முதல் பரப்பு:-
இஸ்லாமிய சமூக மாற்றம் குறித்துப் பேசுகின்ற பொழுது, தனிமனித உருவாக்கம் அங்கு முக்கியம் பெறுவதை நாம் அறிவோம். இன்றைய வேகமான உலக மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் தனிமனித உருவாக்கம் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் நாம் அறிவோம்.
அந்தவகையில் உலகை ஆளவல்ல மனித உருவாக்கம் குறித்த சில பார்வைகளை இங்கு முன்வைக்கிறோம்.
தனிமனித உருவாக்கத்தின் முதல் பரப்பு ஒரு சிறந்த முஸ்லிமை உருவாக்குதல் என்பதாகும். இந்த முஸ்லிமை அடையாளப்படுத்தும்போதுதான் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் பத்துப் பண்புகள் குறித்துப் பேசினார்கள்.
- பலமான உடலும்
- உறுதிமிக்க பண்பாடுகளும்
- ஆழ்ந்தசிந்தனையும்
- சுயமாய் உழைக்கும் திறனும்
- மாசற்றஅகீதாவும்
- குறைபாடுகளற்ற இபாதாவும்
- உளப்போராட்டமும்
- ஒழுங்குபடுத்தப்பட்டவாழ்க்கையும்
- நேரத்தை உச்ச பயன் அளிக்கும் வகையில் பயன்படுத்தலும் பிறர்க்குபயனளித்தலும்
என்ற பத்து வகைப் பண்புகளை ஒரு சிறந்த இஸ்லாமிய ஆளுமைப் பண்புகளாய் இமாம் அவர்கள் குறித்துக் காட்டினார்கள். இவற்றின் மீதான உருவாக்கம், இஸ்லாமிய தனிமனித உருவாக்கத்தின் முதல் பரப்பாகும்.
இரண்டாம் பரப்பு:-

இந்தப் பணியை உலகில் அதிகாரபூர்வமாக மேற்கொள்ளக்கூடிய அலகு எது என்றால், அதையே நாம் இஸ்லாமிய கிலாபத் என்கிறோம். அதை நோக்கிய பயணம்,தனிமனிதனில் இருந்து ஆரம்பித்து, குடும்பம், சமூகம், அரசு, தாயகம் என்ற கட்டங்களைக் கடந்துசெல்கிறது.
இந்தப் பாதை நபியவர்கள் வரைந்த பாதை. இது ஒரு தனிமனிதன் அல்லது ஒரு ஜமாஅத்தின் இஜ்திஹாதல்ல. அந்த வகையில் இப்பணிக்கு ஒரு இஸ்லாமியப் பெறுமானம் கிடைக்கிறது.
அந்த இலக்கை நோக்கி இந்தப் பாதையில் தளர்வின்றி,சலனமின்றி ஒரு ஜமாஅத்தாகப் பயணிப்பவர்களையே இங்கு போராளிகள் என்கிறோம். இந்த இலக்கையும் பாதையையும் ஆழ்ந்து விசுவாசித்து, இது தனிமனிதப் பயணமல்ல, ஒரு உம்மத்தின் பயணம், இது தனிமனித ஆயுளில் அடையும் இலக்கல்ல, ஒரு உம்மத்தின் ஆயுளில் அடையும் இலக்கு என்பதைப் புரிந்து, நம்பிக்கையிழக்காமல், பாதை தவறாமல் தனது கடமையை தொடர்தேர்ச்சியாக மேற்கொள்ளக்கூடிய ஒருவனின் உருவாக்கம் தேவை.
இந்தஉருவாக்கப் பரப்பைத்தான் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் இன்னும் பத்து அம்சங்களால் அடையாளப்படுத்திக் காட்டினார்கள். அவற்றில் முதலாவது மிகச் சரியானபுரிதல். இது இருபது அடிப்படைகளின் பின்புலத்தில் அமைய வேண்டும். இந்த இருபது அடிப்படைகள், இஸ்லாமிய சமூக மாற்றத்தை மேற்கொள்ளும் போது,அந்த உயர் இலக்கை அடைவதற்காக முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் பல்வேறு சிந்தனை முகாம்களையும் ஒன்றிணைக்கும் பாலமாகக் காணப்படுகின்றது. இங்கு அனைத்து சிந்தனை முகாம்களும் ஒரே முகாமாக மாற்றப்படுதல் நோக்கமல்ல.
