Friday, August 9, 2013

நோன்புப் பெருநாள் பிறை விவகாரம் சில அவதானங்கள்


இவ்வருடம் பெருநாள் தினம் முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் அவர்களது கட்டுக்கோப்புக்கும் தலைமையுடனான பிணைப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பது பலரது ஆழ்மனதில் இருந்த ஒரு எதிர்பார்ப்பாகும், அதற்கு நாட்டின் அசாதாரண சூழல் ஒரு காரணம் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு உண்மை. ஆனால் அதற்கு மாற்றமான ஒரு நிதர்சனத்தை எதிர்கொள்ள நேரிட்டமை உண்மையில் கவலைக்குரிய விடயமாகும். நடந்து முடிந்த நிகழ்வுகளில் இருந்து  சில அவதானங்களை பரிமாறிக் கொள்வது எல்லோருக்கும் பயனளிக்கும் என நினைக்கிறேன்.

1.   ரமழான் மாத நோன்பை ஆரம்பித்தல், பெருநாள்கொண்டாடுதல் போன்ற இபாதத்கள் தனிமனித வணக்க வழிபாடுகளன்றி, சமூக வணக்கங்கள் என்ற வகையில் அவை குறித்த தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தலைமையிடமே காணப்படுகிறது, இதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட இஸ்லாமிய பாரம்பரியமாகும்.

 நபியவர்கள் காலத்திலும் கூட பிறைகண்ட செய்தியை சஹாபாக்கள் நபியவர்களிடம் வந்து தெரிவித்ததன் பின்னர், நோன்பு நோற்குமாரோ அல்லது பெருநாள் கொண்டாடுமாரோ நபியவர்கள்தான் கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள். அதன்  பின்னரே சஹாபாக்கள் அதனை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். மாற்றமாக தனிமனிதர்கள் தாம் பிறை கண்டதற்கு ஏற்ப தொழிற்பட்டமையைக் காணமுடியாது.

 இலங்கையில் பிறை விடயத்திற்கு அதிகாரம் பெற்றவர்களாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பிறைக்கமிட்டி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் போன்ற இணைந்த குழுவினர் செயற்படுகிறார்கள். அந்த வகையில் அவர்களது தீர்மானத்தை அனைவரும் ஏற்றுப் பின்பற்றுவது ஒரு ஷரீஅத் கடமையாகும்.

 எனவே இந்த விடயத்தில் தனிமனிதர்களோ பள்ளிவாயல்களோ ஊர்களோ அமைப்புக்களோ தனித்து தீர்மானம் எடுத்துத் தொழிற்படுவது ஷரீஅத் ரீதியாக ஏற்புடைய ஒரு விடயமல்ல.

 

2.   பிறை கண்ட ஒருவரது சாட்சியத்தை அங்கீகரிக்கும் போது இரண்டு விடயங்கள் கவனிக்கத்தக்கவை, முதலாவது அவரது நேர்மை, இரண்டாவது அவர் சாட்சி சொல்லும் விவகாரத்தில் அவர் தெளிவுடன் காணப்படுதல் அல்லது அவர் தெளிவுடன் காணப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறை காணப்படுதல்.

 இதன் காரணமாகத்தான் இஸ்லாத்தில் சிறுபிள்ளைகளின் சாட்சியமும் புத்தி குறைந்தவர்களின் சாட்சியமும் ஏற்கப்படுவதில்லை, மட்டுமன்றி அல்குர்ஆனில் சாட்சியத்தின் எண்ணிக்கை பற்றிக் கூறும் போது இரு ஆண்கள் அல்லது ஒரு ஆணும் இரு பெண்களும் எனக் கூறப்பட்டுள்ளமையைக் காணலாம், இங்கு ஒரு ஆணுக்கு சமானமாக அமைய இரு பெண்கள் அவசியம் என்று கூறப்பட்டமைக்குக் காரணம் நிச்சயமாக நேர்மை சம்பந்தப் பட்டதன்றி சாட்சி சொல்லும் விடயத்தின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த ஏற்பாடு வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

