Thursday, August 17, 2017

மகாஸித் தேடல்கள் (1)

முன்னுரை

மகாஸித் இன்று பெரும் கடலாய் வியாபித்திருக்கும் ஒரு கலை. கலாநிதி ரிபாய் (நளீமி) அவர்கள் குறிப்பிடுவது போல் இக்கலை தொடர்பில் இதுவரை மூவாயிரத்திற்கும் அதிகமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன.(1) எனவே அந்தக் கடலினுள் மூழ்கி முத்தெடுப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. மகாஸித் கலையைக் கற்கின்ற போதும் கற்பிக்கின்ற போதும், எனக்கு ஒரு விடயம் சற்று உறுத்தலாகவே இருக்கின்றது. அதாவது இக்கலையினுள் இருக்கும் அதிகமான கலைச் சொற்களும் நுணுக்கமான சொல்லாடல்களும் பலரை அதனை விட்டும் தூரமாக்கி விடுகின்றன. அக்கலையைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை சற்று குறைத்து விடுகிறது. உண்மையில் இது மகாஸித் கலையின் நோக்கத்திற்கே புறம்பானது.

ஷெய்க் அப்துல்லாஹ் தர்ராஸ் அவர்கள் குறிப்பிடுவது போல்,  மகாஸித் எல்லோருக்கும் அவசியமானது. ஏனெனில் அது இஸ்லாத்தை மிகச் சரியாக விளங்கிக் கொள்வதற்கான வழி என்கிறார்.(2) மாத்திரமன்றி உண்மையில் இஸ்லாத்தினை அன்றாட வாழ்வில் உளத்திருப்தியுடன் அமுல்படுத்துவதற்கான தூண்டுதலும் ஆர்வமும் அதன் மகாஸிதை அறிந்து கொள்வதிலேயே தங்கியிருக்கிறது. அந்த வகையில் மகாஸிதின் மிகப் பிரதானமான நோக்கங்களில் ஒன்று அல்லது பயன்பாடு ஷரீஅத்தை மிகச் சரியாக விளங்கிக் கொள்வதற்குத் துணை செய்வதும்,  அதனை அமுல்படுத்துவதற்கான தூண்டுதலை வழங்குவதுமாகும். இந்தப் பணியை இன்று மகாஸித் செய்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது குறிப்பிட்டதொரு புலமைத்துவ வட்டாரத்துடன் மட்டுப்பட்ட ஒன்றாகவே காணப்படுகிறது.

ஒரு தடவை மகாஸித் சம்பந்தமான விரிவுரையொன்றை நிகழ்த்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரர் பக்கத்தில் அமர்ந்திருந்தார். பேச்சின் இடையில் மகாஸித் துறையில் ஆர்வம் வருவதில்லை என்றார். மகாஸித் கலையின் சிரமமான கலைப் பிரயோகங்கள்தான் அவரது ஆர்வத்தைத் தடுத்திருக்கிறது. எனக்கு ஒரு விடயம் புரியத் தொடங்கியது. மகாஸிதை நாம் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் முன்வைக்கவில்லை. இது அசாத்தியமான ஒன்றல்ல. 

கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் ஷரீஆவின் ஏனைய கலைகளை விடவும் மகாஸிதைப் புரிந்து கொள்வது மிகவும் இலகுவானது என்கிறார். அதனை அவரது வார்த்தைகளிலேயே சொல்கிறேன் கேளுங்கள்.

உண்மையில் மகாஸிதை விளங்கிக் கொள்வதும்,  அதில் பரிச்சயப்படுவதும்,  இஸ்லாத்தின் கலைகள் மத்தியில் இதுவே இலகுவானது அல்லது குறைந்த சிரமத்தைக் கொண்டது. மகாஸித் பிக்ஹை விடவும் அதன் நுணுக்கமான சட்டப் பரப்புகளை விடவும் இலகுவானது. உஸுலுல் பிக்ஹை விடவும் இல்முல் கலாம் எனும் கலையை விடவும் அவற்றின் கலைச் சொற்கள்,  தர்க்கங்களை விடவும் இலகுவானது. ஹதீஸ் திறனாய்வுக் கலையை விடவும் அதன் நிபந்தனைகள்,  காரணங்கள்,  ஒருவரைக் குறை காணல்,  நியாயப்படுத்தல் என்ற அனைத்தையும் விடவும் இலகுவானது மாத்திரமன்றி அறபுமொழிக் கலைகளை விடவும் கூட மிகவுமே இலகுவானது. அதிலும் குறிப்பாக அறபிலக்கணம் அதனை நாங்கள் பள்ளிப் பருவத்தின் ஆரம்பத்திலேயே கற்கின்றோமே.

