Thursday, March 5, 2015

இஸ்லாத்திற்குரிய கண்ணியத்தை மீளப் பெற்றுக் கொடுத்தல்

தனிமனித உருவாக்கம் - நோக்கங்கள் - 03

இஸ்லாத்திற்கு கண்ணியத்தை மீளப்பெற்றுக் கொடுத்தல் என்பது தனிமனித உருவாக்கத்தின் நோக்கங்களில் ஒன்று,  அந்த வகையில் இந்த தலைப்பு கீழ்வரும் மூன்று கிளைத்தலைப்புக்களில் அணுகப்படுகிறது.

1. இஸ்லாத்திற்கு கண்ணியத்தை மீளப்பெற்றுக் கொடுத்தல் என்பதன் பொருள் என்ன?

2. இக்கருத்து அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் எவ்வாறு வழியுறுத்தப்படுகிறது?

3. இக்கருத்தை நோக்கிய தனிமனித உருவாக்கம் ஏன் அவசியப்படுகிறது?

1.  இஸ்லாத்திற்கு கண்ணியத்தை மீளப்பெற்றுக் கொடுத்தல் என்பதன் பொருள் என்ன?

இஸ்லாத்திற்குரிய கண்ணியத்தை மீளப் பெற்றுக் கொடுத்தல் என்பதன் பொருள் உலகின் தலைமைத்துவத்திற்கு இஸ்லாம் மீண்டும் வருதல் என்பதாகும். இங்கு தலைமை என்பதன் பொருள் வழிகாட்டுதல். இமாம் ஹஸனுல் பன்னாவின் வார்த்தைகளில் கூறினால் எது சத்தியமோ அதனை நோக்கி முழு மனித இனத்தையும் வழி நடாத்துதல்,  எது சிறந்ததோ எது பயனுள்ளதோ அதனை எல்லா மனிதர்களுக்கும் காட்டிக் கொடுத்தல்,  இஸ்லாம் எனும் சூரியனால் முழு உலகையும் ஒளி பெறச் செய்தல்”. இதுதான் இஸ்லாம் தலைமைக்கு வருதல் என்பதன் பொருள். 

கடந்த காலங்களில் இந்தத் தலைமையைத்தான் இஸ்லாம் உலகில் வழங்கியது. அப்போது உலகில் இஸ்லாம் கண்ணியமாய் வாழ்ந்தது. அந்த கண்ணியம் மீளக் கொண்டு வரப்படல் வேண்டும். இஸ்லாம் அன்று வழங்கிய தலைமை அன்பு நிறைந்தது. நீதிமிக்கது. பயன் வாய்ந்தது. அதில் அடக்கு முறை இல்லை. அநீதி இல்லை. அழிவு இல்லை. இந்தப் பண்புகளையே, மேலே சொன்ன இமாம் ஹஸனுல் பன்னாவின் வார்த்தைகளும் விளங்கப்படுத்துகின்றன.

இதனால்தான் நபியவர்களைப் பற்றி அல்குர்ஆன் ரஹ்மதன் லில் ஆலமீன்என்றது. இங்கு ரஹ்மாஎன்ற சொல்லை பொதுவாக அன்பு என்று மொழிபெயர்ப்பார்கள். ஆனால் இங்கு ஒரு சிறிய வேறுபாடு இருக்கிறது. ரஹ்மா என்பது மேல் நிலையில் உள்ள ஒருவர் கீழ் நிலையிலிருப்பவர் மீது காட்டும் அன்பைக் குறிக்கிறது. அந்த அன்பு விட்டுக் கொடுக்கும்,  மன்னிக்கும்,  குறைபாட்டுடனும் ஏற்றுக் கொள்ளும். உலகை நோக்கிய நபியவர்களது பணியை அல்-குர்ஆன் இவ்வாறுதான் விளங்கப்படுத்தியது. இதுதான் இஸ்லாம் உலகிற்கு வழங்கும் தலைமை.

