Wednesday, October 21, 2015

நபியவர்களது சுன்னா – பொருளும் முக்கியத்துவமும்

ஒரு சமநிலைப் பார்வை

சுன்னா என்ற அறபுப் பதம் மொழியில் வாழ்வு முறை என்ற கருத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதன் பரிபாஷையைப் பொறுத்தவரையில் இமாம்கள் மத்தியில் வேறுபட்ட பிரயோகங்கள் காணப்படுகின்றன. அந்த வேறுபாடுகள் மிகப் பெரும்பாலும் ஆய்வுக் கண்ணோட்டம் அல்லது ஆய்வுப் பரப்பு வேறுபட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளன. மாற்றமாக இமாம்கள் மத்தியிலான கொள்கை ரீதியிலான முரண்பாடுகளாக அவை அடையாளப்படுத்தப்படுவதில்லை. கீழ்வரும் பரிபாஷைப் பிரயோகங்களில் இருந்து இக்கருத்தைப் புரிந்து கொள்ளலாம்.

1.            நபியவர்களது வாழ்க்கை வரலாறு என்ற கருத்தில் சுன்னா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது நபியவர்களது பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து நிகழ்வுகளையும் குறிக்கின்றது. நுபுவ்வத்திற்கு முன்னைய நிகழ்வுகள் பின்னைய நிகழ்வுகள்,  நபியவர்களது பிறப்புக் காலப்பகுதியில் அறபு மக்களது வாழ்க்கைச் சூழல் போன்ற பல்வேறு விடயங்கள் இதில் உள்ளடக்கப்படுகிறது. சுன்னா என்ற பதத்தை இந்தக் கருத்தில் ஹதீஸ்துறை அறிஞர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள். இங்கு நபியவர்களது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை ஆதாரபூர்வமான வடிவில் கோர்வை செய்வதே இவர்களது நோக்கமாகக் காணப்பட்டிருக்கிறது.

2.            ஷரீஆ அல்லது தீன் என்ற கருத்தில் சுன்னா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது மிகப் பெரும்பாலும் பித்அத் என்ற சொல்லுக்கான எதிர்ப்பதமாகவே கையாளப்படுகிறது. அதாவது ஒரு விடயம் ஷரீஅத்தில் உள்ளது என்று சொல்ல சுன்னா என்றும் ஷரீஅத்தில் இல்லாதது என்று சொல்ல பித்அத் என்றும் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிரயோகம் அகீதா சார் அறிஞர்களிடத்திலும் வுஃஆல்எனப்படும்,  சமூகப் பேச்சாளர்களிடத்திலும் அதிகம் காணப்பட்டது. இவர்கள் சுன்னா என்பதன் மூலம் நபியவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை விடவும் இஸ்லாமிய வாழ்வுமுறையையே நாடினார்கள். இஸ்லாமிய வாழ்வு முறை என்பது அல்-குர்ஆன், நபியவர்களது வாழ்வு, ஸஹாபாக்களது வாழ்வு போன்ற அனைத்திலிருந்தும் பெறப்படும் ஒரு வாழ்வு முறையாகும். இதனால்தான் சுன்னாவின் எதிர்ப்பதமான பித்அத்தை மறுதலிக்கும்போது அது அல்லாஹ்தஆலா கூறவுமில்லை. நபியவர்களோ ஸஹாபாக்களோ செய்யவுமில்லை என்பதன் அடிப்படையில் மறுக்கப்படுகிறது.

3.            இஸ்லாத்தின் இரண்டாவது சட்ட மூலாதாரம் என்ற கருத்தில் சுன்னா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பிரயோகம் அதிகமாக உஸுலிய்யூன்எனப்படும் சட்டக் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் காணப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்ட ஹதீஸ் கலை அறிஞர்களது பிரயோகத்தை விடவும் இது சற்று வித்தியாசமானது. இங்கு நபியவர்களது வாழ்க்கை நிகழ்வுகளில்,  இன்றைய எமது வாழ்வுக்கான மூலாதாரமாக அமையக் கூடியவை எவை? அல்லது நபியவர்கள் முபல்லிக்எனும் அல்லாஹ்விடமிருந்து மனிதர்களுக்கு எத்தி வைப்பவர் என்ற வகையில் அமைந்த அவரது வாழ்வு எது? என்ற பரப்பு மாத்திரமே இங்கு நாடப்படுகிறது. 

