Thursday, May 21, 2015

இருபது அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுதல்

உஸுல் இஷ்ரூன்

இமாம் ஹஸனுல் பன்னா (றஹ்) அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள அல் உஸுல் அல் இஷ்ரூன் எனும் இருபது அடிப்படைகள் தஃவா களத்தின் பிரதானமானதொரு பேசுபொருள் என்பதில் இருகருத்து கிடையாது,  என்று நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக சார்பான,  எதிரான எல்லா பரிமாணங்களிலும் இவை குறித்த கருத்தாடல்கள் நடைபெறுவது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

இமாம் ஹஸனுல் பன்னாவின் வார்த்தைகளுக்கு தெய்வீக அந்தஸ்து கிடையாது. அந்த வகையில் இருபது அடிப்படைகள் தெய்வீக அடிப்படைகள் அல்ல. ஆனாலும் நவீன தஃவாப் பயணம் இருபது அடிப்படைகளில் அவர் பேசிய சிந்தனைகளைத் தவிர்த்து அல்லது மறந்து பயணிப்பது சாத்தியமற்றது என்றே தோன்றுகிறது. 

அவற்றைச் சார்பு நிலையில் பார்ப்பவர்கள் இயல்பான ஓட்டத்திலேயே அவரது சிந்தனைகளில் கலந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். சார்பு நிலையில் பார்க்காதவர்களினதும் முக்கிய இலக்குகளில் ஒன்றாக அவரது சிந்தனைகள் மாற்றமடைந்துள்ளன. அது விமர்சன முன்வைப்பாக இருக்கலாம் அல்லது மாற்றுக்கருத்துக் கூறலாக இருக்கலாம் அல்லது ஒரு தடையாகப் பார்ப்பதாக இருக்கலாம். இங்கு தடை தாண்டும் எத்தனிப்பில் தடையே ஒரு முக்கிய பேசுபொருளாய் மாறிவிட்ட நிலையையும் அவதானிக்கலாம். மாத்திரமன்றி எத்தனையோ பேர் சார்பானவர்களாக மாற்றமடைந்தும் இருக்கிறார்கள்.

மற்றோர் புறத்தில்,  காலம் மாறிவிட்டது, எனவே புதிய தஃவா பார்வை தேவை என்றும், புதிய அடிப்படைகள் தேவை என்றும்,  பேசுபவர்களினதும் மாற்றம் பற்றிய பேசு பொருள் இமாம் ஹஸனுல் பன்னாவின் சிந்தனைகளில் மாற்றம் நிகழ வேண்டிய எல்லைகள் குறித்துப் பேசுவதையே அதிகமான தொனிப் பொருளாய்க் கொண்டிருப்பதைக் காணலாம்.

அந்தவகையில் நவீன தஃவா சிந்தனைச் சுழற்சியின் மையமாக இமாம் ஹஸனுல் பன்னாவின் சிந்தனைகள் காணப்படுகின்றன என்றால் அது மிகையான ஒரு கருத்தல்ல என்று நினைக்கிறேன்.

இத்தகையதொரு தளப் பின்புலத்தில் நின்று தான் இருபது அடிப்படைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தவகையில் கீழ்வரும் கேள்விகளுக்கான விடைகளின் மூலம்,  இருபது அடிப்படைகள் எவ்வாறு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதை அறியலாம்.

1.            இருபது அடிப்படைகள் என்றால் என்ன?
2.            இருபது அடிப்படைகள் ஏன் அவசியப்படுகின்றன?
3.            இருபது அடிப்படைகள் மாற்றமடையாத விதிகளா?

இருபது அடிப்படைகள் என்றால் என்ன?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் போது,  இருபது அடிப்படைகளையும் ஒவ்வொன்றாக விளங்கப்படுத்துவதோ அல்லது அவை எவை? என்று சொல்வதோ நோக்கமல்ல. மாற்றமாக இவற்றின் உள்ளடக்கம் என்ன செய்திகளைச் சொல்கின்றது? என்பது பற்றிப் பேசுவதே இங்கு நோக்கமாகும்.

