Thursday, November 9, 2017

பெண் ஒரு சமநிலைப் பார்வை (2)

ஆணும் பெண்ணும் சமம் என்பதன் பொருள் என்ன?

பெண் குறித்த கருத்தாடல், சிந்தனையுலகில் மிகுந்த வாதப் பிரதிவாதங்களைக் கொண்டது. இது குறித்த அல்-குர்ஆனின் சிந்தனை நிச்சயம் சமநிலையானதுதான். ஆனால் அந்த சமநிலைத் தேடல் இலகுவானதல்ல. இன்றைய பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு இடையே அந்தப் பயணத்தை மேற்கொள்வது மிகவும் சிரமமானது. அந்தவகையில் இங்கு பேசப்படும் கருத்துக்கள் எதுவும் முடிந்த முடிவுகளல்ல,  சமநிலைத் தேடல்கள் மாத்திரமே. 

கடந்த அமர்வில் பெண் குறித்த சில தவறான மனப்பதிவுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இந்த அமர்வில்,  ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தின் பொருள் குறித்து,  ஒரு விளக்கம் பெற்றுக் கொள்ளப்பட முயற்சிக்கப்படுகிறது. குறித்த விளக்கங்களுக்குள் நுழைய முன்னர்,  இரண்டு முக்கிய கருத்துக்களை சற்று கலந்துரையாடிவிட்டு செல்வது பொருத்தம் என்று நினைக்கிறேன்.

முதலாவது,  கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் கூறுவது போல்,  உரிமைகள் முன்வைப்பில் இஸ்லாத்தின் அணுகுமுறைக்கும் மேற்கின் அணுகுமுறைக்கும் இடையில் ஒரு அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாததன் காரணமாகவே பல சமயங்களில் இஸ்லாமிய அறிவு முதுசங்கள் மனித உரிமைகள் குறித்து,  அதிலும் இன்றைய மேற்குலகம் பேசிய அளவுக்குப் பேசவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. ஆனால் அது உண்மையில்லை

 இங்கு முக்கியதொரு அணுகுமுறை வேறுபாடு இருக்கிறது. அதாவது மேற்குலகம் தான் பெற்றுக் கொள்ள வேண்டியவை எவை? என்று சிந்தித்தது. ஆனால் இஸ்லாம் தான் செய்ய வேண்டியவை எவை? என்று சிந்தித்தது. இதனால் மேற்குலகச் சிந்தனையில் உரிமைகள் பெரிதும் ஹைலைட்டாகின. ஆனால் இஸ்லாமிய சிந்தனையில் கடமைகள் ஹைலைட்டாகின. இதுதான் அடிப்படை வேறுபாடு. 

இஸ்லாத்தின் பார்வையில் அடிப்படையில் மனிதன் என்பவன் கடமையைச் செய்பவன். அந்தக் கடமைகளுக்கு வகை கூறுபவன். அந்தவகையில் அவன் கேட்பவனாகவன்றி கொடுப்பவனாகவே இருப்பான். ஏனெனில் பிறரது உரிமை என்பது தனது கடமை. கடமைகள் உரிய முறையில் நிறைவேற்றப்படுகின்ற போது அங்கு உரிமைகள் இயல்பாகவே நிறைவேற்றப்படுகின்றன. யாரும் கேட்கவோ போராடவோ வேண்டிய அவசியம் இருக்காது. ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளைச் செய்வதே முக்கியமானது. இஸ்லாத்தின் போதனை இவ்வாறுதான் அமைந்துள்ளது. இதுதான் நேர்மைய அணுகுமுறை என்று நினைக்கிறேன்.

இங்கு உரிமைகள் பேசப்படுவதையும்,  கேட்கப்படுவதையும் தவறு என்று சொல்லவில்லை. மாற்றமாக கடமையுணர்வுக்கும் உரிமையுணர்வுக்கும் வித்தியாசமிருக்கிறது. கடமையுணர்வு செயல் சார்ந்தது. உரிமையுணர்வு செயற்படாமையையும் நியாயப்படுத்த நினைக்கிறது. கடமையுணர்வு ஒரு வகையில் நேர்மைய சிந்தனை. உரிமையுணர்வு எதிர்மைய சிந்தனை. கடமையுணர்வு ஆக்கத்தைக் கொண்டுவரும். உரிமையுணர்வு சிதைவுகளுக்கும் இடமளிக்கும். இந்த வித்தியாசத்தின் காரணமாகவே இஸ்லாம் எது முக்கியமானதோ எது பயனுள்ளதோ அந்த அணுகுமுறைக்கு அதிக அழுத்தம் கொடுத்ததைக் காணலாம்.

