Saturday, February 3, 2018

மகாஸித் தேடல்கள் (8)


சுதந்திரம் எனும் மக்ஸதும் சுதந்திர தினமும்



சுதந்திரம் என்பது ஷரீஆவின் மிக உயர்ந்த மகாஸித்களில் ஒன்று. கலாநிதி ராஷித் அல் கன்னூஷி அவர்கள் கூறுவது போல்(1) உலகில் தூதுத்துவம் ஏன் நடைபெற்றது? அது வெறுமனே நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் எனும் எல்லையுடன் மாத்திரம் மட்டுப்படவில்லை. அதனையும் தாண்டி மக்களை அனைத்து வகையான அடக்குமுறைகளில் இருந்தும் விடுவித்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்வதும் அங்கு நோக்கமாக இருந்திருக்கிறது. அந்தவகையில் சுதந்திரம் என்பது அல்லாஹுத்தஆலா உலகிற்கு தூதுத்துவத்தை அனுப்பி வைத்தமைக்கான மகாஸித்களில் ஒன்று. இதனை அல்குர்ஆன் இவ்வாறு விளங்கப்படுத்துகிறது,  தூதுவர் மக்களது சுமைகளை இறக்கி வைப்பார்,  அவர்கள் மீது காணப்படும் விலங்குகளில் இருந்து அவர்களை விடுவிப்பார் (அஃராப் - 157).

நான் அறிந்த வகையில் சுதந்திரம் என்ற சிந்தனையை ஷரீஆவின் மகாஸித்களில் ஒன்றாக முதன் முதலில் முன்வைத்தவர் இமாம் இப்னு ஆஷுர் அவர்கள்தான். அந்தவகையில் இங்கு சுதந்திரம் எனும் மக்ஸத் குறித்து இமாம் இப்னு ஆஷுர் அவர்களது சில சிந்தனைகளை ஆரம்பமாக பரிமாறிக் கொள்வது பொருத்தம் என்று நினைக்கிறேன். இமாம் இப்னு ஆஷுர் அவர்கள் கூறுவது போல் சுதந்திரம் எனும் சிந்தனை பிரதானமாக இரண்டு அடிப்படைகள் மீது எழுகின்றது. ஒன்று மனித இயல்பு,  இரண்டு சமத்துவம்.

முதலாவது,  மனித இயல்பு : இமாம் இப்னு ஆஷுர் கூறுகிறார் : சுதந்திரம் மனிதனில் படைக்கப்பட்டிருக்கும் இயல்பான ஒரு பண்பு,  இந்தப் பண்பின் அடியாகத்தான் பூமியில் ஆரம்ப மனிதத் தொழிற்பாடு காணப்பட்டிருக்கிறது…”(2). சுதந்திரம் என்பது மனிதனின் பிறப்பியல்புடன் சம்பந்தப்பட்டது,  மனிதனை அல்லாஹ் படைக்கும் போது இந்த இயல்புடன்தான் படைத்திருக்கிறான். நபியவர்கள் ஒவ்வொரு குழந்தையும் அதனது இயல்பு நிலையிலேயே பிறக்கிறது (புஹாரி,  முஸ்லிம்)  என்று கூறியமை சுதந்திர இயல்பையும் இணைத்தே விளங்கப்படுத்துகிறது. அதாவது ஒரு குழந்தை இயல்பில் அல்லாஹ்வை கடவுளாக ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் பிறக்கிறது. இதன் பொருள் மனிதன் அல்லாஹ்வுக்கு மாத்திரமே அடிமையாக இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்கிறான்,  பிறிதொரு சக்திக்கு அடிமையாக இருக்கும் நிலையை இயல்பிலேயே அவன் ஏற்பதில்லை. இந்தக் கருத்தை இன்னும் வலுவூட்டும் வகையில்தான் உமர் (றழி) அவர்கள் அம்ர் இப்னு ஆஸ் (றழி) அவர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வியும் அமைந்துள்ளது. நீங்கள் எப்பொழுது மக்களை அடிமைகளாக்கத் தொடங்கினீர்கள்,  அவர்களை அவர்களது தாய்மார்கள் சுதந்திரவான்களாகவே பெற்றெடுத்திருக்கிறார்கள்?”(3).