அடுத்து,  இஸ்லாம் தலைமை வழங்குதல் அல்லது வழிகாட்டுதல் எனும் போது அங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயம் இருக்கிறது. அதாவது,  இந்தப் பிரபஞ்சம்,  அதில் மனிதன் உற்பட ஏனைய படைப்புக்கள்,  மனித வாழ்வு,  இவை குறித்த மிகச் சரியான பார்வையை அல்குர்ஆன் மாத்திரமே முன்வைக்கிறது. அந்தப் பார்வையின் அடிப்படையில் உலக வாழ்வு ஒழுங்கமைக்கப்படுகின்ற போதே உண்மையில் அல்லாஹ் படைத்த நோக்கம் நிறைவேறுகின்றது என்பது மாத்திரமன்றி உலகில் சுபீட்சமான,  மனித நலனை நிறைவேற்றக் கூடிய ஒரு வாழ்வு உருவாகின்றது. இஸ்லாமிய வழிகாட்டல் என்பதன் அடிப்படைப் பொருள் இதுதான்.

இந்தப் பிரபஞ்சம்,  மனித வாழ்வு குறித்த அல்குர்ஆனின் பார்வை அடிப்படையில் உருவாக்கப்படும் வாழ்வே நீதி,  பயன்,  சமத்துவம்,  அபிவிருத்தி,  பாதுகாப்பு என்ற எல்லா நலன்களையும் கொண்டு வரக்கூடியதாகக் காணப்படும்.

மற்றது,  இஸ்லாத்தின் தலைமை எனும் போது,  அது,  அதிகார ஆட்சி வடிவத்துடன் மாத்திரம் சுறுங்கி விடுகின்ற ஒன்றாகவும் நாம் கருதிவிடக் கூடாது. மாற்றமாக,  உலகின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாம் முன்னோடியாய்க் காணப்படும். மேலே குறிப்பிட்ட பிரபஞ்சம்,  மனித வாழ்வு பற்றிய அல்குர்ஆனின் பார்வைப் பின்புலத்திலிருந்து,  துறைவாரியான நிபுணத்துவ வழிகாட்டலை இஸ்லாம் வழங்கும். இது ஆட்சி வடிவம் மாத்திரமன்றி,  சட்டம்,  கல்வி,  பொருளாதாரம்,  சுகாதாரம்,  ஊடகம்,  விளையாட்டு,  பொழுதுபோக்கு என மனித வாழ்வின் அனைத்து துறைகளையும் உள்ளடக்கியிருக்கும். இந்த எல்லாப் பரப்புக்களும் மனிதப் படைப்பின் நோக்கத்தை நிறைவு செய்கின்ற வகையில் எவ்வாறு செயற்படுத்தப்படல் வேண்டும் என்பதே இஸ்லாத்தின் தலைமை அல்லது வழிகாட்டலாகும். அந்தவகையில் மேற்சொன்ன அடிப்படையிலமைந்த ஆய்வுகளும் செயற்திட்டங்களும் முன்னோடியாய் இருந்து உலகை வழிநடாத்திக் கொண்டிருக்கும்.

இஸ்லாமிய வரலாறு இதற்குச் சான்றாக இருந்திருக்கிறது. ஸ்பெய்ன் கலீபா இரண்டாம் ஹிஷாமுக்கு ஆங்கிலேய மன்னன் எழுதிய கடிதத்தை வரலாறு பதிவுசெய்து வைத்திருக்கிறது. உங்களது நாட்டின் அபிவிருத்தியைப் பற்றி நாங்கள் கேள்விப்படுகிறோம். எமது நாட்டில் அறிவீனம் அதன் எல்லாக் கால்களுடனும் நிலை கொண்டிருக்கிறது. உங்களது கல்வியிலிருந்தும் அபிவிருத்தியிலிருந்தும் ஒரு சிறிய பகுதியை நாங்களும் பெற்றுக் கொள்ளும் வகையில் எமது இளவரசியையும் இன்னும் சிலரையும் அனுப்பி வைக்கிறோம். அவர்களுக்கு உங்கள் அறிவைக் கற்றுக் கொடுத்து அனுப்பி வையுங்கள். உங்கள் அடிச்சுவட்டை நாங்களும் பின்பற்றி வருவதற்கு இது முதல் எட்டாக இருக்கட்டும்என்று அன்றைய ஆங்கிலேய மன்னன் இஸ்லாமிய கலீபாவுக்கு கடிதம் எழுதினான்.