அந்தவகையில் நபியவர்களது வாழ்வில் அவர் ஒரு மனிதர் என்ற வகையிலோ அல்லது அறபுக் கலாச்சாரத்தின் அடிப்படையிலோ தொழிற்பட்ட சந்தர்ப்பங்கள்,  நுபுவ்வத்திற்கு முன்னைய அவரது வாழ்வு போன்றன இங்கு சுன்னா என்ற வட்டத்தினுள் அடங்க மாட்டாது. இவை தவிர நபியவர்களது வார்த்தைகள்,  செயற்பாடுகள்,  செய்ய நினைத்தவை,  அங்கீகாரங்கள், நற்குணங்கள் என்பவை மூலாதாரம் என்ற கருத்தில் சுன்னா என வழங்கப்படுகிறது.

4.            ஒரு செயலை செய்தால் நன்மை கிடைக்கும்,  செய்யாத போதும் குற்றமில்லை என்ற கருத்தில் சுன்னா என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. வாஜிப் என்ற சொல் குறிக்கும் கருத்தை விடவும் சற்றுக் குறைந்த கருத்தைத் தருகிறது. அதாவது வாஜிப் என்பது கட்டாயமாக நிறைவேற்றுவதற்குரிய ஒன்று,  அதனை செய்தால் நன்மை கிடைக்கும். செய்யாதபோது பாவம் கிடைக்கும். ஆனால் சுன்னா என்பது கட்டாயமாக நிறைவேற்றுவதற்குரியதல்ல. செய்தால் நன்மை கிடைக்கும். செய்யாத போது குற்றமில்லை. உண்மையில் இது மனித செயல்களுக்கு வழங்கப்படும் சட்டரீதியான நிலைப்பாட்டின் வகை அல்லது தரம் என்ன? என்பதைக் குறிக்கின்றது. இமாம்கள் இதே கருத்தை மன்தூப் எனும் சொல்லின் மூலமும் விளங்கப்படுத்தியிருக்கிறார்கள். பொதுவாக புகஹாக்கள்எனப்படும் சட்டத்துறை அறிஞர்கள் மத்தியில் இப்பிரயோகம் காணப்பட்டது. சுன்னா என்ற சொல்லின் மொழிக்கருத்தை விட்டும் சற்று வித்தியாசமான ஒன்றாகவே இந்தப் பிரயோகம் காணப்படுகிறது.

இந்தப் பிரயோக வேறுபாடுகளை விளங்கிக் கொள்வதன் முக்கியத்துவம் என்ன? என்ற ஒரு கேள்வி இங்கு தோன்ற முடியும். உண்மையில் சமகால தஃவா களத்தில் இந்தப் பிரயோக வேறுபாடுகளைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இன்று களத்தில் செயற்படுகின்ற பல்வேறு தஃவா முகாம்களிடையே சுன்னா குறித்துக் காணப்படுகின்ற வேறுபட்ட நிலைப்பாடுகள் மிகப் பெரும்பாலும் இந்தப் பிரயோக வேறுபாட்டின் காரணமாகத் தோன்றியவைகளாகும். எனவே தஃவாக் களத்தில் பரஸ்பரப் புரிந்துணர்வையும் நெருக்கத்தையும் ஏற்படுத்துவதில் இந்தப் பரந்த புரிதல் துணை செய்ய முடியும்.

இதனை இன்னும் சற்றுத் தெளிவாகக் கூறினால்,  ஒருவர் இது சுன்னா என்கின்ற பொழுது,  அவர் அதனை எந்தப் புரிதலின் அடிப்படையில் கூறுகிறார் என்பதை இங்கு நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சிலர்,  இது சுன்னாதானே சமூக ஒற்றுமைக்காக நாம் அதனை விட்டுக் கொடுக்கலாமே அதில் என்ன தவறு இருக்கின்றது? என்று சொல்கின்ற பொழுது,  மற்றும் சிலரால் அந்த வார்த்தைகளைச் சீரணித்துக் கொள்ளவே இயலாமல் இருக்கிறது. 

