமானது. இதன் மூலம் வித்தியாசமான சிந்தனைப் பாரம்பரியங்கள் திருமண பந்தத்தில் இணையக் கூடாது என்றோ அந்த வாழ்வு வெற்றியளிக்காது என்றோ சொல்ல வரவில்லை. சிந்தனை வேறுபாட்டை இரு தரப்பும் ஏற்றுக் கொண்டு,  மதிப்பளித்து,  சுதந்திரமளித்து செயற்படக் கற்றுக் கொண்டால் இந்த வேறுபாட்டிற்கு மத்தியிலும் சந்தோசம் இருக்கும். ஆனால் யதார்த்த வாழ்வின் அனுபவத்தில் காணும்  உண்மை என்னவெனின்,  கணவன் எவ்வழி மனைவியும் அவ்வழி செல்வதே பொறுத்தமானது என்பதாகும். எனவே முடிந்தவரை இந்த யதார்த்தம் பேணப்படுவது குடும்ப வாழ்வின் சந்தோசத்தை உத்தரவாதப்படுத்தும்.

2.       கல்வி ரீதியான பொறுத்தப்பாடு

அல்லாஹ்தஆலா கூறுகிறான் நபியே நீங்கள் கூறுங்கள் அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?” (ஸுமர் 9). இந்த வசனம் அறிவு,  கல்வி வேறுபாடு என்பது இந்த உலக யதார்த்தங்களில் ஒன்று என்பதைக் கூறுகிறது. அந்தவகையில் தெரிவின்போது கல்வி ரீதியான பொறுத்தப்பாடு கருத்தில் கொள்ளப்படுவது நியாயமானது.

 கலாநிதி அக்ரம் ரிழா அவர்கள் இதுபற்றிக் கூறும்போது,  ஆண் பெண் இருவரும் கல்விச் சான்றிதழில் சமானமாக இருப்பதில் தவறில்லை. ஆனால் ஆண் தரத்தில் குறைந்திருப்பது வரவேற்கத்தக்கதல்ல என்கிறார். இந்தக் கருத்தில் உள்ள சமூக யதார்த்தம் மறுக்கப்படுவதற்குரியது அல்ல என்றிருந்த போதிலும்,  இன்று மற்றொரு யதார்த்தமும் மெல்ல அதிகரித்துச் செல்வதைக் காணலாம். அதாவது நன்கு படித்த பெண்கள் சாதாரண கல்வித்தரம் கொண்ட ஆண்களை திருமணம் செய்யும் நிலை அதிகரித்து வருகிறது. பெண்களின் கல்வி வளர்ச்சியும் ஆண்களின் கல்வி வீழ்ச்சியும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இந்தப் புதிய சூழ்நிலை திருமண வாழ்வில் எத்தகைய தாக்கங்களை உண்டு பண்ணக் கூடியது என்பது ஆய்வை வேண்டி நிற்கும் ஒரு விடயமாகும். ஆனாலும் புரிந்துணர்வின் ஊடாக பல விடயங்களைத் தாண்டிச் செல்ல முடியும் என்ற உண்மையும் இங்கு மறுக்கப்படுவதற்கில்லை.

3.       சமூக அந்தஸ்துப் பொறுத்தப்பாடு

இது, குறித்த ஆணையும் பெண்ணையும் விடவும் இரு குடும்பங்களுடனும் சம்பந்தப்பட்டதாகும். இங்கு சமூக அந்தஸ்து என்பது,  பெற்றோர்களது சமூக மதிப்பு,  சமூக உறவுகள்,  சமூகப் பங்களிப்பு போன்ற பல விடயங்களைக் குறித்து நிற்கின்றது. இந்த விடயம் தெரிவின்போது கருத்தில் கொள்ளப்படுதல் என்பது இஸ்லாமியப் போதனைகளுடன் முரண்படுகின்ற ஒரு விடயமல்ல. 