பொதுவாக இஸ்லாமிய வரலாற்று நெடுகிலும் அல்குர்ஆனையும் சுன்னாவையும் விளங்க முற்பட்ட பொழுது பல்வேறு சிந்தனைப் பாரம்பரியங்கள் தோன்றின. அவற்றில் நேரெதிர் சிந்தனைப் பாரம்பரியங்களும் காணப்பட்டமையை மறுப்பதற்கில்லை. இஸ்லாமிய அகீதாவாக இருக்கட்டும்,  ஷரீஆவாக இருக்கட்டும். எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் வித்தியாசமான பல்வேறு சிந்தனை முகாம்களை நாம் காணலாம். இந்நிலையை இஸ்லாமிய சிந்தனையில் எதிர்மறையான ஒரு பக்கமாக அடையாளப்படுத்துவதை விடவும் நேர்மறையான ஒரு பக்கமாகவே நோக்க வேண்டும். இது இஸ்லாமிய சிந்தனையின் செழுமையைக் குறித்து நிற்கிறதேயன்றி உடைவுகளைக் குறித்து நிற்க மாட்டாது. ஆனால் காலவோட்டத்தில் கலந்துவிட்ட மனோ இச்சைகளும் வெறியுணர்வுகளும் சிந்தனை வேறுபாடுகளைத் தாண்டி குழுநிலை வேறுபாடுகளுக்கு இட்டுச் சென்றமையும் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு கசப்பான உண்மையாகும்.

எனவே,  வரலாறு நகர்கின்ற பொழுது,  பல்வேறுபட்ட சிந்தனைப் பாரம்பரியங்கள் மாத்திரமன்றி குழுநிலை வேறுபாடுகளும் இணைந்தே நகர்ந்து வந்திருக்கின்றன. உண்மையில் சிந்தனைப் பாரம்பரியங்கள் என்பது அடிப்படையில் எதிர்ப்பியல்பு கொண்டவையல்ல அல்லது ஒன்றை ஒன்று மறுதலிக்கும் இயல்பு கொண்டவையல்ல. அவற்றில் கலக்கும் மனிதப் பலவீனங்களே சிந்தனைகளுக்கு அந்த வடிவத்தைக் கொடுக்கின்றன.

இருபது அடிப்படைகள் மூலம் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் சொல்ல வந்த மிக முக்கியமான செய்தி,  மனிதப் பலவீனங்களைத் தாண்டி சிந்தனையைச் சிந்தனையாய்ப் பார்க்க வேண்டும். சிந்தனைப் பாரம்பரியங்களுக்கிடையேயான எதிர்ப்பைக் களைந்து அதன் செழுமையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் உம்மத் என்றும் ஒரே உம்மத். ஒரே அல்குர்ஆனையும் சுன்னாவையும் தான் அனைவரும் கடைப்பிடிக்கிறார்கள். அந்தவகையில் பல்வேறு சிந்தனைப் பாரம்பரியங்கள் என்பன பிரிவினைகள் அல்ல. அவை சிந்தனையின் செழுமை. நிச்சயமாக அங்கு எல்லா சிந்தனைப் பாரம்பரியங்களும் சந்திக்கும் புள்ளிகள் இருக்கத்தான் செய்கின்றன. 

இஸ்லாம் பன்முகத்தன்மையையும் வலியுறுத்தியது. ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தியது. இந்த இரு முகங்களினதும் அதிசயமான சங்கமம்தான் இஸ்லாத்தின் அழகு. அந்த வகையில் பன்முகத்தன்மையைப் பிரதிபளிக்கும் சிந்தனைப் பாரம்பரியங்களுக்கிடையேயான ஒருமைப்பாட்டுப் புள்ளிகள் எவை? என்பதை இனம்காட்டும் அடிப்படைகளே இருபது அடிப்படைகளாகும்.

இருபது அடிப்படைகள் மீது மேலோட்டமான ஒரு பார்வையைச் செலுத்துகின்ற போதே இந்த உண்மையை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். இஸ்லாமிய வரலாற்று நெடுகிலும் மிக நீண்ட கருத்து வேறுபாடுகளைச் சுமந்து வந்த மிக முக்கியமான பரப்புகளின் இணைப்புப் புள்ளிகளை இருபது அடிப்படைகள் தொட்டுச் செல்கின்றன. 

இஸ்லாத்தின் முழுமைத்தன்மை,  இஸ்லாத்தின் மூலாதாரங்கள்,  ஆன்மீகச் செயற்பாடுகளின் முக்கியத்துவம்,  தலைமைக்குரிய சட்ட அதிகார எல்லை,  ஸலப்களின் சட்ட அந்தஸ்து, இஜ்திஹாதும் தக்லீதும்,  இஸ்லாமிய அகீதா,  பித்அத்,  ஒருவரைக் காபிர் என்று சொல்லுதல் போன்ற பல்வேறு தலைப்புகளில் முரண்பாட்டு எல்லைகளைத் தவிர்த்து உடன்பாட்டுப் புள்ளிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இது உஸுல் இஷ்ரூன் என்றால் என்ன என்பதன் முதலாவது கருத்தாகும்.