இமாம் இப்னு ஆஷுர் அவர்கள் சுதந்திரம் என்ற சிந்தனைக்கு வழங்கிய வரைவிலக்கணம் கூட அது மனித இயல்பை மையப்படுத்தி எழுகின்ற ஒரு விடயம் என்பதைக் கூறுகின்றது. சுதந்திரம் என்பது மனித மனங்களில் இயல்பாய் இருக்கும் ஒரு உணர்வு. மனிதனது சொல்,  செயல் மற்றும் சிந்தனை சார்ந்த அனைத்து மனித ஆற்றல்களுடைய வளர்ச்சியும் அதில்தான் இருக்கிறது. அதன் மூலமே மனிதனது சிந்தனை ஆற்றல்கள் புத்தாக்கக் களங்களை நோக்கி போட்டி போட்டுக் கொண்டு செல்கின்றன(4) என்கிறார்கள். இங்கு சுதந்திரம் என்பது மனிதப் படைப்பியல்பு சார்ந்தது என்பது வலியுறுத்தப்படுவது போல்,  சுதந்திரம் என்பது மனிதனில் எவ்வகை விளைவுகளைத் தரவல்லது என்பதும் பேசப்படுகிறது. கலாநிதி ஸலீம் அல் அவா அவர்கள் கூறுவது போல்(5) மனிதன் சுதந்திரமாக இருக்கின்ற பொழுதுதான் அவனிடமிருந்து பயனுள்ள சிந்தனையும் பயனுள்ள வார்த்தைகளும் பயனுள்ள செயற்பாடுகளும் தோன்றும். ஏனெனில் சுதந்திரம் இந்த ஆற்றல்களை இயல்பிலேயே வளர்ச்சியுறச் செய்கின்றன. மறுதலையாக அடக்குமுறையும் சர்வாதிகாரமும் மனிதர்களிடமிருந்து அற்பமான மலின உற்பத்திகளையே வெளியே கொண்டு வரும். அதுதான் இன்று நாம் நிதர்சனமாகக் காணும் உண்மை என்கிறார்.

இரண்டாவது,  சமத்துவம் : இமாம் இப்னு ஆஷுர் அவர்கள் சுதந்திரம் என்பது மனித சமத்துவத்தின் அடியாக எழுகிறது என்கிறார்கள். இந்த உம்மத்தின் ஒவ்வொரு தனிநபரும் தமது செயற்பாடுகள்,  நடவடிக்கைகளில் அடுத்தவரை விடவும் வேறுபட மாட்டார்கள்,  இதுதான் சுதந்திரம் என்பதன் பொருள் என்கிறார்கள்(6). அதாவது அனைவரது சமத்துவமும் உத்தரவாதப்படுத்தப்படுகிறது என்பது எந்த ஒருவரும் பிறர் மீது மேலாதிக்கத்தைக் கொள்ள முடியாது,  ஒவ்வொருவரும் தமது செயற்பாட்டு அதிகாரத்தில் சமப்படுகின்றனர் என்பதாகும். கலாநிதி ஸலீம் அல் அவா அவர்கள் கூறுகிறார்கள்(7),  சுதந்திரத்தை சமத்துவத்தின் அடியாக எழும் ஒரு விடயமாக நோக்கியமை,  மற்ற அறிஞர்களை விடவும் இமாம் இப்னு ஆஷுர் அவர்களை வேறுபடுத்திக் காட்டக் கூடிய ஒரு இடம் என்கிறார். சமத்துவ சிந்தனையை ஷரீஅத் அங்கீகரிக்கிறது எனின் சமதரத்தில் உள்ள அனைவரும் சுதந்திரமானவர்களே,  அவர்களில் சிலர் இன்னும் சிலரை விடவும் சுதந்திரத்தில் குறையவும் மாட்டார்கள்,  கூடவும் மாட்டார்கள், என்கிறார்.