இஸ்லாத்தில் பெண்ணுரிமைகள்,  பெண்ணின் பணி என்றெல்லாம் தனித்துப் பேசப்படுவதற்கான தேவையும் இந்த அணுகுமுறை வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாததன் காரணமாகத் தோன்றிய ஒரு அலை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இரண்டாவது,  சமநிலை அல்லது சமத்துவம் என்ற கருத்தியல் பற்றியது. இதிலும் இஸ்லாத்தின் பார்வைக்கும் மேற்கின் பார்வைக்குமிடையில் ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. கலாநிதி அலி கரதாகி அவர்கள் சொல்வது போல்,  இஸ்லாம் சமத்துவ சிந்தனையை,  நீதியுடன் இணைத்தே பேசுகிறது. அந்தவகையில் நீதியான சமத்துவம் ஒன்றையே இஸ்லாம் முன்வைக்கிறது. ஆனால் மேற்குலகின் சமத்துவ சிந்தனை இரண்டு விடயங்கள் மத்தியில் எந்தவகையிலும் வேறுபாட்டை நோக்கக் கூடாது என்ற கருத்தையே வலியுறுத்துகிறது. அதன் விளைவு நீதியாக அமைகிறதா? இல்லையா? என்பது அங்கு கருத்தில் கொள்ளப்படுவதில்லை.

 ஆனால் இஸ்லாம் பேசும் சமத்துவ சிந்தனை ஏலவே கூறப்பட்ட மனிதன்  கடமையைச் செய்பவன் என்ற அடிப்படை மீது கட்டப்படுகிறது. அந்தவகையில் சமத்துவம் என்பது ஒவ்வொருவரது பணி அல்லது கடமை என்ன? என்பதையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

எனவே சமத்துவம் என்பது வேறுபாடுகள் எதனையும் கருத்தில் கொள்ளாமை அல்ல. பணி அல்லது கடமை வேறுபாடுகள் கருத்தில் கொள்ளப்பட்ட சமத்துவம் ஒன்றையே இஸ்லாம் முன்வைக்கிறது. இந்த அணுகுமுறையில்தான் உண்மையில் நீதி நிலை நாட்டப்படுகிறது. கலாநிதி அஹ்மத் ரைஸுனி அவர்கள் சொல்வது போல் குறிப்பாக ஆண் பெண் சமத்துவத்தில் மேற்கின் சமத்துவம் ஒரு மெகேனிகல் சமத்துவமே அன்றி அங்கு நீதி நிலை நாட்டப்படுதல் நோக்கமாக இல்லை. இஸ்லாம் இந்த அணுகுமுறைக்கு முற்றிலும் மாற்றமானது.

அடுத்து,  மேற்சொன்ன இரு சிந்தனைகளினதும் அடி நின்று இஸ்லாம் சொல்லும் ஆண் பெண் சமத்துவ சிந்தனை குறித்து சற்று கவனம் செலுத்துவோம்.

இஸ்லாம் ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தைப் பேசும் போது,  பிரதானமாக அதனை இரண்டு அடிப்படைகள் மீது முன்வைக்கிறது. முதலாவது படைப்பு ரீதியாக மனிதன் என்ற வகையில் ஆணும் பெண்ணும் சமம். இரண்டாவது கடமை,  வகை சொல்லுதல் என்ற வகையில் ஆணும் பெண்ணும் சமம் என்கிறது.

1.            படைப்பு ரீதியாக ஆணும் பெண்ணும் சமம் என்பது அல்குர்ஆன் மிகவும் அலுத்தமாக வலியுறுத்தும் ஒரு சிந்தனையாகும். உதாரணத்திற்கு ஒரு வசனத்தை மாத்திரம் இங்கு அடையாளப்படுத்துகிறேன். மனிதர்களே,  உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த இரட்சகனைப் பயந்து கொள்ளுங்கள். அதே ஆன்மாவிலிருந்துதான் சோடியும் படைக்கப்பட்டது. அவை இரண்டிலிருந்தும் தான் அதிகமான ஆண்களும் பெண்களும் பரந்து விரிந்தனர்.” (நிஸா – 01)

இந்த அல்குர்ஆன் வசனம்,  ஆணினதும் பெண்ணினது மூலம் ஒன்று என்கிறது. எனவே மனிதன் என்ற படைப்புக்கு வழங்கப்படும் அடிப்படை கண்ணியம் ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இன்றி சமமானதாகவே காணப்படுகின்றது. எனவே மனிதன் என்ற பாத்திரத்தைப் பிரதிபளிக்கக்கூடிய உரிமைகளில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் வேறுபாடு காணப்பட மாட்டாது. அந்தவகையில் மூன்று பிரதான உரிமைகளை இங்கு அடைளாப்படுத்துவது பொருத்தம்.