 குறிப்பாக பிறை விவகாரத்தில் இந்த இரண்டாவது அம்சம் மிகவும் முக்கியம் பெறுகின்றது, சஹாபாக்கள் காலங்களில் பிறை கண்டதாக சொல்லப்பட்ட சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கின்றன. இன்றைய நாட்களில் இதன் அவசியம் மிகவும் வலியுறுத்தப்படவேண்டியதாகும்.    ஏனெனில் ஆரம்ப நாட்களைப் போன்று சூரிய சந்திர ஓட்டங்களை வைத்து யாரும் தமது செயற்பாடுகளைச் செய்வதில்லை, அதனால் பொதுமக்கள் சாதாரணமாக இது பற்றிய அறிவுடன் காணப்படுவதில்லை, குறிப்பிட்ட சில துறை சார்ந்தவர்களுடனே இந்த அறிவுகள் இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இன்று பொதுவாக எல்லா நாடுகளிலும் இந்த பொறிமுறை பின்பற்றப்படுவது இந்தப் பின்புலத்திலாகும்.

 எனவே ஒருவர் பிறை கண்டதாகச்சொல்லும் சாட்சியத்தை அவர் நல்ல மனிதராக இருக்கிறார் என்பதை மாத்திரம் வைத்து உறுதிப்படுத்துவது பொறுத்தமற்றது, மாற்றமாக அவர் பிறையைத்தான் கண்டார் என்பதையும் உறுதிப்படுத்துகின்ற போதுதான் அந்த சாட்சியம் முழுமை பெறுகின்றது.

 

3.   இந்தத் தடவை கிண்ணியா மக்கள் தாம் கண்ட பிறையை தேசிய ஜம்இய்யதுல் உலமா ஏற்க மறுத்ததையடுத்து, தமது ஊருக்கான பெருநாள் பற்றிய முடிவை தாமே எடுத்து நடைமுறைப்படுத்தினார்கள், அவர்களது இந்த நடவடிக்கையின் நியாயத்தன்மை குறித்த வாதங்களைத் தாண்டி அது எமக்கு ஒரு முக்கியமான படிப்பினையைச் சொல்வதாகத் தோன்றுகிறது.

 உண்மையில் ஒரு சமூகக் கட்டமைப்பு பலமாகக் காணப்படுவதற்கு, தலைமைக்கும் களத்திற்கும்மிடையிலான தொடர்பு வெறுமனே உத்தியோகபூர்வ முறைமைகளிலும் அறிக்கைகளிலும் அறிவுறுத்தல்களிலும் மாத்திரம் தங்கியிருப்பது ஆரோக்கியமற்றது, அதனைத் தாண்டிய ர் ஆத்மார்த்த உறவு அங்கு அவசியப்படுகிறது.

  அது, தலைமை களத்தின் மன உணர்வுகளையும் பிரச்சினைகளையும் தேவைகளையும் புரிந்து கொண்டு செயலாற்றுவதாகவும், மக்களும் தலைமை தமது நலனுக்காகவே ஒரு தீர்மானத்தை எடுக்கிறது என்ற நம்பிக்கையுடனும் அதனை மதித்து நடக்கும் மனப்பாங்குடனும் காணப்படுவதாகவும் அமைய வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று அந்த உறவு, நம்பிக்கை இரக்கம் மதித்தல் கட்டுப்படல் போன்ற அடிப்படைகளின் மீது எழவில்லை.

 ஜம்இய்யதுல் உலமாவின் கட்டளையை மீறுவதற்கு மக்கள் துணிகிறார்கள், அதனை மதிக்க மறுக்கிறார்கள். இந்த நிலை மிகவும் ஆபத்தானது, கிண்ணியா நிகழ்வு ஒரு உதாரணம் மட்டுமதான், நாட்டின் ஏனைய பாகங்கள் எல்லாம் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

 அதிலும் குறிப்பாக இன்றை நவீன இளைஞர்களின் மனோபாங்கு மிகவும் வித்தியாசமானது, அவர்களை கட்டளைகளினால் மாத்திரம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது, இது குறித்து ஜம்இய்யதுல் உலமாவின் தலைமை உற்பட அதன் அங்கத்தவர்கள் அனைவரும் சற்று சீரியஸாக சிந்திக்க வேண்டியிருக்கிறது.

 அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியில், தலைமைக்கும் மக்களுக்குமிடையில் இந்த நம்பிக்கையின் அடிப்படையிலான உறவு கட்டி எழுப்பப்ட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்.

 

4.   கிண்ணியா நிகழ்வின் இரு தரப்பு வாதங்களையும் அவதானிக்கின்ற பொழுது ஒரு விடயம் தெளிவாகிறது, பிராந்திய ஊர்மட்ட ஜம்இய்யதுல் உலமா சபைகள் பிறைபார்த்தல் பொறிமுறை பற்றிய போதிய தெளிவுடன் இல்லை என்பது.

 தேசிய மட்டத்தில் காணப்படுவது போன்று ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட வேலைத்திட்டமாக இது பிராந்திய மட்டங்களில் நடைபெறவில்லை என்றே நினைக்கிறேன். குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பான ஷரீஅத் பார்வைகளும், வானியல் கணிப்பீட்டு நுட்பங்கள், சாட்சிகள் கையாளப்பட வேண்டிய முறைமை, தீர்மானம் பெறும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்கள் குறித்த போதுமான அறிவுடன் அவர்கள் காணப்பட வேண்டியதன் அவசியம் இந்த நிகழ்வின் மூலம் வெகுவாக உணரப்பட்டுள்ளது.

 எனவே கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகளிலிருந்து மீளும்வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, தனது பிராந்திய சபைகளை தகுதிபடுத்தும் பணியை மிகுந்த பொறுப்புடன் திட்டமிட்டு செயற்படுத்துவது ஒரு கட்டாயத் தேவையாகிறது.

 

5.   கிண்ணியா பிராந்திய உலமா சபையின் தலைமையில் அந்த மக்கள் எடுத்த திர்மானத்திற்கு வலுவான நியாயங்கள் இருக்கின்றன என்ற போதிலும், இது போன்ற தீர்மானங்களின் எதிர்விளைவுகள் குறித்தும் நாம் கட்டாயம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். அடுத்த பரம்பரையினர்க்கு நிச்சயமாக இது ஒரு தவறான முன்மாதிரி என்பதில் சந்தேகமில்லை, எதிர்காலங்களில் சமூகக் கட்டமைப்புக்கு எதிராக எவரும் துணிந்து செயலற்றுவதற்கான  ஒரு நியாயம் இதன் மூலம் உருவாக்கப்பட்டுவிட்டது.

 மாத்திரமன்றி அடுத்த சமூகங்கள் இதனை முஸ்லிம் சமூகத்தின் பலவீனமாகவும் கட்டுக்கோப்பின்மையாகவுமே நோக்குவர், இப்போது முன்மாதிரியான ஒரு சமூகமாகவும், தஃவா சமூகமாகவும் இருப்பதற்கான அடிப்டைத் தகைமைகளை நாம் இழந்து விடுகின்றோம். எனவே எதிர்காலங்களில் உணர்வுபூர்வமாகவன்றி அறிவுபூர்வமாக எமது தீர்மானங்கள் அமைவதில் அதிகம் அக்கறை எடுப்பது சிறந்தது.

 

6.   நடந்து முடிந்த நிகழ்வு அழுத்தமாகச் சொன்ன மற்றொரு முக்கியமான செய்தி இருக்கிறது, அதுதான், பிறைபார்த்தல் விவகாரத்தில் ஏற்படுகின்ற தவறுகள் எவ்வாறு நோக்கப்பட வேண்டும் என்பது.

 பல சமயங்களில் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்றல் ஹராமானது என்பதும், பிறை கண்டால் பெருநாள் கொண்டாட வேண்டும்தானே போன்ற நிலைப்பாடுகள் சமூக ஒழுங்கினதும் கட்டுக் கோப்பினதும் அவசியப்பாட்டையும் விட மிகைத்துச் செல்கின்ற ஒரு நிலையை சமூக மட்டத்தில் அவதானிக்க முடிகிறது. இவற்றின் பருமன் பாரங்களை வேறுபிரித்தறிந்து கொள்வதில் சமூகமட்டத்தில் ஒரு தெளிவற்ற நிலை இருக்கிறது.