அடுத்து,  சுதந்திரம் என்ற சிந்தனை இஸ்லாமிய ஷரீஆ மரபில் பிரதானமாக இரண்டு கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக இமாம் இப்னு ஆஷுர் அவர்கள் கருதுகிறார்கள்(8). முதலாவது,  அடிமைத்துவம் என்ற பதத்திற்கு எதிர்கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது உலகில் மனிதன் படைப்பாளனைத் தவிர வேறு எந்த சக்திக்கும் அடிமைப்பட்டிருக்க முடியாது. அவன் முழு சுதந்திரவானாகவே படைக்கப்பட்டிருக்கிறான். மனிதன் அல்லாஹ்வின் அடிமை என்பதன் பொருள் அவன் வேறு எதற்கும் அடிமையல்ல என்பதாகும். இங்குதான் மனிதன் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கிறான். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைப் போதனையாகும். இதனைத்தான் ரூப்ஆ இப்னு ஆமிர் என்ற ஸஹாபி ரூஸ்தும் என்ற பாரசீகப் படைத்தளபதியின் முன்னால் சொல்லிக் காட்டினார்கள். நாங்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட ஒரு சமூகம்,  மக்களை மக்கள் அடிமைப்படுத்தும் நிலையிலிருந்து அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிமைப்பபட்டவர்களாக மக்களை மாற்றுவதற்காகவே நாங்கள் வந்திருக்கின்றோம்…”,  என்றார்கள்,  (அல்பிதாயா வந்நிஹாயா). இந்தப் பின்புலத்திலேயே இஸ்லாம் அன்று அமுலில் இருந்த அடிமை முறையை படிப்படியாக இல்லாமல் செய்வதை நோக்கமாகக் கொண்டு சட்டங்களை வகுத்தமையைக் காணலாம்.

கலாநிதி ஜாபிர் அப்துல் ஹாதி ஸாலிம் அஷ்ஷாபிஈ அவர்கள் கூறுவது போல்(9),  இஸ்லாம் அடிமை முறையை உருவாக்கவுமில்லை,  அதனை வாஜிபாகவோ சுன்னாவாகவோ அமைக்கவுமில்லை,  மாற்றமாக முபாஹ் எனும் அனுமதிக்கப்பட்டது என்ற எல்லையிலேயே அதனை வைத்தது. அதாவது யுத்தசமயத்தில் முஸ்லிம்களது நலனைக் கருத்தில் கொண்டு,  தலைமை தீர்மானிப்பதற்குரிய ஒரு விடயமாகவே அது கருதப்பட்டது. காரணம் அன்றிருந்த உலக சூழ்நிலையில் அடிமை முறை என்பது மக்களது சமூக,  பொருளாதார முறைமைகளுடன் பிண்ணிப் பிணைந்த வடிவிலேயே காணப்பட்டது. அதிலிருந்து மக்களை விடுவித்தல் என்பது ஒரேயடியாக நிகழ்த்த முடியுமான ஒரு மாற்றமாகக் காணப்படவில்லை. ஆனால் மனித சுதந்திரம் என்பது இஸ்லாம் அடைய விரும்பும் ஒரு மக்ஸத் என்ற வகையில் அதனை நோக்கிய ஒரு பயணத்தை மேற்கொள்ளும் வகையிலேயே இஸ்லாத்தின் போதனைகள் அமைந்தன. இதனைத்தான் சட்ட அறிஞர்கள் ஒரு விதியாக இவ்வாறு சொன்னார்கள் அல்லாஹ் சுதந்திரத்தையே எதிர்பார்க்கிறான்என்றார்கள். அந்தவகையில் முதலில் அடிமை முறை உருவாகக் கூடிய வழிகளில் யுத்தம் தவிரவுள்ள ஏனைய அனைத்து வழிகளையும் இஸ்லாம் தடை செய்தது. உதாரணமாக மனிதர்களைக் கடத்திச் சென்று அடிமையாக்கல்,  கடனை மீளச் செலுத்த முடியாத போது அடிமையாக மாற்றுதல் போன்ற பல வழிகளை இஸ்லாம் தடை செய்தது. யுத்த வழியைத் தடை செய்யாமைக்கான காரணம் அன்று தொடர்ந்தும் யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால்,  யுத்தக் கைதிகளை முஸ்லிம்கள் அடிமைகளாக மாற்றாவிட்டாலும்,  எதிரிகள் கண்டிப்பாக முஸ்லிம் கைதிகளை அடிமைகளாக மாற்றுவார்கள், இந்நிலையில் முஸ்லிம்கள் மாத்திரம் இதனை கைவிடுவது நிச்சயம் முஸ்லிம்களுக்குப் பாதகமான விளைவையே ஏற்படுத்தும் என்பது மாத்திரமன்றி அதனால் அடிமைகள் இன்னும் அதிகரிக்கவே அது வழிவகுக்கும். அந்தவகையில் அந்த சூழலின் நலனைக் கருத்தில் கொண்டு,  தலைமை தீர்மானிப்பதற்குரிய ஒரு விடயமாக இஸ்லாம் அதனை அமைத்தது. மாற்றமாக கட்டாயமாக அடிமையாக மாற்றவேண்டும் என்ற ஒரு சட்டம் பின்பற்றப்படவில்லை.

