Sunday, October 4, 2015

மகாஸிதுடன் ஒரு மொழிபெயர்ப்புப் பயணம்

மகாஸிதுஷ் ஷரீஆ அறிமுகக் கையேடுஎன்ற நூலுக்கான எனதுரை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். ஸலாத்தும் ஸலாமும் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் மறுமை வரையில் அவரைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கும் உண்டாவதாக.

மகாஸிதுஷ் ஷரீஆ அறிமுகக் கையேடுஎன்ற பெயர் தாங்கி வரும் இந்த நூல், அறபுமொழியில் வெளிவந்த மகாஸிதுஷ் ஷரீஆ தலீலுன் லில் முப்ததிஈன்என்ற நூலின் மொழிபெயர்ப்பாகும். அடிப்படையில் இந்த நூல் ஆங்கில மொழியிலேயே எழுதப்பட்டது. Maqashid Al Shariah A Beginners Guideஎன்ற பெயரில் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் எழுதி, இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் (IIIT) வெளியிட்டு வைத்தது. கலாநிதி அப்துல் லதீப் கய்யாத் அவர்களால் அறபுமொழியில் பெயர்க்கப்பட்டு,  இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் ஊடாகவே அதன் அறபுப் பிரதியும் வெளியிடப்பட்டது.

மூல நூலின் சொந்தக்காரர் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள்,  இன்றைய சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். மகாஸித் கலைகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். நவீன மாற்றங்களுக்கு ஏற்ப இஸ்லாமிய சிந்தனையை வியாக்கியானப்படுத்தும் ஆற்றல் கொண்டவர். தமிழ் பேசும் வாசகர்கள் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்களை ஓரளவுக்கு அறிந்திருக்கிறார்கள். அந்தவகையில் அவரது சிந்தனைகள் குறித்த அறிமுகத்தை மேலும் விசாலப்படுத்திக் கொள்வதற்கு இந்த நூல் துணை செய்யும் என நினைக்கிறேன்.

பல்வேறு மொழிகளில் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதன் தொடரில் தற்போது தமிழ்மொழியில் வெளிவருகிறது. ஒரு தடவை கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்களுடனான ஒரு உரையாடலின் போது (online) இந்த நூலை தமிழ்மொழியில் பெயர்த்தால் என்ன? இந்தப் பணியை நீங்கள் செய்யலாமே? என்றார். மகாஸித் துறையின் மீது இருந்த ஆர்வத்தினாலும் பரிச்சயத்தினாலும் அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வதில் எனக்குத் தயக்கமிருக்கவில்லை. உடனே ஏற்றுக் கொண்டேன்.

ஆனால் ஏற்கனவே உள்ள வேலைப்பளுக்களுடன் இந்தப் பணிக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்ற ஒரு கேள்வியும் பயமும் எனக்குள் உள்ளுர இருந்ததை மறுப்பதற்கில்லை. இந்தச் சம்பவம் ரமழானுக்கு முன்னர் நடைபெற்றது. அதனால் ரமழானில் இந்தப் பணியை நிறைவு செய்ய முடியுமாகலாம் என்ற ஒரு சிறிய நம்பிக்கையும் ஒரு மூலையில் இருந்தது. ஏனெனில் நபியவர்கள் கூறியுள்ளது போல் ரமழான் பரகத் பொறுந்திய மாதம். பரகத் என்பது குறைந்த முயற்சியில் குறைந்த நேரத்தில் கூடிய விளைவை அடைந்து கொள்ளுதல் என்றே நான் புரிந்து வைத்திருக்கிறேன். அது வெறுமனே ஒரு புரிதல் மாத்திரமல்ல எனது அனுபவமும் கூட. பல சமயங்களில் நீண்ட நாள் நிலுவையில் உள்ள பல வேலைகளை ரமழானில் எடுத்து குறுகிய நாட்களில் நிறைவு செய்திருக்கிறேன். அந்த அனுபவ தைரியத்தில் இந்தப் பணியையும் ரமழானின் ஒரு இலக்காக எடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ் பலரது ஒத்துழைப்புடன்,  அதிலும் குறிப்பாக வீட்டு வேலைகளிலிருந்து எனக்கு ஓய்வளித்தது மாத்திரமன்றி அவ்வப்போது எனக்கு உற்சாகமளித்த எனது அன்பு மனைவியின் ஒத்துழைப்புடன் ரமழானில் அந்த இலக்கை அடைந்து கொண்டேன்.

