Tuesday, September 1, 2015

வஸதிய்யா எனும் நடு நிலை - ஒரு சமூக எழுச்சிப் பாதை

வஸதிய்யா என்பது இன்றைய தஃவாக் களத்தின் ஆகர்ஷணமிக்க ஒரு சொற்பிரயோகம், எல்லோரும் பயன்படுத்துகின்ற ஒரு சொற்பிரயோகம் மாத்திரமன்றி பல்வேறு சமூகப் பிரச்சினைகளின்போது தீர்வாக அமைந்த ஒரு நிலைப்பாடாகவும் இது காணப்படுகிறது. 

பல சமயங்களில் நடு நிலைவாதிகள் அல்லது நடு நிலை தஃவாக்கள் விமர்சிக்கப்படுவதை நாம் அவதானிக்கிறோம். அந்த விமர்சனங்களில் மறைந்து நிற்கும் ஆதங்கங்களைப் பார்க்கின்ற பொழுது,  அவர்கள் மிகப் பெரும்பாலும் வஸதிய்யா அல்லது நடு நிலை என்பதை ஒரு சூழ்நிலையை சமாளிப்பதற்கான பொறிமுறையாகப் புரிந்து கொண்டிருப்பதைக் காணலாம். அல்லது வஸதிய்யாவைப் பிரயோகிப்பவர்களும் சில சமயங்களில் ஒரு சமாளிப்புப் பொறிமுறையாக மாத்திரம் வஸதிய்யாவைக் கையாழ்வதைக் காணலாம். இது வஸதிய்யா குறித்த எதிர் மனப்பான்மை ஒன்று கட்டியெழுப்பப்பட காரணமாக அமைய முடியும். 

உண்மையில் வஸதிய்யா என்பதன் கோட்பாட்டுப் பொருள்,  சிலர் ஊடாக நடைபெறும் அதன் பிரயோகத் தவறுகளுக்கு அப்பாற்பட்டது. வஸதிய்யா என்பது இஸ்லாத்தின் ஓர் உயிர்ப் பெறுமானம் சமூக எழுச்சியின் மையம் என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டும்.

அந்தவகையில் வஸதிய்யா எனும் நடு நிலை என்பதன் பிரதானமான கருத்துக்கள் குறித்து இந்தக் கட்டுரை ஆராய்கிறது.

வஸதிய்யா எனும் அறபுப்பதம் குறிக்கும் மொழி ரீதியான பரிபாஷை ரீதியான கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஐந்து பிரதானமான கருத்துக்களில் வஸதிய்யா என்பது பயன்படுத்தப்படுகிறது.

முதலாவது இரண்டு விடயங்களுக்கு நடுவில் இருக்கின்ற ஒன்று,  அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பல விடயங்களுக்கு நடுவில் இருக்கின்ற ஒன்று என்ற கருத்தில் மொழியில் வஸதிய்யா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இங்கு நடுவில் இருத்தல் என்பது பௌதீக ரீதியான இருத்தல்,  கருத்து ரீதியான இருத்தல் ஆகிய இரண்டையும் குறிக்கும். அல்குர்ஆன் கூறுகிறது அவ்வாறே நாம் உங்களை மத்திம சமூகமாக அமைத்தோம். நீங்கள் மக்களுக்கு சாட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், ரஸுல் (ஸல்) அவர்கள் உங்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்” (பகரா – 143). ஷஹீத் செய்யத் குத்ப் அவர்கள் இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும்போது இந்த உம்மத் அதன் ஒழுங்கமைப்பு, சிந்தனை,  உணர்வு,  கொள்கை,  நம்பிக்கை,  தொடர்புகள்,  காலம்,  இடம் அனைத்திலும் மத்திம தன்மையைப் பேணுகிறது என்றார்கள்.

இமாம் இப்னுல் அசீர் அவர்கள் இது குறித்துக் கூறுகையில் போற்றத்தக்க ஒவ்வொரு நல்ல பண்புக்கும் கண்டிக்கத்தக்க இரண்டு தீவிர நிலைகள் இருக்கின்றன. கொடை என்பது கஞ்சத்தனத்திற்கும் ஊதாரித்தனத்திற்கும் நடுவில் இருக்கும் பண்பாகும். துணிச்சல் என்பது கோழைத்தனத்திற்கும் அசட்டுத்தனத்திற்கும் மத்தியில் இருக்கும் பண்பாகும். கண்டிக்கத்தக்க பண்புகளைத் தவிர்ந்து வாழுமாறுதான் மனிதன் கேட்டுக் கொள்ளப்படுகிறான். கண்டிக்கத்தக்க பண்புகளை விட்டும் தூரமாகும் அளவுக்கு அவன் நடுநிலைப் பண்புக்கு நெருக்கமானவனாக இருப்பான்என்றார்கள்.