அடுத்து,  இஸ்லாம் அதனது பல சட்டங்கள் ஊடாகவும் போதனைகள் ஊடாகவும் அடிமை விடுதலையை வழியுறுத்தும் அமைப்பையே கடைபிடித்தது. கப்பாரா சட்டங்கள் இதற்கு சிறந்த உதாரணங்களாகும். அதுபோல்,  அன்றிருந்த உலக வழக்கிற்கு முற்றிலும் மாற்றமாக அடிமையாக இருப்போருக்கான உரிமைகளைப் பற்றி இஸ்லாம் வலியுறுத்தியது. அவர்களது சக்திக்கு மீறி அவர்களிடம் கடமைகளை சுமத்தக் கூடாது என்பது போன்ற பல வரையறைகளை இஸ்லாம் இட்டுள்ளதைக் காணலாம். இவையனைத்தும் அன்று நடைமுறையில் இருந்த ஒரு சமூகத் தீமையை இல்லாமல் செய்யும் நோக்கில் இஸ்லாம் எவ்வாறு செயற்பட்டது என்பதற்கான ஒரு சிறந்த உதாரணத்தையே எங்களுக்குக் எடுத்துக் காட்டுகின்றன.

சுதந்திரம் என்ற சிந்தனை இஸ்லாமிய ஷரீஆ மரபில் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது கருத்து,  இது உண்மையில் முதல் கருத்தின் விளைவு. அதாவது,  ஒவ்வொரு மனிதனும் தனது விவகாரங்களைக் கையாள்வதற்கு இயலுமான நிலையைக் குறிக்கும். அதாவது ஒரு மனிதன் சுதந்திரவானாக இருக்கிறான் என்பது,  அவன் தனது விவகாரங்களைக் எந்தப் புறத்தடைகளும் இன்றி மேற்கொள்ளக் கூடிய நிலை இருத்தல்,  பிறிதொருவரது அனுமதியை எதிர்பார்த்திருக்கும் நிலை இல்லாதிருத்தல்,  அது போல் தனது விவகாரங்களுக்கு தானே வகைசொல்லும் கடப்பாட்டுடன் இருத்தல். இவ்வகை சுதந்திர நிலையின் போதுதான் ஒரு மனிதனுக்கு இஸ்லாம் சொல்லும் கடமைகள் உருவாகின்றன. அவனது செயற்பாடுகள் குறித்து உலகிலும் சரி மறுமையிலும் சரி அவன் விசாரிக்கப்படுகின்ற நிலை இதனாலேயே ஏற்படுகின்றது. இந்தவகையில் இங்கு பேசப்படும் சுதந்திரம்,  ஒரு மனிதனது சுயபொறுப்புக் கூறலுக்கான சுதந்திரம்.

மேற்குறிப்பிடப்பட்ட வகையிலேயே இஸ்லாம் சுதந்திரம் என்ற சிந்தனையை முன்வைக்கிறது. இந்தக் கருத்திலேயே சுதந்திரம் என்பதை மனித வாழ்வில் கட்டாயமாக அடைந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு மக்ஸத் என்கிறது. இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே இன்றைய உலகில் சுதந்திரம் என்பது ஒரு மனித உரிமையாக நோக்கப்படுகிறது. கலாநிதி ராஷித் அல் கன்னூஷி அவர்கள் கூறுவது போல்(10),  சுதந்திரம் என்பது மிக முக்கிய மனித உரிமைகளில் ஒன்று,  இது யாராலும் வழங்கப்படும் ஒரு விடயமல்ல,  மாற்றமாக இது மனித கண்ணியத்தின் வெளிப்பாடு,  அதன் ஒரு பகுதி. சுதந்திரத்தின் மூலம்தான் மனிதன் ஏனைய படைப்புக்களை விட்டும் வித்தியாசப்படுகின்றான். மனிதன்தான் இந்த சுதந்திரத்தை வணங்குவதிலும் சரி,  கருத்து வெளிப்பாட்டிலும் சரி,  சொந்தமாக வைத்திருப்பதிலும் சரி,  நகர்வுகளிலும் சரி அனைத்திலுமே அனுபவிக்கின்றான்.

