Thursday, March 7, 2013

தனிமனித உருவாக்கத்திற்கான அல்குர்ஆனின் உதாரணம்


ஒரு தடவை ஓர் ஆன்மீக அமர்வுக்கு தர்பிய்யா பற்றிப் பேசுவதற்காகத் திடீரென அழைக்கப்பட்டேன். உடனே என்ன பேசுவது என்று தீர்மானித்துக்கொள்ள முடியாமல் இருந்தது. ஆனாலும் பல சமயங்களில் திடீரென பாடங்கள் நடாத்திய அனுபவங்கள் இருந்ததால் பதற்றம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தேன். பல தடவைகள் தயாராகாமல் நடாத்திய பாடங்கள் உணர்வுபூர்வமாய்க் காணப்பட்டுள்ளன. நல்ல விளைவைத் தந்துள்ளன.

எல்லாவற்றையும்விட ஒரு புதிய இஜ்திஹாதாய் அமைந்த சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன. அத்தகைய ஒரு சந்தர்ப்பமாகத்தான் அன்றைய நாள் அமர்வும் காணப்பட்டது.

அன்றைய நாள் சூரத்துல் ஃபத்ஹின் இறுதி வசனங்களைத்தான் பேசு பொருளாய் எடுத்துக்கொண்டேன். அதிலும் குறிப்பாக ஸஹாபாக்கள் பற்றிய இன்ஜீலின் உதாரணம் பற்றித்தான் எனது கவனம் குவிந்தது.

இதற்கு முந்தைய வசனம், இந்த உலகின் எல்லா மார்க்கங்களையும் சிந்தனைகளையும் வெற்றிகொள்வதற்காய் இஸ்லாம் வந்திருக்கிறது. தூதுவர் அனுப்பப்பட்டது அதற்காகத்தான். அவர் கொண்டுவந்த சத்திய மார்க்கம்தான் அந்தப் பணிக்கான ஆயுதம் என்பதாய்க் குறிப்பிடுகின்றது.

அடுத்த வசனம் அதற்காக ஸஹாபாக்கள் எவ்வாறு தயார்படுத்தப்பட்டார்கள் என்பதைப் பேசுகிறது. அந்த தயார்படுத்தலை சித்தாpக்கும் வகையில்தான் அவர்கள் பற்றி இன்ஜீலின் உதாரணம் என அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. இன்ஜீலில் அவர்களுக்கான உதாரணம் அவர்கள் ஒரு தாவரத்தைப் போன்றவர்கள். அந்தத் தாவரம்; தனது கன்றை ஈன்றெடுக்கிறது. அதனைப் பலப்படுத்தி பக்கபலமாய் இருக்கிறது. அதனால் அந்தக் கன்றின் தண்டுகள் பலம் பெறுகின்றன. கன்று சொந்தக் காலில் நிற்கத் துவங்குகிறது. இப்போது பயிர் செய்தவன் சந்தோஷம் கொள்கிறான். இது காபிர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது. (சூரா அல்ஃபத்ஹ் - 29)

இங்கு, பயிர் செய்கையை அல்லது தாவர விருத்தியை ஸஹாபாக்களின் உருவாக்க முறைமைக்கான உதாரணமாய் அல்லாஹ்தஆலா சொல்கிறான்.

முதலில் ஒரு தாவரம் தனக்கான கன்றை உருவாக்குகிறது. தனிமனித உருவாக்கத்திலும் இதே முறைமை காணப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரும் உருவாக்கத்தில் ஈடுபட வேண்டும். இன்னும் ஒருவரையோ அல்லது பலரையோ தனது பராமாpப்பின்கீழ் வைத்து வளர்த்தெடுக்க வேண்டும்.

இந்த வசனத்தில் தனது கன்றை ஈன்றெடுத்தல் என்பது ஒரு கன்றையும் குறிக்கலாம் ஒன்றுக்கு மேற்பட்ட கன்றுகளையும் குறிக்கலாம். அந்த வகையில் உருவாக்கச் செயற்பாடு ஒரு உஸ்ராவாக அமைதல் இங்கு புலப்படும் ஒரு கருத்தாகும்.

