Tuesday, June 3, 2014

இஸ்லாத்தில் சிறுவர் உழைப்பு

ஒரு தர்பியாப் பார்வை

சிறுவர் உழைப்பு,  சிறுவர்களை வேலைக்கமர்த்தல் போன்ற தலைப்புக்கள் இன்று பரவலாக சார்பான எதிரான வாதங்களைக் கொண்ட ஒரு விடயமாகும். இந்த வாதப் பிரதிவாதங்களை கூர்ந்து அவதானிக்கின்ற பொழுது இரண்டு விடயங்கள் சற்று கவனயீர்ப்பைப் பெறுகின்றன.
ஒன்று உழைப்பு என்பது வளர்ந்தவர்களுக்கு மாத்திரம் உரியது என்ற ஒரு மனப்பதிவு மேலோங்கியிருப்பது புரிகிறது. 

இரண்டாவது சிறுவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது உழைக்கும் உரிமைக்கும் ஏனைய கல்வி உரிமை, விளையாடும் உரிமை, அநியாயம் இழைக்கப்படாமை போன்றவற்றிற்கும் இடையில் சமநிலை பேணப்படாமல் போகலாம் என்ற அச்சநிலை ஒன்று பெரிதும் மேலோங்கி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

இவை தொடர்பிலான இஸ்லாமியப் பார்வைகளை சற்று அலசிப் பார்த்த பொழுது,  மேற்கூறப்பட்டது போன்ற தடுமாற்றங்கள் இன்றி மிகவும் தெளிவான,  சமநிலையான நிலைப்பாடுகளை அவதானிக்க முடிந்தது. உண்மையில் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் எந்த விவகாரமாக இருப்பினும் தெளிவான ஒரு நிலைப்பாட்டையே நாம் அங்கு நிச்சயமாகக் காணலாம். ஏனெனில் அது அல்லாஹ்வின் வழிகாட்டல்.

இஸ்லாத்தின் சமநிலைப்படுத்தல்களைப் பேசுவதற்கு முன்னர்,  சிறுவர்,  சிறுவர் உழைப்பு போன்ற சொற்கள் உணர்த்தும் கருத்துக்கள் குறித்து சற்று கவனத்தைச் செலுத்துவது பொறுத்தமானது.

பொதுவாக சிறுவர் என்பதை பிறப்பு முதல் பருவமடையும் வரையில் உள்ள காலமாகவே இமாம்கள் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். பெரும்பாலான இமாம்கள் பருவமடைதலை பதினைந்து வயது என்கின்றனர்.

இத்துடன்,  இன்னும் இரண்டு வகையான சொற்கள் இஸ்லாத்தின் பிரயோகத்தில் காணப்படுகின்றன. ஒன்று தம்யீஸ் மற்றயது ருஷ்த் என்பன. இவற்றில் தம்யீஸ் என்பது நன்மையையும் தீமையையும் பிரித்தறிய முடியுமான பருவம் என்பர். பெரும்பாலும் இதனை ஏழு வயது என வரையறை செய்துள்ளனர். அந்தவகையில் பிறப்பு முதல் ஏழு வயது வரையான தம்யீஸ் அடையாத பருவத்தையும் ஏழு வயது முதல் பருவ வயதான பதினைந்து வயது வரையான தம்யீஸ் அடைந்த பருவத்தையும் உள்ளடக்கிய பருவமே சிறுவர் எனப்படுகிறது.

ருஷ்த் என்ற சொல்,  ஒரு விடயத்தை சுயமாக மேற்கொள்ளும் ஆற்றலைக் குறிக்கின்றது. இது பருவம் சம்பந்தப்பட்டது என்பதை விடவும் முதிர்ச்சி சம்பந்தப்பட்டதாகும். இந்த முதிர்ச்சி நிலை பருவ வயதிற்கு முன்னர் ஏற்படவும் முடியும். பின்னர் ஏற்படவும் முடியும்.