1.    சுதந்திரம் : சுதந்திரம் என்ற எண்ணக்கருவை இஸ்லாம் முன்வைக்கும் பாங்கு தனியானது. அல்குர்ஆன் கூறுகிறது நான் மனிதர்களையம் ஜின்களையும் எனக்கு அடிமைப்பட்டு வாழவே படைத்திருக்கிறேன் (தாரியாத்-56) இங்கு அடிமைப்படுதல் என்பது அல்லாஹ்வுக்கு மாத்திரமே நிகழக்கூடியது. மனிதன் மனிதனுக்கு அடிமையாகும் நிலை காணப்படக் கூடாது. உலகில் ஒரு மனிதன் உணர்ந்து கொள்ளும் மிகப் பெரிய சுதந்திரம் இதுதான். அல்லது சுதந்திரத்தை சுத்தமாக உணரும் நிலை இதுதான். இங்கு யாருக்கும் அச்சப்பட்டு,  கட்டுப்பட்டு செயலாற்றும் நிலை மனிதனுக்கு இல்லை. அல்லாஹ் மட்டுமே ஒரு மனிதனது செயலைக் கட்டுப்படுத்த முடியும். இந்த வடிவிலான சுதந்திரம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது.

2.    பொறுப்பு வகித்தல் அல்லது தலைமை வகித்தல் : இஸ்லாம் இதனை விலாயத் என்கிறது. ஆண் பெண் இரு தரப்பினர்க்கும் அடிப்படை பொறுப்பு வகிக்கும் உரிமை காணப்படுகிறது. அல்குர்ஆன் இதனை இவ்வாறு கூறுகிறது. முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் பொறுப்பு வகிக்கக் கூடியவர்களே…” (தௌபா – 71) அந்தவகையில் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் அரசியல் பொறுப்புக்கள் உற்பட,  ஆண், பெண் என்ற வேறுபாட்டின் காரணமாக யாரும் தடை செய்யப்பட முடியாது.


3.    சொத்துரிமை : சொத்துக்களை சொந்தமாக வைத்திருத்தல்,  அதனை நிர்வகித்தல்,  வளர்த்தல்,  செலவிடுதல் என விரிந்த கருத்தை சொத்துரிமை என்ற பிரயோகம் குறித்து நிற்கிறது. இந்த உரிமையிலும் ஒரு பெண் என்ற வகையில் யாரும் அவளுக்குத் தடை போடவோ,  தலையீடு செய்யவோ முடியாது. ஆணைப் போன்றே அனைத்துரிமைகளையும் ஒரு பெண்ணும் பெற்றுக் கொள்வாள்.

2.            கடமை,  வகை சொல்லுதல் என்ற வகையில் ஆணும் பெண்ணும் சமம் என்பதை அல்குர்ஆன் இவ்வாறு முன்வைக்கிறது. ஆண் பெண் இருபாலாரில் எவர் ஈமானுடன் ஒரு நற்செயலில் ஈடுபடுகிறாரோ,  அவருக்கு நல்ல வாழ்வை நாம் வழங்குவோம். அவர்கள் செய்தவற்றை விடவும் அழகான முறையில் நாம் அவர்களுக்குரிய கூலியை வழங்குவோம்.” (நஹ்ல் : 97)

இந்த வசனம் செயற்பாட்டுக் கடமை ஆணுக்குமுரியது பெண்ணுக்குமுரியது. அந்தவகையில் பொறுப்புக் கூற வேண்டிய பொறுப்பும் இருவருக்கும் காணப்படுகிறது என்கிறது. அதன் விளைவாக நன்மை,  தீமை,  சுவர்க்கம்,  நரகம் போன்ற மறுமை விளைவுகளாக இருப்பினும்,  சந்தோசமான வாழ்வு எனும் உலக விளைவாக இருப்பினும் ஆண் பெண் வேறுபாடின்றி இருவருமே அனுபவிப்பர் என்பதைக் கூறுகிறது.