அல்குர்ஆன் இந்த சிந்தனையை மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது. அவர்கள் செலவு செய்யும் போது வீண்விரயம் செய்யவும் மாட்டார்கள். முற்றாகத் தவிர்ந்து கொள்ளவும் மாட்டார்கள். இவை இரண்டுக்கும் மத்தியில் சீராக நடந்து கொள்வார்கள்.” (புர்கான் 67) என்று அருளாளனின் அடியார்கள் குறித்து அல்குர்ஆன் கூறுகிறது. மற்றோர் இடத்தில் உனது கைகளை கழுத்தை நோக்கிக் கட்டிக் கொள்ளவும் வேண்டாம். அவற்றை முழுமையாக விரித்து விடவும் வேண்டாம். அதனால் கண்டனமும் கைசேதமும் மாத்திரமே எஞ்சும்” (இஸ்ராஃ - 29) என்றது.

எனவே வஸதிய்யா என்பதன் முதலாவது கருத்து இரண்டு கோணங்களைத் தவிர்த்து நடுவில் ஒரு நிலைப்பாட்டைக் கொள்ளுதல் என்பதாகும். நடு நிலை என்றவுடனேயே உடனடியாகப் புரிந்து கொள்கின்ற கருத்து இதுதான். மாத்திரமன்றி அதிகமானவர்களின் நடு நிலைப் பிரயோகங்களும் இந்த வடிவையே பிரதிபளித்து நிற்கின்றன.

இனி,  வஸதிய்யா என்பதன் இரண்டாவது கருத்துக்கு வருவோம். வஸதிய்யா என்பது மிகவும் சிறந்தது மிகவும் உயர்ந்தது என்ற கருத்திலும் பயன்படுத்தப்படுகிறது. அறபுமொழியில் வஸத்என்ற சொல் பரவலாக இந்தக் கருத்தில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். ஏற்கனவே குறிப்பிடப்பட்ட நாம் உங்களை மத்திம சமூகமாக அமைத்தோம்என்ற வசனத்திற்கு இமாம் தபரி அவர்கள் விளக்கமளிக்கும் போது,  “வஸத் என்பது அறபு மொழியில் சிறந்தது என்ற கருத்தைத் தருகிறது. ஒருவரது பரம்பரையை உயர்ந்த பரம்பரை என்று குறிப்பிட விரும்பினால் அறபிகள் வஸத் என்ற சொல்லையே அதற்காகப் பயன்படுத்துவார்கள்என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் கருத்திலேயே நபியவர்கள் விடயங்களில் சிறந்தது மத்திமமானதுஎன்றார்கள். இங்கு மத்திமம் என்பது உயர்ந்தது என்ற கருத்தையே தருகிறது. ஒரு தடவை கலாநிதி தாரிக் சுவைதான் அவர்கள் தனது பிரபல்யமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான வாழ்க்கை கற்றுத் தந்தவைஎன்ற நிகழ்ச்சியில் வஸதிய்யா என்ற கருத்தை விளங்கப்படுத்தும்போது வஸதிய்யா என்பதை சுருக்கமாகக் கூறினால் ஒரு விடயம் இரு ஓரங்களுக்கு நடுவில் இருக்கும். அதேவேளை அது உயர்ந்ததாகவும் காணப்படுவதையே வஸதிய்யா என்போம். உதாரணமாக மத்தியில் உள்ள மலை என்று நாம் கூறும்போது சூழ உள்ள மலைகளில் அதுவே உயர்ந்தது என்பதையே நாம் நாடுகின்றோம். அதுபோல் இஸ்லாம் ஒரு நடு நிலை மார்க்கம் என்று நாம் சொல்லும் போது,  அது முரண்பட்ட பல கருத்தியல்களிடையே ஒரு மத்திய புள்ளி என்றே நாம் சொல்கிறோம். மத்திய புள்ளி எனும் போது ஒரு அபூர்வமான சமநிலையில் அது உயர்ந்து நிற்கிறது என்றே பொருள்படுகிறதுஎன்று விளங்கப்படுத்துகிறார்.