இஸ்லாம் முன்வைக்கும் சுதந்திர சிந்தனையை ஒரு மக்ஸதாகப் புரிந்து கொண்டாலும் சரி,  ஒரு உரிமையாகப் புரிந்து கொண்டாலும் சரி,  எல்லைகள் அற்ற ஒரு சிந்தனையாக இஸ்லாம் அதனைப்  பேசவில்லை. சுதந்திரத்தின் வரையறைகள் குறித்து பலவடிவங்களில் அறிஞர்கள் பேசியிருந்தாலும் இந்த இடத்தில் அவையனைத்தையும் சாராம்சப்படுத்தும் வகையில் இமாம் இப்னு ஆஷுர் அவர்கள் முன்வைத்த ஒரு வரையறையை மாத்திரம் குறித்துக் காட்டலாம் என்று நினைக்கிறேன்(11).  அதாவது,  தீங்கிழைக்காமையும் நன்மையைக் கொண்டு வருதலும்,  இது தனக்காக இருந்தாலும் சரி,  பிறருக்காக இருந்தாலும் சரி,  அதேவேளை தீங்கை ஒருவர் விரும்பி ஏற்றுக் கொள்ளவும் கூடாது,  நலனை விரும்பித் தடைசெய்து கொள்ளவும் கூடாது. சுதந்திரம் இவ்வாறுதான் வரையறுக்கப்படுதல் வேண்டும்,  அதாவது இடப்படும் வரையறை மூலம் நிச்சயமான ஒரு தீங்கு தடுக்கப்படல் வேண்டும் அல்லது நிச்சயமான ஒரு நலன் உருவாக்கப்படல் வேண்டும். அதாவது சுதந்திரம் என்பது ஒரு தீங்கை உருவாக்கிவிடக் கூடாது அல்லது ஒரு நலனை இல்லாமல் செய்து விடக் கூடாது. இவ்வாறான நிலையில் தீங்கு தடுக்கப்படும் வகையில் அல்லது நலனை கொண்டு வரும் வகையில் சுதந்திரம் வரையறுக்கப்படும். இது தனக்காக இருந்தாலும் சரி பிறருக்காக இருந்தாலும் சரி. அது போல் தீங்கை விரும்பி ஏற்றுக் கொள்ளும் நிலையையும் இஸ்லாம் ஏற்கவில்லை. அதனால்தான் சஃத் இப்னு அபீவக்காஸ் அவர்கள் தனது இறுதித் தருவாயில் தனது முழு சொத்தையும் ஸதகா செய்ய அனுமதி கேட்ட போது நபியவர்கள் அதனை மறுத்தார்கள். அவரது சந்ததிகள் எதிர்காலத்தில் கஷ்டப் படக்கூடாது, அவர்களது நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதை நபியவர்கள் இங்கு வலியுறுத்தினார்கள். தனது சொத்தை தான் தானம் செய்வது தனது சுதந்திரம் என்றிருப்பினும்,  அதன் உலக பாதிப்பை தான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்றிருந்தாலும்,  குறித்த பாதிப்பு என்பது ஒரு தீங்கு அதனைத் தடுக்கும் வகையில் அந்த சுதந்திரம் அங்கு வரையறுக்கப்படுகிறது.