சிறுவர் தொழில் செய்தல் என்பதன் கருத்து சிறுவர் ஒருவர் தனக்காகவோ அல்லது பிறருக்காகவோ ஒரு பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுதலாகும். இது கூலி வழங்கப்படுவதாகவும் அமைய முடியும். கூலி வழங்கப்படாமல் அமையவும் முடியும். இது எல்லா விதமான தொழில் நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாகும். (ஹைபா மஹ்பூழ், சிறுவர் தொழில் செய்தலும், அவர்களது சமூக வளரச்சியில் அதன் பங்கும்)

மேற்கூறப்பட்ட பின்புலங்களுடன், சிறுவர் உழைப்பு தொடர்பிலான சில பார்வைகளை இங்கே பரிமாறிக் கொள்ளலாம்; என்று நினைக்கிறோம்.
நபியவர்களுக்குப் பணியாளனாக தனது சிறிய வயதில் அனஸ் (றழி) அவர்கள் பத்து வருடங்களாக செயற்பட்டிருக்கிறார்கள் என்பது பிரபல்யமான ஓர் உண்மை. இந்த நிகழ்வு எமக்குச் சொல்லும் மிக முக்கிய உண்மை என்னவெனில் சிறுவர்கள் உழைப்பில் ஈடுபடல் என்பது தடை செய்யப்பட்ட ஒரு விடயமல்ல என்பதுடன்,  அது அவர்களது உரிமையுமாகும். நபியவர்களது சிறு பராயத்திலும்,  ஸஹாபாக்களின் சிறுபராயத்திலும் உழைப்பு அவர்களது வாழ்வில் ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கிறது என்பதைக் காணலாம்.

இந்தப் பின்புலத்தில்தான் இஸ்லாமிய ஷரீஆ வல்லுனர்கள் ஒரு மனிதன் உரிமைகளையும் கடமைகளையும் பெற்றுக் கொள்ளும் தகைமையை எப்பொழுது அடைந்து கொள்வான் என்பது குறித்துப் பேசும் பொழுது உயிருடனிருத்தல்என்ற விடயத்தையே முக்கிய அடிப்படையாகக் குறிப்பிடுகின்றனர். அந்தவகையில் கருவில் இருக்கும் சிசுவும் கூட சில உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறது என இஸ்லாமிய சட்டத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.

எனவே,  மனிதனுக்குரிய எல்லா உரிமைகளையும் போல்,  உழைக்கும் உரிமையையும் பெற்றுக் கொள்ளும் தகைமை,  உயிருடன் இருக்கின்ற அனைவருக்கும் காணப்படுகின்றது என்பதே இஸ்லாத்தின் பார்வையாகும். ஒருவர் சிறுவர்என்பதால் அந்த உரிமை மறுக்கப்பட்ட ஒரு நிலையை நாம் இஸ்லாத்தில் காண முடியாது.

 இங்கு ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் உரிமைகளையும் கடமைகளையும் பெறுவதற்கான அடிப்படைத் தகுதி உயிருடனிருத்தல் என்று குறிப்பிட்டோம்,  இதன் பொருள் உயிருடன் இருக்கும் ஒவ்வொருவரும் உரிமைகளையும் கடமைகளையும் பெறத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள்,  என்பது மாத்திரமேயாகும். 

ஆனால் அவற்றை நிறைவேற்றுமாறு அவனிடம் கேட்டுக் கொள்ளப்படுவது எப்போது? அல்லது அந்த உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் அவன் வகை கூறக் கூடியவனாக கருதப்படுவது எப்போது? இதற்கான தகைமையைத்தான் நாம் தம்யீஸ் அடைதல் என்போம். ஏற்கனவே கூறப்பட்டது போல் நன்மை தீமைகளை வேறு பிரித்து அறிந்து கொள்ளக்கூடிய பருவத்தையே நாம் தம்யீஸ் என்போம். இது ஏழு முதல் பதினைந்து வயது வரையான காலமாகும். எனவே ஒருவன் தம்யீஸ் அடைகின்ற பொழுது பொறுப்புக் கூறுவதற்கான அடிப்படைத் தகுதியைப் பெற்றுக் கொள்கிறான்,  ஆனால் இந்த பொறுப்புக் கூறுதல் முழுமையான வடிவத்தைப் பெறுவது பருவ வயதை அடைகின்ற போதாகும்.