இந்த நூலை மொழிபெயர்க்கும் போது நான் எதிர் கொண்ட ஒரு சவால், ‘மகாஸித்என்ற சொல்லுக்கு என்ன தமிழ் வடிவத்தைக் கொடுப்பது என்பதுதான். இறுதியில் அதனை தமிழில் மொழிபெயர்க்காது மகாஸித்என்றே பயன்படுத்துவதுதான் மிகவும் பொறுத்தமானது என்று எனக்குத் தோன்றியது. அந்தவகையில் மகாஸித்என்ற சொல்லையே மகாஸிதுகள், மகாஸிதை, மகாஸிதின்போன்ற வடிவங்களில் தமிழ்ப்படுத்திப் பயன்படுத்தியுள்ளேன். நான் இந்த அணுகுமுறையைக் கையாண்டமைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

ஒன்று,  மகாஸித் என்ற சொல்லை இலக்கு, நோக்கம்,  அடைவுபோன்ற சொற்களுக்குள்ளால் மட்டுப்படுத்த நான் நினைக்கவில்லை. அது மகாஸிதின் செழுமையைக் கொஞ்சம் குறைத்து விடுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. மகாஸித் என்ற சொல்லை மொழிகின்ற பொழுது,  வாய் நிறைய உச்சரிக்கும் சுகமும்,  உள்ளத்தின் அடியாளத்தில் அது ஏற்படுத்தும் தாக்கமும் இலக்கு நோக்கு என்ற சொற்களை மொழியும்போது ஏற்படுவதில்லை.

இரண்டு,  மகாஸிதுஷ் ஷரீஆ என்பதை சிலர் ஷரீஆவின் உயர் இலக்குகள்என்று குறிப்பிட்டுள்ளதைப் பார்த்திருக்கிறேன். அந்த மொழிபெயர்ப்பையும் மிகவும் பொறுத்தமானதாக நான் காணவில்லை. ஏனெனில் மகாஸித் என்பது உயர் இலக்குகளை மாத்திரம் குறிக்கின்ற ஒரு விடயமல்ல. மகாஸிதின் நவீன பிரயோகம்,  இஸ்லாமிய ஷரீஆவின் ஒவ்வொரு சிறிய பெரிய அம்சமும் ஏன்?  எதனை அடைந்து கொள்ள விளைகிறது?  என்ற கேள்விகளுக்கான பதில்களாகவே அமைகின்றன. அந்தவகையில் மகாஸித் பல மட்டங்களைக் கொண்டது,  அடையாளம் என்ற மிகவும் தாழ்ந்த மட்டத்திலிருந்து அகீதா என்ற உயர் மட்டம் வரையில் அது வேறுபட்டு அமைய முடியும். இங்கு தாழ்ந்த மட்டத்தை விட உயர்ந்த மட்டம் முதன் நிலைப்படுத்தப்பட முடியும். ஆனால் உயர்ந்த மட்டம் மாத்திரமன்றி எல்லா மட்டங்களும் மகாஸித் என்ற கருத்திலேயே உள்ளடக்கப்படுகின்றன. அந்தவகையில் மகாஸிதின் இந்த விரிந்த பார்வையை உள்ளடக்கும் வகையில் அதற்கு ஒரு தமிழ் வடிவத்தை வழங்குவதை விடவும் மகாஸித் என்றே பயன்படுத்துவது மிகவும் பொறுத்தமானது என்று கருதுகிறேன்.

அடுத்து,  இந்த நூலை மொழிபெயர்க்கும்போது எனது மனதில் ஓடிய மற்றொரு விடயத்தையும் இங்கு பரிமாறிக் கொள்வது பொறுத்தம் என நினைக்கிறேன். அதாவது கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் நவீன நூல்களுடனும் அறிஞர்களுடனும் எந்தளவு பரிச்சயம் கொண்டவராக இருக்கிறாரோ அதே அளவுக்கு துராஸ்எனும் எமது முதுசங்களிலும் மிகுந்த பரிச்சயத்துடன் காணப்படுகிறார். அதனை இந்த நூலின் உசாத்துணைகளை மேலோட்டமாக அவதானிக்கின்ற பொழுதே புரிந்து கொள்ள முடியும். மாத்திரமன்றி நூலின் உள்ளடக்கத்தில் முதுசங்கள் பற்றி அவர் தருகின்ற விளக்கங்கள் மிகவும் அற்புதமானவை. அவற்றினுடனான அவரது உறவை மிகத்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அதேநேரம் நவீன நூல்கள்,  அறிஞர்கள் மீதான வாசிப்பும் அவரிடம் பரந்தளவில் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

