Friday, July 31, 2015

ஸாலிஹான வாழ்க்கைத் துணையை அடைந்து கொள்ளும் வழிகள்

துணையைத் தேடுதல் விடயத்தில் ஒரு முக்கிய ஆன்மீகப் பெறுமானம் குறித்து கடந்த அமர்வில் கலந்துரையாடினோம். ஸாலிஹான துணையை அடைந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் தானும் ஸாலிஹான ஒருவராக வாழுவது முக்கியமானது. அப்பொழுதே தனக்குரிய துணையும் அதேபோன்று ஸாலிஹான ஒருவராக அமைவார். இது அல்லாஹ்வின் விதி. இதன் அடிப்படையிலேயே சோடி சேர்த்தல் நடைபெறுகிறது.

இது ஒரு வாழ்வியல் விதி என்ற வகையில் ஸாலிஹான வாழ்க்கைத் துணையை அடைந்து கொள்ள விரும்பும் ஒருவர் பிரதானமாகக் கவனம் செலுத்த வேண்டிய சில வாழ்வியல் நடவடிக்கைகள் குறித்து இன்றைய அமர்வில் கலந்துரையாடலாம் என நினைக்கிறோம்.

அந்த வாழ்வியல் நடவடிக்கைகள் குறித்து பேச முன்னர் முக்கியமான ஒரு கருத்தை நாம் புரிந்து கொள்வது பொறுத்தமானது. நபியவர்கள் கூறியது போல் ஒரு மனிதன் தனது தாயின் கருவறையில் இருக்கும்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரூஹ் வழங்குவதற்காக வருவார்கள். அப்போது அவனது நான்கு விடயங்கள் எழுதப்பட்டு விடுகின்றன. அவனது ரிஸ்க், ஆயுள், செயல்,  அவன் சுபீட்சமாக வாழ்பவனா? கஷ்டத்துடன் வாழ்பவனா? (புஹாரி,  முஸ்லிம்)

இந்த ஹதீஸ் குறிப்பிடும் ரிஸ்க் என்ற சொல் இமாம்களின் பொதுவான விளக்கத்தின்படி,  மனித வாழ்வின் அனைத்து வசதிகளையும் சந்தோஷங்களையும் குறித்து நிற்கின்றது. எனவே,  திருமணம்,  ஸாலிஹான துணை, குடும்ப அமைதி, நல்ல பிள்ளைகள் என்ற அனைத்துக் கருத்துக்களையும் ரிஸ்க் என்ற சொல் உள்ளடக்கியிருக்கிறது.

அத்துடன், இந்த ரிஸ்க் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் மனித நடத்தை நிர்ணயிக்கப்பட்ட ரிஸ்கில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ரிஸ்க் அதிகரிப்பதோ அல்லது குறைவடைவதோ நல்ல விளைவைத் தருவதோ அல்லது தீய விளைவைத் தருவதோ மனிதனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையிலான உறவு சீராக அமைவதிலும்,  அவனது நடத்தைகள் சீராக அமைவதிலும் தங்கியிருக்கின்றன. 

நபியவர்களது கீழ்வரும் ஹதீஸ் இந்தக் கருத்தை வலிமொழிகிறது. எவரது நோக்கம் மறுமையாகக் காணப்படுகிறதோ, அல்லாஹ்தஆலா அவரது முயற்சியை ஒன்று திரட்டுவான். உள்ளத்தில் திருப்தியை ஏற்படுத்துவான். அவர் எதிர்பார்க்காத போதும் உலகம் அவரைத் தேடி வரும். எவரது நோக்கம் உலகமாக இருக்கிறதோ அவரது தேடல்களை அல்லாஹ் சிதரடித்து விடுவான். வறுமை அவர் கண் முன்னே தெரிந்து கொண்டேயிருக்கும். வரையறுக்கப்பட்ட அளவு மாத்திரமே அவருக்கு உலகம் கிடைக்கும்” (அஹ்மத்) மற்றோர் அறிவிப்பில்,  “உலகை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படுபவன் எந்தப் பாதாளத்தில் விழுந்து அழிந்தாலும் அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான்என்றார்கள். (இப்னுமாஜா)  

ஸாலிஹான துணையை அடைந்து கொள்வதற்கான சில வாழ்வியல் நடவடிக்கைகள்

1. தக்வா எனும் இறையச்சம் : அல்குர்ஆன் கூறுகிறது யார் அல்லாஹ்வைப் பயந்து கொள்கிறாரோ அவருக்கு முன்னால் எல்லா வாயில்களும் திறந்து விடப்படுகின்றன. அவன் எதிர்பாராத புறத்திலிருந்து அவனுக்கு ரிஸ்க் வழங்கப்படுகிறது…” (தலாக் 2,3) 

இறையச்சம் மனித வாழ்வின் தடைகளை நீக்கி விடுகிறது. எதிர்பாராத வகையில் அவனது வாழ்வைச் செழிப்படையச் செய்கிறது என்று இந்த வசனம் சொல்கிறது. இங்கு இறையச்சத்திற்கும் ரிஸ்கிற்குமிடையிலான நேரடித் தொடர்பு தெளிவாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஸாலிஹான துணை ஒரு மிகச் சிறந்த ரிஸ்க்காகும்.