அடுத்து ஈன்றெடுக்கப்பட்ட கன்றைப் பலப்படுத்தல். இதுதான் உருவாக்கத் தொழிற்பாட்டின் முக்கிய செயற்பாடு. இக்கருத்தைக் குறிப்பதற்காக அறபு மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்பிரயோகம் ஆஸர என்பதாகும். இந்த சொல்லில் ஒரு நுணுக்கம் இருக்கிறது. அதாவது சுயமாய் செயற்படவிட்டு, அதற்குப் பக்கபலமாய் இருத்தல் என்பதே இந்தச் சொல் குறிக்கும் கருத்தாகும். 

அந்தவகையில் தனிமனித உருவாக்கத்தில் ஒரு பொறுப்பாளரின் பணி தனக்குக் கீழே உள்ளவர்களை சுயமாய் தன்னை வளர்த்துக்கொள்ள வழிசெய்தல் வேண்டும். மொத்தமாய்த் தானே அவர்களைச் சுமந்துகொள்ளக் கூடாது. அவர்கள் தாமே முன்னோக்கிச் செல்ல வழிகாட்ட வேண்டும். உந்து சக்தியாய் இருத்தல் வேண்டும். பக்கபலமாய்ச் செயற்படல் வேண்டும். பயிற்சி பெறுகின்றவர்களும் எனக்கு கட்டளையிடப்பட்டவை மட்டுமே நான் செய்வதற்குரியவை என்று நினைத்துவிடக்கூடாது.

தன்னில் ஒரு மாற்றம் நிகழ்வதற்கு நான்தான் பொறுப்பானவன், பொறுப்பாளர் அதற்குப் பக்க பலமாய் இருப்பவர்தான். நான் அவரில் மாத்திரமே முழுமையாய் எல்லாவிதமான சிறிய பெரிய விடயங்களுக்கும் தங்கி நிற்பவனாய் இருந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்து, பலப்படுத்தல் தொழிற்பாட்டின் நோக்கம் பற்றிப் பேசுகிறது. தாவரத்தின் தண்டுகள் உறுதியடைகின்றன. அது ஒரு கன்று என்ற நிலையில் அதன் தண்டுகள் எவ்வாறு இருந்திருக்கும். சாதாரணமாக இரு விரல்களால் நசுக்கிவிட முடியுமாக இருந்திருக்கும். அதே கன்று ஒரு விருட்சமாய் வளர்ந்துவிட்டால் கைகளால் மாத்திரம் அதனை வீழ்த்த முடியாது. பெரும் பெரும் ஆயுதங்கள்தான் அதற்காகத் தேவைப்படுகிறது.

இதே உண்மைதான் தனிமனித உருவாக்கத்திலும் பிரதிபலிக்கின்றது. அதன் நோக்கமும் எதிர்ப்புகளால் துவண்டுவிடாத கவர்ச்சிகளால் பலவீனப்படாத ஒரு முழுமையான முஸ்லிம் ஆளுமை உருவாக்கப்படுதலாகும். அவனுக்குச் சமானமான சக்திகளால் நிச்சயமாய் வீழ்த்தப்பட முடியாதவனாய் அவன் இருப்பான். ஏனெனில், ஓர் இறைநம்பிக்கையாளர் இரண்டு இறைமறுப்பாளர்களுக்குச் சமானமானவன் என்பது உயர்ந்தோன் அல்லாஹ் வகுத்துள்ள நியதி அல்லது விதி.

எனவே, அவனை வெற்றிகொள்ள அவனைவிட பல மடங்கு சக்தி பிரயோகிக்கப்பட வேண்டியிருக்கும். இதுதான் தனிமனித உருவாக்கம், ஒரு ஐதான தண்டு உறுதிப்படுத்தப்படுகிறது. இந்தச் செயற்பாடு ஒரே நாளில் நடப்பதில்லை. நீண்ட பல வருடங்கள் அவசியப்படுகின்றன என்பதே அல்லாஹுதஆலா வைத்துள்ள விதியாகும். மனித உருவாக்கத்திலும் காலத்திற்கு ஒரு பெறுமானம் இருக்கிறது. தாவரம் வகுத்துவைத்த ஒரு விதியின் அடிப்படையில் தொடர்ந்து வளர்ச்சி கண்டுகொண்டேயிருக்கும். ஆனால், மனிதன் அவ்வாறல்லன். ஒரு விதியின் அடிப்படையில் தொடரான வளர்ச்சியை அங்கு எதிர்பார்க்க முடியாது.