அதன் இரண்டாவது கருத்து,  இஸ்லாத்தின் பிரதான சிறப்பம்சங்களாக இரண்டு விடயங்கள் மிக அழுத்தமாகப் பேசப்படுகின்றன. அவை ஷுமூலிய்யா,  வஸதிய்யா எனும் முழுமைத்தன்மையும் நடுநிலைத் தன்மையும். இவை இஸ்லாத்தின் சிறப்பம்சங்கள் என்ற விடயத்தில் ஒரு தெளிவு நிலை காணப்பட்ட போதிலும்,  இவற்றின் பிரதிபளிப்பு எவ்வாறு இருக்கின்றது என்பது இன்னும் தெளிவுகள் அவசியமான ஒரு பகுதியாகவே காணப்படுகின்றது. 

நவீன காலத்தில் இஸ்லாமிய சிந்தனையில் இக்கருத்து குறித்த ஆய்வுகள் நிறையவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தொடர்ந்தும் நடந்து கொண்டும் இருக்கின்றன. ஆரம்ப நாட்களில் இஸ்லாமிய சிந்தனையின் முழுமை,  நடு நிலமை எனும் கருத்தியல்கள் தொடர்பில் பேசியதில் இமாம் ஹஸனுல் பன்னாவிற்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது. 

அந்தவகையில் அவர் முன்வைத்த இருபது அடிப்படைகள்,  பிரதானமாக இந்த இரண்டு கருத்துக்களில் மையம் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இஸ்லாம் மனித வாழ்வை முழுமையாக உள்ளடக்கியிருக்கிறது என்பதையும்,  பல்வேறு தீவிர நிலைகளுக்கு அப்பால் சென்று அழகியதொரு நடுநிலைப் பயணம் இஸ்லாத்திற்கு இருக்கிறது என்பதையும் உஸுல் இஷ்ரூன் சொல்கின்றது.

குறிப்பாக வஸதிய்யா எனும் நடுநிலைமை,  இருபது அடிப்படைகளில் கோட்பாட்டு வடிவங்களுக்குள் மாத்திரம் சுறுங்கி விடாமல் தெளிவான நடைமுறை வடிவங்களாக முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சொல்லப்பட்டது போல் இஸ்லாமிய சிந்தனை ஆய்வுகளில் தோன்றியுள்ள பல்வேறு தீவிர நிலைப்பாடுகளுக்கு நடுவில் இஸ்லாம் வலியுறுத்தும் மத்திம சிந்தனை எது என்பது இனம் காட்டப்பட்டிருக்கிறது. சட்ட மூலாதாரம்,  உளச் செயற்பாடுகள்,  இஜ்திஹாதும் தக்லீதும்,  கருத்து வேறுபாடுகள்,  பித்அத் போன்ற பல்வேறு பரப்புக்களில் இஸ்லாத்தின் நடுநிலைப் பிரயோக வடிவம் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

எனவே,  உஸுல் இஷ்ரூன் என்றால் என்ன என்பதன் இரண்டாவது கருத்து அது முழுமை,  நடுநிலமை என்ற சிந்தனைகளின் ஒரு பிரயோக வடிவம் எனலாம்.

இருபது அடிப்படைகள் ஏன் அவசியப்படுகின்றன?

இருபது அடிப்படைகள் ஏன் அவசியப்படுகின்றன? அல்லது இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இவற்றை ஏன் முன்வைத்தார்கள்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடும் போது நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான ஒரு பகுதி இருக்கிறது. 

இருபது அடிப்படைகள் என்பது இஸ்லாத்தை முறையாகக் கற்றுக் கொள்வதற்காக இமாம் ஹஸனுல் பன்னா முன்வைத்த ஒரு முறைமை என்ற பார்வை சிலரிடத்தில் காணப்படுகின்றது. ஒரு கல்வி நிலையத்தில் ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் இஸ்லாம் கற்கப்படுவது போல் இஸ்லாத்தை ஜமாஅத் அங்கத்தவர்கள் கற்றுக் கொள்வதற்கான ஒரு முறைமையே இருபது அடிப்படைகள் என்று சிலர் கருதுகின்றனர்.