இஸ்லாம் வாழ்ந்த கண்ணியமான வாழ்வையும்,  அது உலகிற்கு வழங்கிய தலைமைத்துவத்தையும் இந்த சம்பவம் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த கண்ணியம் மீண்டும் வர வேண்டும். உலகின் தலைமைக்கு மீண்டும் இஸ்லாம் வர வேண்டும். இதனை மீளக் கொண்டு வருதல் தனிமனித உருவாக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

இங்கே ஒரு கேள்வி எழ முடியும்,  வரலாற்றில் ஒரு காலப்பகுதியில் இஸ்லாம் செல்வாக்குச் செலுத்தியது. முஸ்லிம்கள் ஆண்டார்கள். ஆனால் தற்போது அது முடிந்து போன ஒரு வரலாறு. கடந்து போன ஒரு வரலாற்றையும் முடிந்து போன ஒரு பாரம்பரியத்தையும் மீளக் கொண்டு வர வேண்டுமா? நாம் இப்போது வாழும் யதார்த்தத்தை  ஏற்றுக் கொள்ளலாமே? வரலாறு என்பது குர்ஆனும் சுன்னாவும் அல்லனவே

 இப்படியும் சிலர் வினாத்தொடுக்க முடியும். உண்மையில் இஸ்லாம் உலகின் தலைமைக்கு வருதல் என்பது ஒரு கடந்தபோன வரலாற்றை மீள உயிர்ப்பித்தலா? அல்லது இஸ்லாத்தின் ஒரு அடிப்படைப் பணியா?

இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் போது,  ஆரம்பமாய் ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். வரலாற்றில் இஸ்லாம் தலைமை வகித்தது என்பது வரலாற்று ஓட்டத்தில் நிகழ்ந்த ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. மாற்றமாக அல்குர்ஆனின் போதனைகள் தான்,  அன்று முஸ்லிம்களை அவ்வாறு செயலாற்ற வைத்தது. இஸ்லாம் என்பது ஆட்சி வடிவிலும் சரி,  ஏனைய அனைத்து துறைகளிலும் சரி உலகில் மனித வாழ்வை முன்னோடியாய் இருந்து வழிநடாத்துவதற்குரியது என்ற புரிதலின் அடிப்படையிலான செயற்பாடுதான் இஸ்லாமிய வரலாறாக மாறியது. அன்றைய கால சூழ்நிலைகள் ஏற்படுத்திய அழுத்தத்தினால் இஸ்லாம் தலைமைப் பொறுப்பை ஏற்கவில்லை. மாற்றமாக அல்குர்ஆனின் போதனைதான் முஸ்லிம்களை அந்த இடத்தை நோக்கி வழிநடாத்தியது. எனவே,  இஸ்லாத்தை மீண்டும் உலகின் தலைமைக்குக் கொண்டு வருதல் என்று பேசும் பொழுது அங்கு முடிந்து போன பழைய வரலாறு ஒன்றை மீளக் கொண்டு வருவது பற்றிப் பேசப்படவில்லை. மாற்றமாக அல்குர்ஆனின் போதனை மீண்டும் அமுலுக்கு வர வேண்டும் என்பதே இங்கு நாடப்படுகிறது.

அடுத்து,  இஸ்லாமிய சிந்தனையைப் பொறுத்தவரையில் அது வரலாற்றில் தலைமை கொள்ளும். பின்னர் வீழ்ச்சியடையும். மீண்டும் தலைமைக்கு வரும் என்று நபியவர்களது போதனைகள் கூறுகின்றன. எனவே,  ஒரு சிந்தனை உலகில் இவ்வாறுதான் வாழ்ந்தது. அதனை மீண்டும் அவ்வாறு வாழ வைக்க வேண்டும் என்று பேசுவது ஒரு தவறான அணுகுமுறையன்று. ஏனெனில் இங்கு இஸ்லாம் மீண்டும் தலைமைக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறதேயன்றி,  அன்று காணப்பட்ட அதே ஆட்சி வடிவமொன்றை மீள நிறுவுதல் என்பது இங்கு பேசப்படவில்லை.