உமர் (ரழி) அவர்களது பிரபல்யமான ஒரு கூற்று இதனை உறுதிப்படுத்துகிறது. சமூக அந்தஸ்துள்ள பெண்களை அதற்குத் தகுதியாளர்கள் அல்லாதார் திருமணம் செய்வதை நான் தடை செய்கின்றேன்என்றார்கள். இந்த நுண்ணிய உணர்வின் காரணமாகத்தான் கைபர் யுத்தத்தில் ஸபிய்யா (றழி) அவர்கள் கைதியாகப் பிடிபட்ட போது, அவர் யூதத் தலைவனின் மனைவி,  மற்றொரு யூதத் தலைவனின் மகள். இத்தகைய அந்தஸ்து கொண்ட பெண் நபியவர்களுக்கு மனைவியாக அமைவதே பொறுத்தம் என உமர் (றழி) அவர்கள் ஆலோசனை வழங்கியது மாத்திரமன்றி,  மதீனாவுக்குத் திரும்பிச் செல்லுமுன் இடை நடுவில் திருமணத்தை நடாத்தவும் செய்தார்கள்.

சமூக அந்தஸ்த்து என்பது சம்பந்தப்பட்ட ஆண்,  பெண் என்ற மட்டத்திலும் பார்க்கப்பட முடியும் என்பதை புரைரா என்ற அடிமைப் பெண்,  தான் சுதந்திரம் அடைந்ததும்,  மகீத் என்ற தனது அடிமைக் கணவனை விட்டுப் பிரிந்தமையையும்,  மகீத்துக்காக நபியவர்கள் பரிந்து பேசிய போதும் புரைரா உடன்படாமையையும் உதாரணமாகக் குறிப்பிடலாம். இங்கு நபியவர்கள் புரைராவை நிர்ப்பந்திக்கவில்லை அவளது நியாயத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

4.       வயதுப் பொறுத்தப்பாடு

வயதுப் பொறுத்தப்பாடு குறித்தும் இஸ்லாத்தில் குறிப்பான வரையறைகள் எதுவும் சொல்லப்படவில்லை. இஸ்லாமிய வரையறைகளைப் பார்க்கின்ற பொழுது,  பெண்ணை விட ஆண் வயது அதிகமாக இருத்தலும் சரி, குறைவாக இருத்தலும் சரி,  ஏன் சம வயதினராக இருத்தலும் சரி. இவற்றில் எதுவும் இஸ்லாத்தில் மறுக்கப்படவில்லை. நபியவர்களது வாழ்வு இதற்குச் சான்று. ஏலவே குறிப்பிடப்பட்டது போல் புரிந்துணர்வு எனும் காரணி மிகச் சரியாக செயற்படும் போது

 மேற்குறிப்பிடப்பட்டவற்றில் எந்த நிலையிலும் குடும்ப வாழ்வு வெற்றி காண முடியும்.

நான் அறிந்த அறபுலக இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவர் தனது ஐம்பதாவது வயதைத் தாண்டிய நிலையில் சுமார் இருபது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக முடித்தார். அவரிடம் இதன் இரகசியம் என்ன என்று நான் கேட்டேன். அதற்கவர் தான் இளைஞராக இருந்த போதே இது பற்றிய ஒரு திட்டத்துடன் காணப்பட்டதாகவும்,  முதல் மனைவியாக தன்னை விட வயதில் கூடிய ஒருவரை திருமணம் செய்ததாகவும் தற்போது அவள் வாழ்வை அனுபவித்து முடிந்து விட்டாள். அதனால் அவளே முன்வந்து எனக்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தாள் என்றார். இங்கு அவர் தன்னை விட வயதில் கூடிய,  வயதில் குறைந்த இருவருடனும் வாழ்க்கையை வெற்றிகரமாக நடாத்தியிருப்பதை காணலாம்.