 உண்மையில் அந்தப் புரிதல் தவறானது. இமாமவர்கள் அந்த நோக்கத்தில் இருபது அடிப்படைகளை வகுக்கவில்லை. மாற்றமாக இஸ்லாத்திற்காக செயற்படுகின்றபோது,  களத்தில் காணப்படுகின்ற பல்வேறு சிந்தனைப் பாரம்பரியங்களை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான அடிப்படைகளாகவே இவற்றை முன்வைத்திருக்கிறார்கள். மற்றோர் வடிவில் கூறினால்,  இஸ்லாமிய தஃவாவில் ஈடுபடும்போது, இஸ்லாத்தை எந்த வடிவில் புரிந்து கொள்வது அவசியமானது. அதிலும் குறிப்பாக பல்வேறு வித்தியாசமான சிந்தனைப் பாரம்பரியங்கள் வாழும் கள சூழ்நிலையில் அவற்றிற்கிடையில் முரண்பாட்டைத் தவிர்த்து இணக்கப்பாடான சூழலைப் பேணும் வகையில்,  இஸ்லாம் பற்றிய புரிதல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான விதிகளாகவே இருபது அடிப்படைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இது இருபது அடிப்படைகள் ஏன் என்ற கேள்விக்கான முதலாவது பதில்.

இரண்டாவது பதில்,  இது முன்னர் பேசப்பட்ட பல கருத்துக்களுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயம். அதாவது இருபது அடிப்படைகள் என்பது இஸ்லாமிய சிந்தனையின் இணக்கப்பாட்டுப் புள்ளிகள் என்றும் இஸ்லாமிய சிந்தனையின் முழுமை,  நடுநிலமை வடிவங்கள் என்றும் இவை இஸ்லாத்தை கற்போருக்கான அடிப்படைகளல்ல. இஸ்லாத்திற்காக செயற்படுவோருக்கான அடிப்படைகள் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

இவை அனைத்தும் சேர்ந்து எமக்குச் சொல்லும் செய்தி என்ன? நாம் ஒரு உம்மத்தாக எழுந்து நிற்க வேண்டியதன் அவசியத்தை இவை எமக்கு உணர்த்துகின்றன. அத்துடன் எமது பயணம் தெளிவான பாதையில் ஒரு இலக்கு நோக்கியதாக அமைய வேண்டியதையும் வலியுறுத்துகின்றன.

இஸ்லாத்தின் முழுமை,  இஸ்லாத்தின் நடுநிலமை என்பது இஸ்லாத்தின் நிலையான அடிப்படையான விழுமியங்களாகும். சிலர் நினைப்பது போல் இவை குறித்த ஒரு சூழ்நிலையை சமாளிப்பதற்கான அணுகுமுறைகளோ அல்லது குறித்த ஒரு கட்டத்தில் மாத்திரம் பயன்படுத்தப்படுவதற்குரிய வழிமுறைகளோ அல்ல. எனவே,  இஸ்லாம் எப்பொழுதும் முழு உம்மத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொள்வதுடன்,  எல்லாத் தரப்புகளுக்குமான இணைப்புப் பாலமாகவும் செயற்படுவதைக் காணலாம்.

 இங்குதான் ஒரு உம்மத் எழுச்சி பெறுகிறது. அனைத்தையும் உள்ளீர்த்தல்,  அனைத்தையும் ஒன்றிணைத்தல். இதுதான் ஒரு உம்மத்தாக எழுந்து நிற்பதற்கான அடிப்படைகள். இந்தப் புள்ளியைத் தான் இருபது அடிப்படைகள் முக்கியமாய்த் தொட்டுக் காட்டுகின்றன.

அடுத்து,  இந்த எழுச்சியை நோக்கிய உழைப்பை மேற்கொள்ளும் போதும்,  கைக் கொள்ளப்பட வேண்டிய இணக்கப்பாட்டுப் புள்ளிகளும் இங்கு அடையாளம் காட்டப்படுகின்றன. 

அந்தவகையில் ஒரு பொது இலக்கை நோக்கிய பயணத்திற்காக எமது சிந்தனைகள் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை இருபது அடிப்படைகள் கூறுகின்றன.