இந்த அடிப்படை மீது கட்டமைக்கப்பட்ட இரண்டு பிரதான உரிமைகளை இங்கு அடையாளப்படுத்துவது பொறுத்தமானது.

1.    தஃவாவும் கருத்துக் கூறலும் : சிந்தனைச் சதந்திரம்,  கருத்துச் சுதந்திரம்,  கொள்கைச் சுதந்திரம் போன்ற சொல்லாடல்கள் மூலம் நவீன காலத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற விடயமே இங்கு தஃவா,  கருத்துக்கூறல் என்பதன் மூலம் நாடப்படுகிறது. இஸ்லாம் இந்த விடயத்தை ஒரு கடமை என்ற நிலையில் வைத்தே நோக்குகிறது. இது ஒரு பொறுப்பு. கட்டாயம் நடைபெற வேண்டியது. இதனை தடை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது. முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கு ஒருவர் பொறுப்பாக இருப்பார்கள். நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார்கள்…” (தௌபா – 71) என அல்குர்ஆன் இந்த உண்மையை விளங்கப்படுத்துகிறது. 

இங்கு ஒரு விடயம் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். இது ஒரு பொறுப்பு,  கடமை என்ற வகையில் ஆண்-பெண் இரு தரப்பினருமே அந்தப் பொறுப்புக்குரியவர்களாவர். ஆனால் இதனை எங்கே நிறைவேற்ற வேண்டும்? எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்? என்பன போன்ற முறைமை சார்ந்த,  வகைமை சார்ந்த விடயங்களில் ஆண்கள் பெண்கள் இடையில் வித்தியாசங்கள் காணப்பட முடியும்.

2.    இமாரத் எனும் பூமியை அபிவிருத்தி செய்தல் : இப்பணி ஆண் பெண் இருபாலாருக்கும் உரியது என்பது,  அல்குர்ஆன் மிகவும் தெளிவாக வலியுறுத்தும் ஒரு உண்மையாகும். அவன்தான் உங்களை பூமியில் இருந்து படைத்தான் அதனை அபிவிருத்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டான் (ஹுத் 61) என அல்குர்ஆன் இதனைப் பேசுகிறது. இதனை வெறுமனே ஒரு கடமை என்ற நிலையைத் தாண்டி,  மனிதப் படைப்பின் நோக்கமாகவே அல்குர்ஆன் அடையாளப்படுத்துகிறது. எனவே இதன் முக்கியத்துவம் இன்னும் அலுத்தமடைகிறது.

 இங்கு முக்கியம் என்னவெனில்,  இந்தப் பணி அல்லது நோக்கம் ஆண் பெண் இருவருக்குமுரியது. பால் வேறுபாட்டின் காரணமாக இந்தப் பணியில் இருந்து எவரும் தடை செய்யப்பட மாட்டார்கள். பூமி அபிவிருத்தி செய்யப்படுவதற்குரிய அடிப்படை ஆற்றல்களை அல்லாஹ்தஆலா ஆணிலும் வைத்துள்ளான். பெண்ணிலும் வைத்துள்ளான். எனவே,  பொதுவில் எந்தப் பணியும் இது பெண்ணுக்குரியதன்று என மறுத்துரைக்க முடியாது. ஆனால் இங்கேயும் முறைமை,  வகைமையில் ஆணும் பெண்ணும் வித்தியாசப்படும் இடங்கள் இருக்கும். அதைவிடவும் குறிப்பாக முக்கியத்துவ வேறுபாடு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் இந்தப் பணியில் காணப்பட முடியும். ஆணைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது என்றும் பெண்ணைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது என்றும் பணிவகைகள் வேறுபட்டமைய முடியும். ஆனால் எதுவும் எவருக்கும் தடை செய்யப்பட்டதாக அமைய மாட்டாது.

மேலே பேசப்பட்ட ஆண் பெண் சமத்துவ சிந்தனையின் அடிப்படைகளை நோக்கும்போது ஒரு விடயம் புரிகிறது. உலகில் ஆணும் சரி பெண்ணும் சரி பிரதானமாக மூன்று பாத்திரங்களை வகிக்கின்றனர். முதலாவது மனிதன் என்ற பாத்திரம். இரண்டாவது முஸ்லிம் என்ற பாத்திரம். மூன்றாவது ஆண் அல்லது பெண் என்ற பாத்திரம். இவற்றில் முதலிரண்டு பாத்திரங்களான மனிதன் என்ற பாத்திரம்,  முஸ்லிம் என்ற பாத்திரம். இந்த இரண்டு வகையிலும் ஆணும் பெண்ணும் சம அளவிலேயே இஸ்லாத்தில் நோக்கப்படுகின்றனர். 