மாத்திரமன்றி மகாஸிதை அறிந்து கொள்வதும்,  அதனை அல்குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் விளங்கிக் கொள்வதும் எப்பொழுதும் அறிஞர்களில்; மாத்திரம் தங்கியிருக்கும் ஒரு விடயமல்ல. மாற்றமாக சில மகாஸித்கள் எல்லோராலும் விளங்கிக் கொள்ள முடியுமானவை மற்றும் சில மிகக்குறைந்த வடிவிலானதொரு அவதானத்தின் மூலம் மாத்திரமே விளங்கிக் கொள்ள முடியுமானவை. உண்மையில் இது எதனைப் போன்றது எனின்,  அல்லாஹ் எமக்கு அளித்துள்ள பழங்கள்,  விதைகள்,  மரக்கறி வகைகள் போன்ற அருள்களுக்கு நிகரானது. அவற்றில் சில கைக்கெட்டிய தூரத்தில் இருப்பவை நேரடியாகப் பறித்துக் கொள்ள முடியும். இன்னும் சில பூமியின் உள்ளிருந்து அகழ்ந்தெடுக்கப்பட வேண்டியவை. மற்றும் சில உயர்ந்த மரங்களில் கைக்கெட்டாத தொலைவில் இருப்பவை. அவற்றை சிரமப்பட்டுத்தான் அறுவடை செய்ய வேண்டியிருக்கும். மகாஸிதும் இது போன்றதுதான்,  எல்லாமே ஒரேவகையான ஆய்வுச் சிரமம் கொண்டவையல்ல.

ஷரீஆ சட்டங்களும் அவற்றின் மகாஸிதுகளும் குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் உரியவை என்று வகைப்படுத்தப்படுத்தப்படக் கூடிய நுண்ணறிவு சார்ந்ததொன்றல்ல. அல்லது மூளைகளைக் கசக்கிப் பிழியும் தர்க்கவியல்,  தத்துவவியல் போன்ற நிபுணத்துவக் கலையும் அல்ல. அல்லது வழி தவறிவிடக் கூடாது என்பதற்காக பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இல்முல்கலாம் போன்ற ஒரு கலையுமல்ல. மாற்றமாக இவை எல்லோருக்கும் அவசியமான சட்டங்களும் அவற்றின் நோக்கங்களும் மாத்திரமே.

ஒவ்வொருவரும் தனது தரத்திற்கும் முயற்சிக்கும் ஏற்ப அதிலிருந்து பயனடைய முடியும். அதனால்தான் அவை விளங்கிக் கொள்ளக் கூடியவையாகவும் மனித சிந்தனைக்கு நெருக்கமானவையாகவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கிறது.(3) அவற்றில் ஆழமான விடயங்கள் கூட எளிமைப்படுத்தப்பட முடியுமானவையாகும்.

இதனடிப்படையில் ஷரீஆ சட்டங்களும் அதன் மகாஸிதுகளும் மூன்று படித்தரங்களில் கற்கவும் கற்பிக்கப்படவும் முடியும். முதலாவது குறித்த துறை சார் அறிஞர்கள் நிபுணர்களது மட்டம். இது அவர்களது தரத்திலான நுணுக்கங்களுடன் கற்கப்படும் உயர் மட்டம். இரண்டாவது கல்வியலாளர்கள் பல்கலைக்கழக மாணவர்களது மட்டம். இது ஒரு நடுத்தர மட்டம். மூன்றாவது பொதுமக்களது மட்டம் இது இலகுபடுத்தப்பட்ட குறைந்த மட்டம். ” (4)

கலாநிதி ரைஸுனியின் வார்த்தைகளில் மகாஸிதின் மகாஸித் என்ன என்பது மிகவும் தெளிவாகப் பேசப்பட்டிருக்கிறது. மாத்திரமன்றி அது புலமைத்துவ வட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மட்டுப்படுத்துவது அதன் நோக்கங்களுக்கும் புறம்பானது என்பதையும் புரிந்து கொள்கிறோம்.

மகாஸித் என்பது எளிமையான கலைதான். ஆனால் சாதாரண பொதுமகனும் பயன் பெறுகின்ற வகையில் அது எளிமையாக முன்வைக்கப்படுகின்றதா? என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. பல சமயங்களில் மகாஸித் குறித்த எதிர்வாதங்களுக்கு,  அது பற்றிய போதிய தெளிவின்மைகளும் காரணமாக அமைகின்றன. அந்தவகையில் ஷரீஆ சட்டங்களுக்கான மகாஸிதுகள் எவை என்பது பற்றி மக்களுக்கு எளிமையான வடிவில் அறிவூட்டப்பட வேண்டிய அவசியம் இருப்பது போலவே மகாஸித் கலை குறித்த அறிவும் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்றைய சூழலில் வெகுவாக உணரப்படும் ஒரு உண்மை இது.