இந்த அல்குர்ஆன் வசனங்களின் மூலம் இந்தக் கருத்தை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த அல்குர்ஆன் மிகச் சீரானதை நோக்கி வழிநடாத்துகிறது…” (இஸ்ரா – 9) எது உலகில் மிகவும் சிறந்ததோ…? மிகவும் உயர்ந்ததோ…? மிகவும் சரியானதோ…? அதனை நோக்கியே அல்குர்ஆன் வழிகாட்டுகிறது.

அவன்தான் தனது தூதுவரை நேர்வழியையும் சத்திய மார்க்கத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தான். இணைவைப்பாளர்களுக்கு வெறுப்பாக அமைந்தாலும் கூட உலகின் எல்லா மார்க்கங்களையும் வெற்றி கொண்டதாக இந்த மார்க்கம் மாற வேண்டும்” (தௌபா – 33) என்று அல்குர்ஆன் கூறுகிறது. இந்த மார்க்கம் நடுநிலையானது என்பது, அதுதான் உயர்ந்தது. அதுதான் வெற்றி பெற்றது. அதுதான் அனைத்தையும் மிகைத்து மேலெழுந்து நிற்கிறது என்று பொருள் கொள்ளப்படுகிறது.

எனவே,  வஸதிய்யா என்பது பல விடயங்களுக்கு மத்தியில் ஒன்று மிகவும் சிறந்து உயர்ந்து காணப்படுகின்ற நிலையாகும். அந்தவகையில் ஒரு உயர்ந்த சிறந்த தெரிவையே மத்திமம் என்போம். எது பயனுள்ளது? எது விளைவைத் தரவல்லது? எது பிறவற்றில் நின்றும் தனித்தன்மையுடன் வேறுபடுகிறது? எது உயர்ந்த கண்ணியத்தைப் பெற்றுத் தருகிறது? எது உள்ளத்தை அமைதி கொள்ளச் செய்கிறது? அதுவே வஸதிய்யா.

வஸதிய்யா என்பதன் மூன்றாம் கருத்துக்கு வருவோம். வஸதிய்யா என்பது ஸ்திரமாயிருத்தல் ஆழ்ந்து வேறூன்றியிருத்தல் என்ற கருத்தையும் குறிக்கிறது. வஸதிய்யா என்பதன் முதலாவது கருத்து இரண்டு ஓரங்களுக்கு நடுவில் காணப்படும் நடு நிலை என்று கூறினோம். அந்தவகையில் அங்கு ஓரநிலைப்பாடுகளைத் தவிர்த்து நடுவில் உள்ள நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்பதே எங்களிடத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான காரணங்களில் ஒன்று என்னவெனில் ஓரநிலைப்பாடுகள் என்றும் ஸ்திரமற்றவை,  நிலையற்றவை உறுதியானவையல்ல. ஆனால் மத்திய நிலைப்பாடு ஸ்திரமானது. ஆழ்ந்து வேறூன்றியது,  உறுதியானது. 

இதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. மனிதர்களில் சிலர் அல்லாஹ்வை ஓரத்தில் இருந்து வணங்குகின்றனர். (அதாவது உறுதியற்ற நிலையில் வணங்குகின்றனர்) அவருக்கு ஒரு நன்மை நேர்ந்தால் திருப்தி கொள்வார். தீமை நேர்ந்தால் பழைய நிலைக்குத் திரும்பி விடுவார். இவர் உலகம் மறுமை இரண்டையும் இழந்து விட்டவர். இதுதான் மிகத் தெளிவான நஷ்டாகும்” (ஹஜ் - 11)

இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கும் சில இமாம்கள் அவர் திருப்தியற்ற நிலையில் அல்லாஹ்வை வணங்குகிறார். அது மார்க்கத்தில் ஒரு ஓரத்தில் இருப்பது போன்றதாகும். அவர் உறுதியாக மார்க்கத்தில் நுழைந்து கொள்ளவில்லை. அதனால்தான் ஒரு சிறிய தீங்கை காண்கின்ற போதே மார்க்கத்தை விட்டுச் சென்று விடுகிறான்என்றார்கள்.

இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையிலேயே இந்த வசனம் இறங்கியமைக்கான காரணமும் அமைந்திருக்கிறது. இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள் ஒருவர் மதீனாவுக்கு வந்து இஸ்லாத்தைத் தழுவுகிறார். தனது மனைவி ஆண் பிள்ளையைப் பெற்றெடுத்தால் தனது குதிரை கன்றை ஈன்றால் இது நல்லதொரு மார்க்கம் என்பார்கள். இவ்வாறு நடக்காதபோது,  இது மோசமானதொரு மார்க்கம் என்பார்கள். அப்போதுதான் இந்த வசனம் இறங்கியதுஎன்றார்கள். (புஹாரி).

மேற்கூறப்பட்ட விளக்கங்களின் பின்புலத்தில் நின்று பார்க்கின்ற பொழுது,  வஸதிய்யா என்பது ஆழ்ந்ததொரு அடிப்படை கோட்பாடு,  ஒரு ஸ்திரமான வாழ்வொழுங்கு என்பதைப் புரிந்து கொள்ளலாம். மாற்றமாக அது ஒரு தற்காலிக அணுகுமுறையல்ல அல்லது ஒரு சமாளிப்புப் பொறிமுறையல்ல.

வஸதிய்யா என்பதன் நான்காவது கருத்து,  நேரான பாதை என்பதாகும். அறபுமொழியில் இது ஸிராத் முஸ்தகீம் என்று வழங்கப்படுகிறது. ஸிராத் முஸ்தகீமைக் கடைபிடித்தல் என்பது இலக்கை நோக்கிய உறுதியான பயணம். இடையில் கிளைப்பாதைகளில் கவனத்தை சிதற விடாதிருத்தல் என்பதாகும். ஸிராத் முஸ்தகீம் எனும் இந்த செயன்முறையையே வஸதிய்யா என்பதும் குறிக்கிறது. இங்கேயும் பல்வேறு கிளைப்பாதைகளைத் தவிர்த்து உறுதியான ஒரு பாதை தேர்ந்தெடுக்கப்படுகிறது. இதுதான் வஸதிய்யா.

அல்-குர்ஆன் இந்தக் கருத்தை எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பாருங்கள் இதுதான் எனது நேரான பாதை,  இதனையே பின்பற்றுங்கள். வேறு பாதைகளைப் பின்பற்றாதீர்கள். அது உங்களை நேரான பாதையை விட்டும் திசை திருப்பி விடும். இதுதான் உங்களுக்கு சொல்லப்படும் உபதேசம். நீங்கள் தக்வா உள்ளவர்களாக மாற வேண்டும் என்பதற்காக” (அன்ஆம் - 153)

இந்த அல்குர்ஆன் வசனத்தை ஒரு வரைபின் மூலம் நபியவர்கள் ஸஹாபாக்களுக்கு விளங்கப்படுத்திக் காட்டினார்கள். ஜாபிர் (ரழி) அவர்கள் கூறினார்கள் நாங்கள் நபியவர்களுடன் இருந்தோம்,  அப்போது நபியவர்கள் நிலத்தில் ஒரு கோடு போட்டார்கள். அதன் வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரண்டு கோடுகள் வீதம் வரைந்தார்கள். பின்னர் மத்தியில் உள்ள கோட்டின் மீது தனது கையை வைத்து,  இதுதான் அல்லாஹ்வின் பாதை என்று கூறிவிட்டு இந்த ஆயத்தை ஓதிக் காட்டினார்கள்என்றார்கள்.

எனவே,  இங்கு அல்-குர்ஆனினதும் நபியவர்களினது விளக்கத்தின் அடிப்படையில்,  கிளைப்பாதைகளைத் தவிர்த்து மத்திம பாதையில் பயணம் செய்வது ஸிராதுல் முஸ்தகீமைக் கடைபிடித்தல் என்று புரிந்து கொள்ளலாம். இதுதான் வஸதிய்யா என்பதன் மூலமும் நாடப்படுகிறது.