இந்த இரண்டு பாத்திரங்களின் ஊடாகவும் எதிர்பார்க்கப்படுகின்ற பிரதானமான மகாஸிதுகள் மூன்றை இமாம்கள் குறிப்பிடுவார்கள். அவை,  இபாதத்,  இமாரத்,  கிலாபத் என்பன. இபாதத் என்பது மனிதனுக்கும் படைப்பாளனான அல்லாஹ்வுக்கும் இடையிலான தொடர்பைக் குறிக்கிறது. அது அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிமைப்படுதல் என்ற வகையில் இருக்க வேண்டும். இமாரத் என்பது மனிதனுக்கும் அவன் வாழும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான தொடர்பைக் குறிக்கிறது. அது அபிவிருத்தியும் சிறந்த பயன்பாடும் என்ற வடிவில் இருக்க வேண்டும். கிலாபத் என்பது மனிதனுக்கும் ஏனைய மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பைக் குறிக்கிறது. இது அல்லாஹ்வின் தூதுக்கு சாட்சியாக இருத்தலும் வழிகாட்டுதலும் என்ற வடிவில் இருக்கும். இதனைத்தான் மற்றொரு வகையில் தஃவா என்போம்.

இந்த மூன்று வகையான மகாஸிதுகளை அடைந்து கொள்வதுதான் இவ்வுலகில் மனிதன்,  முஸ்லிம் என்ற பாத்திரங்களின் பிரதான பணியாகக் காணப்படுகிறது. இந்தக் கடமைகளின் அடிப்படைப் பொறுப்பும்,  உரிமையும் ஆணுக்கும் உரியது பெண்ணுக்குமுரியது. அதில் எந்த வேறுபாடுமில்லை. இந்தப் பணியை ஆணும் பெண்ணும் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டும். முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கு ஒருவர் பொறுப்பானவர்கள் (தௌபா – 7) என்ற அல்குர்ஆன் வசனம் இக்கருத்தையும் வலியுறுத்துகிறது. இந்தக் கடமைகளை செய்வதற்குரிய அடிப்படைத் தகைமைகள் ஆணிடமும் இருக்கின்றன. பெண்ணிடமும் இருக்கின்றன. ஆண் என்பதன் காரணமாகவோ அல்லது பெண் என்பதன் காரணமாகவோ தகைமைகள் வேறுபடவும் மாட்டாது. ஒவ்வொருவரும் தமது தகைமைக்குரிய பணியை மேற்கொள்ள வேண்டும். தகைமையின் அடிப்படையிலேயே உரிய இடங்களும் பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும். ஆண் என்பதன் காரணமாக ஒரு குறித்த இடம் வழங்கப்படவோ மறுக்கப்படவோ கூடாது என்பது போல் பெண் என்பதன் காரணமாகவும் ஒரு குறித்த இடம் வழங்கப்படவோ மறுக்கப்படவோ கூடாது. தகைமையுள்ள எவருக்கும் எந்த இடமும் பெறப்படலாம். எந்த உரிமையும் பெறப்படலாம். எந்தக் கடமையையும் நிறைவேற்றலாம். ஒரு விடயம் தகைமையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படல் வேண்டுமே அன்றி ஆண் பெண் வேறுபாட்டை மையப்படுத்தியல்ல. இதுதான் இஸ்லாம் முன்வைக்கும் ஆண் பெண் சமத்துவ சிந்தனையின் பிரதான அம்சம் என்று நினைக்கிறேன்.