இங்கு தோன்றும் முரண்பாடு உண்மையில் சுன்னா என்ற பதத்தின் மூலம் இரு தரப்பினரும் எதனை நாடுகிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டே எழுகின்றது. மாற்றமாக ஒரு தரப்பினர் சுன்னாவுக்கு மதிப்பளிக்கிறார்கள் மற்ற தரப்பினர் மதிப்பளிக்கவில்லை என்பதனால் இது ஏற்படவில்லை,  அல்லது ஒரு தரப்பினர் கடும் போக்கு கொண்டவர்களாக இருக்கின்றனர் மற்ற தரப்பினர் நெகிழ்வுப் போக்குக் கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதனாலும் இது ஏற்படவில்லை. அவ்வாறன்று முதல் தரப்பினர் சுன்னா என்பதன் மூலம் செய்தால் நன்மை செய்யாவிட்டால் குற்றமில்லை என்ற சட்டத்தரத்தில் அதனைப் பயன்படுத்துவதனால்,  ஒரு வாஜிபுக்காக சுன்னாவை விட்டுக் கொடுப்பதில் தவறில்லை என்கின்றனர். இங்கு அவர்கள் சுன்னாவினால் அதனை விடவும் முக்கியமான ஒன்று பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று நினைக்கிறார்கள். இரண்டாம் தரப்பினர் சுன்னா என்பதை தீன் என்ற கருத்தில் பயன்படுத்துவதனால்,  தீனில் ஒரு விடயம் மறுக்கப்படுகிறது என்ற கவலையுடனேயே அவர்கள் இவ்விடயத்தை நோக்குகின்றனர்.

 எனவே இங்கு இரு தரப்பினரதும் உளநிலையை யாரும் குறைகாண முடியாது. இரு தருப்பினரும் தீனைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயற்படுகின்றனர். இங்கு ஒரு விடயம் வேறுபட்ட கோணங்களில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது அவ்வளவுதான் வித்தியாசம்,  இதனை இரு தரப்பினரும் சாவகாசமாக அமர்ந்து கருத்துப்பரிமாறுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எடுத்துக் கொள்கின்ற பொழுது மிக இலகுவாக தீர்த்துக் கொள்ள முடியும்.

மேற்குறிப்பிடப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் நபியவர்களது சுன்னா என்றால் என்ன? என்பதை விளங்கிக் கொள்வதற்கு நாம் எல்லோரும் சில பொது அடிப்படைகள் மீது உடன்படவேண்டியிருக்கிறது. அவை:

1.            நபியவர்களது சுன்னா என்பது அல்குர்ஆன் அல்லாத வேறு ஒன்றையே குறிக்கிறது. அதாவது சுன்னா என்பது வேறு அல்குர்ஆன் என்பது வேறு. நபியவர்களது கீழ்வரும் ஹதீஸ் இந்தக் கருத்தைக் குறிக்கிறது.

அமானிதம் மனிதர்களின் உள்ளங்களில் வேறூன்றியிருக்கிறது. அடுத்து அவர்களுக்கு அல்குர்ஆனைக் கற்றுக் கொடுங்கள். அதன் பின்னர் சுன்னாவைக் கற்றுக் கொடுங்கள்” (புஹாரி,  முஸ்லிம்)

2.            நபியவர்களது சுன்னா என்பது ஸஹாபாக்களது வாழ்வு அல்லாத வேறு ஒன்றையே குறிக்கிறது. ஸஹாபாக்களது வாழ்வுக்கும் சுன்னா என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது. எனினும்,  இங்கு நபியவர்களது சுன்னா என்பது அவரது வாழ்வை மாத்திரம் குறிக்கும் ஒரு சொல்லாகும். ஹதீஸ்களில் சுன்னா என்ற சொல் பயன்படுத்தப்படும்போது நபியவர்களது சுன்னா வேறாகவும் ஸஹாபாக்களது சுன்னா வேறாகவும் குறிப்பிடப்படுவதை அவதானிக்கலாம். “…நீங்கள் எனது சுன்னாவையும் எனக்குப் பின்னர் வரும் நல்லாட்சியாளர்களின் சுன்னாவையும் கடைபிடியுங்கள்…” (அபூதாவூத், திர்மிதி)

