Monday, June 30, 2014

ரமழான் மாற்றத்திற்கான காலம்

ரமழான் மாதம் மாற்றத்திற்குரிய ஒரு காலம். அதனால் தான் ரமழான் ஆரம்பிக்கின்ற பொழுது, அந்த மாற்றத்தின் முதல் வடிவம் வானத்தில் நிகழ்கிறது. நபியவர்கள் கூறியுள்ளது போல்,  ரமழான் வருகின்ற போது,  சுவர்க்கத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன. நரகத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்படுகின்றன. ஷைத்தான் விலங்கிடப்படுகின்றான். இவை வானளவில் நடைபெறுகின்ற மிகப்பெரிய மாற்றங்கள்.

ரமழானில்,  எமது வாழ்வின் பௌதீக ஒழுங்கிலும் எம்மையறியாமல் மாற்றங்கள் நிகழ்கின்றன. எமது நித்திரை நேரசூசி,  உணவு நேரசூசி, இயற்கை உபாதைகள் நேரசூசி எல்லாமே மாறுகின்றன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சூழல்களில் வேலை நேரங்கள் மாறுகின்றன. ஏன் பாதைகளில் வாகன நெரிசல் நேரம் கூட மாறுகின்றது.

இவ்வளவும் மாறுகின்ற பொழுது மனித நடத்தைகளில் மாத்திரம் ஏன் மாற்றம் நிகழக் கூடாது?

நிச்சயம் மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். அதனால்தான் அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் இறங்கியிருக்கிறது. அல்குர்ஆன் மாத்திரமன்றி தௌராத்,  இன்ஜீல் கூட ரமழான் மாதத்தில் இறங்கியதாக சில அறிவிப்புகள் கூறுகின்றன. இந்த வேதங்கள் அனைத்தும் மனிதனது நம்பிக்கை,  சிந்தனை,  நடத்தை என்பனவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் இறக்கப்பட்டவை. இந்த உண்மையை அழுத்தமாகச் சொல்லும் முகமாகவே இவை ரமழானில் இறக்கப்பட்டிருக்கின்றன. ஏனெனில் ரமழான் மாற்றத்திற்குரிய காலம்.

அல்லாஹ்தஆலா நோன்பின் நோக்கத்தைப் பற்றிக் கூறும் பொழுது,  “நீங்கள் தக்வா உடையவர்களாக மாறுவதற்காக” (பகரா) என்கிறான். இந்த தக்வா என்பது ஒரு மனப்பாங்கு மாற்றம்.

இதற்கப்பால் நடத்தை மாற்றத்தைக் குறிக்கும் முகமாகவே நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள். பொய் சொல்வதையும்,  போலியாக செயற்படுவதையும் யார் விடவில்லையோ அவர் தனது உணவையும் பாணத்தையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லைஎன்றார்கள். (புஹாரி)

மற்றொரு சமயம் இவ்வாறு கூறினார்கள் நோன்பு நோற்றுவிட்டால்,  தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடாதீர்கள். பிறரை முட்டாள் என்று கருதிவிடாதீர்கள். (அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்கள்) உங்களை ஒருவர் ஏசினாலோ அல்லது சண்டையிட வந்தாலோ நான் நோன்பு நோற்றிருக்கிறேன் என்று கூறி ஒதுங்கிக் கொள்ளுங்கள்என்றார்கள். (முஸ்லிம்)

ஜாபிர் (றழி) அவர்கள் கூறினார்கள் நீங்கள் நோன்பு நோற்றால், உங்களது செவியும்,  பார்வையும்,  நாவும் பொய்யை விட்டும் பாவங்களை விட்டும் நோன்பிருக்க வேண்டும். பணியாளர்களைத் துன்புறுத்துவதைத் தவிர்ந்து கொள்ளுங்கள், உங்களது நோன்பு கண்ணியமாகவும் அமைதியாகவும் காணப்படல் வேண்டும். நீங்கள் நோன்பு நோற்ற ஒரு தினமும் நோன்பு நோற்காத ஒரு தினமும் ஒரே மாதிரியாக அமையாது பார்த்துக் கொள்ளுங்கள்என்றார்கள். (இப்னு அபீஷைபா)

பாவங்களை மாத்திரமன்றி அற்பத்தனமான நடத்தைகளையும் களைந்து ஒரு கண்ணியமான மனிதனை நோன்பு தயார்படுத்துகிறது. இத்தகைய ஒரு உயர்ந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய காலம்தான் ரமழான் காலம்.


இன்று முஸ்லிம்கள் பற்றிய தப்பபிப்பிராயங்கள் வேண்டுமென்றே பரப்பப்படும் ஒரு சூழலில் நாம் அற்பமான செயல்களைக் களைந்து,  எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற மாற்றத்தை இந்த ரமழான் எங்களுக்குச் சொல்கிறது என்பதை இவ்வருட ரமழான் செய்தியாய் உங்களுடன் பரிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

No comments:

Post a Comment