அந்தவகையில் இருபது அடிப்படைகள் ஏன்? அல்லது இஸ்லாத்திற்காக உழைப்பவர்களுக்கு உடன்பாட்டுப் புள்ளிகள் ஏன்? எனில் எமக்கு ஒரு பொது இலக்கு இருக்கிறது. நாம் ஒரு உம்மத்தாய் எழுந்து நிற்க வேண்டும். முழு மனித சமூகத்திற்கும் பயனுள்ள சமூகமாய் வழிகாட்டும் சமூகமாய் நாம் வாழ வேண்டும். இதற்காக உலகின் அனைத்து முயற்சிகளும் அனைத்து சக்திகளும் கூட்டிணைக்கப்படல் வேண்டும்,  இவற்றை அடைந்து கொள்ளும் வகையிலேயே,  இருபது அடிப்படைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இனி இருபது அடிப்படைகள் ஏன் அவசியப்படுகின்றன என்ற கேள்விக்கான மூன்றாவது பதிலிற்கு வருவோம். இந்த மூன்றாம் பதில் ஜமாஅத்தின் கட்டுக் கோப்பு,  ஒழுங்கு,  உருவாக்கம் போன்ற பகுதிகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகும்.

ஒரு ஜமாஅத் தனது அங்கத்தவர்களை குறித்ததொரு சிந்தனை மரபின் மீது உருவாக்குதல் என்பது பொதுவாக இயக்கப் பாரம்பரியத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விடயம். இந்த உருவாக்கத்தின் மூலமே அங்கத்தவர்கள் மத்தியில் சிந்தனா ரீதியான கட்டுக்கோப்பு பேணப்படுகிறது. அந்தவகையில் இயக்க அங்கத்துவம் தீர்மானிக்கப்படுவதில் இந்த சிந்தனா ரீதியான மரபும்,  கட்டுக்கோப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனெனில் ஒரு அமைப்பு ரீதியான பயணத்திற்கு அங்கத்தவர்கள் மத்தியில் சிந்தனை ஒருமைப்பாடு இன்றியமையாத ஒரு காரணியாகும்.

அந்தவகையில் இருபது அடிப்படைகள் ஏன்? எனில் அது குறித்த ஒரு சிந்தனை மரபின் மீதான உருவாக்கத்திற்கான அடிப்படைகள். பொது சமூகத் தளத்தில் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கான உடன்பாட்டுப் புள்ளிகளைத்தான் அந்த சிந்தனை மரபு குறிக்கின்றது. அவற்றின் மீதான உருவாக்கமே இங்கு நாடப்படுகிறது.

இங்கு மற்றொரு விடயத்தையும் நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். இந்த சிந்தனை மரபின் மீதான உருவாக்கத்திற்கு எவ்வாறு ஒரு சமூக தஃவா விளைவு காணப்படுகிறதோ அதே போல் இயக்க ஒழுங்கு தொடர்பான ஒரு விளைவும் காணப்படுகிறது. அதுதான் இயக்க அங்கத்துவம். பொதுவாக இயக்க அங்கத்துவம் என்பதன் பொருள் குறித்ததொரு இலக்கை நோக்கிய பயணத்திற்கான உடன்பாட்டைக் குறிக்கின்றது. இதனால்தான் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இருபது அடிப்படைகளைப் பேசும்போது,  அங்கத்துவ உடன்பாட்டிற்கான பத்து நிபந்தனைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிலும் இது முதலாவது நிபந்தனை,   இதனைக் கூறும்போது அல் பஹ்ம்புரிந்து கொள்ளுதல் என்றே விளங்கப்படுத்தியுள்ளார்கள்.

ஆகவே இருபது அடிப்படைகள் ஏன்? எனும் பொழுது ஒரு சிந்தனை மரபின் மீதான உருவாக்க அடிப்படைகளாக அமைவதுடன்,  இயக்க செயற்பாட்டின் அங்கத்துவ உடன்பாட்டிற்கான ஒரு நிபந்தனையாகவும் காணப்படுகிறது.

இருபது அடிப்படைகள் மாற்றமடையாத விதிகளா?

இருபது அடிப்படைகள் மாறாத நிலையான விதிகளா என்ற கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் கூறினால் நிச்சயமாக இவை மாறாதவையல்ல,  இவை மாற்றத்திற்குட்படக் கூடியவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஏனெனில் இவை அல்லாஹ்வோ அல்லது நபியவர்களோ வரையறை செய்த விதிகள் அல்ல. மாற்றமாக இமாம் ஹஸனுல் பன்னா எனும் ஒரு மனிதனின் இஜ்திஹாதுகள் மாத்திரமே. இருபது அடிப்படைகள் பற்றி இஃவான்களது பார்வை அன்றும் இவ்வாறுதான் காணப்பட்டது. இன்றும் அவ்வாறே காணப்படுகின்றது.