இந்த அடிப்படையை வைத்து நோக்கும்போது சிறுவர்களுக்கு உழைக்கும் உரிமை காணப்படுகிறது என்பது மாத்திரமன்றி,  அவன் நேரடியாக ஈடுபட்டு உழைக்க முடியுமான ஒரு பரப்பு காணப்படுகிறது என்பதுடன்,  அவனது உழைப்புக்கு சமூக,  சட்ட ரீதியான அங்கீகாரமும் இருக்கின்றது என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

அடுத்து மிக முக்கிய மற்றொரு உண்மையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுதான் பிள்ளை வளர்ப்பு என்பது. பிறப்பு முதல் பருவ வயதை அடையும் வரையிலான காலப்பகுதியில் ஒரு பிள்ளையை வாழ்வை மேற்கொள்வதற்காகத் தயார்படுத்துவதையே பிள்ளை வளர்ப்பு என்று பொதுவாகக் குறிப்பிடுவர்.

இங்கு வாழ்வு என்பதை இஸ்லாம் மூன்று முக்கிய அடிப்படைகளில் விளங்கப்படுத்துகிறது. ஒன்று இபாதத் எனும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டிருத்தல். இரண்டாவது இமாரத் எனும் பூமியை அபிவிருத்தி செய்தல். மூன்றாவது கிலாபத் எனும் மனித இனத்திற்கு வழிகாட்டுதல். 

இவற்றுள் இரண்டாம் பகுதியான பூமியை அபிவிருத்தி செய்தல் என்ற சிந்தனையின் ஒரு வடிவமாகவே இந்த உழைப்பு என்ற அம்சம் காணப்படுகிறது. அந்தவகையில் ஒரு பிள்ளை வாழ்வைக் கற்றுக் கொள்ள வேண்டும் எனின், உழைப்பு என்ற தொழிற்பாட்டிலும் அதற்கு ஒரு அனுபவம் அவசியப்படுகிறது. எனவே,  கற்றுக் கொள்ளுதல் பயிற்சி பெறுதல் என்ற அடிப்படையில் ஒரு பிள்ளை உழைப்பில் ஈடுபடுதலை இஸ்லாம் தடை செய்யவில்லை. மாத்திரமன்றி பருவ வயதிற்கு முன்னரே அவர்களிடம் ஒரு முதிர்ச்சி அவதானிக்கப்படும் எனின்,  அவர்களிடம் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் கூட ஒப்படைக்கலாம் என கீழ்வரும் அல்-குர்ஆன் வசனத்திற்கு விளக்கம் கூறும் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். அநாதைகள் பருவ வயதை அடையும்வரை அவர்களைப் பராமரியுங்கள். அவர்களிடம் சுயமாய் செயற்படும் முதிர்ச்சியை அவதானித்தால் அவர்களது சொத்துக்களை அவர்களிடமே ஒப்படைந்து விடுங்கள்” (நிஸா – 06) என்று அல்-குர்ஆன் கூறுகிறது.

இந்தவசனத்தின்படி,  அந்த முதிர்ச்சி பருவ வயதிற்கு முன்னர் ஏற்படவும் முடியும். பின்னர் ஏற்படவும் முடியும்.

மேற்கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படைகளில் நின்று நோக்கும் பொழுது உழைத்தல்,  தொழில் செய்தல், சம்பாதித்தல், செல்வ விருத்தியில் ஈடுபடல் என்ற எந்த விடயமாக இருப்பினும் அது எல்லா மனிதர்களுக்கும் உரிய உரிமை என்பது போல் சிறுவர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது. அது சுயமான உழைப்பில் ஈடுபட்டாலும் சரி,  பிறிதொருவரால் வேலைக்கமர்த்தப்பட்டாலும் சரி. ஆனால் இந்த உரிமை ஏனைய உரிமைகளை மீறாதிருக்க வேண்டும் என்பது மிக முக்கிய நிபந்தனையாகும். 

