Monday, March 2, 2015

எமது மண்ணில்…

இலங்கை மண்ணின் தஃவாக் களம் முன்னெப்போதும் இல்லாதவாறு புதிய பரிமாணங்களைக் கண்டு வருகிறது. இது ஓர் ஆரோக்கியமான நிலை. சந்தோசம் கொள்ளத்தக்க ஒரு விடயம்.

இன்று இஸ்லாமிய தஃவா என்பது தனிமனிதன்,  குடும்பம்,  இயக்கம் என்ற எல்லைகளைத் தாண்டி சமூகம்,  நாடு என்ற பரிமாணங்களில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தஃவா பற்றிய சிந்திப்புகளும்,  கருத்தாடல்களும் அதிகமாக இந்தப் பரப்புகளை மையப்படுத்தியிருப்பது அவதானத்திற்குரியது. 

சமூக ஒற்றுமை,  சகவாழ்வு,  நாட்டுக்கான பங்களிப்பு போன்ற கருத்தியல்கள் பிரதான தளத்தின் பேசுபொருள்களாக மாற்றம் கண்டு வருகின்றன. இந்நிலை இதற்கு முன்னர் காணப்படவில்லை என்பதை விடவும் ஆரம்பத்தில் சிறிய தொகையினர் ஊடாக மாத்திரம் பேசப்பட்ட இவ்விவகாரங்கள் இன்று எல்லாத் தரப்பினராலும் முன்னெடுக்கப்படுகின்ற ஒன்றாக மாறியிருக்கின்றமையே இன்றைய நாளின் முக்கிய வித்தியாசமாய்க் காணப்படுகின்றது.

சமூக மட்டத்தில் நின்று பார்க்கின்ற பொழுது,  முஸ்லிம் சமூகத்தின் ஒருமைப்பாடு,  அதற்கான ஒரு பொதுத் தலைமையின் அவசியம் போன்றன குறித்து,  இன்று வெகுவாக விவாதிக்கப்படுகின்றது. உண்மையில் இவ்விடயம் கருத்து எல்லையைத் தாண்டி செயல்வடிவத்தை நோக்கியும் வேகமாக நகர்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

மற்றொரு புறத்தில் இலங்கை எமது தாயகம் என்ற வகையில் நாம் சமூக எல்லைக்குள் மட்டுப்படாமல் நாடு என்ற வகையில் எமது சிந்திப்புகளும் செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்ற அறைகூவல் எல்லாத் தரப்பிலிருந்தும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதன் ஆரம்பக் கட்டமாகவோ என்னவோ பிற சமூகங்களிடத்தில் இஸ்லாம் பற்றிய சார்பு மனப்பான்மையை வளரத்தல்,  சகவாழ்வு போன்ற எண்ணக்கருக்கள் முக்கிய இடத்தினைப் பிடித்திருக்கின்றன. இவை தொடர்பான நேரடி வேலைத்திட்டங்கள் பல தரப்பாலும் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்கலாம்.

இதன் பிறிதொரு வடிவம் அரசியல் தளத்திலும் இருக்கிறது. முஸ்லிம் அரசியல் எனும் இனத்துவ சிந்திப்பைத் தாண்டி விழுமிய அரசியலை நோக்கி அரசியல் சிந்தனை நகர ஆரம்பித்திருக்கிறது. ஒரு பெரும் ஆர்ப்பரிப்பாக இன்னும் இதனைக் காண முடியாவிட்டாலும் பலமான ஒரு அத்திவார நகர்வு அங்கு தெரிகிறது. இப்பணியும் நாடு என்ற பரிமாணத்தை மையப்படுத்தியிருக்கிறது.

இங்கு ஒரு விடயத்தை முக்கிமாய்க் குறித்துக் காட்டுவது பொறுத்தம். இந்த தஃவா சூழலின் முக்கிய கதாபாத்திரங்களாய் நாம் இளைஞர்களைக் காண்கிறோம். சிந்தனைத் தளத்திலும் சரி செயற்பாட்டுத் தளத்திலும் சரி முன்னணியில் அவர்கள்தான் இருக்கிறார்கள். கருத்து முன்வைப்பாக இருக்கட்டும்,  விமர்சனமாக இருக்கட்டும்,  சாடலாக இருக்கட்டும். இவற்றில் எல்லா வடிவங்களையும் அவர்கள் பிரதிபளிக்கிறார்கள். இவற்றில் அவர்களது அணுகுமுறைகளின் சரி பிழைகளுக்கு அப்பால் இளைஞர்களது தஃவா உணர்வும் ஆர்வமும் வரவேற்கத்தக்கது.