இந்த இடத்தில்தான் இன்றைய நடைமுறையில் கடைப்பிடிக்கப்படும் ஆண் பெண் சமத்துவத்திற்கான விகிதாசார அணுகுமுறை என்ற தர்க்கம் குறித்து எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. அதாவது,  உதாரணத்திற்கு பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இருபது வீதமாக அல்லது நாற்பது வீதமாகக் கட்டாயமாகக் காணப்படல் வேண்டும் என்பது போன்று ஏதேனும் ஒரு விகிதாசாரத்தை வரையறுத்து பெண்ணின் பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப்படுத்த நினைக்கும் பொறிமுறை சரியானதுதானா? உண்மையில் பெண்ணுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு மிகவும் பொருத்தமான பொறிமுறை இதுதானா? என்னைப் பொறுத்தவரை அடிக்கடி வந்து போகும் கேள்விகள் இவை. சில சமயம் ஆண் தனது மேலாதிக்கத்தைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்குத்தான் மேற்குலகம் பெண்ணுக்கு வரையறுக்கப்பட்ட விகிதாசாரத்தைப் பரிந்துரை செய்கிறதா? என்றும் எண்ணத் தோன்றுகிறது.

 இந்தப் பொறிமுறையின் சரி பிழைகளை உண்மையில் இங்கு பேச நினைக்கவில்லை. மாற்றமாக இஸ்லாத்தின் பார்வையில் நின்று இன்னும் இயல்பாக வேறுபட்ட வகையில் சிந்திக்க முடியும் என்பதையே அடையாளப்படுத்த விரும்புகிறேன்.

மனிதன்,  முஸ்லிம் என்ற பாத்திரங்களின் அடிப்படையில் ஆணும் பெண்ணும் வேறுபடுத்திப் பார்க்கப்படுவதற்கில்லை என்பது தெளிவானது. ஆனால் ஆண் என்ற பாத்திரத்தையும் பெண் என்ற பாத்திரத்தையும் தனித்து எடுத்து நோக்கினால் இந்த இரண்டு பாத்திரங்களுக்குமான பணி ஒரே வகையானதாகக் காணப்படுமா? என்ற ஒரு கேள்வி கட்டாயமாக தொடுக்கப்பட வேண்டும். அல்லாஹ்தஆலா ஆண் என்றும் பெண் என்றும் இருவேறு பாத்திரங்களைப் படைத்தமைக்கு கட்டாயமாக ஒரு நோக்கம் இருக்க வேண்டுமல்லவா? அந்த வகையில் ஆணுக்கான ஒரு பிரத்தியேகமான பணியும் பெண்ணுக்கான ஒரு பிரத்தியேகமான பணியும் இருக்க முடியும் என்பது ஒரு தர்க்க ரீதியான முடிவாக அமைகிறது. அல்குர்ஆன் சொல்கிறது ஒவ்வொரு விடயமும் அவனிடத்தில் வரையறுக்கப்பட்ட அளவுடனேயே காணப்படுகிறது (ரஃத் - 08). எனவே,  ஆணைப் படைத்தமைக்கும் பெண்ணைப் படைத்தமைக்கும் வித்தியாசமான நோக்கங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

அதேபோன்று உயிரியல் ரீதியாகக் கூட ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் படைப்பியல்பில் வேறுபாடுகள் இருக்கின்றன. கலாநிதி முஸ்பிர் இப்னு அலி அல்கஹ்தானி அவர்கள் சொல்வது போல்,  ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான உயிரியல் ரீதியான வேறுபாட்டில் அறிவியல் உலகில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் இருந்த போதிலும்,  உயிரியல் ரீதியில் ஆணும் பெண்ணும் இரு வேறு படைப்புக்கள் என்பதுவே உண்மை. மேலோட்டமான பார்வையிலும் இந்த உண்மை புலப்படுகிறது.

இந்த வேறுபாடுகள் ஒருபோதும்,  அவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தக் கூடியனவல்ல. மாற்றமாக இவை மனித வாழ்வின் முழுமைக்கு வழியமைக்கக் கூடியன. அதுதான் இந்த வேறுபாட்டின் மக்ஸத் என்பதை அல்குர்ஆனிலிருந்து புரிந்து கொள்ளலாம். அல்குர்ஆன் கூறுகிறது இரவில் இருள் சூழ்ந்து கொள்ளும்போது அதன் மீது சத்தியமாக பகல் பொழுது விடியும்போது அதன் மீது சத்தியமாக ஆண் பெண் படைப்பின் மீது சத்தியமாக…” (லைல்-1, 2, 3). இந்த வசனத்திற்கு கலாநிதி யூசுப் அல் கர்ளாவி அவர்கள் விளக்கமளிக்கும்போது,  ஆண் பெண் படைப்பின் வித்தியாசத்தை இந்த வசனம் சொல்கிறது. இரவு பகல் என்பனவற்றின் மீது சத்தியம் செய்துவிட்டு தொடர்ந்து ஆண் பெண் படைப்பின் மீது சத்தியம் செய்துள்ளமை ஒரு கருத்தை உணர்த்துகிறது. அதாவது இரவும் பகலும் எவ்வாறு வேறுபடுகிறதோ அவ்வாறே ஆணும் பெண்ணும் வேறுபடுகின்றனர். இரவுக்கு தனித்து ஒரு பணி இருக்கின்றது. பகலுக்கு தனித்து ஒரு பணி இருக்கின்றது. அதேபோல் ஆணுக்கு தனித்து ஒரு பணி இருக்கின்றது. பெண்ணுக்கு தனித்து ஒரு பணி இருக்கின்றது. இரவின் பணியும் பகலின் பணியும் இணைகின்ற பொழுதுதான் ஒரு தினத்தின் நோக்கம் முழுமை பெறுகின்றது. அதேபோல் ஆணின் பணியும் பெண்ணின் பணியும் இணைகின்ற பொழுதுதான் படைப்பின் நோக்கம் முழுமை பெறுகின்றது என்கிறார்.