 பிறை பார்த்தலில் விடப்படுகின்ற தவறினால் நாம் ஒரு ஹராத்தில் விழுந்து விடுவோம் என்ற பயத்தில் சமூகக் கட்டுக்கோப்பை மீறுவதும் குற்றமில்லை என்ற சமநிலையற்ற ஒரு பார்வை சமூகத்தில் ஆழப்பதிந்திருக்கிறது.

 பிறை பார்த்தலின் தவறுகள் ஒரு போதும் பெருநாள் தினத்தில் நோன்பு நோற்ற குற்றத்தை எமக்குத் தரமாட்டாது, இஸ்லாம் இந்த விடயத்தில் மிகவும் விசாலத்தன்மையுடன் சட்டங்களை முன்வைத்திருக்கிறது, அதனை விடவும் சமூகக் கட்டுக் கோப்பு முக்கியமான ஒரு வாஜிப் என்பதும் சமூகத்திற்கு தெளிவு படுத்தப்பட வேண்டிய முக்கிய பக்கங்களாகும்.

 மக்கள் இது போன்ற சமயங்களில் உணர்ச்சி வசப்படுகின்றமைக்கு இந்த தெளிவின்மையும் ஒவ்வொன்றுக்கும் உரிய பருமனையும் பாரத்தையும் புரிந்து கொள்ளாமையும் ஒரு முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். எதிர்காலங்களில் தேசிய பிராந்திய ஜம்இய்யதுல் உலமா சபைகளின் கவனத்தில் இந்த விடயத்தையும் எடுத்துக் கொள்வது நல்லது என நினைக்கிறேன்.

 

7.   இறுதியாக ஒரு முக்கிய விடயத்தைக் குறித்துக் காட்டுவது பொறுத்தமானது. நடைபெற்ற நிகழ்வுகளை மையப்படுத்தி, தேசிய ஜம்இய்யதுல் உலமா தமது பக்க நியாயங்களை முன்வைத்து அறிக்கைகள் வெளியிடுவதும் அல்லது தெளிவுரைகளை வழங்க முற்படுவதும், பின்னர் அதற்கு பதிலளிக்கும் வகையில் பிராந்திய சபை அறிக்கை வெளியிடுவதும், அவற்றை மையப்படுத்தி முகநூல் பக்கங்கள் விமர்சன மாலைகளாக நிரம்பி வழிவதும், ஆரோக்கியமான அறிகுறிகளாகத் தென்படவில்லை.

 குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் ஜம்இய்யதுல் உலமாவுக்கும் ஏனைய முஸ்லிம் நிறுவனங்களுக்கும் எதிராக கல்லெறிய தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் தீவிர சக்திகளுக்கு நாம் இன்னும் களம் அமைத்துக் கொடுக்கின்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தாமல் இருப்பது எங்கள் ஒவ்வொருவர் மீதும் உள்ள பொறுப்பு என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

 ஆனால் செய்யப்பட வேண்டிய ஒரு முக்கிய வேலை இருக்கிறது, அதுதான் நடந்து முடிந்த நிகழ்வுகள் குறித்து சுயாதீனமான ஒரு விசாரணை நடைபெற்று, தவறு விடப்பட்ட இடங்கள் என்ன என்பதும், எதிர்காலங்களில் அவை எவ்வாறு திருத்திக் கொள்ளப்பட முடியும் என்பதும் கட்டாயமாக அறிக்கைப்படுத்தப்பட்டு, தலைமைத்துவ புத்திஜீவிகள் மட்டத்தில் விவாதிக்கபட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

 இதன் நோக்கம் எவறையும் குற்றம் காண்பதல்ல மாற்றமாக இது ஒரு நிகழ்வு மதிப்பீடாகவே அமைய வேண்டும். இந்த விடயத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதய சுத்தியுடன் மேற்கொள்ள முன்வரவேணடும் என எதிர்பார்க்கிறேன். இந்த விடயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிரீ லங்கா முஸ்லிம் பேரவை உதவ முடியும் என நினைக்கிறேன்.

2 comments:

  1. I am happy to agree with this view.
    Thank you.

    SHM Riyaldeen

    Another Question for which I expect a clear answer.
    Who is Ulama? I want the deep and clear meaning please.

    ReplyDelete