மாறாக, அனைவரும் உடன்பட முடியுமான இடங்களை இனம் கண்டு, அவற்றின் மீதான உடன்பாட்டுடன் அனைவரும் இணைந்து செயற்படுதலே இங்கு நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மிகச் சரியான புரிதல் என்பது இஸ்லாமிய சமூக மாற்றப் பணியை மேற்கொள்ளும் எல்லோரையும் இணைத்துச் செல்லும் வகையில், இஸ்லாமிய சிந்தனையின் உடன்பாடான பகுதிகள் பற்றிய தெளிவுடன் காணப்படுதலாகும்.
இரண்டாவது இஃலாஸ். மூன்றாவது செயல், இங்கு செயல் என்பதன் மூலம், ஏற்கனவே நாம் கூறிய சமூக மாற்றக் கட்டங்களின் அடிப்படையில் செயற்படுதலைக் குறிக்கின்றது. அத்துடன் முறைமை குறித்த வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் குறித்த ஒரு முறைமையின் அடிப்படையிலான உறுதியான செயல் முக்கியமானது. பல சமயங்களில் எவ்வாறு செய்வது என்ற வாதங்களில் காலம் கடந்துபோய் விட்டிருக்கும் எதையும் செய்திருக்கமாட்டோம். இந்தத் தவறை செய்யாத மனிதன் தேவை. அதே நேரம் தனது பாதையை திரும்பித் பார்த்து திருத்தங்களுடன் முன்னே செல்பவனாயும் இருத்தல் வேண்டும்.
நான்காவது ஜிஹாத், எனினும் இடையுறாத போராட்டம், ஜிஹாத் என்றவுடனேயே பலருடைய ஞாபகத்தில் முதலில் தோன்றுவது ஆயுதம் ஏந்திய போராட்டம்தான். ஆனால், இங்கு ஜிஹாத் என்பதன் மூலம் ஒரு மாற்றத்தை நோக்கிய தொடர்ந்த உழைப்பு நாடப்படுகிறது. அடுத்து விட்டுக் கொடுப்புகளும் தளர்வுகளும் பேரம் பேசல்களுமின்றிய போராட்டம் நாடப்படுகிறது. அது ஆயுதம் ஏந்தும் எல்லை வரை செல்வதையும் இஸ்லாம் மறுதலிக்கவில்லை. ஐந்தாவது தியாகம். மேற்சொன்ன தொடர்ந்த போராட்டத்திற்கு இது அவசியம்.
ஆறாவது கட்டுப்பாடு, ஏழாவது பாதை தவறாமை, நிலைகுலையாமை, சோதனைகள் எந்த வடிவில் வந்தாலும் இழப்புகள் எத்தனை சந்திக்க நேர்ந்தாலும், காலம் எவ்வளவு நீண்டு சென்றாலும் நம்பிக்கையீனத்தை தோற்றுவிக்கும். விமர்சனங்கள் எத்தனை வந்தாலும் தனது பாதையில் உறுதியாய் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் செயலாற்றல். இதுதான் நிலை குலையாமைஎனப்படுகிறது.
எட்டாவது, தனது விசுவாசமும், தொடர்புகளும் உறவுகளும், செயற்பாடும், சிந்தனையும் தனது பாதைக்குரியதாய் மாத்திரம் அமைதல், ஒரே நேரத்தில் பல விசுவாசங்களுடன் பல திசைகளில் பயணிப்பதாய் அமைதல் கூடாது. ஒன்பதாவது சகோதரத்துவம். பத்தாவது நம்பிக்கை. அது இந்தப் பாதையின் மீதான நம்பிக்கை,அதன் தலைமை மீதான நம்பிக்கை,உடன் வருபவர்கள் மீதான நம்பிக்கை.
இந்த பத்து அம்சங்களின் மீதான உருவாக்கம், இஸ்லாமிய தனிமனித உருவாக்கத்தின் இரண்டாவது பரப்பாகும். இங்கு ஒரு விடயத்தை அவதானிக்கலாம். இந்த பத்து அம்சங்களும் தனிமனித உழைப்பைவிடவும், கூட்டு உழைப்பின்போது அவசியமான பண்புகளாகவே காணப்படுகின்றன. ஏனெனில் இஸ்லாமிய சமூகமாற்றம் என்பது ஒரு தனிமனிதப் பயணமல்ல. ஓர் உம்மத்தின் பயணம்.