ஸிராதுல் முஸ்தகீம் என்பதுதான் வஸதிய்யா என்ற கருத்தை பிறிதோர் இடத்தில் அல்குர்ஆன் தனது வசனப் போக்கின் மூலம் தெளிவுபடுத்துகிறது. ஸுறதுல் பகராவின் 142வது வசனத்தை நிறைவு செய்யும்போது தான் நாடுபவர்களை ஸிராதுல் முஸ்தகீமின் பால் வழிநடாத்துகிறான்என்று கூறிவிட்டு,  அடுத்த வசனத்தை இவ்வாறு ஆரம்பிக்கின்றான். அவ்வாறே உங்களை நாம் மத்திமமான சமூகமாக அமைத்தோம்என்கிறான். இந்தத் தொடரை நோக்கும் பொழுது அல்லாஹ்வின் ஸிராதுல் முஸ்தகீம் எனும் வாழ்க்கை வழிதான் வஸதிய்யா வாழ்வொழுங்கு,  அந்தப் பாக்கியத்தை இந்த உம்மத்திற்குத்தான் அவன் வழங்கியிருக்கின்றான் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வஸதிய்யா என்பதன் ஐந்தாவது கருத்து நீதி என்பதாகும். இமாம் ராகிப் அல் இஸ்பஹான் அவர்கள் வஸதிய்யா என்ற சொல்லை வரைவிலக்கணப்படுத்துகின்ற பொழுது ஒரு விடயத்தின் நீதியான நிலை எதுவோ அதுதான் மத்திமம்என்றார்கள். அல்-குர்ஆனின் நீங்கள் தஸ்பீஹ் செய்யக்கூடாதா என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? என்று அவர்களில் மத்திமமானவர் கூறினார்” (கலம் - 28) என்ற வசனத்திற்கு இமாம் இப்னு கஸீர் அவர்கள் விளக்கமளிக்கும்போது,  அவர்களில் மத்திமமானவர் என்பதன் கருத்து அவர்களில் நீதியானவர் என்ற விளக்கத்தை இப்னு அப்பாஸ் (றழி) அவர்களும் இன்னும் பலரும் குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

பொதுவாக நீதி என்பது ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அந்தஸ்தில் வைத்தல் என்று கூறுவார்கள். வஸதிய்யா என்பது நீதி என்று கூறும்போது,  பௌதீக ரீதியாக நடுவில் இருக்கும் பொழுது மாத்திரம்தான் அங்கு வஸதிய்யா பேணப்படுகிறது என்று சொல்வதற்கில்லை. மாற்றமாக வஸதிய்யா என்பது நீதியான நிலைப்பாட்டைக் கொள்ளுதலாகும். இது பௌதீக ரீதியில் நடுவிலன்றி வேறு வடிவிலும் காணப்பட முடியும்.

மேற்கூறப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் நோக்கும் போது வஸதிய்யா என்பது பக்கச் சார்பின்றி நடுவில் அமைந்த ஒரு நிலைப்பாடு,  உயர்ந்து நிற்கும் சிறந்ததொரு தெரிவு,  நிலையான ஒரு வாழ்வொழுங்கு,  தடம் மாறாத இலக்கு நோக்கிய பயணம்,  ஒவ்வொன்றுக்கும் உரிய இடத்தை வழங்குதல் போன்ற அனைத்துக் கருத்துக்களும் பொதிந்த ஒரு கோட்பாட்டையே குறித்து நிற்கின்றது. இதில் பொதிந்துள்ள ஒவ்வொரு பெறுமானமும் ஒரு சமூகம் எழுந்து நிற்பதற்கான காரணிகள். இந்தப் பெறுமானங்களை வாழ்வாகக் கொள்ளும் ஒரு சமூகம் எப்பொழுதும் உலகிற்கே வெளிச்சம் கொடுப்பவர்களாகக் காணப்படுவர்.

உலகில் மனித வரலாறு ஆரம்பித்த நாள் முதல் வஸதிய்யா ஒரு வாழ்வு முறையாக இருந்து வந்திருக்கிறது. இது நவீன காலத்தில் சில அறிஞர்களின் ஒரு கண்டுபிடிப்பல்ல அல்லது சில தீவிர நிலைகளைக் கையாள வந்த ஒரு பொறிமுறை மாத்திரமல்ல அல்லது ஏதோ ஒன்றுக்கு எதிராகப் பெறப்பட்ட மாற்று நிலைப்பாடல்ல. மாற்றமாக எல்லாத் தரப்பினரையும் நீதியாகக் கையாளும் ஒரு ஒழுங்கு,  உலகில் மனித இனம் செழிப்பதற்கான ஒரு வாழ்வு முறை.

