Thursday, March 14, 2013

இலங்கையில் இஸ்லாத்தை முன்வைத்தல் தொடர்பாக...


ங்கு குறிப்பாக இன்று சந்திக்கு இழுக்கப்பட்டுள்ள விவகாரங்களைப் பொருத்தவரை, அவை குறித்த மிக நடுநிலையான பார்வை முன்வைக்கப்பட வேண்டியதன் அவசியம் வெகுவாக உணரப்படுகிறது. ஒவ்வொரு தரப்பினரும் தாம் சரிகாணும் நிலைப்பாடுகளை மாத்திரம் இஸ்லாத்தின் நிலைப்பாடுகளாக முன்வைப்பது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல என்பதும் கருத்தளவில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயம்தான்.


ஆனாலும், செயற்பாட்டளவில் எது நடைபெறுகிறது என்று பார்த்தால் தத்தமது நிலைப்பாடுகளைப் பேசுகின்ற சூழ்நிலைதான் மிகைத்துக் காணப்படுவதாகத் தோன்றுகிறது. நிகாப் பற்றிப் பேசுகையிலும் சரி, தாடி பற்றிப் பேசுகையிலும் சரி, ஆண்களின் ஆடையில் எது சுன்னா என்று பேசுகையிலும் சரி, இது போன்ற இன்னும் எத்தனையோ விடயங்களில் இந்த உண்மையை அவதானிக்கலாம்.

அந்த வகையில் இஸ்லாத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல நிலைப்பாடுகள் காணப்படுகின்ற விவகாரங்களில் ஒரு நிலைப்பாட்டை வலியுறுத்துதல் என்பதைவிடவும் அந்த விவகாரங்களில் இஸ்லாத்தின் விசாலத்தன்மை குறித்து அதிகம் பேசப்படுவது பொறுத்தமானது.

இஸ்லாமிய சட்டக்கலையில் உள்ள இந்த விசேட பண்பு வெளிக்காட்டப்பட வேண்டிய தேவை தற்போது உள்ளது. இஸ்லாம் எல்லா கால இடசூழ்நிலைகளுக்கும் பொறுந்தக்கூடிய ஒரு மார்க்கம், முடிந்த முடிவுகளாக, இனி மாற்றப்பட முடியாத தீர்ப்புகளாக இஸ்லாம் சில சட்டங்களை முன்வைத்திருக்கின்றது.

ஆனால், ஒப்பீட்டளவில் அவை குறைவானவைதான். கால இடசூழலமைவுகளுக்கு ஏற்பமாறிச் செல்ல முடியுமான சட்டப்பரப்பு இஸ்லாத்தில் மிக அதிகமானவை. இந்த இரண்டாம் பரப்பில்தான் ஒரு விவகாரத்தில் பல அபிப்ராயங்கள் தோன்றுகின்றன. இந்த பல அபிப்ராயங்கள் என்பது இஸ்லாமிய சட்டத்தின் செழுமையைக் குறிப்பனவே அன்றி அவை பிளவுகள் அல்ல. இஸ்லாமிய சட்டம் விசாலமானது. அங்கு செயற்படுவதற்கான ஒரு வழி மட்டும் சொல்லப்படவில்லை. பல வழிகள் மனிதனுக்கு முன்னே காட்டப்பட்டிருக்கின்றன.

இதனால்தான், கலீஃபா உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் சஹாபாக்கள் பல கருத்து நிலைப்பாடுகளைக் கொள்ளவில்லை என்றிருப்பின், அது நிச்சயம் எனக்கு சந்தோசத்தை அளிப்பதாக இருந்திருக்கமாட்டாது என்று குறிப்பிட்டார்கள். அன்று அவர்கள் பல கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டமையால்தான் இன்று நாம் இஸ்லாமியச் சட்டங்களின் விசாலத்தன்மையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், இல்லாதபோது மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்போம் என்பதுதான் உமர் (ரஹ்) அவர்கள் சொல்லவந்த செய்தியாகும்.

அந்த வகையில் நிகாபை அணிவதும் அணியாமல் இருப்பதும், தாடி வைப்பதும் வைக்காமல் இருப்பதும், அதனை கத்தரிப்பதும் கத்தரிக்காமல் இருப்பதும், இஸ்லாமியச் சட்டப் பரப்புக்குள் உள்ள பல்வேறு பார்வைகள், இவற்றுள் ஒன்று தீவிரவாதமாகவும் மற்றொன்று மிதவாதமாகவும் பார்க்கப்படுவதற்குரியனவல்ல என்பது நாம் புரிந்துகொள்ள வேண்டிஒரு விடயம் மட்டுமல்ல அடுத்தவர்களுக்குச் சொல்லப்பட வேண்டிய செய்தியும் இதுவாகும். இஸ்லாமியச் சட்டத்தின் விசாலத்தன்மை இதுதான்.

அதன் பல்வேறு கருத்து நிலைப்பாடுகள் சரி - பிழை, ஹக்கு -பாத்தில், தீவிரவாதம் – மிதவாதம் என்று வேறுபடுத்திப் பார்க்கப்படுவதற்கு உரியனவல்ல. எல்லா மனிதர்களையும் எல்லாச் சூழல்களையும் எல்லா இடங்களையும் அரவணைப்பதற்கான ஏற்பாடு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- அக்ரம் அப்துஸ் ஸமத்

No comments:

Post a Comment