Tuesday, July 14, 2015

ரமழானின் இறுதி நாட்களும் ரமழானுக்குப் பின்னரும்

செய்தி 01

நபியவர்கள் கூறினார்கள் : செயல்கள் அதனுடைய இறுதி நிலையை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன” (அஹ்மத், புஹாரி). இந்த ஹதீஸ் எமக்கு சொல்லும் செய்தி என்ன? எமது எந்த செயலாக இருந்தாலும் அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்தவித சோர்வும் தளர்வும் இன்றி நடைபெறல் வேண்டும். ஒன்றை ஆரம்பிக்கும் போது காணப்படும் உற்சாகம் இறுதியில் குன்றிவிடவோ அற்றுப் போய்விடவோ கூடாது. 

இது குறித்த ஒரு செயலுக்கு மாத்திரமான ஒரு விதியல்ல,  முழு மனித வாழ்வுக்கும் கூட இந்த விதி பொருந்துகிறது என்பதைத்தான் நபியவர்களது கீழ்வரும் துஆ எங்களுக்குச் சொல்கிறது. யா அல்லாஹ் எனது ஆயுளின் சிறந்த காலமாக அதன் இறுதிப் பகுதியை ஆக்கி விடு, எனது செயல்களின் சிறந்த பகுதியாக அதன் கடைசியை அமைத்துவிடு,  எனது வாழ்நாளின் சிறந்த நாட்களாக உன்னை நான் சந்திக்கும் நாட்களை அமைத்து விடுஎன்றார்கள் (இப்னுஸ் ஸ{ன்னி)

எமது வாழ்வின் எந்தக் கட்டத்திலும், எமது செயற்பாடுகளின் எந்த இடத்திலும் நாம் நம்பிக்கையிழந்து விடக்கூடாது. ஒரு செயலின் சரி பிழையை இடைநடுவில் தீர்மானிப்பதைவிடவும்,  முழுமையாக நிறைவேற்றியதன் பின்னர் அதன் சரி பிழைகள் பற்றிப் பேசுவது மிகவும் பொருத்தமாக இருக்கும். இது தொடர்ந்த உழைப்பை வலியுறுத்துகிறது. இறுதிவரை நம்பிக்கையிழக்காமையையும் கைவிடாமையையும் போதிக்கிறது.

இந்த உண்மைகளே ரமழானிலும் வலியுறுத்தப்படுகின்றன. ரமழானின் இருபத்தி ஏழாம் இரவு கடந்து விட்டால் ரமழர்னே முடிந்துவிட்டது என்பது போன்ற மன நிலைக்கு பலர் வந்து விடுகிறார்கள். அது தவறானது என்பதை மேற்சொன்ன ஹதீஸ்கள் குறிக்கின்றன. மாத்திரமன்றி,  மற்றொரு ஹதீஸ் குறிப்பாக இவ்வாறு சொல்கிறது ரமழானின் கடைசி இரவில் லைலதுல் கத்ரை எதிர்பாருங்கள்” (ஸஹீஹுல் ஜாமிஃ) என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே ரமழானின் இறுதி நாள் வரை நாம் ஓய்ந்து விடக்கூடாது. அல்லாஹ்தஆலா ஒரு செயலின் சிறப்பை அதன் கடைசித் தருணம் வரையில் வைத்திருக்கிறான். இதன் காரணமாகத்தான் உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் எல்லா நகரங்களுக்கும்,  ரமழானை இஃதிபாரின் மூலமும் ஸதகாவின் மூலமும் நிறைவு செய்யுமாறு கட்டளை அனுப்புவார்கள். மேலும் ஆதம் (அலை) அவர்கள் கேட்ட துஆவையும் (அஃராப் - 23) நூஹ் (அலை) அவர்கள் கேட்ட துஆவையும் (ஹுத் - 47) இப்றாகீம் (அலை) அவர்கள் கேட்ட துஆவையும் (ஷுஅரா – 82) மூஸா (அலை) அவர்கள் கேட்ட துஆவையும் (கஸஸ் - 16) துந்நூன் கேட்ட துஆவையும் (அன்பியா – 87) அந்நாட்களில் கேளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்கள். (பைஹகீ)

எனவே,  ரமழானின் கடைசி நிமிடம் வரையில் தளர்வின்றி,  உச்சபட்ச உற்சாகத்துடன் அதனைப் பயன்படுத்த உறுதி கொள்வோம்.

செய்தி 02

அலி (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள் : ஒரு செயலை நல்ல முறையில் செய்வதில் அதிக கவனம் செலுத்துவது போல், அது ஏற்றுக் கொள்ளப்படுமா? என்பதில் அதைவிடவும் கவனம் செலுத்த வேண்டும். அல்லாஹ்தஆலா கூறுவதைக் கேட்கவில்லையா? அல்லாஹ்தஆலா தக்வா உள்ளவர்களிடமிருந்தே செயல்களை ஏற்கிறான். - மாயிதா – 27 -, (இப்னு அபித்துன்யா)

எனவே, ஒரு செயலை சம்பூரணமாக நிறைவேற்றுதல் என்பது ஒரு விடயம். அது ஏற்றுக் கொள்ளப்படுதல் என்பது மற்றொரு விடயம். அல்லாஹ்தஆலா ஒருவனது செயல்களை ஏற்றுக் கொண்டு விட்டானா? இல்லையா? என்பது மனித அறிவால் தீர்மானிக்க முடியாத ஒரு விடயம் என்றிருந்தாலும் அதன் குறைந்தபட்ச ஒரு அடையாளமாக அந்த செயலின் ஊடாக பெற்றுக் கொண்ட தர்பியத்,  பெற்றுக்கொண்ட பயன் ஒருவனிடத்தில் நீண்டு நிலைத்திருக்கும் எனின்,  அது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.

