Monday, July 1, 2013

ஒரு முஃமினின் உயர்ந்த பண்பாடு


     அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் கூறுகிறான் உங்களது செல்வம், உயிர் போன்றவற்றில் கண்டிப்பாக சோதனைக்கு உற்படுத்தப்படுவீர்கள். அதுபோல் உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டோரிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும், அதிகமான தீங்கான செய்திகளை நீங்கள் கண்டிப்பாகக் கேட்பீர்கள். அந்த சமயத்தில் பொறுமையாக இருந்து, தக்வாவுடன் நடந்து கொள்வீர்கள் எனின், அதுதான் மிக உயர்ந்த செயற்பாடாகும். - ஆல இம்ரான் - 186

 

    இந்த அல்குர்ஆன் வசனம் செல்வம், உயிர் என்பவற்றின் மீதான சோதனை என்பது அல்லாஹ்வின் ஒரு நியதி என்கிறது. அந்த சோதனையின் வடிவங்களில் ஒன்றாகத்தான் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்யான பிரச்சாரங்கள் காணப்பட முடியும் என்கிறது. அதனை முன்னர் வேதம் வழங்கப்பட்ட யூ, கிறிஸ்தவர்களும் செய்வார்கள். அவர்கள் அல்லாத இணைவைப்பவர்களும் செய்வார்கள் என்கிறது.

 

   இன்று எமது நாட்டில் நாம் இதனைத்தான் நிதர்சனமாகக் காண்கிறோம். முஸ்லிம்களுக்கு எதிரான மிக அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இந்தப் பொய்யின் சக்தி என்னவென்றால் இதன் மூலம் முஸ்லிம்களும் உணர்ச்சி வசப்படுவார்கள். முஸ்லிம் அல்லாதவர்களும் உணர்ச்சி வசப்படுவார்கள். விளைவு அநியாயமான மோதலும் அழிவுமாகத்தான் அமைந்து விடப் போகிறது.

 

   அந்த அநியாயமான மோதலையும் அழிவையும் இஸ்லாம் ஒரு போதும் விரும்புவதில்லை. அதனால் தான் அல்குர்ஆன் அதே வசனத்தின் இறுதியில் முஸ்லிம்கள் கடைபிடிக்க வேண்டிய இரண்டு முக்கியமான ஒழுக்கங்களைச் சுட்டிக் காட்டுகின்றது.

 

   முதலாவது பொறுமை. உண்மையில் அப்பட்டமான பொய்யைக் கூறி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டால் மனம் தாங்காது, கொதித்தெழத் துடிக்கும் நரம்புகள் முறுக்கேறும். ஆனால் அல்லாஹ்தஆலா இந்த மனோநிலையைக் கட்டுப்படுத்துமாறு கூறுகிறான். அதாவது உணர்ச்சி வசப்படாதீர்கள், கோபத்தால் ஆர்ப்பரிக்காதீர்கள், அமைதியாக இருங்கள், கவனமாக சிந்தியுங்கள் என்பதுதான் அல்லாஹ்தஆலாவின் உபதேசம். மாற்றமாக பொறுமை என்பது, வாலாவிருத்தல் அல்ல, ஒதுங்கிச் செல்லுதல் அல்ல, உணர்ச்சி வசப்பட்டால் வன்முறைதான் நிகழும். அது சூழ்நிலையை வெற்றி கொள்ள உதவாது. அமைதி காப்பதன் மூலமே மிகச் சரியான நடவடிக்கை குறித்து தீர்மானிக்க முடியும். அப்போதுதான் சூழ்நிலையை வெற்றி கொள்ளலாம். இது முதலாவது ஒழுக்கம்.

 

  இரண்டாவது, தக்வா. இங்கு தக்வா என்ற சொல் குறிக்கும் பொருள் குறித்து கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் கூறும் ஒரு கருத்து மிகவும் பெறுமதி வாய்ந்தது. அதாவது அவர்கள் எம்மை எதிர்ப்பதற்கு கைக்கொள்ளும் அதே பிழையான அணுகுமுறைகளை நாமும் கையாளக் கூடாது என்பது தான் இந்த இடத்தில் தக்வா என்பதன் பொருளாகும் என்றார்கள். இயல்பில் அவர்கள் எம்மை என்ன சொல் கொண்டு ஏசுகிறார்களோ அதே சொல் கொண்டு நாமும் ஏச வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது ஒரு முஸ்லிமின் பண்பாடு அல்ல. அநியாயத்தின் முன்னால் கூட நேர்மை தவறாமல் இருப்பதுதான் ஒரு முஸ்லிமின் பண்பாடு, உண்மையும் நேர்மையும்தான் எந்த சூழ்நிலையிலும் அவனில் இருந்து வெளிப்படும். சாதாரண ஒரு சராசரி மனிதனின் சிந்திப்பிற்கும் ஈமானுள்ள ஒரு உயர்ந்த முஃமினின் சிந்திப்பிற்குமிடையிலான அடிப்படை வேறுபாடு இங்குதான் புலப்படுகிறது.

 

  இதனால்தான், இந்த அல்குர்ஆன் வசனம் நிறைவுபெறும் போது, நிச்சயமாய் இந்தப் பண்பாடுதான், மிக உயர்ந்த கண்ணியமான செயலாகும் என்கிறது. இங்கு அல்குர்ஆன் பயன்படுத்தியுள்ள சொல் அஸ்ம் என்பதாகும். இது நபிமார்களிலும் விஷேடமானவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொற்பிரயோகம். அது நிலைமாறாத உறுதிகொண்டவர்களைக் குறித்து நிற்கிறது, அதாவது, நிலைமாறாத உறுதி கொண்டவர்களால் தான் இதுபோன்ற ஒரு சூழ்நிலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

 

  இத்தகைய ஒரு உயர்ந்த பண்பாட்டுக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள். எனவே, இடைக்கிடை வந்து போகும் இந்த சோதனைகளால் அதிர்ந்து போகாதிருப்போம். வீழ்ந்து போகாதிருப்போம். பொறுமையும் உண்மையும், நேர்மையும், உறுதியும் எங்களிடத்தில் என்றும் மாறாதிருக்கட்டும். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

No comments:

Post a Comment