3.            நபியவர்களது சுன்னா என்பது நாம் கட்டாயமாக வாழ்வு முறையாகக் கொள்வதற்குரிய ஒன்று. இக்கருத்தை பல்வேறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன. “…நான் உங்கள் மத்தியில் விட்டுச் செல்லும் விடயத்தை நீங்கள் வாழ்வாகக் கொண்டால் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமும்,  அவனது தூதரின் சுன்னாவும்…” என்றார்கள். (ஹாகிம்)

மேற்கூறப்பட்ட அடிப்படைகளின் மீது நின்று பார்க்கும் போது,  சுன்னா என்பது அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி,  முழு வாழ்விலும் அதனை கோட்பாட்டு வடிவிலும் சரி செயற்பாட்டு வடிவிலும் சரி அமுல்படுத்திக் காட்டிய நபியவர்களது வாழ்வு முறை எனலாம். மற்றொரு வகையில் கூறினால் அல்குர்ஆனுக்கு செயல்வடிவம் கொடுத்த நபியவர்களது வாழ்வு எனலாம். அல்குர்ஆனுக்கு அடுத்தபடியாக இந்த வாழ்வு முறையைப் பின்பற்றுவது எங்கள் மீது கடமையாகும். இந்த வாழ்வு முறையைப் புறக்கணிப்பதையே நபியவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். எனது சுன்னாவைப் புறக்கணிப்பவன் என்னைச் சார்ந்தவர் அல்லஎன்று குறிப்பிட்டுள்ளார்கள். (புஹாரி)

சுன்னா என்ற சொல்லுக்கான இந்த வரைவிலக்கணம் நபியவர்களது வாழ்வை மொத்தமான கண்ணோட்டத்தில் நோக்கியிருக்கிறது,  பகுதி பகுதியாக நோக்கவில்லை. அதாவது நபியவர்களது ஒவ்வொரு செயலையும் தனித்தனியாக எடுத்து அதனை சுன்னா என்றும் அல்லது சுன்னா அல்ல என்றும் நோக்குவதைத் தவிர்த்து,  சுன்னா என்பது நபியவர்களது மொத்த வாழ்வு முறை என்கிறது. இந்த மொத்தப் பார்வைக்குள்ளே மேற்சொல்லப்பட்ட எல்லாக் கருத்துக்களும்  உள்ளடங்கியிருக்கின்றன. 

அதாவது,  சுன்னாவை இவ்வாறு மொத்தமாகப் பார்க்கின்ற பொழுதே அதனை நாம் தீன் என்ற கருத்தில் பயன்படுத்த முடியும். மாற்றமாக தனித்தனிச் செயற்பாடுகளாகப் பார்க்கின்ற பொழுது அதற்கு தீன் என்ற கருத்து வழங்கப்படுவது பொறுத்தமற்றது. அதே போல் சட்டமூலாதாரம் என்பதும் மொத்தமான பார்வையின் அடிப்படையிலேயே எழுகிறது,  சில சமயங்களில் சில தனித்த செயற்பாடுகள் சட்டமூலாதாரமாக அமையாத நிலைகளும் காணப்படுகின்றன. அது போல் நபியவர்களது வாழ்வு முறை என்பதில் அவர்களது வாழ்க்கை வரலாறும் உள்ளடங்குகிறது,  ஆனால் நுபுவ்வதிற்கு முன்னைய வாழ்க்கை வரலாறு நபியவர்களது வாழ்வு முறையைப் பிரதிபளிக்கமாட்டாது. அதே போல் செய்தால் நன்மை செய்யாவிட்டால் குற்றமில்லை என்ற பரப்பை மாத்திரமன்றி கட்டாயமாக செய்ய வேண்டிய வாஜிப்,  கட்டாயமாக தவிர்ந்து கொள்ள வேண்டிய ஹராம்,  செய்தாலும் பரவாயில்லை செய்யா விட்டாலும் பரவாயில்லை எனும் முபாஹ்,  செய்வதை விடவும் செய்யாமல் இருப்பதே ஏற்றமானது எனும் மக்ரூஹ் போன்ற அனைத்து சட்டத்தரங்களையும் நபியவர்களது வாழ்வு முறை எனும் மொத்தக் கண்ணோட்டம் உள்ளடக்கியிருக்கிறது.

சுன்னாவின் முக்கியத்துவம்

மேற்குறித்த சுன்னாவிற்கான மொத்த வடிவத்திலேயே அது,  எமது வாழ்வில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகிறது. அதனை கீழ்வரும் கருத்துக்களில் நின்று விளங்கிக் கொள்ளலாம்.