மனிதனின் ஈமான் சிலவேளை அதிகரித்துச் செல்லும். சிலவேளை குறைந்து செல்லும் என நபியவர்கள் கூறியது இந்த உண்மையைத்தான். அதனால் மனித உருவாக்கத்திற்கு வரையறுத்த காலத்தை சொல்வது சிரமமானது. அது குறுகிய காலமாகவும் இருக்கலாம். அதிகமான காலமாகவும் இருக்கலாம். ஆனாலும், இன்று ஆரம்பித்து நாளை விளைவை எதிர்பார்க்கும் அவசரத்தில் மனிதர்கள் உருவாகமாட்டார்கள்.

அடுத்து, ஐதான ஒரு தண்டு உறுதியடையும்போது, இடையில் எத்தனையோ பருவங்களைக் கடந்துவருகிறது. அது மிக உறுதியான நிலையை அடைய முன்னர் பல வித்தியாசப்பட்ட முதிர்ச்சி நிலைகள் அல்லது உறுதி நிலைகள் அதற்கு இருக்கின்றன. இந்த இடைநிலைகளில் சாதாரண ஒரு சக்தியாலும் அது வீழ்த்தப்பட முடியும். அப்போது நாம் மரத்தைக் குறை சொல்வதில்லை. அது இன்னும் பிஞ்சு மரம். எனவேதான் வீழ்ந்து விட்டது என்போம். அல்லது தாய் மரத்தைக் குறை சொல்வதுமில்லை. சரியாக வளர்க்கவில்லை என்று.

இந்த யதார்த்தத்தை தனிமனித உருவாக்கத்திலும் நாம் சீரணிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தனிமனிதர்கள் கட்டம் கட்டமாகத்தான் உருவாக்கப்படுவார்கள். அதற்கென வகுக்கப்பட்ட முறைமைகளின் அடிப்படையில் உண்மையான முதிர்ச்சி ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்ற மதிப்பீடுகளுடன் மெதுவாகவே அந்த செயற்பாடு நகர்ந்துகொண்டிருக்கும். எதிர்பார்க்கப்படும் முதிர்ச்சி அடையப்பெற வேண்டும் என்பதே அதன் எதிர்பார்ப்பு. காலம் கடந்து விட்டது என்பது மட்டும் முதிர்ச்சிக்கான அடையாளமல்ல. அத்துடன் ஒரு பெரிய விருட்சமாக இருப்பினும், அது படிப்படியாகவே அந்த நிலையை அடைந்திருக்கும். தனிமனிதனும் படிப்படியாகவே விருட்சமாக மாறுவான். கட்டம் கட்டமாகவே மாற்றங்கள் நிகழ்த்தப்படும். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாத கன்றுகள்தான் தாயை சந்தேகிக்கின்றன. ஏன் தாய் மட்டும் அதைச் செய்கிறது இதைச் செய்கிறது எங்களை மட்டும் செய்ய விடுவதில்லை என்று.

அதுபோல் தர்பிய்யத்தின் இடைநடுவில் ஒருவர் வீழ்ந்துவிடவும் முடியும். திசை மாறவும் முடியும். இது முறைமையில் உள்ள பலவீனம் காரணம் என்பதை விடவும், தர்பிய்யத் அளிக்கும் முரப்பியிடமுள்ள உள்ள பலவீனம் காரணம் என்பதைவிடவும் அவர் தர்பிய்யத்தின் பாதையில் இருக்கிறார். இன்னும் தண்டுகள் முறுக்கேறவில்லை. எனவே, சிறிய காற்றையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இங்கு இவரது வீழ்தலுக்கு முறைமையும் முரப்பியும் காரணமாக இருக்கவேமாட்டார்கள் என்றும் கூற முடியாது. முறைமை பலமாய் இருக்க வேண்டும். முரப்பி பாதுகாக்க வேண்டும்.

அடுத்து கன்று சொந்தக் காலில் நிற்கும் நிலை ஏற்படுகிறது. இப்போதுதான் அது பிறர் தயவின்றி செயற்படும் நிலை ஏற்படுகிறது. தானும் ஒரு கன்றை ஈன்று பராமரிக்கும் சக்தியைப் பெறுகிறது. தனிமனித உருவாக்கத்தில் தனித்து செயற்பட அனுமதிக்கப்படும் நிலை இதுதான். தனது சொந்தக் காலில் நிற்றல் என்பது சுயமாக, பிறர் தயவின்றி ஒரு முழுமையான வேலைத் திட்டத்தைப் பொறுப்பேற்று வழிநடாத்திச் செல்லும் சக்தியைக் குறித்து நிற்கின்றது. இப்போது இவரும் ஒரு முரப்பியாகத் தொழிற்படுவார். தனக்குக் கீழே சிலரை வைத்து வளர்த்துவிடுவார். இந்தச் செயற்பாடு தொடரும். ஒரு வலைப் பின்னலாய்த் தொடரும்.