அடுத்து,  நாம் கொண்டாடும் சுதந்திர தினம் என்பது,  எளிமையாகச் சொன்னால் சுரண்டல் காலனித்துவத்திலிருந்து எமது நாடு விடுதலை பெற்றமையை நினைவு கூறும் வகையில் நடைபெறுகிறது. காலனித்துவம் என்பது உலக வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரியதொரு அநீதி. அந்த அநீதியிலிருந்து விடுதலை கிடைத்தமை,  உண்மையில் சந்தோசம் கொள்ளத்தக்க விடயம்தான். இஸ்லாம் சுதந்திரம் என்பதை மகாஸித்களில் ஒன்றாக விளங்கப்படுத்துகின்ற பொழுது,  இந்தக் கருத்தையும் இணைத்தே விளங்கப்படுத்துகிறது. அந்தவகையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பது ஷரீஆவின் மக்ஸதை விட்டும் வெளிச் செல்லவில்லை. எனினும் இங்கு நாம் மனம் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. சுதந்திரம் என்ற சிந்தனையை இஸ்லாம் மகாஸித்களில் ஒன்றாக விளங்கப்படுத்திய அதனுடைய முழுமையான பொருளில் நாம் சுதந்திரத்தைப் புரிந்து கொள்கிறோமா? எமது சுதந்திர தினக் கொண்டாட்டம் எப்போதோ நடைபெற்ற ஒரு அநீதியை நினைவுகூறுவதாக மாத்திரம் அமைந்து விடக் கூடாது. அதனையும் தாண்டி இந்த மக்கள் தொகுதியின் முழுமையான சுதந்திரத்தை நோக்கிய அழைப்பாக,  அதற்கான விதையாக அது அமைய வேண்டும். அப்பொழுதுதான் ஷரீஆவின் மகாஸிதை அடைந்து கொண்டவர்களாக மாறுவோம்.

கலாநிதி மாலிக் பின் நபி சொல்வது போல்,  காலனித்துவத்தின் மிகப்பெரிய பாதிப்பு,  காலனித்துவத்திற்கு உற்பட்ட மக்கள் தொகுதியின் சுயத்தை இழக்கச் செய்வதுதான்,  அவர்களை அறியாமலேயே அவர்கள் அடிமைகளாக மாறியிருப்பார்கள். நேரடியான காலனித்துவம் எப்போதோ போய்விட்டது. ஆனால் நாம் இன்னும் எமது சுயத்தை சுதந்திரமாக வெளிப்படுத்துகிறோமா? என்பது கேள்வி. எமது சிந்தனை,  வார்த்தைகள் மற்றும் செயற்பாடுகளின் உந்துசக்திதான் சுதந்திரம் என்பது,  ஆனால் நாம் அனுபவிக்கும் சுதந்திரம் அந்தப் பணியைச் செய்கின்றதா? என்பது கேள்வி.
தாய்நாட்டுச் சிந்தனையை இஸ்லாம் மறுக்கவில்லை,  நாம் ஒரு தேசமக்களாக எழுந்து நிற்பதை இஸ்லாம் வரவேற்கிறது. ஆனால் அது பிறிதொரு தேசமக்களுக்கு எதிரானதாய் அமைந்து விடக் கூடாது. பிறிதொன்றின் வீழ்ச்சியில் எமது எழுச்சியை எதிர்பார்த்து விடக் கூடாது. சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பது,  நாம் எழுந்து நிற்பது எவ்வாறு என்பதற்கான முனைப்பாகவே அமைய வேண்டும். பிறிதொன்றை வீழ்த்துவதோ அல்லது சாடுவதோ அல்ல.

சுதந்திரம் என்பதை ஷரீஆவின் மகாஸித்களில் ஒன்றாகப் புரிந்து கொள்கின்ற போது,  எமது சுதந்திர சிந்தனை  எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதற்கான ஒரு ஆலோசணையே இங்கு பரிமாறப்பட்டுள்ளது. வாசகர்கள் பயன் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.


(1)          கலாநிதி ராஷித் அல் கன்னூஷி,  மகாஸிதுல் ஹுர்ரிய்யா பில் பிக்ஹில் இஸ்லாமி அல் முஆஸிர் ஹக்குத் தன்ழீம் அல் ஹிஸ்பி வல் இன்திகாபாத் நுமூதஜன்,  தப்ஈல் மகாஸிதுஷ் ஷரீஆ பில் மஜாலிஸ் ஸியாஸி,  கட்டுரைத் தொகுப்பு,  வெளியீடு : முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி வமர்கஸுல் மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  முதலாம் பதிப்பு 2014,  பக்கம் 106.