தக்வா என்பது ஒரு உளச்செயல். தனக்கு தீங்கு ஏற்படாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வையே தக்வா என்போம். அல்லாஹ்வின் கட்டளைகள் அனைத்தும் மனிதனுக்கு நன்மை விளைவித்து அவனைத் தீங்கிலிருந்து காப்பாற்றும் வகையிலேயே அமைந்துள்ளன. அதனால்தான் பல இமாம்கள் தக்வாவை வரைவிலக்கணப்படுத்தும்போது அல்லாஹ் ஏவியவற்றை ஏற்று நடத்தலும் விலக்கியவற்றை தவிர்ந்து கொள்ளுதலும் என்றார்கள்.

2. துஆ : நபியவர்கள் கூறினார்கள் நிர்ணயிக்கப்பட்ட விடயங்கள் துஆவின் மூலம் மாற்றமடையும்என்றார்கள் (திர்மிதி). துஆ ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். கழா கத்ரில் மாற்றம் செய்யும் சக்தி அதற்கிருக்கிறது. அதனால்தான் நபியவர்கள் துஆ ஒரு முஃமினின் ஆயுதம்என்றார்கள் (ஹாகிம்). எனவே,  சிறந்த வாழ்க்கைத் துணையை அடைந்துகொள்ள விரும்புகின்றவர்கள் இடையறாது கடைப்பிடிக்க வேண்டிய ஒரு அமல் இது.

அதிலும் குறிப்பாக சிறப்புக்குரிய சில பொழுதுகள் காணப்படுகின்றன. அவற்றில் குறிப்பாக எங்கள் தேவைகளை முன்னிறுத்தி துஆச் செய்கின்ற பொழுது அல்லாஹ்தஆலா அவற்றை உடனடியாக நிறைவேற்றுவான். உதாரணமாக ஸஹர் நேரம்,  ஸுப்ஹுக்குப் பிந்திய நேரம்,  மஃரிபுக்கு முந்திய நேரம்,  ஜும்ஆ தினம்,  ரமழான் மாதம்,  லைலதுல் கத்ர்,  நோன்பு திறக்கும் நேரம்,  துல்ஹஜ் முதல் பத்து நாட்கள் போன்ற பல விஷேட சந்தர்ப்பங்கள் ஹதீஸ்களில் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பங்களை குறிப்பாக எமது விஷேட துஆக்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக கீழ்வரும் ஹதீஸைப் பாருங்கள்.

நபியவர்கள் கூறினார்கள் இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ்தஆலா முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான். வந்து சொல்கிறான் என்னிடம் கேட்பவர்கள் இருக்கிறீர்களா? நான் அவர்களுக்கு வழங்குவேன். என்னை அழைப்பவர்கள் இருக்கிறீர்களா? நான் அவர்களுக்குப் பதில் தருவேன். என்னிடம் பாவமன்னிப்புக் கேட்பவர்கள் இருக்கிறீர்களா? நான் அவர்களது பாவங்களை மன்னிப்பேன் என்று பஜ்ர் உதயமாகும் வரை கேட்டுக் கொண்டே இருப்பான்என்றார்கள். (புஹாரி)

துஆக் கேட்கும் பொழுது,  உங்களுக்காக மாத்திரமன்றி எப்பொழுதும் பிறருக்காகவும் துஆக் கேட்பதை வழமையாக்கிக் கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் அறிந்த உங்கள் நெருங்கியவர்கள்,  ஸாலிஹான துணையை எதிர்பார்த்திருப்பவர்கள் இவர்களை உங்கள் துஆக்களில் மறந்து விடாதீர்கள். நபியவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்காக அவனுக்குத் தெரியாமல் துஆச் செய்கின்ற பொழுது அந்த துஆ ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அவன் தனது சகோதரனுக்காக துஆச் செய்யும் பொழுது அவனுக்குப் பொறுப்பாக இருக்கும் மலக்கு ஆமீன் உனக்கும் அது போன்றே கிடைக்கட்டும் என்று துஆச் செய்யும்என்றார்கள். (முஸ்லிம்)

3. இரவுத் தொழுகை : நபியவர்கள் கூறினார்கள் பர்ளான தொழுகைகளுக்கு அடுத்ததாக மிகவும் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” (முஸ்லிம்) என்றார்கள். இரவுத் தொழுகை என்பது பிறர் பார்வைகள் விழாது ஒரு மனிதன் அல்லாஹ்வுடன் தனித்து உறவாடும் ஒரு சந்தர்ப்பம். மனிதனுடைய வாழ்வில் இது போன்ற ஒரு தருணம் மிகவும் முக்கியமானது. அல்லாஹ்வின் முன்னால் மண்டியிட்டு கண்ணீர் விட்டு தனது தேவைகளை முன்வைப்பதற்கான அறிய வாய்ப்பு.