மேற்கூறிய பின்புலங்களில் அவதானத்திற்குரிய சில உண்மைகள் இருப்பதாய்த் தோன்றுகிறது. முதலில் ஒரு விடயத்தில் நாம் எல்லோரும் உடன்படுகின்றோம். அது,  இஸ்லாமிய தஃவா ஒரு நிலையான கடமை. அதில் மாற்றமில்லை. அதற்கு பல்வேறு வடிவங்கள் காணப்படலாம். ஆனால் அது ஒரு கடமை என்பது நிலையானது. இந்தக் கடமையுணர்வில் எல்லா சிந்தனை முகாம்களும் ஒன்றுபடுகிறார்கள். ஆனால் அதன் செயல்வடிவத்தைப் பொறுத்தவரையில் தனிமனித வடிவமா? கூட்டு வடிவமா? கூட்டுவடிவத்திலும் நிறுவனப் பொறிமுறையா? இயக்கப் பொறிமுறையா? என்பது வேறுபட்ட நிலைப்பாடுகள் தோன்ற முடியுமான ஒரு பரப்பாகும். இவற்றுள் எந்த நிலைப்பாடும் பாதில் என்ற வரம்புக்குள் நிச்சயமாக உள்ளடங்க மாட்டாது.

ஆனால் நாம் மனம் கொள்ள வேண்டிய விடயம் எது எனின்,  ஒரு செயலை மிகச் சிறந்த முறையில் மேற்கொள்வதனையே அல்லாஹ்தஆலா விரும்புகிறான். நபியவர்கள் கூறினார்கள் நீங்கள் ஒரு செயலை செய்யும் போது அதனை நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்பதையே அல்லாஹ்தஆலா விரும்புகிறான்அந்தவகையில் மிகவும் பயனுள்ள வழிமுறை எது? மிகவும் பொறுத்தமான வழிமுறை எது? என்பது குறித்த தேடல் ஒரு முஸ்லிமின் கடமை. ஸாலிஹான அமல்களில் ஒன்று.

எனவே,  விளைவுகளின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு பார்வையின் அடிப்படையிலேயே வழிமுறைகள் தீர்மானிக்கப்படல் வேண்டும். தனிமனித வடிவில் சிந்தனை முன்வைப்புகள் கருத்தாக்கங்கள் சாத்தியமாக இருப்பினும்,  செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுப்பது,  கூட்டு வடிவிலேயே சாத்தியப்படுகிறது.

இங்கு மற்றொரு விடயத்திலும் எமது உடன்பாடு அவசியப்படுகிறது. அதாவது இருப்பவை எவற்றையும் மறுதலிக்காமல் அவற்றின் இருப்பையும் பயனையும் அங்கீகரித்தல் என்பது. இன்று இஸ்லாமிய தஃவா மேற்கொள்ளப்படுகின்ற பல்வேறுபட்ட அணுகுமுறைகள்,  வடிவங்கள் அனைத்தும் பயனுள்ளவைதான். அவற்றின் மூலம் மக்கள் பிரயோசனப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

இங்கு எந்த வடிவமும் அவசியமற்றது என்றோ பிழையானது என்றோ நாம் கூற முடியாது. மனித வாழ்வினதும் மனித தேவைகளினதும் பன்முகப்பட்ட வடிவங்களுக்கு பதில் தருவதற்கு பல்வேறு வகைப்பட்ட அணுகுமுறைகளும் வடிவங்களும் அவசியப்படுகின்றன. எனவே,  இந்த அனைத்து வடிவங்களினதும் இருப்பையும் பயனையும் ஏற்றுக் கொள்ளுதல் எமது மனநிலைகளில் நிகழ வேண்டிய முக்கியதொரு மாற்றமாகும்.

அதேவேளை மற்றொரு உண்மையையும் நாம் மறந்து விடக் கூடாது. நடந்து கொண்டிருக்கும் அனைத்து முயற்சிகளும் வடிவங்களும் குறித்ததொரு பொது இலக்கின்றி  சிதறிய பல வடிவங்களில் பயணிக்கும் நிலை அவதானத்திற்குரியது. ஓர் ஆரோக்கியமற்ற நகர்வாக இது தென்படுகிறது. இங்குதான் நாம் மிகவும் முக்கியமான,  கவனமான ஒரு பார்வையைச் செலுத்த வேண்டியிருக்கிறது. 

பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படும் பல்வேறு வகைப்பட்ட முயற்சிகளில் எந்தத் தவறுமில்லை. ஆனால் அவை அனைத்தின் மூலமும் நாம் என்ன விளைவை அடைந்து கொள்ளப் போகிறோம்? என்ற கேள்விதான் மிகவும் முக்கியமானது. எமது முயற்சிகள் அனைத்தும் நீண்ட காலத்தில் ஒரு நிலையான மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றனவா? அவை ஒரு நீண்டகால இலக்கை அடைந்து கொள்ளப் போகின்றனவா? அல்லது தொடர்புகள் அற்ற வெறும் செயற்பாடுகள் மாத்திரம்தானா? முயற்சிகளின் முடிவுடன் அவை காணாமல் போய்விடப் போகின்றனவா?

இந்தக் கோணத்திலமைந்த சிந்திப்பு தஃவாக் களத்தின் இன்றியமையாத தேவை. இங்கு நாம் பல்வேறு முயற்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும்,  தொடர்பாடலையும் மாத்திரம் நாடவில்லை. அதனையும் தாண்டிய ஒரு விடயத்தையே இங்கு குறித்துக் காட்ட விரும்புகிறோம். ஒருங்கிணைப்பு என்பது ஒரு பொறிமுறை மாத்திரம்தான். அது ஒரு அடைவு அல்ல. இந்த ஒருங்கிணைப்பு பொறிமுறை ஊடாக எல்லா முயற்சிகளும் ஒரு நிலையான நீண்டகால இலக்கு நோக்கி வழிநடாத்தப்படுவது அவசியம்.


என்ன செய்யப் போகிறோம்? எவ்வாறு செய்யப் போகிறோம்? என்ற கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. அவை போலவே முக்கியமான கேள்விதான் எதனை அடைந்து கொள்ளப் போகிறோம் என்பது. இந்தக் கேள்விக்கு விடை காணும் பொழுதுதான் ஒற்றுமை,  ஒருங்கிணைப்பு,  இணைந்து செயற்படல் போன்ற பல கருத்தியல்களுக்கு உண்மையான பொருள் புலப்படும். மாத்திரமன்றி செயற்களத்திலும் அவை நிஜமாகும். 

எனவே,  ஒரு பொது அடைவை நோக்கிய சிந்திப்பும்,  அதனை நோக்கிய ஒருங்கிணைப்பும் இலங்கை தஃவாக் களத்தில் நிரப்பப்பட வேண்டிய ஒரு முக்கிய இடைவெளி என நினைக்கிறோம்.

1 comment:

  1. சமூக மாற்றத்திற்கனா பங்காளியாக இருப்பதும் அவதாணியாக இருப்பதும்... ஒரு கருத்து..

    சிந்தனைப் புலத்தில் மாற்றம் என்பது மாறாத விழுமியங்களையும் சகாகல இருப்புநிலையையும் கருத்திற்கொண்டு வெளிப்படவேண்டியவை. அதன் பிரயோக முறை சமூக நிலையைப் பொறுத்து மாறுபடும்.

    ஒரு சமூகம் இருகிய சிந்தனைப்போக்கையும் பிடிவாதத்தையும் மாற்றுக்கருத்துக்களையும் சிந்தனைகளையும் விகாரமாகமாகக் கருதி ஒட்டுமொத்தமாக தாக்கும் மனோநிலை காணப்படும் போதும் அதனை எதிர்கொள்ளும் பாணி ஆரம்பத்தில் அதற்கு நேர்எதிர் பிரயோக ஒழுங்கைப் பெறுவது அவதாணிக்கத்தக்க வாரலாற்று உண்மையாகும்.

    இந்தவகையில் அரபுலகின் கடந்த நூற்றாண்டின் இஸ்லாமிய இயக்க செயன்முறைச் சிந்திப்பு இன்றைய சமூக ஒழுங்கில் விழுமியங்களை வாழவைப்பதில் பங்களிப்புச் செய்யும் ஆற்றலை இழந்து விட்டது என்ற பேருண்மை எவ்வளவுதான் கசப்பாக இருப்பினும் புரியப்படல் மிக அவசியமாகும்.

    அப்படி புரியப்பட்டால் சலாமாவின் மேற்குறித்த அவதாணி ஒழுங்கிலான சிந்திப்பிலிருந்தும் பங்காளி ஒழுங்குக்கு எவ்வாறு தன்மை மாற்றுவது என்ற நகர்வு சிந்திப்பைத் துரிதமாக்கலாம்.

    ReplyDelete