(2)          இமாம் முஹம்மத் தாஹிர் இப்னு ஆஷுர்,  உஸுலுன் நிழாம் அல் இஜ்திமாஈ பில் இஸ்லாம்,  பதிப்பகம் : தாருத் தூனுஸிய்யா லித்தௌஸீஃ,  பக்கம் 162.

(3)          இமாம் இப்னுல் ஜௌஸி,  மனாகிபு உமர் இப்னுல் கத்தாப்,  பக்கம் 98, 99.

(4)          இமாம் முஹம்மத் தாஹிர் இப்னு ஆஷுர்,  உஸுலுன் நிழாம் அல் இஜ்திமாஈ பில் இஸ்லாம்,  பதிப்பகம் : தாருத் தூனுஸிய்யா லித்தௌஸீஃ,  பக்கம் 163.

(5)          கலாநிதி ஸலீம் அல் அவா,  மக்ஸதுல் ஹுர்ரிய்யா இன்தத் தாஹிர் இப்னு ஆஷுர்,  மகாஸிதுஷ் ஷரீஆ இன்தத் தாஹிர் ஆஷுர்,  வெளியீடு : முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி வமர்கஸுல் மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  முதலாம் பதிப்பு 2013,  பக்கம் 54, 55.

(6)          இமாம் முகம்மத் அத்தாஹிர் இப்னு ஆஷுர்,  மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  செம்மையாக்கல் கலாநிதி முகம்மத் தாஹிர் அல்மைஸாவி,  பதிப்பகம்: தாருன் நபாஇஸ்,  இரண்டாம் பதிப்பு 2001,  பக்கம் 390.

(7)          கலாநிதி ஸலீம் அல் அவா,  மக்ஸதுல் ஹுர்ரிய்யா இன்தத் தாஹிர் இப்னு ஆஷுர்,  மகாஸிதுஷ் ஷரீஆ இன்தத் தாஹிர் ஆஷுர்,  வெளியீடு : முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி வமர்கஸுல் மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  முதலாம் பதிப்பு 2013,  பக்கம் 57.

(8)          பார்க்க: இமாம் முகம்மத் அத்தாஹிர் இப்னு ஆஷுர்,  மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  செம்மையாக்கல் கலாநிதி முகம்மத் தாஹிர் அல் மைஸாவி,  பதிப்பகம்: தாருன் நபாஇஸ்,  இரண்டாம் பதிப்பு 2001,  பக்கம் 390 – 400.

(9)          பார்க்க: கலாநிதி ஜாபிர் அப்துல் ஹாதி ஸாலிம் அஷ்ஷாபிஈ,  தஃஸீலுல் இஃலானில் ஆலமி லிஹுகூகில் இன்ஸான் மின் மன்லூரி மகாஸிதிஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா திராஸா தஃஸீலிய்யா மகாஸிதிய்யா,  மகாஸிதுஷ் ஷரீஆ வல் இத்திபாகாத் அத்துவலிய்யா,  கட்டுரைத் தொகுப்பு,  வெளியீடு : முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி வமர்கஸுல் மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  முதலாம் பதிப்பு 2013,  பக்கம் 122 - 131.

(10)        கலாநிதி ராஷித் அல் கன்னூஷி,  மகாஸிதுல் ஹுர்ரிய்யா பில் பிக்ஹில் இஸ்லாமி அல் முஆஸிர் ஹக்குத் தன்ழீம் அல் ஹிஸ்பி வல் இன்திகாபாத் நுமூதஜன்,  தப்ஈல் மகாஸிதுஷ் ஷரீஆ பில் மஜாலிஸ் ஸியாஸி,  கட்டுரைத் தொகுப்பு,  வெளியீடு : முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி வமர்கஸுல் மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  முதலாம் பதிப்பு 2014,  பக்கம் 103.

(11)        இமாம் முஹம்மத் தாஹிர் இப்னு ஆஷுர்,  உஸ{லுன் நிழாம் அல் இஜ்திமாஈ பில் இஸ்லாம்,  பதிப்பகம் : தாருத் தூனுஸிய்யா லித்தௌஸீஃ,  பக்கம் 163.


No comments:

Post a Comment