இரவுத்தொழுகை ஒரு மனிதனின் உள்ளத்தில் உறுதியை ஏற்படுத்துகிறது. உத்வேகத்தை அளிக்கிறது. ஒன்றை அடைந்து கொள்ளும் வேகத்தைக் கொடுக்கிறது. பொதுவாக தொழுகை ஒரு மனிதனுக்குரிய ரிஸ்க்கை அதிகரிப்பதாக அல்குர்ஆன் கூறுகிறது உங்களது குடும்பத்தை தொழுமாறு ஏவுங்கள். அந்த விடயத்தில் பொறுமையுடன் நடந்து கொள்ளுங்கள். உங்களிடத்தில் நாம் ரிஸ்க்கை எதிர்பார்க்கவில்லை. நாம்தான் உங்களுக்கு ரிஸ்க் அளிக்கிறோம். தக்வாவின் படியே இறுதி விளைவு காணப்படும்” (தாஹா 132)

இந்த வசனம் குடும்பத்தின் உள்ளே தொழுகை என்ற வணக்கம் குடும்பமாக இணைந்து மேற்கொள்ளப்படல் வேண்டும். பரஸ்பர ஆர்வமூட்டலும்,  ஏவலும் காணப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இது போன்றதொரு ஆன்மீகச் சூழல் அங்கு காணப்படுகின்ற பொழுது அதன் விளைவாக அல்லாஹ்வின் ரிஸ்க் அந்தக் குடும்பத்தில் தாராளமாகக் கிடைக்கப் பெறுகின்ற நிலை உருவாகும் என்பதை இந்த வசனம் குறித்துக் காட்டுகிறது. ஸாலிஹான துணை என்பது அல்லாஹ் தருகின்ற பெறுமதிமிக்க ஒரு ரிஸ்க். அதனை தொழுகை என்ற அமல் அதிலும் குறிப்பாக இரவுத் தொழுகை எங்களுக்குப் பெற்றுத் தருகிறது.

4.  பாவங்களை விட்டும் தூரமாகுதல் :  நபியவர்கள் கூறினார்கள் ஒரு அடியானுக்குரிய ரிஸ்க் அவன் செய்யும் பாவத்தின் காரணமாக அவனுக்கு தடை செய்யப்படுகிறதுஎன்றார்கள் (அஹ்மத்) பொதுவாகப் பாவங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் செழிப்பை இழக்கச் செய்கின்றன. பரகத்தை இல்லாமல் செய்து விடுகின்றன. அந்தக் கருத்தையே மேற்சொன்ன ஹதீஸ் குறிப்பதாக இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஸாலிஹான வாழ்க்கைத் துணை ஒரு சிறந்த ரிஸ்க். அதனைப் பெற்றுக் கொள்ள விரும்பும் நீங்கள் முடிந்தவரை பாவங்களை விட்டு ஒதுங்கியிருங்கள். பாவங்கள் அதிகரிக்கும்போது நாம் அல்லாஹ்வை விட்டும் தூரமாகிக் கொண்டே செல்வோம். பாவங்கள் குறைகின்ற பொழுது தான் அவனது உதவி எமக்குக் கிடைக்கின்றது.

5.  ஸதகா செய்தல் : நபியவர்கள் கூறினார்கள் உங்களுக்கான ரிஸ்க்கை ஸதகாவின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்என்றார்கள் (பைஹகீ). ஸதகா எப்பொழுதும் மனித வாழ்வில் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறது. அது ஒரு முதலீடு. ஸதகா ஒரு போதும் நஷ்டத்தை ஏற்படுத்த மாட்டாது. இது ஸதகாவின் பொதுவான விளைவு. இந்த ஹதீஸ் குறிப்பிடுவது போல் எமது வாழ்வின் எல்லா வகையான ரிஸ்க்கையும் ஸதகா எம்மிடத்தில் கொண்டு வந்து சேர்க்கின்றது. அந்தவகையில் ஸாலிஹான துணையையும் நிச்சயமாக அது கொண்டு வந்து சேர்த்துவிடும்.