இந்த இடத்தில்தான் மனதில் சிறிய வலியோடு ஒரு விடயம் பற்றி சற்று சிந்திக்கத் தொடங்கினேன். இலங்கையில் இஸ்லாமியக் கல்வி என்பது எப்படி இருக்கிறது?  முதுசங்களுக்கும் அதற்கும் எந்தளவு தொடர்பு இருக்கிறது?  இலங்கையின் இஸ்லாமியக் கல்வியில் முதுசங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தில் ஒரு போதாமை இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் நளீமிய்யாவில் மாணவனாக இருந்த நாட்களில் அங்கு முதுசங்களை வாசிப்பதா?  நவீன நூல்களை வாசிப்பதா?  என்ற இரண்டு முகாம்கள் இருந்தமையை மறுப்பதற்கில்லை. அவற்றில் இரண்டாவது முகாமைச் சார்ந்துதான் நானும் செயற்பட்டிருக்கிறேன். அதனைத் தற்போது சிந்திக்கும்போது நடுநிலை வகித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் அதன் பாதிப்பை நான் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். யெமன் ஜாமிஅதுல் ஈமானில் மாணவனாக இருந்த சில வருடங்களில் அந்தக் குறைபாட்டை நிவர்த்திக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அது போதுமானதாக அமையவில்லை.

ஷரீஅத் கல்வியில் முதுசங்கள் முக்கியமானவை. உண்மையில் அவைதான் அஸ்திவாரம். அவற்றின் தோள் மீது ஏறி நின்று உலகைப் பார்க்கும் பொழுதுதான் நவீன இருள்கள் மீது இஸ்லாத்தின் மிகச் சரியான ஒளியைப் பாய்ச்ச முடியும். இல்லாதபோது அஸ்திவாரமின்றி அந்தரத்தில் மிதக்கும் ஒரு நிலை தோன்ற முடியும். இதுதான் அபாயமானது. எந்தப் பக்கமும் சாய முடியும். புதிது என்ற எதையும் வடிகட்டலின்றி விழுங்கிக் கொள்ளும் நிலைக்கு தள்ளிவிடும். ஷரீஅத் கல்வியில் இது ஆரோக்கியமானதல்ல. எனவே,  எதிர்காலங்களில் இலங்கையில் ஷரீஅத் கல்வியில் இது குறித்த சீரியஸான சிந்திப்புகள் அவசியம் என்று நினைக்கிறேன்.

இறுதியாக மகாஸித் கலை குறித்து சில வார்த்தைகள் கூற வேண்டும்;. மகாஸித் வரலாற்றில் மூன்று ஜாம்பவான்களை நான் காண்கின்றேன். முதலாமவர் இமாம் கஸ்ஸாலி,  இரண்டாமவர் இமாம் ஷாதிபி,  மூன்றாமவர் இமாம் இப்னு ஆஷுர். முதலாமவர் இமாம் கஸ்ஸாலி அவர்கள் மகாஸிதின் அத்தியவசியப் படிநிலைகள் பற்றிய இன்று வரை பேணப்படும் இறுதி வடிவத்தைத் தந்தவர் அவர்தான். ஆனால் மகாஸிதை அவர் மஸாலிஹ்எனும் நலன்கள் என்ற எல்லையில் வைத்தே நோக்கினார். நலன்கள் திட்டவட்டமானவையல்ல. அவை ஷரீஆவில் கருத்தில் கொள்ளப்படுதல் என்ற எல்லையிலேயே பயன்படுத்தப்படும்.

இரண்டாமவர் இமாம் ஷாதிபி அவர்கள். இமாம் கஸ்ஸாலியை விடவும் ஒருபடி மேலே சென்று மகாஸிதுகள் திட்டவட்டமானவை என்பதை நிறுவினார். அந்தவகையில் மகாஸித் என்பது கருத்தில் கொள்ளப்படுதல் எனும் துணை ஆதார நிலையில் இருந்து மகாஸித் ஹாகிமாஎனும் மூல ஆதார நிலையில் நோக்கப்பட்டன. இமாம் ஷாதிபி மகாஸிதில் செய்த மிக முக்கியமான புரட்சி இதுதான்.

