Tuesday, February 5, 2013

தனிமனித உருவாக்கம் – நோக்கங்கள்


- நஃப்ஹத்

பயணம் சஞ்சிகை
(தர்பிய்யா அமர்வுகளுக்கன இதழ்)




தனிமனித உருவாக்கம் ஏன் மேற்கொள்ளப்பட வேண்டும்? அதனூடாக அடைய வேண்டியவை என்ன? என்ற கேள்விகள் இயல்பாக எழக்கூடியவை. இன்ஷா அல்லாஹ், தொடர்ந்து இவற்றுக்கான பதில்களைக் காண்போம்:


தனிமனித உருவாக்கத்தின் நோக்கங்கள் என்ன என்று நேரடியாகப் பேசுவதற்கு முன்னர், இங்கு சில விஷயங்களை ஞாபகப்படுத்திச் செல்வது பொருத்தம் என நினைக்கிறேன்.

முதலாவது, ஆரம்பம் முதலே தனிமனித உருவாக்கம் தொடர்பாக பல கோணங்களில் பேசப்பட்ட எல்லாத் தலைப்புகளுக்குள்ளேயும் இதன் நோக்கங்கள் ஒழிந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், அவற்றைத் தனியாக வெளிக்கொண்டுவரும் ஒரு முயற்சியாகவே இது காணப்படுகிறது.

இரண்டாவது, தனிமனித உருவாக்கத்தின் நோக்கம் என்ன என்று செல்வது, தனிமனித உருவாக்கம் என்றால் என்ன என்று சொல்வதில் அதிகம் தங்கியிருக்கிறது என்ற வகையில் ஆரம்பமாக தனிமனித உருவாக்கம் பற்றிக் கூறப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள் தொடர்பாக எமது பார்வைகளைச் செலுத்துவது பொருத்தமானது. அந்த வகையில், தர்பிய்யா பற்றி அல்லது தனிமனித உருவாக்கம் பற்றி கூறப்பட்டுள்ள பிரபலமான மூன்று வரைவிலக்கணங்கள் குறித்து இங்கு பேசப்படுகிறது:

முதலாவது வரைவிலக்கணம்


“ஒரு மனித ஆளமையின் அனைத்துப் பக்கங்களும் முழுமையாகவும், சமநிலையிலும் வளர்க்கப்படுதல்” என்பதாகும். இந்த வரைவிலக்கணத்தின்படி தர்பிய்யா என்பதன் மூலம் (தன்மிய்யா) வளர்ச்சி அல்லது அபிவிருத்தி என்ற கருத்து நாடப்பட்டுள்ளது. ஒரு மனித ஆளுமையைப் பொறுத்தவரையில் இந்த வளர்ச்சி என்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை வரைவிலக்கணத்தின் அடுத்த பகுதிகள் பேசப்படுகின்றன. அது மனித ஆளுமையின் எல்லாப் பக்கங்களையும் உள்ளடக்கியிருதைல் வேண்டும். அத்துடன் உருவாக்க வடிவத்தில் முழுமையும் சமநிலையும் பேணப்படல் வேண்டும்.

இந்த வரைவிலக்கணத்தின் பிரகாரம்; தனிமனித உருவாக்கச் செயல்முறை மனித ஆளுமை வளர்ச்சியையே நோக்காகக் கொள்கிறது.

இரண்டாவது வரைவிலக்கணம்


இரண்டாவது வரைவிலக்கணம் இவ்வாறு கூறுகிறது: “இது மனித இயல்புடன் உறவாடுவதற்கான மிகச் சிறந்த அணுகுமுறையாகும். அது வார்த்தையினாலும், முன்மாதிரியினாலும் வழிகாட்டலாக அமைகிறது. மனிதனில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும்.”

இந்த வரைவிலக்கணம் அதிகமாக தனிமனித உருவாக்கச் செயல்முறையைப் பற்றிப் பேசுகிறது. இங்கு இதனுடைய முக்கியத்துவம் வலியுறத்தப்படுகிறது. வழிமுறை அடையாளப்படுத்தப்படுகிறது. ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுதல் செல்லப்படுகிறது. இவற்றின் மூலம் மனிதனில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படுத்தப்படுவது நோக்கமாக இருக்கிறது.

‘நல்ல மாற்றம்’ என்ற மொழிபெயர்ப்பை இன்னும் சற்று நுணுக்கமாக நோக்கினால், ‘மனிதனில் மிகச் சிறந்த நோக்கிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தல்’ என்ற வார்த்தைகளே அங்கு நேரடியாகப் பேசப்பட்டுள்ளன. எனவே, இந்த வரைவிலக்கணத்தின்படி, மனிதனில் மாற்றம் ஏற்படுத்தப்படுதல், அதில் மிகச் சிறந்த்து எதுவோ அதனை நோக்கிய மாற்றமாக்க் காணப்படும் என்பது நோக்கமாக அடையாளப்படுத்துகிறது.

மூன்றாவது வரைவிலக்கணம்


மூன்றாவது வரைவிலக்கணம் கூறுகிறது: “இந்தப் பூமியில் இஸ்லாத்திற்கு, அதன் முழுமைத் தன்மையுடனும் நடுநிலைத் தன்மையுடனும் சர்வதேசப் பண்புடனும் அதிகாரத்தை மீள வழங்கி, எதிரிகளின் சூழ்ச்சிகளிலிருந்தும், அறியாதவர்களின் விளையாட்டுத்தனங்களிலிருந்தும் அதனைப் பாதுகாக்கும் தனது கடமையை நிறைவேற்றக்கூடிய ஒரு முஸ்லிமை உருவாக்கித் தயார்படுத்தும் பணியை ஷரீஅத்திற்கு முரண்படாத, சாத்தியமான எல்லா வழிமுறைகள், அணுகுமுறைகளையும் பயன்படுத்தி ஒரு ஜமாஅத்தின் மூலமா மேற்கொள்தல்.”