இப்படிச் சொல்வதன் மூலம் இமாம் ஹஸனுல் பன்னாவிற்கு காணப்பட்ட விஷேடமான ஆற்றல்கள் மறுத்துரைக்கப்பட மாட்டாது. இஃவான்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பலர் சிலாகித்துப் பேசியது போல் இமாம் ஹஸனுல் பன்னாவிடம் காலத்தைக் கடந்து சிந்திக்கும் அபரிமிதமான ஆற்றல் இருந்திருக்கிறது என்பது உண்மை. இது இவ்விடயத்தில் நாம் மறக்கக் கூடாத ஒரு விடயம்.

அடுத்தது,  தற்போது எம்மிடமிருக்கும் இருபது அடிப்படைகளில் ஏதேனும் ஒன்று பொறுத்தமற்றது என்றோ அவசியமற்றது என்றோ கருதப்பட முடியாது,  ஏனெனில் அவற்றில் பேசப்பட்டுள்ள விவகாரங்கள் அனைத்தும் இன்றுவரைக்கும் விவாதப் பொருள்களாக இருக்கின்றன. அவற்றிடையே உடன்பாட்டுப் புள்ளிகளின் அவசியம் இன்று வரைக்கும் இருக்கின்றன.

அதேநேரம் இவற்றில் இன்னும் புதிய விடயங்கள் சேர்க்கப்பட முடியுமா? எனின் தாராளமாக சேர்க்கப்பட முடியும். இமாம் ஹஸனுல் பன்னாவின் தரத்தில் அமைகின்ற ஒரு இஜ்திஹாத் அல்லது புதிய சேர்க்கையொன்று  ஒரு போதும் மறுதலிக்கப்பட மாட்டாது. அதேபோல் இருபது அடிப்படைகளையும் உள்ளடக்கி,  புதிய கோணத்தில் அடிப்படைகள் முன்வைக்கப்படுவதும் வரவேற்கத்தக்கதேயாகும்.

இதுபோன்ற பல முயற்சிகள்,  புதிய இஜ்திஹாதுகள் இன்று நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஷெய்க் கஸ்ஸாலியின் முயற்சி இந்த வகையில் முன்னோடியானது என்று கூறலாம். கலாநிதி யூஸுப் கர்ளாவியின் பிக்ஹுல் வஸதிய்யா அல் இஸ்லாமிய்யா வத்தஜ்தீத் எனும் நூல் இந்தத் துறையில் ஒரு புதிய முயற்சி. அதில் கலாநிதி கர்ளாவி அவர்கள் முப்பது அடிப்படைகள் குறித்துப் பேசுகிறார்கள். அது உஸுல் இஷ்ரூன் பேசும் கருத்துக்களையும் உள்வாங்கிய வகையில் புதிய கோணத்தில் அமைந்த ஒரு தொகுப்பாகும்.

அதுபோல் குவைத்திய சகோதரர்களது மற்றுமொரு முயற்சியைக் காணலாம். அவர்கள் பல்துறைசார் அறிஞர்களை ஒன்றுதிரட்டி குவைத்தின் தஃவாக் களத்தை இணைக்கும் சிந்தனைப் புள்ளிகளை தொகுத்துத் தந்திருக்கிறார்கள். அது முப்பத்து ஆறு அடிப்படைகளைக் கொண்டது.

நவீன காலம் பல்வேறு மாற்றங்களைக் கண்டிருக்கிறது என்றவகையில் சிந்தனை மரபுகளில் புதிய இஜ்திஹாதுகள்,  புதிய அணுகுமுறைகள்,  புதிய விதிகள் தோன்றுவதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில்,  மாற்றம் என்பது செழுமை,  மாற்றம் என்பது அபிவிருத்தி,  மாற்றம் என்பது வளர்ச்சி.

ஆனால் ஒரு விடயத்தில் நாம் தெளிவுடன் இருத்தல் வேண்டும். இருபது அடிப்படைகளின் மையமாக இருக்கின்ற இஸ்லாத்தின் முழுமை,  நடு நிலைமை,  உடன்பாட்டுப் புள்ளிகள்,  பொது இலக்கு நோக்கிய பயணம்,  உழைப்பு,  உம்மத்தாய் எழுந்து நிற்றல்,  மனித இனத்தின் விமோசனம் போன்ற அடிப்படை விழுமியங்கள் மறக்கப்படவோ இல்லாமல் செய்யப்படவோ கூடாது. இந்தப் பெறுமானங்களை நிலை நாட்டும் வகையில் எத்தனை புதிய அடிப்படைகளும் தோன்றலாம். அதில் தவறேயில்லை. அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.

No comments:

Post a Comment