Thursday, July 4, 2013

எகிப்தில் கலாநிதி முகம்மத் முர்ஸியின் ஆட்சி கலைக்கப்பட்ட போது…..


இன்று அதிகாலை - 04-07-2013 - ஒரு சகோதரரின் எஸ் எம் எஸ் தகவல்தான் எனக்கு இந்தச் செய்தியை முதலில் தெரியப்படுத்தியது. உடனே உரிய தளங்களுக்குச் சென்று பார்த்தேன். செய்தி உண்மை. பழைய நிலைக்கு மீண்டும் போவதற்கான அடையாளங்கள் தென்பட்டன. கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

மனது வலித்தது, தாங்க முடியாத ஒரு பாரத்தை சுமந்திருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. உண்மையாகச் சொன்னால் கண்களில் ஒரு துளி கண்ணீர் கூட எட்டிப்பார்த்து மறைந்தது. காலையில் பிள்ளைகளுடனும் சந்தோஷமாகப் பேச முடியவில்லை, மனைவி பேசிய எத்தனையோ விடயங்களுக்கு ஆம், இல்லை என்ற பதில்களை மட்டும் தான் தர முடிந்தது.

ஏன் இந்தக் கவலை?

            என்னையே மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்துக்கொண்டேன், கலாநிதி முஹம்மத் முர்ஸி ஒரு இஃவான் என்பதனாலா? மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டபூர்வமான ஒரு மனிதருக்கு அப்பட்டமான ஒரு அநியாயம் நடைபெறுகிறதே என்பதனாலா?

நிச்சயமாக இவற்றினால் அந்தக் கவலை ஏற்பட்டதாகத் தெரியவில்லை, இஃவான்கள் உலகில் நல்ல மனிதர்கள், அது ஒரு சிறந்த இயக்கம், அது உலகில் வெற்றி பெறவும் முடியும், தோல்வியடையவும் முடியும், இந்த வெற்றியும் தோல்வியும் அவர்கள் இஃவான்கள் என்பதனால் ஏற்பட மாட்டாது. எந்த விடயமும் வெற்றி பெறுவதற்கும் தோல்வியடைவதற்குமான காரணங்கள் வேறு இருக்கின்றன. எனவே இஃவான் ஒருவரது ஆட்சி வீழ்த்தப்பட்டது என்பதனால் அந்தக் கவலை வரவில்லை.

நிச்சயமாக, கலாநிதி முஹம்மத் முர்ஸி அவர்களுக்கு நடைபெற்றது ஒரு அநீதிதான்,  இந்த மாற்றம் இயல்பான மக்களின் எதிர்பார்ப்பல்ல. மாற்றமாக சில சக்திகளுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு சதியும் சூழ்ச்சியும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலைமை அவர் பதவி ஏற்ற நாளிலிருந்தே நடைபெற்றுக் கொண்டு தான் இருந்தது. அதன் உச்சக் கட்ட காட்சிதான் இன்று அரங்கேறியது. இந்த அநீதியும், சதியும், சூழ்ச்சியும் அங்கு நடைபெறாவிட்டால்தான் அது ஆச்சரியத்துக்குரியது. சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டம் இருக்கின்ற காலம் எல்லாம் அசத்தியத்தின் ஆயுதங்களாக அநீதியும் சதியும் சூழ்ச்சியும் இருந்து கொண்டே இருக்கும். இந்த உண்மையை தெரிந்து கொண்டு தான் அவரும் களமிறங்கி இருந்தார். எனவே சட்டரீதியாக தெரிவு செய்யப்பட்ட மனிதருக்கு அநியாயம் இழைக்கப்பட்டு விட்டதே, என்பதும் எனது கவலைக்குப் பிரதானமான காரணமாக இருக்கவில்லை.

மாற்றமாக, நல்ல இஸ்லாமிய மாதிரிகளை முன்வைப்பதற்குக் கிடைத்திருந்த ஒரு சந்தர்ப்பம் கை நழுவிப் போய்விட்டதே என்ற கவலை தான் உண்மையில் என்னை அதிகமாக ஆட்கொண்டிருந்தது. உலகின் தலைமைத்துவம் முஸ்லிம்களின் கைகளில் இருந்து போய்விட்டதன் பின்னர், நிகழ்ந்த மிக முக்கியமான பாதிப்புகளில் ஒன்றாக நான் இதனைக் காண்கின்றேன். அதாவது, கல்வி, கலாச்சாரம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என எல்லாத்துறைகளும் எல்லாக் கலைகளும் இஸ்லாமிய பாரம்பரியத்தின் அடிப்படையில் வளர்ச்சி காண்பது தடைப்பட்டது. உயர்ந்த மனிதப் பண்புகளைப் பிரதிபளிக்கக்கூடிய இஸ்லாமியப் பண்புகளும் பெறுமானங்களும் அற்றதாகவே அல்லது அவற்றிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாமலேயே அந்தக் கலைகளும் துறைகளும் வளர்ச்சி கண்டன.

