Tuesday, July 16, 2013

சௌகரியமான எல்லையிலிருந்து விடுபடல் - Comfort zone -


ரமழான் மாதம் எங்களை வந்தடைந்திருக்கிறது. எத்தனையோ பல செய்திகளைச் சுமந்து வந்திருக்கிறது. அந்த செய்திகளில் ஒன்றை உங்களுடன் கொஞ்சம் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

ரமழான் மாதம் பற்றியும், நோன்பு நோற்றல் பற்றியும் வந்துள்ள அல்-குர்ஆன் வசனங்கள்,  ஹதீஸ்களில் பார்வையைச் செலுத்துகின்ற பொழுது,  பொதுவாக உள்ளத்துடனான போராட்டத்திற்கே முக்கியத்துவம் தருவதைக் காணலாம். அதாவது,  உள்ளத்தை அசைத்து,  குளுக்கி,  கழுவி,  துடைத்து,  தட்டி,  நசுக்கி,  பழுதுபார்க்கும் ஒரு வேலை முக்கிய நோக்கமாகக் கொள்ளப்பட்டிருப்பதைக் காணலாம்.

அல்-குர்ஆன் தக்வாவை வரவழைப்பது பற்றிப் பேசுகிறது. ஒரு ஹதீஸ் மனிதனது இச்சையைக் கட்டுப்படுத்துவது பற்றிப் பேசுகிறது. இந்த நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் உணவும் பாணமும் உடல் உறவும் பகல் பொழுதுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன, குறைவான தூக்கமே வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகமான இபாதத்கள் தூண்டுதல் அளிக்கப்பட்டுள்ளன.

உள்ளத்திற்கு இங்கு ஒரு வன்மையான பயிற்சி அளிக்கப்படுகிறது. தான் விரும்புகின்ற விடயங்கள் தடை செய்யப்படுகின்றன. விரும்பாத விடயங்களை வலிந்து செய்ய வேண்டி ஏற்படுகிறது. இதுதான் ஒரு மனிதனது சௌகரியமான எல்லைக்கு – Comfort zone - சவால் விடுக்கின்றது.

சௌகரியமான எல்லைக்குள் வாழுதல் என்பது,  இன்று மனித நடத்தை குறித்துப் பேசப்படுகின்ற ஒரு முக்கிய பிரச்சினையாகும். முகாமைத்துவ கலையும், தர்பிய்யத் கலையும் இதனை வெகுவாகப் பேசியிருக்கின்றன. ஒரு நிறுவனத்திலோ அல்லது எந்த இடத்திலோ இந்த சௌகரியமான எல்லையை தனக்கு சிருஷ்டித்துக் கொள்கின்ற ஒருவர்,  மாற்றங்களுக்குச் செல்ல மாட்டார்,  முன்னேற்றத்தில் அக்கறை கொள்ள மாட்டார்,  புதியவைகளை விரும்ப மாட்டார்,  சுயநலத்தை முற்படுத்துவார். மொத்தத்தில் அந்த நிறுவனத்தின் அல்லது அந்தப் பணியின் தோல்விக்குக் காரணமாக இருப்பார்.

இத்தகைய ஒரு மனித நடத்தையை சீர்செய்வதற்கான சிறந்த மருந்து,  உள்ளத்திற்கு வழங்கப்படுகின்ற சற்று வன்மையான தர்பிய்யத்தாகும்.

இஸ்லாம் இந்த தர்பியத்தை வருடம் தோறும் ஒரு மாத காலத்திற்கு கட்டாயமான ஒரு பயிற்சி நெறியாக முஸ்லிம் உம்மத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. ரமழான் மாதத்தின் சாதாரணமான வாழ்வொழுங்கைப் பாருங்கள்,  உணவு நேரசூசி மாறுகிறது,  உறங்கும் நேரசூசி மாறுகிறது,  ஏன்? மலசலம் கழிக்கும் நேரசூசி கூட மாறுகிறது,  இந்த மாற்றம் மனிதனில் நிர்பந்தமாய் ஏற்படுத்தப்படுகிறது. அவனை அவனது சௌகரியமான எல்லையில் இருந்து வெளியே கொண்டு வந்து விடுகிறது. இது ரமழான் முழு முஸ்லிம் உம்மத்திற்கும் வழங்குகின்ற ஒரு உன்னதமான தர்பிய்யத்,  அதனால்தான்,  முஸ்லிம் உம்மத் என்றும் மாற்றமுறும் உம்மத்தாகவும்,  முன்னேற்றமடையும் உம்மத்தாகவும்,  புதுமைகளைக் காணும் உம்மத்தாகவும், சுயநலமற்ற உம்மத்தாகவும் இருக்கின்றது.

இந்த வருட ரமழானை சௌகரியமான எல்லையில் – Comfort zone -  வாழுதல் என்ற தவறிலிருந்து எம்மை மாற்றிக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வோம். அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.

No comments:

Post a Comment