மூன்றாம் பரப்பு:-
இனி, அதன் மூன்றாம் பரப்புக்கு வருவோம். இது தலைமை வழங்குபவனை, தனது துறையில் நிபுணத்துவத்துடன் முன்னோடியாய் செயல்படுபவனை உருவாக்குதல் என்ற பகுதி
இஸ்லாம் மனிதனிடம் இந்த உலகில் எதிர்பார்க்கும் ஓர் அடிப்படை கடமை காணப்படுகிறது. அதுதான் ‘இமாரதுல் அர்ழ்’ எனும் பூமியை வளப்படுத்தும் பணி. இது மனிதன் என்ற வகையில் முஸ்லிம் - காஃபிர், ஆண் - பெண் என சகல தரப்பினரிடமும் எதிர்பார்க்கப்படுகின்ற பணியாகும்.
இந்த இடத்தில் முஸ்லிமை வேறுபடுத்தும் முக்கிய இடம் எதுவென்றால், அவன் இந்த விடயத்தில் மனிதகுலத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ வேண்டும். முன்னோடியாய் காணப்படல் வேண்டும்.
அல்லாஹு தஆலா ஒவ்வொரு மனிதனையும் குறைந்தபட்சம் ஒரு விஷேட ஆற்றலுடன் படைத்திருக்கின்றான். அதனை மிகச் சரியாக இனம் கண்டு வளர்த்து உலகின் ‘இமாரதுல் அர்ழ்’ எனும் பணியை நிறைவேற்றும் வகையில் அதனைப் பயன்படுத்த வேண்டும். அந்தத் துறையில் நிபுணத்துவத்துடன் முன்னோடியாகத் திகழ்பவனே முஸ்லிம்.
ஏனெனில், அவன் மனிதகுலத்திற்கான வழிகாட்டி. மனிதகுலத்திற்கு தலைமை வழங்கி சீரான உலக வாழ்க்கைக்கு காரணமாய் இருப்பவன். இது தனிமனித உருவாக்கத்தின் மூன்றாவதும் முக்கியமானதுமான பரப்பு. இங்கு துறைவாரியான நிபுணத்துவ வழிகாட்டிகள் உருவாக்கப்படுகிறார்கள். மனித வாழ்வை அதன் எல்லாத் துறைகளுடனும் வழிநடாத்தும் தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒரு ஜமாஅத்தை வழிநடாத்துபவர்கள் மட்டுமல்லர்;அல்லது ஒரு நாட்டை வழிநடாத்துபவர்கள் மட்டுமல்லர்;அல்லது முஸ்லிம் உம்மத்தை வழிநடாத்துபவர்கள் மட்டுமல்லர்;முழு மனித இனத்தையும் வழிநடாத்துபவர்கள். இப்பொழுதுதான் உலகில் இஸ்லாமிய வாழ்வு நிலைக்கிறது.
எனவே, இஸ்லாமிய தனிமனித உருவாக்கத்தில் ஒரு முஸ்லிம் ரப்பானி உருவாகிறான். இஸ்லாமிய சமூகமாற்ற முறைமையில் செயலாற்றும் ஒரு போராளி உருவாகிறான். ஒரு நிபுணத்துவத் தலைவன் உருவாகிறான். இவன் உலகின் எந்த சூழலையும் எதிர்கொள்ளவல்லவன். எந்தப் பொறுப்பையும் சுமக்கவல்லவன். இதுவே ஒரு ஜமாஅத்தாக இருந்தால் அவர்கள் எந்த நாட்டையும் ஆளத் தகுந்தவர்கள். உலகின் தலைமையை நோக்கிச் செல்லத் தகுதியானவர்கள். அதனை சுமக்கவும் தகுதியானவர்கள். அல்லாஹ் எங்களையும் இத்தகைய உருவாக்கத்தில் ஒருவனாய் மாற்ற பிரார்த்தித்து விடைபெறுகிறோம்.
Salaam, We need the Sheikh Akram Telephone no
ReplyDelete