இஸ்லாம் முழு வாழ்க்கைக்கும் வழிகாட்டக் கூடியது என்பது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதன் அரசியல், பொருளாதார, சமூக மாதிரிகள் எதுவும் வழிகாட்டிகளாக முன்வைக்கப்படவில்லை. காரணம் அவை இயல்பாக வளரக்கூடிய சூழல் இருக்கவுமில்லை. அவற்றிற்காக தூண்டுதல் அளித்து செலவு செய்து மேற்கொள்வதற்கான அதிகார பீடங்களும் இருக்கவில்லை. எனவே இஸ்லாமியக் கலைகளும் இஸ்லாமியத் துறைகளும் பெரியளவு வளர்ச்சி காணவில்லை.

கடந்த காலங்களில், இஸ்லாமிய மாதிரிகளை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகள், அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஏனைய சமூகவியல் துறைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றின் முழுமைத்தன்மை குறித்தும் அவற்றின் உண்மையான இஸ்லாமியப் பண்பு குறித்தும் பல விமர்சனங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. சில சமயங்களில் சிதைவுற்ற மாதிரிகள் கூட இஸ்லாமிய பெயர் தாங்கி வெளிவர முற்பட்ட அபாயங்களும் காணப்பட்டன. இன்னமும் அந்த அபாயங்கள் தொடர்கின்றன.

இந்த சூழ்நிலைகள் அனைத்தையும் கடந்து, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையைத் தந்த நிகழ்வாகவே கலாநிதி முர்ஸி அவர்களின் வெற்றி காணப்பட்டது. இஸ்லாம் வெறுமனே ஒரு சிந்தனையாக மட்டுமன்றி அதன் எல்லாப் பக்கங்களும் நடைமுறைக் கலைகளாக வளர்ச்சி காண்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அவரது பதவி ஏற்புடன் ஏற்பட்டிருந்தது. இன்றைய கலைகளிலும், துறைகளிலுமுள்ள எதிர்மறைப் பக்கங்களுக்கான சிறந்த மாற்றீடுகள் இனம் காணப்படுவதற்கான ஒரு வாய்ப்பு இருந்தது. ஏன்? மிக முக்கியமாக இஸ்லாமிய அரசியலுக்கான ஒரு சிறந்த மாதிரியை உலகத்துக்கு உரத்துச் சொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. 

இந்த அனைத்தும், இன்னும் பல வருடங்களுக்குத் தள்ளிப் போகப் போகின்றனவோ..? என்ற கவலைதான் மனதில் ஒரு பெரிய பாரமாய் இறங்கியிருந்தது.

உலகில் தனிமனிதர்கள் தோற்கலாம், இயக்கங்கள் தோற்கலாம், அரசாங்கங்கள் தோற்கலாம், ஆனால் இஸ்லாம் தோல்வி காணக்கூடாது. ண்மையில் இஸ்லாம் தோற்காவிட்டாலும் மனித மனங்களில் அது சாத்தியமற்றது என்ற மனநிலை ஏற்பட்டு விடக் கூடாது. அது எல்லாக் காலங்களிலும் எல்லா சூழல்களிலும் நடைமுறை சாத்தியமானது, என்பதும், இஸ்லாம் உலகில் மனித வாழ்வை கண்ணியமான ஒரு வாழ்வாகவே ஒழுங்கமைக்கிறது. என்பதும், அது தான் வெற்றி, அது தான் நிம்மதி, அது தான் சந்தோஷம் என்ற சிந்தனை உலகில் மங்கிப் போய்விடக்கூடாது.

நிச்சயமாக அது தோல்வி காண மாட்டாது, அதனைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றிருக்கிறான்.
إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون

1 comment:

  1. மனது வலித்தது, தாங்க முடியாத ஒரு பாரத்தை சுமந்திருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. உண்மையாகச் சொன்னால் கண்களில் ஒரு துளி கண்ணீர் கூட எட்டிப்பார்த்து மறைந்தது..... உன்மையில் என்னுடைய உணர்வுகளும் அப்படித்தான் இருந்தது ஆனால் இதற்காக நீங்கள் கூரிய காரணங்களுடன் நான் ஒற்றுமைப்படவில்லை ஏனென்றால் அவை இஸ்லாம், குர்ஆன், ஸுன்னாவின் பிரதிபளிப்பாக வெளிவரவில்லை, ஒரு இஹ்வான் இயக்கவாதியின் பிரதிபலிப்பாகத்தான் எழுதப்பட்டுள்ளன. அல்லாஹ் முரிசியின் பாதங்களை குர்ஆன் ஸுன்னாவின் பாதையில் உரிதிப்படுத்துவானாக. ஆமீன்.

    ReplyDelete