1.            சுன்னாவைப் பின்பற்றுதல் என்பது எமது ஈமானுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் கிடையாது என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நாம் சான்று பகர்கின்றோம். இது எமது ஈமானை அத்தாட்சிப்படுத்துகின்ற கலிமா. இதில் பிரதானமான இரண்டு பகுதிகள் உள்ளன. ஒன்று அல்லாஹ்வை ஈமான் கொள்ளுதல். மற்றையது நபியவர்களை ஈமான் கொள்ளுதல். நபியவர்களை ஈமான் கொள்ளுதல் என்பது எப்பொழுது முழுமையடைகிறது எனின் அவரது வாழ்வு முறையை முழுத் திருப்தியோடு ஏற்றுப் பின்பற்றுகின்ற பொழுதே ஏற்படுகின்றது என அல்குர்ஆன் கூறுகின்றது. உமது இரட்சகன் மீது சத்தியமாக அவர்கள் மத்தியில் தோன்றும் பிணக்குகளின் போது உங்களிடம் தீர்ப்பைக் கேட்டு,  தீர்ப்பு குறித்து எந்தக் குறையுணர்வுமின்றி முழுமையாகக் கட்டுப்படாதவரை அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.” (நிஸா – 65)
எனவே,  நபியவர்களது வாழ்வு முறையை ஏற்றுப் பின்பற்றுதல் என்பது எமது ஈமானை முழுமைப்படுத்துகின்ற விடயம் என்பதை இங்கு புரிந்து கொள்கிறோம்.

2.            சுன்னா என்பது ஒரு வாழ்வியல் மாதிரி. வாழ்வியல் மாதிரி என்பது என்ன? பொதுவாக மனித வாழ்வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விதி எந்த ஒன்றையும் அளவீடு செய்வதற்கு ஒரு மாதிரி (Benchmark) காணப்படல் வேண்டும். அந்த மாதிரியை வைத்தே ஏனையவை சரியா? பிழையா? குறைபாடுகள் இருக்கின்றனவா? திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா? என்பவை தீர்மானிக்கப்படுகின்றன. இந்த மாதிரி என்பது விதிகள்,  கோட்பாடுகளாக மாத்திரமன்றி ஒரு நடைமுறை வடிவமாகவும் காணப்படல் வேண்டும் என்பதும் இங்கு நோக்கத்தக்கது. 

ஏனெனில் மனித இயல்பில் ஒரு விடயத்தைப் பார்த்துப் பின்பற்றுவது அவனுக்கு இலகுவானது. அந்தவகையில் மனித வாழ்வுக்கான மாதிரி எது எனின்,  நிச்சயமாக அது நபியவர்களது வாழ்வுதான். தனிமனித வாழ்வாக இருப்பினும்,  சமூக வாழ்வாக இருப்பினும் இந்த உலகில் சிறந்ததொரு வாழ்வுக்கான மாதிரியாக நபியவர்களது வாழ்வு காணப்படுகிறது. உலகின் அனைத்து வாழ்க்கைகளையும் அவற்றின் சரிபிழைகளை,  குறைநிறைகளை நபியவர்களது வாழ்வை வைத்து அளந்து பார்க்க முடியும். அத்தகைய ஒரு புனிதமிக்க வாழ்வாகவே நாம் நபியவர்களது வாழ்வை காண்கின்றோம். எனவே,  உலகின் எந்த சமூகத்திற்கும்,  எந்தக் காலத்திலும் முன்னுதாரணமாக அமையக்கூடிய வாழ்வியல் மாதிரியாக நபியவர்களது சுன்னா காணப்படுகின்றது. ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொரு சமூகமும் தனது வாழ்வுப் பயணத்தை நபியவர்களது வாழ்வை வைத்து சரிபார்த்துக் கொள்ள முடியும்.