உளவியலாளர்களின் அபிப்பிராயப்படி,  பெண்ணை விடவும் ஆண் வயதில் அதிகமாக இருத்தலும்,  அதிலும் ஐந்து முதல் ஏழு வருடங்கள் வரை இடைவெளி இருப்பதுவும் சிறந்தது எனக் கருதுவர். குடும்ப வாழ்வில் சிறந்த புரிந்துணர்விற்கும் பிரச்சினைகள் குறைந்த வாழ்விற்கும் இந்த இடைவெளி மிகவும் பொறுத்தமானது என்பர். இக்கருத்தை வலுப்படுத்துவது போல் உமர் (றழி) அவர்கள் காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் காணப்படுகிறது.

ஒரு இளம் பெண்ணை வயோதிபர் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அந்த வாழ்விலிருந்து விடுதலை பெறும் நோக்கில் அந்தப் பெண் தனது கணவனைக் கொலை செய்து விட்டாள். வழக்கை விசாரித்த உமர் (றழி) அவர்கள் மக்களைப் பார்த்து,  “மக்களே,  அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு ஆணும் தன் வயதுக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்யட்டும். ஒவ்வொரு பெண்ணும் தன் வயதுக்கு ஏற்ற ஆணை திருமணம் செய்யட்டும்என்றார்கள். வயதுப் பொறுத்தப்பாடு தெரிவின்போது கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பதையே உமரவர்களின் வார்த்தைகள் உணர்த்துகின்றன.

5.       பொருளாதார நிலைப் பொறுத்தப்பாடு

பொருளாதாரம் மனித வாழ்வின் அஸ்திவாரம் என்பது அல்குர்ஆனின் பார்வை,  அதேபோல் ஒவ்வொருவரும் தனது வசதிக்க ஏற்ப தனது மனைவிக்கு செலவு செய்யட்டும்” ( தலாக் 07   ) என்றும் அல்குர்ஆன் கூறுகிறது.

அந்தவகையில் பொருளாதாரக் காரணிகள் குடும்ப வாழ்வில் பெரிதும் தாக்கம் செலுத்தக் கூடியவை. எனவே தெரிவின்போது ஒவ்வொருவரும் தமக்கு ஏற்ற பொருளாதார மட்டத்தில் வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்தல் மிகவும் சிறந்தது. பல சமயங்களில் வறிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மிகவும் வசதியான வீடுகளில் வாழ்க்கைப்படும் போது,  மிகுந்த சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அந்த வீட்டின் பல உபகரணங்களை அப்பெண் வாழ்க்கையில் இதற்கு முன் பார்த்திராத நிலையும் இருக்க முடியும். அதேபோல் வசதி குறைந்த ஒரு ஆண் வசதி கூடிய பெண் தரப்பினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்ற நிலையையும் நிறையவே அவதானிக்க முடிகிறது. இந்த யதார்த்தங்கள் தெரிவின் போது கருத்தில் கொள்ளப்படல் வேண்டும் என்பதே இங்கு எதிர்பார்ப்பு.

6.       பழக்கவழக்கங்கள் சம்பந்தப்பட்ட பொறுத்தப்பாடு

பழக்க வழக்கங்களின் வேறுபாடும் சில சமயங்களில் குடும்ப வாழ்வின் நிம்மதியைக் குழைத்துவிட முடியும். ஏனைய காரணிகளுடன் ஒப்பிடும்போது இந்தக் காரணி மிகவும் வலிமை குறைந்தது என்றிருப்பினும்,  இதற்கும் ஒரு பெறுமானம் இருப்பதை மறுக்க முடியாது.

 உதாரணமாக நகர்ப்புற பழக்க வழக்கங்களும் கிராமிய பழக்க வழக்கங்களும் சில சமயங்களில் பொறுந்தி வராத நிலையும் காணப்படுகின்றது. கொழும்பு மேட்டுக் குடி நண்பர் ஒருவர் ஒரு கிராமியப் பெண்ணை திருமணம் செய்திருந்தார். ஒரு வருடத்திலேயே அவருக்கு வாழ்க்கை கசந்து விட்டது. காரணம் கேட்டபோது,  அதிகாலையிலேயே மாங்காய்ப் பிஞ்சு போன்ற கிராமத்துக் காய்களை சாப்பிடுமாறு நிர்ப்பந்திக்கிறாள். அவளுக்கு எப்போது எதனை சாப்பிட வேண்டும்,  எப்போது தூங்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லைஎன்று வருத்தப்பட்டார். 