அதற்கான ஒரு சிறு முயற்சியை முன்னெடுத்தால் என்ன என்ற கேள்வி என்னில் அடிக்கடி வந்து போவதுண்டு. அந்தக் கேள்விக்கான ஒரு பதிலாகவே மகாஸித் தேடல்கள் என்ற ஒரு தொடர்பத்தியை எழுதலாம் என்றிருக்கிறேன். இதில் மகாஸித் கலை பற்றிய அறிமுகத்தை முதன்மையாகவும் அவ்வப்போது ஷரீஆவுக்கான மகாஸிதுகளை அடையாளம் காட்டுவதை அடுத்ததாகவும் மேற்கொள்ள நினைக்கிறேன். மகாஸித் கலை அறிமுகத்தையும் கூட,  பாடத்திட்ட வடிவிலன்றி முக்கியமாய்க் கேள்வி எழுகின்ற,  விடை அவசியமான பக்கங்கள் மீது ஒளி பாய்ச்சும் ஒரு செயற்பாடாகவே செய்ய நினைக்கிறேன்.

இங்கு மற்றொரு விடயத்தையும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். மகாஸித் கலையின் கோட்பாட்டுப் பக்கம்,  நவீன காலத்தில்தான் மிகுந்த ஆய்வுக்குற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இமாம் ஜுவைனி,  கஸ்ஸாலி,  ஷாதிபி போன்றவர்கள் முன்வைத்த மகாஸித் சிந்தனைக் கட்டமைப்பைத் தாண்டி நவீன காலத்தில் பல்வேறு வித்தியாசமான மகாஸித் சிந்தனைக் கட்டமைப்புகள்(5) முன்வைக்கப்படுகின்றன.

 அந்தவகையில் கோட்பாடு என்ற இடத்திலும் வித்தியாசப்பட்ட பார்வைகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. மாத்திரமன்றி ஒரு கலை என்ற வகையில் தொடர்ந்தும் வளர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையிலேயே மகாஸித் இருக்கிறது. அந்த வகையில் இங்கு பேசப்படும் விடயங்கள் முடிந்த முடிவுகள் என்பதை விடவும் பெரும்பாலும் சமநிலைத் தேடல்களாகவே அமையப் போகின்றன. அதனால்தான் தலைப்பையும் மகாஸித் தேடல்கள் என பெயரிட்டிருக்கிறேன்.

இறுதியாக மற்றொரு விடயம்,  இவ்வருடம் ஆரம்பித்து வைத்த மற்றொரு பணி இருக்கிறது. அதுதான் இமாம் ஷாதிபியின் முவாபகாத் சிந்தனைகளை விளங்கிக் கொள்ள எடுக்கப்பட்டிருக்கும் முயற்சி. அதனைக் கற்கும் போது தமிழ் நிலைப்பட்ட வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஏராளமான விடயங்கள் அங்கிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அதனையும் அவ்வப்போது மேற்கொள்ளலாம் என்றிருக்கிறேன். கலாநிதி முஃதஸ் அல் கதீப் அவர்களின் பாடக் குறிப்புகளை மையப்படுத்தி அப்பணியைச் செய்வதற்கான ஒரு உடன்பாடும் அவருடன் எட்டப்பட்டிருக்கிறது. அல்லாஹ்வே போதுமானவன். முயற்சிகளின் வெற்றி அவன் கையிலேயே இருக்கிறது. அதற்கான தைரியத்தையும்,  உறுதியையும் தேக ஆரோக்கியத்தையும் தருமாறு பிரார்த்தித்து விடை பெறுகிறேன்.


(1)          கலாநிதி S.L.M. ரிபாய் (நளீமி) (Phd of SOAS, Freelance writer in UK),  நேரடிக் கலந்துரையாடல்,  வாட்ஸ்அப் ஊடாக,  2017

(2)          ஷெய்க் அப்துல்லாஹ் தர்ராஸ்,  முன்னுரை,  முவாபகாத்திற்கான குறிப்புரை,  பாகம் 01,  பக்கம் 10

(3)          ஷரீஆ மனித அறிவால் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் காணப்படுதல் வேண்டும் என்பது,  இமாம் ஷாதிபி அவர்கள் பேசும் நான்கு வகையான மகாஸிதுகளில் ஒன்று. அந்தவகையில் ஷரீஆ பொதுமகனால் விளங்கி,  செயற்படுத்த முடியுமாக அமைக்கப்பட்டிருத்தல் அதனுடைய ஒரு மக்ஸத் என்பதாகக் குறிப்பிடுகிறார். இக்கருத்தை விளங்கப்படுத்தும் விதமாகவே மேற்குறித்த வசனம் அமைந்திருக்கிறது.

(4)          கலாநிதி அஹ்மத் ரைஸுனி,  மகாஸிதுல் மகாஸித்,  பக்கம் 68,  69,  மர்கஸுல் மகாஸித் லித்திராஸாத் வல் புஹுஸ்,  ஷபகா அல் அறபிய்யா லில் அப்ஹாஸ் வந்நஷ்ர்.

(5)          மகாஸித் சிந்தனைக் கட்டமைப்பு என்பதன் மூலம் நான் நாடுவது: மகாஸித் என்றால் என்ன? அவை எவை? அவற்றின் வகைப்பாடுகள் எவை? அதில் உயர்ந்தது எது? தாழ்ந்தது எது? என்ற சிந்தனை ஒழுங்காகும்,  (Maqashid Structure).

No comments:

Post a Comment