முடிவாக,  மனிதன் என்ற பாத்திரத்தின் அடிப்படையிலும் முஸ்லிம் என்ற பாத்திரத்தின் அடிப்படையிலும் ஆணும் பெண்ணும் வேறுபடவில்லை. ஆனால் ஆண் பெண் என்ற பாத்திரங்களின் அடிப்படையில் ஆணும் பெண்ணும் வேறுபடுகின்றனர். இந்த வேறுபாடும் கூட உயர்வு தாழ்வையோ முக்கியத்துவ வித்தியாசங்களையோ குறிக்கவில்லை. மாற்றமாக இந்த வேறுபாடும் மனித வாழ்வை முழுமைப்படுத்துவதையோ நோக்கமாகக் கொள்கிறது.

முடிக்க முன்,  ஆண் பெண் என்ற பாத்திரங்களின் குறிப்பான பணி என்ன? ஆண் பெண்ணுக்கிடையிலான உயிரியல் வேறுபாடு சமூகப் பணியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியனவா?. இவை விடை தேடப்பட வேண்டிய சில கேள்விகள். அடுத்த பத்தி இவற்றுக்கான விடைகளைத் தேடும் முயற்சியாகவே அமையவுள்ளது. இன்ஷா அல்லாஹ். அல்லாஹ்வே போதுமானவன்.

உசாத்துணைகள் : (கடந்த பத்தியின் உசாத்துணைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது)

1.            மப்தஉத் தவாஸுன் பீ ஹுகூகில் மர்ஆ முஹக்கிகன் அல் முஸாவாத் அல் ஆதிலா கலாநிதி அலி முஹியத்தீன் அல் கரதாஇ.

2.            மர்கஸுல் மர்ஆ பில் ஹயாதில் இஸ்லாமிய்யா கலாநிதி யூசுப் அல் கர்ளாவி.

3.            அல்மர்ஆ பைனல் குர்ஆன் வவாகிஉல் முஸ்லிமீன் - கலாநிதி ராஷித் அல் கன்னூஷி.

4.            அல்மர்அது வர்ரஜுல் பைனல் மகாம் வல் மஹாம் - கலாநிதி ஸலாஹ் சுல்தான்.

5.            அந்நௌஃ அல் ஜின்ஸீ (அல் ஜன்தர்) கிராஆ நக்திய்யா கலாநிதி முஸ்பிர் இப்னு அலி அல் கஹ்தானி.

6.            அஸ்ராருல் கியாதா அந்நபவிய்யா யூடியூப் உரைகள் - கலாநிதி தாரிக் சுவைதான்.

7.            அல்மர்அது பில் கிதாபில் குர்ஆனி யூடியூப் உரை,  கலாநிதி அபூஸைத் அல்முக்ரிஃ அல் இத்ரீஸி.

8.            திராஸாத் உல்யா ஹெளலல் அல் மகாஸித் வல் இஜ்திஹாத் - யூடியூப் உரைகள்,  கலாநிதி ஜாஸிர் அவ்தா.

9.            லா நுரீது முஸாவாத் மகானீகிய்யா வநுகர்ரிபுல் உஸ்ரா வஹுகூகன் உக்ரா கட்டுரை,  அஹ்மத் அர்ரைஸுனி,  அல்இஸ்லாஹ் வெப்தளம்.

No comments:

Post a Comment