இந்த வரைவிலக்கணத்தில் தனிமனித உருவாக்கத்தின் வழிமுறை எவ்வாறு காணப்படல் வேண்டும் என்பதும், ஒரு முஸ்லிம் உருவாக்கப்படல் வேண்டும் என்பதும், அந்த முஸ்லிம் ஏன் உருவாக்கப்படல் வேண்டும் என்பதும், இந்த செயல்பாடு ஒரு ஜமாஅத் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் பேசப்பட்டுள்ளதை கவனிக்கலாம்.

அந்த வகையில், ஒரு முஸ்லிமைத் தயார்படுத்துவது என்று மாத்திரம் குறிப்பிடாமல் அவன் ஏன் தயார்படுத்தப்படுகிறான் என்ற விஷயத்தையும் இணைத்து இங்கு நோக்கம் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.

எனவே, இந்த வரைவிலக்கணங்கள் தனிமனித உருவாக்கத்தின் நோக்கங்களை அடையாளப்படுத்துவதற்கான மற்றொரு அடிப்படையாகக் காணப்படுகின்றன.

மூன்றாவது, தனிமனித உருவாக்கம் என்பது இஸ்லாமிய தஃவா மூலமாக உலகில் அடைய நினைக்கும் மாற்றங்களுடன் நெருங்கிய தொடர்புள்ளதாகும். இஸ்லாம் உலகில் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறதோ, அந்த இலக்கை அடையத் தகுதியான மனிதன் தேவை அல்லது அதனை நோக்கிப் பயணிக்கத் தகுதியான மனிதன் தேவை. அந்த வகையில், இஸ்லாமிய தஃவாவின் இலக்குகளை இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

1.  முஸ்லிம் தனிமனிதனை உருவாக்குதல்.


2.  முஸ்லிம் வீட்டை உருவாக்குதல்.

3.  சமூகத்திற்கு வழிகாட்டுதல்.

4.  தாய்நாட்டை விடுதலை செய்தல்.

5.  அரசை சீர்செய்தல்.

6.  இஸ்லாமிய கிலாஃபத்தை உருவாக்குதல்.

7.  உலகிற்கு ஆசானாக செயல்படல்.

மேற்கூறப்பட்ட ஏழு கட்டங்களில் நடைபெறு இஸ்லாமிய தஃவாவின் பிரதிபலிப்புகள் கண்டிப்பாக தனிமனித உருவாக்கத்தில் பிரதிபலிக்க வேண்டும். எனவே, தனிமனித உருவாக்கத்தின் நோக்கங்களை அடையாளம் காண்பதற்கான மற்றொரு அடிப்படையாக இஸ்லாமிய தஃவாவின் நோக்கங்கள் காணப்படுகிறன்றன.

நான்காவது வரைவிலக்கணம்


நான்காவதாக, மற்றொரு விஷயம் காணப்படுகிறது. அதுதான், அல்லாஹுதஆலா மனிதனைப் பூமியில் படைத்து அவனுக்கு வழங்கியிருக்கும் பணி என்ன என்ற விஷயம். இந்த பணிக்கும் தனிமனித உருவாக்கத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

இது பற்றி இமாம்கள் குறிப்பிடும்போது, பிரதானமாக இரண்டு பணிகளை அடையாளப்படுத்துவார்கள். ஒன்று இபாதத், மற்றொன்று இமாரத்.

இங்கு இபாதத் என்பதன் பொருள், உலகில் மனிதன் என்ற படைப்பு அல்லாஹ்வின் அடிமை என்ற வகையில் அவனது சிந்தனையிலும் செயல்பாட்டிலும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டவனாகக் காணப்படல் வேண்டும்.

இமாரத் என்பது, இந்தப் பூமியை அபிவிரத்தி செய்தல் என்பதாகும். இந்த இரு பணிகளும் உலகில் மனிதப் படைப்புக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட பிரதான பணிகளாகும்.

இந்தப் பணியின் பிரயோகம் என்ன என்பது தனிமனித உருவாக்கத்தில் பிரதிபலிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும். அந்த வகையில், தனிமனித உருவாக்கத்தின் நோக்கம் என்ன என்று பேசப்படுகின்றபோது, அதன் மற்றொரு அடிப்படையாக மனிதனின் பணிகள் என்ற விஷயம் காணப்படுகிறது.

எனவே, மேற்சொன்ன அடிப்படைகளில் இருந்து தனிமனித உருவாக்கத்தின் நோக்கங்கள் என்ன என்பது அடுத்து வரும் அமர்வுகளில் பேசுவோம், இன்ஷா அல்லாஹ்

நன்றி: பயணம் சஞ்சிகை, தர்பிய்யா அமர்வுகளுக்கான இதழ் – 36

Published by:
Meelparvai Media Centre
49, Sri Mahinda Dharma Mawatha,
Dematagoda, Colombo 09, Sri Lanaka,
Tel / Fax : 0094 112 691258, 0094 77222 7569
https://www.facebook.com/payanam.srilanka

Available in Tamilnadu:
Chennai Media Centre
Post Box No. 508
Park Town, Chennai – 600 003.
Contact No. 9171 84 61 84; 9171 32 48 24
E-mail: chennaimediacentre@gmail.com
https://www.facebook.com/chennaimediacentre

No comments:

Post a Comment