6.  நபிலான வணக்கங்களில் ஈடுபடல் : நபியவர்கள் கூறினார்கள் “… எனது அடியான் நபிலான வணக்கங்கள் மூலம் தொடர்ந்தும் என்னை நெருங்கி வருகிறான். அப்போது அவன் எனது அன்புக்குரியவனாக மாறிவிடுகிறான். அப்போது அவனது கேட்கும் செவியாய் நான் இருப்பேன். பார்க்கும் கண்ணாய் நான் இருப்பேன். அவன் செயற்படும் கையாய் நான் இருப்பேன். நடக்கும் காலாய் நான் இருப்பேன். அவன் என்னிடத்தில் கேட்டால் உடனே கொடுத்து விடுவேன். என்னிடத்தில் பாதுகாப்புத் தேடினால் உடனே பாதுகாப்பளித்து விடுவேன்என்றார்கள். (புஹாரி)

இதுதான் நபிலான வணக்கங்களின் விளைவு. இவற்றின் மூலம் அவன் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவனாக மாறி விடுகிறான். அந்த நெருக்கத்தின் காரணமாக வாழ்வின் எல்லா விடயங்களும் அவனுக்கு இலகுவானவையாக மாறி விடுகின்றன. எந்த விடயத்தையும் இலகுவில் அடைந்து கொள்வான். எந்தக் கஷ்டமும் இலகுவில் நீங்கி விடுகின்றது. இந்த நிலையில் வாழும் ஒரு மனிதனின் வாழ்க்கைத் துணை நிச்சயமாக அவனது வாழ்வை அமைதியாலும் சந்தோஷத்தாலும் நிரப்பி விடும் ஸாலிஹான ஒருவராகவே அமைவார்.

7.  பெற்றோருக்கு உபகாரம் செய்தலும் உறவுகளை இணைந்து நடத்தலும்:
நபியவர்கள் கூறினார்கள் : தனது ஆயுள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும்,  தனது ரிஸ்க் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் யார் விரும்புகிறாரோ அவர் தனது பெற்றோருக்கு உபகாரம் செய்யட்டும். தனது உறவுகளை இணைந்து நடக்கட்டும்என்றார்கள். (அஹ்மத்)

குடும்ப வாழ்வு தொடர்பான ஒரு அடிப்படைப் பெறுமானத்தை இந்த ஹதீஸ் பேசுகிறது. பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுதலும்,  குடும்ப உறவுகளுடன் இணைந்த வாழ்வும். இந்த வாழ்வு முறைக்கு ஒரு எதிர் விளைவு இருக்கிறது. அது அந்த மனிதனது ஆயுளிலும் ரிஸ்க்கிலும் சாதகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே,  ரிஸ்க்கில் ஒரு அதிகரிப்பு ஏற்படுகிறது என்பதன் பொருள் அவனது வாழ்வின் எல்லாப் புறங்களிலும் சாதகமான மாற்றம் நிகழ்கிறது என்பதாகும். அந்தவகையில் வாழ்க்கைத் துணை என்ற விடயத்திலும் நிச்சயமாக சாதகமான விளைவே ஏற்படும்.

8.  உண்மையான தேடல் : நபியவர்கள் கூறினார்கள் “…யார் ஒரு நல்ல விடயத்தை அடைந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஈடுபாட்டுடன் உழைக்கிறாரோ அது அவனுக்குக் கிடைத்து விடுகிறது. யார் ஒரு தீங்கை தவிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன் செயற்படுகிறாரோ அதனை விட்டும் அவன் பாதுகாக்கப்படுகிறான்என்றார்கள் (தாரகுத்னி). இங்கு உண்மையான தேடலுக்கு அல்லாஹ்வின் உதவி இருக்கிறது என்று ஹதீஸ் வலியுறுத்துகிறது. அந்தவகையில் ஸாலிஹான துணையை அடைய வேண்டும் என்ற உண்மையான எண்ணமும் அதற்கான முயற்சியும் உள்ள போது அல்லாஹ் எமக்கு அதனை நிச்சயமாக அடையச் செய்வான்.

மேற்கூறப்பட்டவை சில உதாரணங்கள் மாத்திரமே. ஸாலிஹான வாழ்க்கைத் துணையை அடைந்து கொள்வது என்பது வெறுமனே ஒரு பௌதீக முயற்சி மாத்திரமல்ல மாற்றமாக அது ஒரு ஆன்மீக முயற்சியுமாகும். பௌதீக ரீதியான முயற்சியின் மூலம் நிச்சயமாக ஒரு துணை கிடைப்பார். ஆனால் ஸாலிஹான துணை என்பதற்கான உத்தரவாதம் அங்கு இருக்கமாட்டாது. எனவே,  ஸாலிஹான துணைக்கான உத்தரவாதம் மேற்குறிப்பிட்டது போன்ற ஆன்மீக ரீதியான வாழ்வியல் நடவடிக்கைகள் மூலமே சாத்தியப்படுகிறது.


அல்லாஹ் எம் அனைவரையும் அங்கீகரிப்பானாக. 

No comments:

Post a Comment