Sunday, March 9, 2014

மனித உருவாக்கத்தின் அவசியம்

அண்மையில் ஒரு அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது, அங்கு இஸ்லாமிய அரசியல் தத்துவம் குறித்த கருத்தாடல்களின் போது விழுமிய அரசியல் குறித்த பார்வைகளும் அனுபவங்களும் பரிமாறப்பட்டன,  குறிப்பாக இலங்கை சூழலில் அரசியல் செயற்பாட்டின் முன்னெடுப்புகளில் மேற்குறித்த அணுகுமுறையின் அவசியம் வெகுவாக உணரப்பட்டது,  இனத்துவ அரசியலும், உரிமைவாத அரசியலும் சாதிக்காத எல்லைகளை விழுமிய அரசியல் தொடுவதற்கான இடம்பாடும் சூழலும் இருப்பது அவதானத்திற்குற்பட்டது. 

அதே வேளை அங்கு ஒவ்வோர் உரையின் முடிவின் போதும்,  ஒவ்வொரு கலந்துரையாடலின் முடிவின் போதும் ஒரு உண்மை மாத்திரம் ஏனைய அனைத்தை விடவும் மௌனமாய் மேலெழுந்து நின்றதை அவதானிக்க முடிந்தது.

அது என்ன தெரியுமா?

உண்மை,  நேர்மை,  நீதி,  சுதந்திரம் போன்ற விழுமியங்கள் எல்லாம் தனித்து சட்டங்களால் மாத்திரம் நிலைநிறுத்தப்படுவதற்குரியன அல்ல,  அவை அரசியலில் ஈடுபடுகின்றவர்களின் சிந்தனையிலும் உள்ளத்திலும் ஆழ்ந்து சீரணிக்கப்பட்டதாகவும் காணப்படல் வேண்டும். 

இங்குதான் மனித உருவாக்கத்தின் அவசியம் புலப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரு அரசியல் செயற்பாட்டில்,  விழுமியங்கள் மரணித்துப் போயுள்ள ஒரு அரசியல் சூழலில் மனித உருவாக்கத்தின் அவசியம் இரட்டிப்பாகவே உணரப்படுகிறது.

அரசியல் என்கின்ற பொழுது அங்கு பளிச்சிட்டுத் தெரிவது அல்லது புரிந்துகொள்ளப்படுவது அதன் செயற்பாட்டு வடிவமாகும்,  ஆனால் அதற்கு முன்னால் இன்னும் இரண்டு வடிவங்கள் இருக்கின்றன ஒன்று அரசியல் சிந்தனை மற்றையது அரசியல் உருவாக்கம். 

இங்கு சிந்தனை வடிவத்தில் ஓரளவுக்கேனும் சில தெளிவு நிலைகள் எட்டப்பட்டுள்ளன. ஆனால் அரசியல் உருவாக்கம் என்பது இன்னும் கோட்பாட்டளவிலேயே இருப்பதாகத் தோன்றுகிறது. இங்கு அரசியல் சித்ததாந்திகளை உருவாக்குவதை மாத்திரம் நாம் குறிப்பிடவில்லை மாற்றமாக ஒரு நீதியான அரசியல்வாதியை உருவாக்குவதையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம்.

எனவே அரசியலாக இருப்பினும் சமூகத்தின் எந்த துறை சார்ந்த ஈடுபாடாக இருப்பினும் அங்கு விழுமியங்கள் வாழ்வது,  சட்டங்களால் மாத்திரம் உத்தரவாதப்படுத்தப்பட மாட்டாது,  மாற்றமாக அந்த விழுமியங்களில் வாழ்கின்ற மனித உருவாக்கம் ஒன்றும் அங்கு அவசியப்படுகிறது.


அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

No comments:

Post a Comment