2005ஆம் ஆண்டு மக்காவில் நடைபெற்ற வஸதிய்யா பற்றிய மாநாட்டில்,  வஸதிய்யாவுக்கான சர்வதேச மன்றத்தின் பொதுச் செயலாளர்,  பொறியியலாளர் மர்வான் பாஊரி அவர்கள் முன்வைத்த கருத்து,  இந்த இடத்திற்கு மிகவும் பொறுத்தமானது. வஸதிய்யா என்பது ஒரு சிந்தனை,  விழுமிய மூலாதாரம். எந்த விடயத்திலும் மிகப் பொறுத்தமானதைத் தெரிவு செய்வதற்கான அளவுகோள். அது எமது சிந்தனை,  செயற்பாடு,  சட்டம், நிலைப்பாடு,  பண்பாடு,  நடத்தை என எந்தப் பகுதியிலும் மிகப் பொறுத்தமானதைத் தேர்ந்தெடுப்பதற்கான மூல அளவுகோள். எமது கொள்கைகள்,  கருத்திட்டங்கள்,  நிலைப்பாடுகள் அனைத்திலும் பொதிந்திருக்க வேண்டிய ஒரு நேர்மை. அதே சமயம் வஸதிய்யா என்பது அரைவாசித் தீர்வுகளைக் குறித்து நிற்பதில்லை. மாற்றமாக எமது தெரிவுகள், செயற்போக்குகள் அனைத்திலும் மிகச் சரியானதை அடைந்து கொள்வதற்கான இடைவிடாத உழைப்பு. வஸதிய்யா என்பது வலது சாரிக்கும் இடது சாரிக்கும் நடுவில் எடுக்கும் ஒரு நிலைப்பாடு அல்ல. மாற்றமாக அது ஒரு சிந்தனை முறை,  பண்பாட்டுத் திட்டம்,  நடத்தைக் கோலம்என்கிறார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில் வஸதிய்யா என்பது ஒன்றை நியாயப்படுத்துவதற்கான அல்லது விட்டுக் கொடுத்து செல்வதற்கான ஒரு அணுகுமுறை என்று மாத்திரம் சிலர் கருதுகின்றனர். மாற்றமாக அது ஒரு சீர்திருத்த அணுகுமுறை. அது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குரியதல்ல. மாற்றமாக எல்லாக் காலங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு வாழ்வொழுங்கு. வஸதிய்யா நீதியையும் தயாளத்தையும் பிரதிபளிப்பது போல் மனித இனத்திற்கான உயர் மாதிரியையும் பிரதிபளிக்கின்றது. வஸதிய்யா என்பது கம்பீரம்,  சக்தி. அது ஒருபோதும் பலவீனமோ அல்லது அடிபணிதலோ அல்ல. யார் நடுவில் நிற்கிறாரோ அவர் ஓரங்களை ஆள்வதற்கு சக்தி பெறுகிறார்என்று கூறியுள்ளார்.

வஸதிய்யா பற்றிய அற்புதமான வரிகள் இவை. இந்தக் கண்ணோட்டத்தில் வஸதிய்யா புரிந்து கொள்ளப்படுகின்ற போது அது எந்த சமூகத்தையும் உயர்ந்த இடத்தில் கொண்டு போய் அமர்த்தி விடும். அது அவர்களது பார்வைகளை விசாலப்படுத்தி விடும். சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி விடும். உள்ளங்களைப் பிணைத்துவிடும். அவர்களை முன்னோக்கி உந்தித் தள்ளி விடும். அவர்கள் ஒன்றுபடுவார்கள். அனைவரையும் அரவணைப்பார்கள். எல்லாத் தீவிரங்களையும் தவிர்ப்பார்கள். அவர்களது செயலில் நிதானமிருக்கும். நாவில் உண்மையிருக்கும். சிந்தனையில் ஆழமிருக்கும். உழைப்பில் சக்தியிருக்கும். பயணத்தில் உறுதியிருக்கும். இலக்கில் தெளிவிருக்கும். இதுதான் சமூக எழுச்சியின் ஆரம்பப் புள்ளி. இதனை வஸதிய்யா தொடக்கி வைக்கிறது.

அல்லாஹ் எம்மை அங்கீகரிக்கட்டும்.

No comments:

Post a Comment