மூன்றாமவர் இமாம் இப்னு ஆஷுர் அவர்கள். மகாஸிதுஷ் ஷரீஆ ஒரு தனித்த கலை என்பதை நிறுவினார். இமாம் ஷாதிபி அவர்கள் மகாஷிதை திட்டவட்டமானது என்று நிறுவும் போது,  முதலில் ஸுல் பிக்ஹ்எனும் சட்ட அடிப்படைகள் திட்டவட்டமானவை என்பதையே நிறுவினார். அதனடிப்படையில் மகாஸிதும் திட்டவட்டமானவை என்றார். அந்தவகையில் மகாஸித் என்பது உஸுல் பிக்ஹின் ஒரு பகுதியாகவே விளங்கப்படுத்தப்பட்டது. இந்த நிலையை மாற்றி மகாஸித்என்பது ஒரு தனித்த கலை அது உஸுல் பிக்ஹின் ஒரு பகுதியல்ல என்பதை இப்னு ஆஷுர் அவர்கள் முன்வைத்தார்கள்.

இமாம் இப்னு ஆஷுருக்குப் பின்னர் நவீன காலத்தில் மகாஸித் என்பது இஸ்லாமிய சட்டக்கலைக்கு மாத்திரமன்றி இஸ்லாத்தின் ஏனைய எல்லாக் கலைகளுக்கும் அடிப்படையாக அமையக் கூடியது என்ற பார்வை வளர்ந்து செல்வதை அவதானிக்கலாம். அந்தவகையில் மகாஸித் பற்றிய பாரம்பரியப் பார்வைகளை விட்டும் முற்றிலும் வித்தியாசமான பார்வைகள் முன்வைக்கப்படுவதைக் காணலாம். கடந்த காலங்களை விடவும் மிகவும் வேகமான வளர்ச்சியை மகாஸித் துறையில் நவீன காலத்திலேயே அவதானிக்க முடிகிறது. இது நல்ல ஆரோக்கியமானதொரு நிலை என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால் ஒரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்டுவது பொறுத்தம் என்று நினைக்கிறேன். மகாஸித் கலை இன்றைய நாட்களில்தான் சடுதியான வளர்ச்சியைக் காண்கிறது என்று சொல்லும்போது,  அதில் மறைமுகமாகத் தொனிக்கின்ற ஒரு விடயம் என்னவெனில்,  இந்த விடயம் குறித்த சிந்திப்பில் வரையறைகள் கட்டுப்பாடுகள் காணப்படுகின்றனவா? அவற்றை யார் மேற்கொள்வார்கள்?  என்ற கேள்வி தோன்ற முடியும். உண்மையில் ஆரம்ப நாட்களிலும் எந்தக் கலை தோன்றிய போதிலும் அது உச்சத்தை அடைந்து எல்லை மீறுகின்ற ஒரு நிலை தோன்றும்போது,  இமாம்கள் அவற்றிற்கான வரையறைகள் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசி,  அதனை சமநிலைப்படுத்தியிருக்கிறார்கள்.

மகாஷித் கலையின் நவீன கால எழுச்சி,  எல்லைகளைத் தாண்டாதிருக்க வேண்டும் எனின்,  இங்கேயும் வரையறைகளும் கட்டுப்பாடுகளும் அவசியம். இன்னும் இந்தத் துறையில் இது பற்றிய காத்திரமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி போன்றவர்களால் அவ்வப்போது இவ்விடயம் எடுத்துக் காட்டப்பட்டிருப்பது போல்,  அனைவரும் இணைந்து இது குறித்துக் கலந்துரையாட வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் முன்வைத்துள்ளார். ஆனால் இன்னும் முழுமையான ஒரு செயல் திட்டமாக அது முன்னெடுக்கப்படவில்லை

 இருப்பினும் கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்களால் எழுதப்பட்ட மகாஸிதுல் மகாஸித் என்ற நூல் இந்த விடயத்தில் ஒரு ஆரம்பப் பணி என்று கருதமுடிகிறது. அதில் அவர் மகாஸித் கலை ஏன் அவசியப்படுகிறது? அதன் அறிவுரீதியான செயற்பாட்டு ரீதியான பயன்கள் என்ன? என்பன குறித்து விவாதிக்கின்றார். இங்கு ஓரளவுக்கு மகாஸித் பற்றிய சில ஒழுங்குகள் வரையறைகள் முன்மொழியப்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.