ஒரு தாவரம் இன்னொரு தாவரத்தை உருவாக்குகிறது. அது இன்னொன்றை உருவாக்குகிறது. அது இன்னொன்றை உருவாக்குகிறது. இவ்வாறு அந்த செயன்முறை தொடராக நடைபெறும் ஒரு வலைப்பின்னலாய் வியாபித்திருக்கும். இந்நிலைதான் தாவர உலகத்தில் ஒரு பெரும் காடாக வியாபித்திருக்கும். மனித உருவாக்கத்தில் ஒரு சக்தி வாய்ந்த வலைப்பின்னலாகக் காணப்படும்.

இந்த நிலையைப் பார்த்துத்தான் பயிர் செய்தவன் சந்தோஷம் அடைகிறான். அல்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ள பயிர் செய்தவன் என்பது யாரைக் குறிக்கும் என்பதில் ஒரு கருத்து வேறுபாடு காணப்படுகிறது. சிலர், அது அல்லாஹ்வைக் குறிக்கும் என்றனர். வேறுசிலர், அது நபியவர்களைக் குறிக்கும் என்கின்றனர்.

நான் நினைக்கிறேன் தனமனித உருவாக்கத் தொழிற்பாட்டை வைத்து நோக்கும்போது, இரண்டாவது கருத்துத்தான் மிகச் சாpயானது என்று. காரணம் வசனத்தின் அடுத்த பகுதி இறைமறுப்பாளர்கள் இதனால் கோபம் கொள்கிறார்கள் என்று வருகிறது. அல்லாஹ் சந்தோஷம் கொள்கிறான். இறைமறுப்பாளர்கள் (காஃபிர்கள்) கோபம் கொள்கிறார்கள் என்பதைவிடவும் நபியவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். காபிர்கள் கோபப்படுகிறார்கள் என்பதே மிகவும் பொறுத்தமானதாக இருக்கிறது.

எனவே, இங்கு நபியவர்கள்தான் வித்திட்டவர்கள். மனித உருவாக்கத்திற்கு அவர்கள்தான் வித்திடுகிறார்கள். ஒரு மரத்தை நடுகிறார்கள். அதனை தான் எதிர்பார்க்கும் முறைமையில் எதிர்பார்க்கும் இலக்கு நோக்கி வளர்த்தெடுக்கிறார்கள். இப்போது அந்த மரம் தான் வளர்ந்த முறைமையில், தான் வளர்ந்த இலக்கை நோக்கி அடுத்த மரங்களை உருவாக்குகிறது. இந்த செயல்முறை தொடர்கிறது. அது பெருகி ஒரு சக்தியாய் மாறுகிறது. இதனைப் பார்க்கும் நபியவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

ஏன்? சந்தோஷம் ஏன் வருகிறது? தாம் இல்லாவிட்டாலும் இனி இந்த செயல்முறை தொடரும் என்ற நம்பிக்கை வரும்போதுதான் சந்தோஷம் வருகிறது. தாம் கொண்டுவந்த சிந்தனை இந்த உலகில் மறுமை வரை நிலைத்திருப்பதற்கான நிரந்தர ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. இனி அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இனிமேல் தான் மரணித்துவிட்டாலும் கொள்கை மரணிக்காது வாழும். அதற்கான ஏற்பாடு நடந்துவிட்டது. இதுதான் நபியவர்களைச் சந்தோஷப்பட வைத்த விடயம்.

இங்கு தர்பிய்யத் அளிக்கும் முரப்பிகளின் கவனத்தில் குவிய வேண்டிய ஒரு முக்கிய விடயம் இருக்கிறது. தனிமனித உருவாக்கச் செயற்பாடு என்பது நீண்டகால வேலைத்திட்டம். நாளைய இருப்புக்கான வேலைத்திட்டம். அது நடைபெறுவது நிகழ்காலத்தில்தான். ஆனால், அது நாளைய இருப்புக்கும் நாளைய வெற்றிக்குமான வேலைத்திட்டமாகக் காணப்படல் வேண்டும். இன்றைய பிரச்சினைகளில் மூழ்கிவிடுவதாய் அமைந்துவிடக் கூடாது.