3.            சுன்னா என்பது தீனுக்கான இரண்டாவது மூலாதாரம். மூலாதாரம் என்பது என்னஒரு விடயத்தின் சட்டபூர்வத்தன்மை எதனை அடிப்படையாகக் கொண்டு உறுதிப்படுத்தப்படுகிறது? அல்லது ஒரு விடயம் எதன் மீது எழுந்து நிற்கிறது? என்ற கேள்விக்கான பதிலையே மூலாதாரம் என்று சொல்லலாம். அந்தவகையில் இஸ்லாம் எனும் இந்த தீன் இரண்டு அடிப்படைகள் மீது எழுந்து நிற்கின்றது. ஒன்று அல்குர்ஆன். இரண்டாவது சுன்னா. இந்த இரண்டு மூலங்களில் இருந்தும் பெற்றுக் கொள்கின்ற பொழுதே ஒருவர் தீனை முழுமையாகப் பெற்றுக் கொள்வார். இந்த இரண்டையும் அடிப்படையாகக் கொண்ட அமுலாக்கமே இஸ்லாத்திற்கான முழுமையானதும்,  மிகச் சரியானதுமான அமுலாக்கமாகும். 

இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமாகவே அல்குர்ஆன் பல்வேறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். தூதுவருக்குக் கட்டுப்படுங்கள்” (நிஸா – 59) என்று இரண்டுக்குமான கட்டுப்பாட்டையும் சமாந்தரமாகக் குறிப்பிட்டதைக் காணலாம். எனவே,  சுன்னாவைத் தவிர்த்து மார்க்கத்தைப் புரிந்து கொள்வதோ செயற்படுத்துவதோ சாத்தியமற்றது என்பதைப் புரிந்து கொள்கிறோம்.

4.            சுன்னாவைக் கடைபிடித்தல் என்பது நாம் சரியான வழியில் இருக்கிறோம் என்பதற்கான உத்தரவாதமாகக் காணப்படுகின்றது. இதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது. நீங்கள் அவருக்குக் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள்” (நூர் - 54) மற்றோர் இடத்தில் நீங்கள் அவரைப் பின்பற்றுங்கள். நேர்வழியைப் பெற்றுக் கொள்ளலாம்” (அஃராப் 158) என்று கூறுகின்றது. இந்த வசனங்களின் மூலம் நபியவர்களது சுன்னாவை ஒருவர் வாழ்வு முறையாகக் கொள்கின்ற பொழுது அவரது வாழ்வு சரியான வழியில் செல்லும். அதற்கான உத்தரவாதத்தை அல்லாஹ்தஆலா தருகின்றான்.


5.            சுன்னாவை வாழ்வு முறையாகக் கொள்ளாத போது,  உலகில் மனித வாழ்வு சீர்குழைந்துவிடும். மாத்திரமன்றி மறுமையில் கடுமையான வேதனையையும் அனுபவிக்க வேண்டி ஏற்படும். இதுபற்றி அல்குர்ஆன் இவ்வாறு சொல்கிறது நபியவர்களது வாழ்வுக்கு மாறு செய்கின்றவர்களை ஒரு பெரும் குழப்பம் அல்லது கடுமையான வேதனை பிடித்துக் கொள்ளும். இதனையிட்டு அவர்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும்” (நூர் - 63) என்று அல்குர்ஆன் கூறுகிறது.


6.            சுன்னாவை வாழ்வாகக் கொள்பவனுக்கு உரிய கூலி சுவர்க்கமாகும். நபியவர்கள் கூறினார்கள் மறுத்தவனைத் தவிர என்னுடைய முழு உம்மத்தும் சுவர்க்கம் நுழையும்என்றார்கள். மறுப்பவன் யார்?” என நபியவர்களிடம் கேட்கப்பட்டது எனக்குக் கட்டுப்பட்டவன் சுவர்க்கம் நுழைவான்,  எனக்கு மாறு செய்பவனே மறுப்பவன்என்றார்கள் (புஹாரி)


இறுதியாக நபியவர்களது சுன்னா எனும் வாழ்க்கை முறை இந்த உலகில் மிகவும் உயர்ந்ததொரு வாழ்வொழுங்காகும். அதற்கு நிகரான ஒரு வாழ்வு முறையை உலகில் நாம் காண முடியாது. அந்த வாழ்வு முறையை வாழ்வதற்கான பாக்கியத்தை அல்லாஹ்தஆலா எமக்களித்திருக்கின்றான். அதனை முழுமையாக கடைபிடிக்க அவன் எங்கள் அனைவருக்கும் தௌபீக் செய்தருள்வானாக.

No comments:

Post a Comment