அப்போது எனது மனதில் ஒரு விடயம் தோன்றியது. பீட்சா,  பேர்கர் கலாச்சாரத்திற்கும் பலாக்கொட்டை,  கஜுகொட்டை கலாச்சாரத்திற்கும் இடையிலான வேறுபாடு கூட தெரிவின்போது பார்க்கப்பட வேண்டியிருக்கிறது போலிருக்கிறது”.

இன்றைய இளைஞர் யுவதிகளில் இது போன்ற வேறுபாடுகளை புதிய அனுபவமாகப் பார்க்கின்றவர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுப்பதற்கில்லை. எனினும் இந்தப் பகுதியையும் தெரிவின்போது முற்று முழுதாக நாம் மறந்துவிடக் கூடாது என்று நினைக்கிறேன். 

பல சமயங்களில் எமது தஃவா கலாச்சாரத்திற்குள்ளே,  மார்க்கம்,  தஃவா என்ற பண்புகள் அதீதமாகப் பார்க்கப்பட்டு ஏனைய காரணிகள் கருத்தில் கொள்ளப்படாமல் போகின்ற நிலை அவ்வப்போது ஏற்படுகின்றது. மார்க்கமும் தஃவாவும் உயர் பெறுமானங்கள் என்றிருப்பினும் தெரிவில் சமூக யதார்த்தங்களையும் மறந்து விடவும் கூடாது. ஸைத் பின் ஹாரிஸாவினதும் ஸைனபினதும் (றழியல்லாஹு அன்ஹுமா) வாழ்வு இடைநடுவில் கலைந்து விடுவதற்கு இதுவும் ஒரு காரணம் என அறிஞர்கள் அபிப்ராயப்படுகின்றனர்.

இறுதியாக ஒரு விடயம் எமது கவனத்திற்குரியது. பொறுத்தப்பாடு என்று சொல்லும்போது,  இரு தரப்பினரும் எல்லா விடயங்களிலும் சமமானவர்களாகக் காணப்படல் வேண்டும் என்பது பொருளல்ல. பல சமயங்களில் சமானப் பண்பு சாத்தியமானதாகவும் அமைய மாட்டாது. முடிந்தவரை பொறுந்தி வரக்கூடிய வகையில் தேடலும் தெரிவும் காணப்படல் வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

அடுத்து,  மற்றொரு முக்கிய விடயம் இருக்கிறது. அதாவது பொறுத்தப்பாடு என்று சொல்லும்போது,  இயல்பு,  உணர்வுகள், விருப்பங்கள் போன்ற விடயங்களும் ஒன்று போல் இருக்க வேண்டும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். இவற்றில் ஒருமைப்பாடு இருப்பதில் தவறில்லை. ஆனால் அவ்வாறு அமைவதற்கான சாத்தியம் மிகவும் குறைவானதாகும். மாத்திரமன்றி இவை வேறுபட்டு அமைவது,  குடும்ப வாழ்வில் எதிர்மறைவான தாக்கத்தை ஏற்படுத்துமா? என்றால் அதுவும் இல்லை. ஏனெனில் வேறுபட்ட இயல்பும் உணர்வும் விருப்பமும் அல்லாஹ்வின் படைப்பியல் விதி. அந்தவகையில் மனிதனிடம் எதிர்பார்க்கப்படுவது அந்த வேறுபாட்டை ஏற்றுக் கொண்டு,  விட்டுக் கொடுத்து ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்பதேயாகும். அல்குர்ஆன் கூறுகிறது நாம் உங்களை ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். உங்களை சமூகங்களாகவும்,  கோத்திரங்களாகவும் பிரித்தமைத்தது நீங்கள் பரஸ்பரப் புரிந்துணர்வுடன் வாழ வேண்டும் என்பதற்காகவே” (ஹுஜராத் - 13)


அல்லாஹ்வே போதுமானவன்.