ஒரு முறை இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

எனக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தொpயவில்லை என்றால் நான் உங்களுக்கு சாpயாக தர்பிய்யத் தரவில்லை என்று அர்த்தம் என்றார்கள்.

எனவே, தர்பிய்யத்தின் வேலைத்திட்டம் நிரந்தரமாக நடப்பதற்கான ஏற்பாடு என்ன என்பதுதான் மிக முக்கியமானது. அதுதான் கவனங்கள் அதிகம் குவிய வேண்டிய பகுதியாகும். அப்பொழுதுதான் நாளைய இருப்பும் வெற்றியும் உத்தரவாதப்படுத்தப்படும்.

அடுத்து, இந்தச் செயற்பாடு இறைமறுப்பாளர்களைக் கோபம் கொள்ள வைப்பதாய்க் காணப்படும் என்கின்றது. இன்று உலகில் இஸ்லாத்திற்கும் அதன் எதிரிகளுக்கும் இடையிலான உண்மையான போராட்டம் எது என்பதை உன்னிப்பாய் கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை புலப்படும்.

உலகை ஆளும் ஒழுங்கு எது? இஸ்லாம் கூறும் ஓழுங்கா? அல்லது மேற்கு முன்வைக்கும் ஒழுங்கா? இன்றைய மேற்கின் ஆதிக்கம் இல்லாமல் ஆக்க எதனால் முடியும்? மேற்குக்குப் புறம்பான ஒரு முழுமையான சமூக ஒழுங்கை கட்டியெழுப்புவதனால்தான் உலக அரங்கிலிருந்து மேற்கு படிப்படியாய் பின்வாங்க வேண்டியேற்படும். மேற்குக்குப் புறம்பான இஸ்லாமிய சமூக ஒழுங்கு, மேற்சொன்ன அமைதியான மனித உருவாக்கத்தினூடாகத்தான் கட்டியெழுப்பப்படுகிறது.

எனவே, இஸ்லாத்தின் எதிரிகளை அச்சமூட்டுகின்ற கோபப்படுத்துகின்ற உண்மையான செயற்பாடு எது எனின், அது கட்டம் கட்டமான மனித உருவாக்கம்தான். செடியாய் இருப்பவர்கள் விருட்சமாய் மாற்றப்படும் செயற்பாடுதான். காபிர்களைப் பொறுத்தவரையில் நீண்டகாலத்தில் அபாயமான, அவர்களது இருப்பையும் ஆதிக்கத்தையும் உலகிலிருந்து முற்று முழுதாய் துடைத்தெரியும் வேலைத்திட்டம் இதுதான். எனவேதான் அவர்கள் கோபம் கொள்கிறார்கள்.

இங்கு ஒரு விடயம் புலப்படுகிறது. சந்தோஷம் அடைவதும், கோபம் கொள்வதும் எதிர்காலத்தை மையப்படுத்தியே நடைபெறுகிறது. அந்த வகையில் உருவாக்கச் செயற்பாடு எதிர்காலத்தை மையப்படுத்தியது. அதனை நபியவர்கள் மிகச் சாpயாய் நிறைவேற்றினார்கள்.

இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) மிகச் சாpயாக அப்பணியைத் தொடர்ந்தார்கள். எனவேதான், இஸ்லாமும், அதனுள்ளே இஃவான்களும் விருட்சமாய் எழுந்து நிற்கிறார்கள். அதேபோல் இன்று எதிரிகளின் போராட்டம் யாரை நோக்கி குவிந்திருக்கிறது. பொதுவாக இஸ்லாத்தை நோக்கியும் குறிப்பாக இஃவான்களை நோக்கியும் குவிந்திருப்பதை அவதானிக்கலாம்.

ஏனெனில், நிதானமான உருவாக்கச் செயற்பாடு இங்குதான் வாழ்கிறது. அதனூடாகத்தான் இஸ்லாத்தின் இருப்பும் வெற்றியும் உத்தரவாதப்படுத்தப்படுகிறது. எதிரிகளின் இருப்பு கேள்விக்குள்ளாகிறது. எனவே நாம் எமது பணியில் மீள வேண்டிய இடம் எது என்பது புரிகிறது.

அல்லாஹ் எம்மை அங்கீகாpக்கட்டும்.


No comments:

Post a Comment