அடுத்து,  இஸ்லாம் தலைமைக்கு வருதல் என்ற சிந்தனை குறித்து மூன்று வகையான தவறான புரிதல்கள் காணப்படுகின்றன, அவை ஒவ்வொன்றுக்கும் இங்கு பதில் சொல்லப்படாவிட்டாலும் இஸ்லாம் தலைமை வகித்தல் என்றால் என்ன என்பது மிகச் சரியாகப் புரிந்து கொள்ளப்படுகின்றபோது இந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடமுடியும்.

முதலாவது, தலைமை என்பதை ஒரு ஆட்சி வடிவமாக மாத்திரம் புரிந்து கொள்ளுதல். இவ்வாறு புரிந்து கொள்ளும் போது இது ஒரு மார்க்கப் போதனையாகவன்றி அரசியல் வேலைத்திட்டமாக மாத்திரம் அடையாளப்படுத்தப்படுகிறது. எனவே,  அங்கு ஒரு அச்சம் மேலெழுகிறது. அங்கே தமது அரசியல் வேலைத்திட்டத்திற்கு மார்க்கத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உடன் வருகிறது.

இரண்டாவது,  இஸ்லாம் தலைமைக்கு வருதல் என்பது நாஸி சிந்தனை போலும் கம்யூனிஸ சித்தாந்தம் போலும் ஒரு அராஜக அரசியல் வேலைத்திட்டமாக சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது. மேற்குலகம் தனது அரசியல் நலன்களுக்காக இஸ்லாம் குறித்த இந்த தவறான பார்வையை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் இஸ்லாம் தலைமைக்கு வருதல் என்பது பயங்கரவாதமாக அடிப்படைவாதமாகப் பார்க்கப்படுகிறது. திட்டமிட்ட ஒரு சதிப் பின்புலம் இஸ்லாம் தலைமைக்கு வருதல் பற்றிய தவறான பார்வையை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாவது,  இஸ்லாம் தலைமைக்கு வருதல் என்பது ஒரு மேலாதிக்கம்,  அடக்கு முறை,  பிறர் உரிமையை மதிக்காமை,  பன்முகத்தன்மையை ஏற்காமை என்று சிலர் புரிந்து கொள்கின்றனர். உண்மையில் இந்தப் புரிதல் தவறானது. ஆரம்பத்திலேயே இஸ்லாத்தின் தலைமை என்பதன் பொருள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனைச் சரியாகப் புரிந்து கொள்கிறபோது இந்த பார்வை நியாயமற்றது என்பது புலனாகும்.

2.  இக்கருத்து அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் எவ்வாறு வழியுறுத்தப்படுகிறது?

முதலில் அல்குர்ஆன் கையாளுகின்ற சில சொற்பிரயோகங்களை அவதானிப்போம். ஷஹாதா,  கிலாபா,  தம்கீன்,  அஇம்மா,  வாரிஸ் போன்ற சொற்கள் அடிப்படையில் விரிந்த பல கருத்துக்களைக் குறித்து நிற்பன என்றிருப்பினும் இந்த எல்லாச் சொற்களும் இஸ்லாத்தின் தலைமைத்துவத்தையும் வழிகாட்டுதலையும் வெகுவாக வலியுறுத்துகின்றன.

எல்லா மனிதர்களுக்கும் ஷஹாதத்தை வழங்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் நடுநிலையான சமூகமாக அமைக்கப்பட்டதாக அல்குர்ஆன் கூறுகிறது. இங்கு ஷஹாதத் என்பது இஸ்லாத்தின் வழிகாட்டல் எல்லா மனிதர்களையும் சென்றடைவதை உறுதிப்படுத்துதல். இது மத்தியில் நின்று தலைமை தாங்குவதன் மூலமே சாத்தியப்படுகிறது.

அடுத்து,  கிலாபத் என்பது பிரதிநிதித்துவம். அதாவது அல்லாஹ்வின் பிரதிநிதிகள்,  பூமியை அபிவிருத்தி செய்தல் என்ற வகையில் எல்லா மனிதர்களும் அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக மாறுகின்றனர். மனிதர்களை வழிநடாத்துதல் என்ற வகையில் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக மாறுகின்றனர். இங்கு அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக இருந்து இஸ்லாத்தின் அடிப்படையில் எல்லா மனிதர்களையும் வழிநடாத்துதல் முஸ்லிம்களின் விஷேட பணியாகிறது.

மற்றது தம்கீன் எனும் சொல். இது ஓரிடத்தில் நிலை கொள்ளுதல்,  கால் பதித்தல்,  அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல் போன்ற கருத்துக்களைக் குறித்து நிற்கின்றது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் தம்கீன் என்ற சொல் அல்குர்ஆனில் விரிந்த கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டிருப்பினும் அதில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கருத்து தலைமை அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளுதல் என்பதாகும். 

ஸுறத்துன் நூரின் 55வது வசனத்தில் குறிப்பிடுவது போல் ஈமான் கொண்டு,  ஸாலிஹான அமல்களில் ஈடுபடுவோருக்கு அல்லாஹ்தஆலா ஒரு வாக்குறுதியைத் தருகின்றான். அது பூமியில் தலைமையை வழங்குவதாகவும் அவர்களது மார்க்கத்தை பூமியில் நிலைப்படுத்தி,  அதிகாரத்தை வழங்குவதாகவும் பாதுகாப்பான ஒரு சூழலை வழங்குவதாகவும் அந்த வசனம் பேசுகிறது. இங்கு தம்கீன் என்பது ஈமானினதும் நற்செயலினதும் விளைவாக பூமியின் தலைமையைப் பெற்றுக் கொள்ளுதல் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

அடுத்து,  இஸ்லாம் தலைமைக்கு வருதல் என்ற கருத்தை மிகத் தெளிவாக வலியுறுத்தும் வகையில் அல்குர்ஆன் பயன்படுத்திய சொற்பிரயோகம்; “இமாம்அல்லது அஇம்மாஎன்ற சொல். இது நன்மைக்கான அல்லது தீமைக்கான தலைமை என்ற பொதுக் கருத்தைக் குறிப்பினும்,  அல்;குர்ஆனில் நன்மைக்கான தலைமை என்ற கருத்திலேயே பெரிதும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தச் சொல் பொதுவாக நபிமார்கள் குறித்தும்,  ஈமானுள்ள சமூகத்தினர் குறித்தும் அநியாயமிழைக்கப்பட்ட சமூகத்தினர் குறித்தும் பேசும்போது,  அவர்களை தலைவர்களாக மாற்றுவோம் என்பதாக அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. இதன் காரணமாகவே இமாமத் என்ற சொல்லை விளங்கப்படுத்த வந்த இமாம் மாவர்தி,  திப்தாஸானி போன்றவர்கள் உலகை நிர்வகித்தல்,  மார்க்கத்தை நிர்வகித்தல் ஆகிய இரண்டுக்குமான பொதுத் தலைமைத்துவத்தையே இது குறிக்கின்றது என்றார்கள்.

அடுத்து,  “வாரிஸ்என்பது,  பொதுவாக வாரிஸ் என்பது ஏதோ ஒரு விடயத்தை ஒருவருக்குப் பின்னர் வாரிஸாக அடைந்து கொள்பவரைக் குறிக்கும். இங்கு ஈமானுள்ள மனிதர்கள்,  ஸாலிஹான மனிதர்கள்தான் இந்தப் பூமியின் வாரிசுகளாவர் என்ற கருத்தை அல்குர்ஆன் முன்வைக்கிறது. இந்தப் பூமியை எனது ஸாலிஹான அடியார்களே வாரிஸாகப் பெறுவர்” (அன்பியா 105)  என அல்குர்ஆன் கூறுகிறது.

அடுத்ததாக,  அல்குர்ஆன் நேரடியாகப் பேசும் சில சிந்தனைகளும் இந்தக் கருத்தை மேலும் வலியுறுத்துகின்றன.
முதலில் உலகின் மார்க்கங்கள்,  சிந்தனைகள் அனைத்தையும் இஸ்லாம் வெற்றி கொள்ளும்,  மிகைத்து விடும் என்று அல்குர்ஆன் கூறுகிறது. அல்குர்ஆனின் ஸுறதுஸ் ஸப்,  பத்ஹ்,  தௌபா போன்றவற்றில் இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. அத்துடன் இந்த வெற்றி நிச்சயம் கிடைக்கப் பெறும் என்றும் அதற்கு அல்லாஹ்வே பொறுப்பாக இருக்கிறான் என்றும் அந்த வெற்றி நிலை ஒரு போதும் காபிர்களால் அங்கீகரிக்க முடியுமான ஒன்றாக இருக்க மாட்டாது என்றும் கூறுகிறது.

இரண்டாவது,  காபிர்களின் கொள்கை உலகில் தாழ்ந்தது எனவும் அல்லாஹ்வின் கொள்கை உலகில் உயர்ந்தது எனவும் அல்குர்ஆன் கூறுகிறது. ஸுறதுத் தௌபாவில்,  ஹிஜ்ரத் நிகழ்வில் தௌர் குகையில் இடையில் தங்கிய நிகழ்வை சித்தரிக்கும்போது இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது.

மூன்றாவது,  உலகில் அல்லாஹ்வை விட்டும் திசை திருப்பக்கூடிய அனைத்துக் காரணிகளும் அகற்றப்பட்டு,  முழுமையாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்ட ஒரு சூழ்நிலை தோன்றும் வரை போராட்டம் தொடர வேண்டும் என்று அல்குர்ஆன் பேசுகிறது. இக்கருத்து சூரதுல் பகராவிலும்,  அன்பாலிலும் வலியுறுத்தப்படுகிறது.

இந்த மூன்று சிந்தனைகளும் மிகத் தெளிவாக இஸ்லாத்தின் தலைமையையும்,  வழிகாட்டலையும் வலியுறுத்துவதுடன்,  இஸ்லாத்துடன் முரண்படுகின்ற பாதில்கள் அகற்றப்படல் வேண்டும் என்பதையும் வலியுறுத்துவதைக் காணலாம். இங்கு அசத்தியம் அகற்றப்படுதல் என்பது வன்முறையல்ல. அது மனித குலத்திற்குச் செய்யும் ஒரு மிகப் பெரிய நலனாகும்.

அடுத்து ஹதீஸ்கள் பயன்படுத்திய ஜமாஅதுல் முஸ்லிமீன்என்ற சொற்பிரயோகமும் இக்கருத்தைப் பேசுவதைக் காணலாம். பல ஹதீஸ்களில் பேசப்பட்டுள்ள இந்த சொல்லுக்கான கருத்தை அறிஞர் ஹுஸைன் அல் ஜாபிர் அவர்கள் தொகுத்து வழங்குகின்றபோது கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். ஜமாஅதுல் முஸ்லிமீன் என்பது தீர்மானம் பெறத் தகுதி வாய்ந்த அறிஞர்கள் ஒரு கலீபாவின் தலைமையில் ஒன்றுபடுகிறார்கள்,  முஸ்லிம் உம்மத் அவர்களுக்குக் கட்டுப்படுகிறதுஎன்கிறார்.

இங்கு ஜமாஅதுல் முஸ்லிமீன் என்பது உம்மத்தின் சமூக வாழ்வொழுங்கைக் குறிக்கிறது. அங்கு ஒரு தலைமை இருக்கிறது. ஆலோசனை கூறவும் வழிகாட்டவும் ஒரு அறிஞர் சபை இருக்கிறது. அதன்கீழ் மக்களின் வாழ்க்கை ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வலைப்பின்னல் அல்லது வாழ்வு முறையே ஜமாஅதுல் முஸ்லிமீன் என்ற சொல்லின் மூலம் விளங்கப்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் இஸ்லாத்தின் தலைமை என்பது ஆட்சி,  சமூக வடிவம் முதல் சிந்தனை,  சட்டம்,  விழுமியம் அடையாளம் என எல்லா பக்கங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான தலைமைத்துவம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

எனவே,  இஸ்லாம் தலைமைக்கு வருதல் என்பது சில அரசியல் நலன்களுக்கான ஒரு செயற்பாடு அல்ல. அடக்கு முறையையும் சுரண்டலையும் செய்கின்ற ஒரு ஏகாதிபத்தியம் அல்ல. பிறர் நலனையும் உரிமைகளையும் மதிக்காத அநீதியான ஒரு மேலாதிக்கம் அல்ல. மாற்றமாக முழு உலகிற்கும் வெளிச்சம் கொடுக்கும் ஒரு அருள். முழு உலகையும் நன்மைகளால் நிரப்பி விடுவதற்கான ஒரு முயற்சி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

3.  இக்கருத்தை நோக்கிய தனிமனித உருவாக்கம் ஏன் அவசியப்படுகிறது?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதை அண்மை நாட்களில் எழுப்பப்பட்டுள்ள ஒரு வாதத்துடன் தொடர்பு படுத்திப் பேசுவது சற்றுப் பொறுத்தமானது. அதாவது இஸ்லாம் தலைமைக்கு வர வேண்டும் என்பது உண்மை,  ஆனால் அது இஸ்லாமிய விழுமியங்களின் தலைமையைத்தான் குறித்து நிற்குமேயன்றி,  முஸ்லிம்கள் தலைமை வழங்குவார்கள் என்ற கருத்தைக் குறிக்க மாட்டாது என்று சிலர் விளக்கமளிக்க முற்படுவதைக் காணலாம்.

இந்தப் பார்வை குறித்து பிறிதொரு சமயம் விரிவாகப் பேசப்படவுள்ளதால் இப்போது இது குறித்த சில அவதானங்களை மட்டும் தொட்டுச் செல்கிறோம்.

முதலில்,  இஸ்லாத்தை ஒரு நம்பிக்கையாக ஏற்காத நிலையிலும் ஒருவர் நடைமுறை வாழ்வில் இஸ்லாமிய விழுமியங்களையும் சட்டங்களையும் பின்பற்றி வாழலாம் என்ற சிந்தனை ஒரு போதும் மறுக்கப்பட மாட்டாது. ஆனால் இதுதான் உலக வாழ்வில் இஸ்லாம் எதிர்பார்க்கும் இறுதி நிலை என்றும் அகீதாவை தெளிவுபடுத்துவதற்கான பொது ஏற்பாடு அவசியமற்றது என்றும் கருதப்படுமாயின் அது தவறானது.

இரண்டாவது,  தலைமை என்பது ஒரு சிந்தனை வடிவமாக மாத்திரம் வாழ்வது சாத்தியமற்றது. அதற்கு ஒரு உருவம் தேவை. கட்டமைப்பு தேவை. அந்த உருவத்தையும் கட்டமைப்பையும் தான் முஸ்லிம் என்றும் கிலாபத் என்றும் அல்குர்ஆன் குறிப்பிட்டது. தலைமைத்துவத்தை முஸ்லிம் அல்லாத ஒரு உருவத்தில் அல்குர்ஆன் பேச முற்படவில்லை.

மூன்றாவது,  ஒரு விழுமியம் வாழ்வது எவ்வாறு? அதற்கு முக்கியமாக இரண்டு விடயங்கள் நடைபெறல் வேண்டும். ஒன்று அந்த விழுமியங்களின் மீதான உருவாக்கம் நடைபெறல் வேண்டும். அதாவது அந்த விழுமியங்களை ஏற்று நடைமுறைப்படுத்துகின்ற மனிதர்கள் உருவாக்கப்படல் வேண்டும். மற்றது அந்த விழுமியங்களின் நடைமுறையை உறுதிப்படுத்தவும்,  அவை காக்கப்படவும் சட்டங்களும் ஒழுங்குகளும் அவசியம். இதுதான் இஸ்லாத்தின் தர்பிய்யதும் ஷரீஅத்துமாகும்.

நான்காவது,  அல்குர்ஆன் கிலாபத் என்பதை ஈமான்,  நல்லமல்,  இபாதத்,  ஷிர்க் வைக்காமை போன்ற பண்புகளுடன் தொடர்புபடுத்தியே பேசியிருக்கிறது. கிலாபத் என்பது ஏலவே குறிப்பிடப்பட்டது போல் விரிந்த ஒரு கருத்தை குறித்து நின்ற போதிலும் அதில் மேலெழுந்து நிற்கும் பொருள் தலைமை வழங்குதல்,  வழிகாட்டுதல் என்பதாகும். அந்தவகையில் ஒரு முஸ்லிமுடைய பணியாகவே அல்குர்ஆன் இதனை விளங்கப்படுத்தியிருக்கிறது.