அந்தவகையில் இவ்விடயத்தை சமநிலைப்படுத்தும் அமைப்பில் இஸ்லாம் இதற்கு சில வரையறைகளை முன்வைத்துள்ளது.

1.            சிறுவர்கள் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் தொழில் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டதாகக் காணப்படல் வேண்டும். இந்த நிபந்தனை சிறுவர்களுக்கு மாத்திரமன்றி எல்லோருக்குமான பொதுவிதியாக இருப்பினும் இங்கு குறிப்பாக இந்த நிபந்தனை முன்வைக்கப்படக் காரணம்,  ஹராமான செயற்பாடுகளில் அவர்களை அறியாமல் பிறர் அவர்களை ஈடுபடுத்தி விட வாய்ப்பு அதிகம் என்பதனாலாகும்.

2.            தொழிலில் ஈடுபடும் சிறுவன் தம்யீஸ் அடைந்திருத்தல் வேண்டும். ஏனெனில்,  ஏற்கனவே குறிப்பிட்டது போல் ஒருவன் ஒரு விடயத்தை நிறைவேற்றுமாறு கேட்கப்படுவதற்கும்,  வகை கூறுவதற்குமான தகைமை தம்யீஸ் அடைதல் என்பதாகும்.

3.            பெற்றோர்களின் அல்லது பாதுகாவலரின் அனுமதியுடனேயே செயற்பட வேண்டும்.

4.            குறித்த தொழிலில் ஈடுபடுவதன் மூலம் தெளிவான ஒரு பயனை அந்தச் சிறுவன் பெற்றுக் கொள்ளக்கூடியதாக அமைதல் வேண்டும். அது ஒரு விடயத்தைக் கற்றுக் கொள்வதாகவோ,  அல்லது ஒரு வருமானத்தை ஈட்டிக் கொள்வதாகவோ காணப்பட முடியும்.

5.            அவர்கள் ஈடுபடப்போகும் தொழில்வகை,  காலம்,  கூலி என்பன மிகத் தெளிவானவையாகக் காணப்படல் வேண்டும்.

6.            சிறுவர் தொழிலில் ஈடுபடுவதோ அல்லது ஈடுபடுத்தப்படுவதோ எந்தவகையிலும் அவரது கல்வியை மறுதலிப்பதாகவோ அல்லது அதில் குறைபாட்டை ஏற்படுத்துவதாகவோ அமையக் கூடாது.

7.            அவர்களது ஒழுக்கம்,  பண்பாடுகளுக்கு ஊறு விழைவிக்கும் வகையிலும் அந்தத் தொழில் காணப்படக் கூடாது.

8.            சிறுவர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று விளையாட்டு. இதற்கான போதிய அவகாசம் வழங்கப்படல் வேண்டும். விளையாட்டு மறுக்கப்படும் வகையில் அந்தத் தொழில் அமையக் கூடாது.

9.            சிறுவர்களது உடல்,  மன, அறிவு வளர்ச்சி நிலைகள் அவதானிக்கப்பட்டு அவற்றிற்கு பொறுந்தி வரக் கூடியவையாக அந்தத் தொழில் காணப்படல் வேண்டும். அவர்களது இயலுமைகளைத் தாண்டியதாக ஒரு போதும் அமைந்துவிடக்கூடாது.


இறுதியாக, சிறுவர்கள் கட்டாயமாக தொழில் செய்ய வேண்டும். அதுதான் அடிப்படை என்று உண்மையில் இஸ்லாம் கூறவில்லை. மாற்றமாக அவர்களது தொழில் செய்யும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்று கூறுவதுடன்,  வாழ்வுக்கான தர்பியத் என்ற வகையில் அது அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. எனவே, எமது பிள்ளைகளையும் நாம் உழைக்கும் ஆற்றல் உள்ளவர்களாக உருவாக்குவதில் கவனம் செலுத்த முடியும். அல்லாஹ் எம்மை ஏற்றுக் கொள்வானாக.

No comments:

Post a Comment