Thursday, August 8, 2013

பெருநாள் தின செய்தி



இன்று முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள், பெருநாள் என்பது முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கொண்டாட்டத்திற்குரிய ஒரு தினம் என்பது போல் அது அவர்களது தனித்துவத்தைப் பறைசாற்றும் ஒரு நிகழ்வுமாகும். நபியவர்கள் மதீனாவுக்கு வந்த போது,  மதீனா மக்கள் பாரம்பரியமாக செய்து வந்த சில கொண்டாட்டங்களைத் தடைசெய்ததுடன் அதற்குப் பகரமாக இருபெருநாட்களை அறிமுகம் செய்தார்கள். இந்த நிகழ்வு முஸ்லிம்களது வாழ்வு தனித்துவமானது என்பதை வலியுறுத்தி நிற்கிறது.

முஸ்லிம்களது தனித்துவம் என்பது நம்பிக்கை,  சிந்தனை, நடத்தை,  மனோபாங்கு,  பண்பாடு,  கலாச்சாரம் என பல்வேறு பக்கங்களில் பிரதிபளிக்கக் கூடிய ஒரு அம்சமாகும். அந்த வகையில் இந்த அனைத்துப் பக்கங்களிலும் இஸ்லாமிய வாழ்வின் தனித்துவம் தமது நடத்தையில் பிரதிபளிக்க வேண்டும் என்பதுடன்,  அந்த வாழ்வு மனித சமூகத்திற்கு ஒரு சிறந்த மாதிரியாக அமைய வேண்டும் என்பதே பெருநாள் தினம் எங்கள் காதுகளில் சொல்லும் செய்தியாகும்.

அல்லாஹ்தஆலா இவ்வாறு சொல்கிறான்: ' நீங்கள் மிகச் சிறந்த சமூகத்தினர், மனித சமூகத்திற்காகவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள், நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள் தீமையை தடுக்கிறீர்கள்,  அல்லாஹ்வை ஈமான் கொள்கின்றீர்கள்"- ஆலஇமரான் - 110.

முஸ்லிம்கள் தனித்துவமான ஒரு சமூகம் என்பதையும் அந்த தனித்தன்மை நன்மையை ஏவுவதிலும் தீமையைத் தடுப்பதிலும் அல்லாஹ்வை ஈமான் கொள்வதிலும் பிரதிபளிப்பதாக இந்த வசனம் விளங்கப்படுத்துகிறது.

சகோதர சகோதரிகளே,  இன்று உலகில் நீதியும் சுதந்திரமும் பகிரங்கமாய் பறிக்கப்படும் ஒரு சூழலை அவதானிக்கின்றோம், நீதியை நிலைநாட்டுதலும் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தலும் முஸ்லிம் சமூகத்தின் உன்னதமான தனித்தன்மைகளில் ஒன்றாகும். இதனைத்தான் ருப்ஆ இப்னு ஆமிர் றழி அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: சில மனிதர்கள் இன்னும் சில மனிதர்களுக்கு அடிமைப்படும் நிலையில் இருந்து அவர்களை மீட்டு அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிமையானவர்களாக மாற்றுவதற்காகவே நாங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றோம்,  என்றார்கள்.

இன்று எமது நாட்டிலும் பல்வேறு தீவர சக்திகள் மக்களில் ஒரு தரப்பினரை அடிமைப்படுத்தப்படுவதற்கான முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த மக்களது உரிமைகள் பறிக்கப்படுகின்றன, சுதந்திரம் மறுக்கப்படுகின்றது.

மற்றோர் புறத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் நீதியும் சுதந்திரமும் மறுக்கப்படுகின்ற நிலையைக் காண்கிறோம், எகிப்தின் தற்போதை நிலை இவ்விடயத்தில் முதன்மையானதாகத் தெரிகிறது,  மாத்திரமன்றி சிரியாவிலும் மியன்மாரிலும் பலஸ்தீனிலும் இந்த அவலங்கள் தொடர் கதையாகவே இருக்கின்றன. சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய டியூனிஷியா,  லிபியா போன்ற நாடுகளிலும் மீண்டும் அதனைப் பறித்து விடுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், நேரடியாகவும் மானசீகமாகவும் பாதிக்கப்பட்டோருடன் கைகோர்ப்பதும் நிச்சயமாக எமது தனித்துவக் கடமையாகும் என்பதை இவ்வருட நோன்புப் பெருநாள் தின செய்தியாக உங்களுடன் பரிமாறிக் கொள்வதில் சந்தோசமடைகிறோம். உங்கள் அனைவருக்கும் எமது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment