Friday, May 15, 2015

ஸாலிஹான வாழ்க்கைத் துணை வேண்டுமா?

எனது மாணவர்களோடு எனக்கு ஒரு அனுபவம் இருக்கிறது. உங்களது மனைவி அல்லது கணவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்ற கேள்வியைக் கேட்கின்ற பொழுது மிகப் பெரும்பாலானவர்கள் அளிக்கின்ற பதில் இவ்வாறுதான் இருக்கிறது.

 ஸாலிஹான ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் அல்லது ஸாலிஹான ஒரு கணவனாக இருக்க வேண்டும் என்பார்கள். இது ஒரு நியாயமான எதிர்பார்ப்பு. மனித இயல்போடு இயைந்த எதிர்பார்ப்பு. ஏனெனில்,  மனிதன் அடிப்படையில் நல்லவனாகவே படைக்கப்பட்டுள்ளான். இதுதான் அல்லாஹ் மனிதனைப் படைத்த அடிப்படை இயல்பாகும்” (ரூம் - 30  ) என அல்குர்ஆன் கூறுகிறது.

அவர்களது இந்த எதிர்பார்ப்பு,  ஒரு இயல்பு சார்ந்த விடயம் என்பதால் அது தானாகவே எழுகிறது. ஆனால் ஸாலிஹானஒருவரை அடைந்து கொள்ளும் வழி என்ன? என்பது குறித்த சரியான புரிதலுடன் பல சமயங்களில் அவர்கள் இல்லை என்பதுதான் உண்மை. 

ஸாலிஹான வாழ்க்கைத்துணை என்பவர் யார்? அவரை எவ்வாறு அடைந்து கொள்ளலாம்? அதற்கான நிபந்தனைகள் என்ன? போன்ற பல விடயங்கள் அவர்கள் மத்தியில் விவாதிக்கப்படாத ஒரு விடயமாகவே இருக்கிறது. சில சமயங்களில் இளைஞர்கள் மத்தியிலும் யுவதிகள் மத்தியிலும் இது போன்ற தலைப்புக்கள் விவாதிக்கப்படுவது குற்றமாகப் பார்க்கப்படுகின்ற சமூக மன நிலையும் காணப்படுகின்றது. இங்கு வேடிக்கை என்னவென்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தவறான வடிவில் தொடர்புகளை ஏற்படுத்தும் வகையில் எல்லா இடங்களிலும் எல்லா தளங்களிலும் தாராளமாக பேசப்படுகின்றன. அதனை யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதேயில்லை. ஆனால் ஒரு நியாயமான தேடலுக்கு,  ஹலாலான அணுகுமுறைக்கு வாய்ப்பேற்படுத்தப்படாமல் இருக்கிறது. இதுதான் கவலைக்குரிய விடயம்.

இந்தப் பின்புலத்தில் நின்றுதான் திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்களும் யுவதிகளும் விடை காண வேண்டிய ஐந்து கேள்விகளுள் மூன்றாம் கேள்வியான யார்என்ற கேள்விக்கு நாம் விடை காண முற்படுகின்றோம். 

இதற்கு முன்னைய அமர்வுகளில் எப்போது? ஏன்? போன்ற கேள்விகளுக்கு விடை கண்டோம். ஒரு விதத்தில் முன்னைய இரண்டு கேள்விகளை விடவும் யார்?” என்ற மூன்றாம் கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில்,  எப்போது? ஏன்? என்ற கேள்விகள் திருமணம் என்ற செயற்பாட்டிற்கு வெளியில் உள்ள விடயங்களை அறிவதற்கான கேள்விகள். ஆனால் யார்?” என்ற கேள்வி திருமண செயற்பாட்டின் உள்ளார்ந்த ஒரு காரணியை அறிவதற்கான கேள்வியாகும். யார்?” என்பது இல்லை எனின் திருமணம் என்ற செயற்பாடே இருக்க வாய்ப்பில்லை. ஆனால் எப்போது? ஏன்? என்பன இல்லாத போதும் திருமணம் என்ற செயற்பாடு இருக்கும்.

யார்?” என்ற கேள்விக்கான பதிலும் சற்று நீளமானதுதான். அந்தவகையில் பதிலுக்கான ஒரு முன்னுரையாக அமையக்கூடிய ஒரு கருத்து குறித்து மாத்திரம் இன்று சற்று எமது கவனத்தைச் செலுத்துவோம்.

ஆரம்பத்தில் சொன்னது போல் எல்லோரும் ஸாலிஹான துணையைத்தான் தேடுகிறார்கள். தனது துணை ஒழுக்கமாக இருக்க வேண்டும்,  நல்ல குணம் இருக்க வேண்டும்,  கெட்ட பழக்கங்கள் இருக்கக் கூடாது என்று ஒரு பெரிய பட்டியலையே முன்வைப்பார்கள். ஆனால் அவர்கள் ஒரு முக்கியமான விடயத்தை உணரத் தவறி விடுகிறார்கள். 

எனது துணை ஸாலிஹான ஒருவராக இருக்க வேண்டும் எனின்,  நானும் ஸாலிஹான ஒருவராக இருக்க வேண்டும் என அவர்கள் நினைப்பதில்லை. நான் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகிறேன். ஆனால் எனது மனைவி மட்டும் பத்தினியாய் இருக்க வேண்டும் என்று எத்தனையோ ஆண்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். இது உலகில் அல்லாஹ்தஆலா வைத்திருக்கும் சோடி சேர்க்கும் விதிக்கு முரணானது. அல்குர்ஆன் கூறுகிறது மோசமான பெண்கள் மோசமான ஆண்களுக்கு,  மோசமான ஆண்கள் மோசமான பெண்களுக்கு,  நல்ல பெண்கள் நல்ல ஆண்களுக்கு,  நல்ல ஆண்கள் நல்ல பெண்களுக்கு…” (ஸுறதுன் நூர் - 26)

இந்த அல்குர்ஆன் வசனம் ஒரு விதியைச் சொல்கிறது,  நல்லவர்கள் நல்லவர்களுடனும் மோசமானவர்கள் மோசமானவர்களுடனும் சோடி சேர்க்கப்படுவார்கள்,  இந்த வசனத்தில் ஒரே விடயம் இரண்டு தடவைகள் சொல்லப்பட்டதிலிருந்து இமாம்கள் இது ஒரு சமூகவியல் விதி என்கிறார்கள்.

இந்த வசனத்தில், ஆயிஷா (றழி) அவர்கள் மீது போலியானதொரு விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது,  அதனை மறுத்துரைக்கும் தொடரில் அல்லாஹ்தஆலா இந்த விதியை முன்வைக்கின்றான். நல்லவர்களுடன் நல்லவர்கள்தான் சோடி சேர்க்கப்படுவார்கள்,  கெட்டவர்களுடன் கெட்டவர்கள் தான் சோடி சேர்க்கப்படுவார்கள். எனவே ஆயிஷா ஒரு போதும் மோசமான ஒரு பெண்ணல்ல. அவ்வாறு இருந்தால் நபியவர்களுக்கு சோடியாக ஒரு போதும் அவர் அமைந்திருக்க மாட்டார். எனவே,  ஆயிஷா குற்றமற்றவர் என்பதை அல்லாஹ்தஆலா இந்த விதியின் மூலமே நிரூபனம் செய்கின்றான்.

எனவே ஸாலிஹான துணையை அடைந்து கொள்ள நினைக்கும் ஒவ்வொருவரும் மனம் கொள்ள வேண்டிய மிக முக்கிய நிபந்தனை இது. தான் எந்தளவு ஸாலிஹானவனாக,  அல்லாஹ்வுடன் நெருக்கமானவனாகக் காணப்படுகின்றேனோ அந்தளவுக்கு எனது துணையும் ஸாலிஹான ஒருவராக அமைவார்.

நபியவர்கள் இந்த விதியை இவ்வாறு விளங்கப்படுத்தினார்கள். நீங்கள் கற்புடன் இருங்கள். உங்கள் மனைவிமார் கற்போடு இருப்பார்கள். நீங்கள் உங்கள் பெற்றோருடன் சிறந்த முறையில் நடந்து கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்களுடன் சிறந்த முறையில் நடந்து கொள்வார்கள்” (தபரானி) 

இங்கு ஒரு நடத்தையின் எதிர்த்தாக்கம் அதனை ஒத்ததாகவே காணப்படும் என்பது விளங்கப்படுத்தப்படுகிறது. பிறிதொருவரை நோக்கிய எமது நடத்தைகள் நல்லவையாக அல்லது சார்பானவையாக அமைகின்ற பொழுது எம்மை நோக்கிய அவர்களது நடத்தைகளும் நல்லவையாக,  சார்பானவையாக அமைகின்றன. அதேவேளை எமது நடத்தைகள் எதிர்மறையாக அமைகின்ற போது அதே எதிர்மறை விளைவையே நாம் அனுபவிக்க வேண்டி ஏற்படும்.

இங்கு நபியவர்களது வார்த்தைகள் பொதுவாக எல்லா செயற்பாடுகளுக்கும் உள்ள எதிர்த்தாக்கம் பற்றிய பொதுவிதியைப் பேசுகின்ற அதேவேளை அல்குர்ஆன் மிகத் தெளிவாக திருமண பந்தம் இந்த விதியின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது என்று கூறுகிறது. 

அல்குர்ஆனை வாசிக்கின்ற ஒருவருக்கு இங்கு ஒரு கேள்வி தோன்ற முடியும். நூஹ் (அலை),  லூத் (அலை) போன்ற நல்ல மனிதர்களுக்கு மோசமான மனைவிமார் இருந்தமையையும்,  பிர்அவ்ன் எனும் ஒரு மோசமான மனிதனுக்கு நல்ல மனைவி இருந்தமையையும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. இதனை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? இதனோடு சேர்த்து மற்றோரு கேள்வியும் தோன்ற முடியும். எமது நடைமுறையில் எத்தனையோ நல்ல பெண்களுக்கு மோசமான கணவன் அமையவில்லையா? எத்தனையோ நல்ல ஆண்களுக்கு மோசமான மனைவி அமையவில்லையா? இதற்கு என்ன விளக்கம் சொல்வது?

இந்தக் கேள்விகளுக்கு இரண்டு வகையில் பதில் அளிக்க முடியும். முதலாவது நூஹ்,  லூத் (அலை) அவர்களது மனைவிமாரைப் பொறுத்தவரையில் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறும் விளக்கத்திற்கு ஏற்ப அவர்கள் கணவன்மாருக்கு செய்த துரோகம் குடும்ப வாழ்வு தொடர்பானதல்ல. மாற்றமாக தஃவா வாழ்வு தொடர்பானது. அவர்கள் இருவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரை காட்டிக் கொடுக்கின்ற வேலையைச் செய்தார்கள். எனவே,  இங்கு ஈமானில் அல்லது தீனில் அவர்கள் முரண்பட்டார்கள். அந்த வகையில் அவர்கள் உங்கள் குடும்பத்தவர்கள் அல்ல என்று அல்குர்ஆன் கூறியது.

இதிலிருந்து திருமண பந்தத்தில் இணைவதற்கான அடிப்படைத் தகைமையான நல்லவர்கள் என்ற பண்பு அந்த இரண்டு தம்பதியர்களிடத்திலும் இருந்திருக்கிறது. ஆனால் சத்தியத்தை ஏற்றுக் கொள்கின்ற ஒரு சந்தர்ப்பம் அந்த தம்பதியினர்க்கு வந்தபோது நூஹ்,  லூத் எனும் கணவன்மார் அதனை ஏற்றார்கள். மனைவிமார் ஏற்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் முழுமையாக சத்தியத்திற்கு எதிராக செயற்படுகின்றவர்களாக மாறி விட்டார்கள்.

இந்த உதாரணங்கள் மூலம் அல்குர்ஆன் நல்லவர்களும் கெட்டவர்களும் இணைந்து கணவன்-மனைவியாக வாழ்வார்கள் என்று விளங்கப்படுத்தவில்லை. மாற்றமாக கணவன்-மனைவியாக வாழும் போது இருவரும் கொள்கையளவிலும் ஒன்றாக இருக்க வேண்டும். இருவரும் சத்தியத்திற்காக செயற்படுகின்றவர்களாக இருக்க வேண்டும். இல்லாதபோது அந்தக் குடும்ப வாழ்வு நிலைப்பதரிது என்பதையே அல்லாஹ்தஆலா இந்த உதாரணங்கள் மூலம் விளங்கப்படுத்துகின்றான்.

அடுத்து,  அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் மனைவி எனும் கருத்தைக் குறிப்பதற்கு இரண்டு சொற்களைப் பயன்படுத்தியுள்ளான். ஒன்று ஸெளஜ் மற்றது இம்ரஆ. இந்த இரண்டு பிரயோகங்களுக்குமிடையில் ஒரு நுணுக்கமான வேறுபாடு இருப்பதாக சில தப்ஸீர் ஆசிரியர்கள் விளக்கமளிக்கின்றனர்.

பொதுவாக ஸெளஜ் என்ற பிரயோகம் கணவன் மனைவி என்ற இரு பாத்திரங்களையும் குறிக்கும். அத்துடன் சோடியாக இருத்தல் என்ற கருத்தையும் குறிக்கின்றது. கணவன் மனைவியிடையே அந்நியோன்னியமான உறவு காணப்படுகின்ற பொழுது அதனை ஸெளஜ் என்று குறிப்பிட்டது. அதாவது அமைதி, அன்பு, விட்டுக்கொடுப்பு, மன்னிப்பு, அங்கீகாரம்,  நம்பிக்கை போன்ற உயர் பெறுமானங்கள் வாழும் உறவை அல்லது இவற்றைப் பிரதிபளிக்கும் கணவனையும் மனைவியையும் ஸெளஜ் என்றது. இவற்றில் ஒன்றையோ பலதையோ பிரதிபளிக்காத அல்லது இவற்றில் குறைபாடு விடுகின்ற மனைவியை இம்ரஆ என்று குறிப்பிட்டது. 

அத்துடன் ஸெளஜ் என்ற சொல் சோடியாக இருத்தல் என்ற கருத்திலும் பயன்படுத்தப்படுகிறது,  அந்தக் கருத்தில் நின்று பார்க்கும் போது,  அல்குர்ஆன் ஸெளஜ் என்பதன் மூலம் அந்தக் கணவன் மனைவி உறவு நீடித்து நிலைப்பதற்குரியது என்றும்,  இம்ரஆ என்பதன் மூலம் அந்த உறவு நீடித்து நிலைக்கவும் முடியும். இடையில் உறவு முறிந்துவிடவும் முடியும் என்ற கருத்தையும் மறைமுகமாக உணர்த்துகிறது.

அந்தவகையில் நல்லவர்களாக அமைகின்ற தம்பதிகளின் வாழ்வே,  நீடித்து நிலைக்கும் உறவாகக் காணப்படும். அவ்வாறன்றி ஏதேனும் குறைபாட்டுடன் ஒரு சோடி இணைகின்றது எனின்,  அங்கு நிச்சயம் அல்லாஹ்தஆலா ஏதேனும் ஒரு நோக்கத்தை வைத்திருப்பான் அல்லது ஒரு படிப்பினையை வைத்திருப்பான். அந்த நோக்கம் நிறைவேறும் வரையில் அல்லது அந்தப் படிப்பினை கிடைக்கப் பெறும் வரையில் அந்த உறவை அல்லாஹ்தஆலா வைத்திருப்பான். 

இதனைத்தான் நாம் மற்றோர் வகையில் சோதனை என்போம். சோதனைகளின் மூலம் அல்லாஹ் மனிதனுக்கு நன்மையையே நாடுகின்றான். அவனது வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தவோ ஒரு திருப்பத்தை விளைவிக்கவோ அல்லாஹ்தஆலா சோதனைகளைத் தருகின்றான்.

எனவே,  நல்ல பெண்ணுக்கு மோசமான கணவன் அமைவதோ நல்ல ஆணுக்கு மோசமான மனைவி அமைவதோ ஒரு நிரந்தரமான விடயமாகக் காணப்பட மாட்டாது. அல்லாஹ்தஆலா எதிர்பார்க்கும் அந்த நோக்கம் நிறைவேறியதன் பின்னர் நிச்சயம் அந்த நிலையில் மாற்றம் ஏற்படும். அது அந்த உறவு பிரிந்து விடுவதாகவும் அமையலாம். அல்லது திருந்தி விடுவதாகவும் அமையலாம். லூத், நூஹ் (அலை) அவர்களது வாழ்விலும், ஆஸியாவினுடைய வாழ்விலும் இந்த உண்மையைக் காணலாம். அந்த உறவுகள் நீடிக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகப் பிரிந்து விட்டார்கள்.

இங்கு குறிப்பாக பிர்அவ்ன் ஆஸியா ஆகிய தம்பதிகளைப் பொறுத்தவரையில் முதலாவது விளக்கத்தை விடவும் இரண்டாவது விளக்கத்துடனேயே அதிகம் பொறுந்தி வருகின்றனர். ஏனெனில், பிர்அவ்னுடைய வீட்டில் மூஸா வளர்ந்தமை அவரது தஃவாவை துணிச்சலாக முன்னடுப்பதில் பெரும் பங்காற்றியுள்ளது. ஆஸியாவின் பரிந்துரையின் பேரில் தான் மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்னின் மாளிகையில் வளர்க்கப்படுகிறார். எனவே,  மூஸா எனும் ஒரு உயர் ஆளுமையின் உருவாக்கத்திற்காய்தான் அங்கு மோசமான ஒரு கணவனிற்கு ஒரு நல்ல மனைவியை அல்லாஹ்தஆலா ஏற்பாடு செய்திருக்கிறான் என்று எண்ணத் தோன்றுகிறது.

எனவே, மேற்கூறப்பட்ட விளக்கங்களிலிருந்து நாம் புரிந்து கொள்வது,  உலகில் சோடி சேர்ப்பதற்கு அல்லாஹ்தஆலா ஒரு விதியை வைத்திருக்கிறான். நல்லவருக்கு நல்லவரும் மோசமானவருக்கு மோசமானவரும் என்ற விதி. அந்த விதியின் பிரகாரமே,  வாழ்க்கைத் துணையை ஒவ்வொருவரும் அடைந்து கொள்வர். ஒவ்வொருவரும் தன்னில் எந்தளவு நல்லவர்களாக இருக்கிறார்களோ அந்தளவுக்கு அவர்களது வாழ்க்கைத் துணையும் நல்லவர்களாகக் காணப்படுவர்.

எனவே,  ஸாலிஹான வாழ்க்கைத் துணையை அடைந்து கொள்ளும் முயற்சி என்பது வெறுமனே ஸாலிஹான ஒருவரின் தேடலாக மாத்திரமன்றி தன்னை ஸாலிஹான ஒருவராக மாற்றிக் கொள்வதிலும் தங்கியிருக்கிறது என்பது நாம் மறந்து விடக்கூடாத ஒரு உண்மையாகும்.


இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வில் ஸாலிஹான ஒருவரை அடைந்து கொள்வதற்கான சில வழிகள் குறித்துக் கலந்துரையாடுவோம். அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கப்பட்டும்.

No comments:

Post a Comment