ஐந்தாவது,  இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இஸ்லாம் தலைமை வகித்தல் எனும் சிந்தனை முஸ்லிம்கள் தலைமை வகித்தலாகவே காணப்பட்டிருக்கிறது. எனவே,  ஸஹாபாக்கள் முதல் தொடர்ந்து வந்த எல்லாப் பரம்பரையினரதும் புரிதல் மேற்சொன்ன அடிப்படையிலேயே காணப்பட்டிருக்கிறது.

ஆறாவது,  இஸ்லாம் தலைமையில் இல்லாத ஒரு சூழலில்,  அதனை தலைமையில் அமர்த்துவதற்கான முயற்சி என்பது இருக்கின்ற ஒழுங்குகளையும் மனிதர்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு நடைபெறும் ஒரு முயற்சியல்ல. மாற்றமாக இருக்கின்ற ஒழுங்குகள் மனிதர்கள் ஊடாக நடைபெறும் ஒரு மாற்றமாகும்.

மேற் சொல்லப்பட்ட அவதானங்களின் அடிப்படையில் தலைமை வழங்கல்,  வழிகாட்டல் பணி ஒரு முஸ்லிமுக்குரியது என்பது ஆழ்ந்து வலியுறுத்தப்படுவதைக் காணலாம். ஈமான் உள்ள ஒரு மனிதனின் பணியாகவே அல்குர்ஆன் வழிகாட்டலையும் தலைமையையும் குறிப்பிடுகின்றது. இந்தப் பணி ஒரு உருவாக்கத்தின் அடிப்படையிலேயே நிகழ வேண்டும் என்பதும் இங்கு வலியுறுத்தப்படுகிறது.


அடுத்து,  உருவாக்கக் கோட்பாடு என்பது,  ஒரு முஸ்லிம் இந்த உலகில் இஸ்லாத்தை அதன் முழுமையான வடிவில் அமுல்படுத்துவதற்காய் முதலில் அவனைத் தயார்படுத்துவதாகும். இந்தத் தயார்படுத்துதலை நபியவர்கள் முதல் பின்னர் வந்த ஒவ்வொரு கலீபாவும் மேற்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த உருவாக்கம் வெறுமனே சராசரியான ஒரு தனிப்பட்ட மனித வாழ்க்கைக்கான உருவாக்கமாக மாத்திரமன்றி உலகை வழிநடாத்தும் உயர் மனநிலையை வளர்க்கும் உருவாக்கமாகவே அமைந்திருந்தது. 

அல்குஆன் அந்த மனநிலையை இவ்வாறு வலியுறுத்தியது,  “ நீங்கள் கவலைப்பட வேண்டாம் சஞ்சலப்படவேண்டாம் ஈமான் உள்ள போது நீங்களே உலகில் உயர்ந்தவர்கள்” (ஆல இம்ரான் 139 ). 

 அகழி யுத்தத்தின் போது பாறையைப் பிளந்த நபியவர்கள் அல்லாஹு அக்பர் என சத்தமாகக் கூறவே,  காரணம் கேட்ட ஸஹாபாக்களுக்கு முஸ்லிம்கள் ரோம பாரசீகங்களை வெற்றி கொள்வதைப் பார்த்தேன் என்றார்கள்,  இங்கும் உலகை வழிநடாத்தும் மனநிலையை வளர்ப்பதாகவே நபியவர்களது தர்பியத்தும் அமைந்திருந்தது. 

எனவே இஸ்லாம் மீண்டும் தலைமையை வழங்கும் வகையில் உருவாக்கம் அமைய வேண்டும் என்பது அல்குர்ஆனும் சுன்னாவும் வலியுறுத்திய ஒரு சிந்தனை என்பதைப் புரிந்து கொள்கிறோம். 

அல்லாஹ்வே போதுமானவன்.

No comments:

Post a Comment