எனவே,  நவீன மகாஸித் கற்கையில் ஈடுபடும் போது,  மிகுந்த கவனத்துடன் நாம் செயற்பட வேண்டிய ஒரு இடம் இருக்கிறது என்பது புரிந்து கொள்ளப்படல் வேண்டும். ஏனெனில் மகாஸித் பற்றிய ஆய்வுகளைப் பார்க்கும்போது,  அவற்றில் ஷரீஆப் போக்கு மிகைத்த ஆய்வுகளையும் காணலாம். பகுத்தறிவுப் போக்கு மிகைத்த ஆய்வுகளையும் காணலாம். இவை இரண்டுக்கும் நடுவேதான் எமது பயணம் நடைபெற வேண்டியிருக்கிறது.

அந்தவகையில் மகாஸித் ஆய்வுகளில் பேசப்படும் சிந்தனைகள் ஏற்கப்படவும்,  மறுக்கப்படவும் தாராளமாய் வாயில் திறந்திருக்கிறது. அத்தகைய ஒரு தயார்நிலையுடன்தான் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்களது இந்த ஆய்வும் அமைந்திருக்கிறது. அந்தவகையில் திறந்த மனதுடன் யாரும் இந்த ஆய்வை அணுகலாம். இது தொடக்கி வைப்பதற்கான சில முற்குறிப்புகள் மாத்திரமே,  இறுதியான முடிவுகளல்ல. இந்த வாயிலின் ஊடாக நுழைபவர்கள்,  நுழைந்த பின்னர் எந்தத் திசையிலும் பயணிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே இத்தகைய ஒரு பார்வையுடனும்,  கவனத்துடனும் இந்தக் கலைக்குள் நுழைய வாருங்கள் என்பதே எனது அழைப்பு.

இறுதியாக,  இது போன்ற ஒரு நூலை மொழிபெயர்க்கும் பாக்கியத்தைத் தந்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன் அல்ஹம்துலில்லாஹ். அடுத்து கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகட்டும். அல்லாஹ் அவரது அறிவில் பரகத் செய்யட்டும். உயர்ந்த கூலிகளை வழங்கட்டும். இலங்கையிலும் இந்தியாவிலும் அவருக்கு அறிமுகமானவர்கள் பலர் இருக்கின்றனர். சமூக வலைத்தளங்கள் ஊடாக அவருடன் பலர் நெருக்கமாக உறவாடுகின்றனர். அவர்களுள் என்னிடம் இந்த வேண்டுகோளை முன்வைக்கும் எண்ணத்தை அவருக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

ஏற்கனவே குறிப்பிட்டது போல்,  மொழிபெயர்ப்புப் பணி நடைபெறும்போது,  மனைவி,  பிள்ளைகள் அனைவரினதும் ஒத்துழைப்பு மகத்தானது. பிள்ளைகள் சிறியவர்களாக இருந்தபோதும் அபீஏதோ முக்கியமான ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறார் என்ற மனநிலையுடன் அவர்கள் இருந்ததாகவே எனக்குத் தோன்றியது. ஏனெனில்,  என்னை அவர்கள் அதிகம் தொந்தரவு செய்யவுமில்லை. மொழிபெயர்ப்புடன் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளையும் அவர்கள் அண்டவுமில்லை. அல்லாஹ்வே அவர்களுக்குக் கூலி வழங்கப் போதுமானவன்.

அடுத்து தட்டச்சு செய்வதில் உதவிய சகோதரர் பர்ஸான் அவர்களுக்கு விஷேடமாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக,  நான் எதிர்பார்க்கும் அவசரத்தில் வெளியிட முன்வந்த மினாரா பதிப்பகத்தாருக்கும் நன்றிகளைத் தெரிவித்து விடை பெறுகிறேன்.


உங்கள் சகோதரன்
அஷ்ஷெய்க் அக்ரம் அப்துல் ஸமத் (நளீமி)

01-09-2015

No comments:

Post a Comment