இக்கருத்து புலப்படும் வகையிலேயே நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள். அறிந்து கொள்ளுங்கள் உங்களுடைய செயல்கள் மாத்திரம் உங்களை சுவர்க்கத்திற்கு எடுத்துச் செல்வதில்லை. அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் அது குறைவாக இருந்தாலும் தொடர்தேர்ச்சியாக செய்து வருவதாகும்என்றார்கள். (புஹாரி)

எனவே,  ரமழானில் எடுத்துக் கொண்ட பயிற்சிகள்,  பெற்றுக் கொண்ட பயன்கள்,  அவை பண்புகளில் ஏற்பட்ட மாற்றங்களாக இருக்கலாம்,  நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றங்களாக இருக்கலாம்,  இபாதத்களில் ஏற்பட்ட அதிகரிப்பாக இருக்கலாம். ரமழானுக்குப் பின்னர் இவை முற்றுப் பெற்று விடக்கூடாது. 

மேற்கூறிய ஹதீஸ் கூறும் கருத்துப்படி வெறுமனே ஒரு செயல் மாத்திரம் அல்லது ஒரு சந்தர்ப்பத்தின் செயல் மாத்திரம் எம்மை சுவர்க்கத்திற்கு எடுத்துச் செல்லப் போதுமானதல்ல. மாற்றமாக அவை ஒரு தொடர்பழக்கமாக,  தொடர் நடத்தையாக எங்களிடத்தில் மாற்றம் காணுகின்ற பொழுதே நாம் சுவர்க்கத்திற்குத் தகுதியானவர்களாக மாறுகிறோம். எனவே,  ரமழான் தொடக்கி வைத்திருக்கிறது. அவை தொடரும் வண்ணம் நன்கு பயிற்றுவிக்கப்பட்டும் இருக்கின்றன. ஏனைய காலங்களில் அவை அன்றாட வாழ்வின் நிகழ்வுகளாக மாற வேண்டும்.

அல்குர்ஆன் சொல்லும் ஒரு உதாரணத்தைப் பாருங்கள்,  உறுதியான உடன்பாட்டுக்கு வந்த பின்னர் தானே அதனை முறித்து விடும் நிலையை மக்காவில் வாழ்ந்த ரைதா பின்த் ஸஃத் என்ற ஒரு பெண்ணின் செயலை உதாரணமாகக் குறிப்பிட்டு அல்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. தனது பின்னல்களை மிகவும் பலமாகப் பின்னியதன் பின்னர் தானே அவற்றை அவிழ்த்துப் போடும் அந்தப் பெண்ணை போல் நீங்களும் இருந்துவிடாதீர்கள்” (நஹ்ல் - 92)

ஒரு பலமான நிலையை அடைந்து கொள்ளும் போது அதனை தொடர்ந்து கொண்டு செல்லுதல் அல்லது அதனை விடவும் மேலே செல்லுதல் என்பது தான் சாதாரண மனிதப் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும் உண்மை. இதனை விடுத்து பலப்படுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தான் கட்டியதை தானே உடைத்து மீண்டும் பூச்சியத்தில் இருந்து செல்ல நினைப்பது என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதையே இந்த வசனம் குறிப்பிடுகிறது.

இக்கருத்து ரமழானுக்கும் மிகவும் பொருந்துகிறது. ரமழான் எங்களுக்கு மிகப்பெரிய ஒரு தர்பிய்யத். எங்களது ஆன்மாவை அது பலப்படுத்துகிறது. அல்லாஹ்வுடனான நெருக்கத்தைப் பலப்படுத்துகிறது. எங்களது செயல்களைப் பலப்படுத்துகிறது. எமது உள்ளார்ந்த சக்தியைப் பலப்படுத்துகிறது. எம்மில் எத்தனையோ நல்ல பழக்கங்களை உருவாக்குகிறது. எத்தனையோ இபாதத்களை விதைக்கிறது. இவை அனைத்தும் மிகப் பெரிய பலங்கள். ரமழானுக்குப் பிந்திய நாட்களில் இவற்றை அஸ்திவாரமாகக் கொண்டுதான் நாம் கட்டடம் அமைக்கப் போகிறோம். இப்பொழுது ஒருவன் அந்த அஸ்திவாரத்தையே சிதைத்து விடுகிறான் என்றால் அவன் எத்தகையவன்? இந்தத் தவறை நாம் ரமழானிற்குப் பின்னர் செய்யக் கூடாது.


ரமழானில் பெற்ற பயிற்சிகள் பயனற்றுப் போகின்றன என்றால்,  அமல்கள் சடுதியாக வீழ்ச்சி காணுகின்றன என்றால் எமது அஸ்த்திவாரம் ஆட்டம் காணுகிறது என்று பொருள். இப்பொழுது அதன் மீது நாம் கட்டடம் கட்ட முடியாது. எனவே,  ரமழானின் மிகச் சரியான நோக்கத்தை நாம் அடைந்து கொள்வது என்பது,  அதன் பின்னர் எமது செயல்கள் தொடர்ந்தும் உயிருடன் காணப்படுவதன் மூலமே நடைபெறுகிறது. அல்லாஹ்தஆலா அந்தப் பாக்கியத்தை எம் அனைவருக்கும் தர வேண்டும் என்று கேட்டு விடை பெறுகிறேன்.

No comments:

Post a Comment