Thursday, November 23, 2017

மகாஸித் தேடல்கள் (5)

மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன?

மகாஸிதுஷ் ஷரீஆ என்ற சொல்லாடலுக்கு இன்றைய ஷரீஆ புழக்கத்தில் முதன்மையான ஒரு இடம் இருக்கிறது. சார்பாகவோ எதிராகவோ இன்று இந்த சொல்லைப் பயன்படுத்தாத ஷரீஆத் துறையினர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, அந்த சொல்லின் மவுசு அதிகரித்திருக்கிறது. சில சமயங்களில் அது பெருமையாகவும் மாறிவிட்டிருக்கிறது. ஆனால் அந்தச் சொல்லைப் பயன்படுத்தும் எல்லோரும் அதன் பொருள் பரப்பை மிகச் சரியாக விளங்கித்தான் பயன்படுத்துகின்றனரா? என்ற ஒரு கேள்வி என்னில் அடிக்கடி எழுவதுண்டு. 

சிலர் அதனை இன்றைய முகாமைத்துவக் கோட்பாடுகள் வரையறை செய்யும் கோல், ஒப்ஜெக்டிவ் போன்ற கலைச் சொற்களின் ஒத்த கருத்தாகப் பார்க்கின்றனர். இன்னும் சிலர் அதனை பொது விழுமியங்கள்,  விதிகள்,  கோட்பாடுகளாகப் புரிந்து கொள்கின்றனர். இங்கு இந்தப் புரிதல்களின் சரி பிழைகளுக்கு அப்பால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. அதாவது,  கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் கூறுவது போல்(1) மகாஸிதுஷ் ஷரீஆ எனும் கலை,  சுத்தமாக இஸ்லாமிய பாரம்பரியங்களுக்கு உள்ளேயிருந்து கருக் கொண்ட ஒரு கலை. இந்தப் பிரபஞ்சம்,  மனித வாழ்வு குறித்த இஸ்லாமிய தர்க்கவியலின் அடிப்படையில் உருவான ஒரு கலை. அது மேற்குத் தத்துவங்களின் எதிரொலியாக இஸ்லாமியப் புலத்தில் முளைத்த ஒரு கலை என யாரும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. 

அந்தவகையில் மகாஸித் குறித்த எச்சரிக்கைகளும் சந்தேகங்களும் அவசியமற்றவை. மாத்திரமன்றி மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கான முயற்சியும் கூட வேற்றுத் தத்துவங்களின் எதிரொலியாய் அன்றி,  இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியத்தினுள்ளே அது எவ்வாறு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்ற புரிதலே முக்கியமானது. சில சமயங்களில் வேற்றுத் தத்துவங்களில் நின்று மகாஸிதுஷ் ஷரீஆவுக்கு விளக்கமளிக்கும்போது,  அடிப்படையில் எளிமையான ஒன்றை நாமே வலிந்து சிக்கல் படுத்தியதாக மாறி விடவும் வாய்ப்பிருக்கிறது.

இனி,  மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன? என்ற கேள்விக்கு வருவோம். அதன் தத்துவார்த்த விளக்கங்களைத் தாண்டி முடிந்தவரை இலகுவாகச் சொல்ல முயற்சிக்கிறேன். கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்கள் மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன என்பதை கீழ்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகிறார். இங்கு கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனியின் வரைவிலக்கணம் தெரிவு செய்யப்பட்டமைக்குக் காரணம் எனது தேடலில் மிகவும் இலகுவான வரைவிலக்கணமாக நான் அதனையே காண்கிறேன். மகாஸிதுஷ் ஷரீஆ என்பது,  ஷரீஆ இறக்கப்பட்டதன் மூலம் இந்த உலகில் அமுலாக்கப்பட வேண்டிய இலக்குகள்,  அந்த இலக்குகள் மனித நலனுக்குரியவையாகும்.”(2)

இந்த வரைவிலக்கணம் இரண்டு பிரதானமான செய்திகளைச் சொல்லுகின்றன.  முதலாவது,  ஷரீஆ ஏன் இறக்கப்பட்டுள்ளது என்பதற்கு அல்லாஹ்தஆலா சில நோக்கங்களை வைத்துள்ளான். அதாவது மனித வாழ்வில் நிகழ வேண்டிய மாற்றங்கள் எவை என்பதுதான் அந்த நோக்கங்கள். இந்த மாற்றங்களை நிகழ்த்தவே அல்லாஹ் ஷரீஆவை இறக்கி வைத்தான். அந்த மாற்றங்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதே அல்லாஹ்தஆலாவின் எதிர்பார்ப்பு. அந்த மாற்றங்களையே அல்லது நோக்கங்களையே நாம் மகாஸித் என்கிறோம்.

இரண்டாவது,  மனித வாழ்வில் நிகழ்த்தப்படும் அனைத்து மாற்றங்களும், மனித நலன் சம்பந்தப்பட்ட மாற்றங்களன்றி வேறில்லை. ஏனெனில்,  இவை அல்லாஹ்வுடைய ஷரீஆவின் மூலம் நிகழ்த்தப்படும் மாற்றங்கள். ஷரீஆ நலனையன்றி தீங்கை கொண்டு வர மாட்டாது. எனவே,  மனிதனுக்கு நலனைக் கொண்டு வரக்கூடிய மாற்றங்களையே நாம் மகாஸித் என்கிறோம்.

அந்தவகையில் மனிதவாழ்வில் ஷரீஆ அடைய விரும்பும் மனித நலன் சம்பந்தப்பட்ட இலக்குகளே மகாஸிதுஷ் ஷரீஆ எனப்படுகிறது. மகாஸிதுஷ் ஷரீஆவுக்கான விளக்கம் மேற்கண்டவாறு முன்வைக்கப்படும் போது, பலரிடத்தில் அது ஒரு கேள்வியை அல்லது அச்சத்தைத் தோற்றுவித்து விடுகிறது. மனித நலன் சம்பந்தப்பட்ட இலக்குகள் என்று சொல்லும்போது,  அங்கு மனோ இச்சைகள் செல்வாக்குச் செலுத்துவதற்கான வாய்ப்பிருக்கிறதே என்ற ஒரு கேள்வி அல்லது அச்சம் ஏற்படுகிறது. அதாவது மகாஸித் எது? என்று தீர்மானிக்கப்படும்போது,  அங்கு மனிதன் தனது நலனை மாத்திரம் பார்த்து,  மார்க்கத்தின் நலனை கவனத்தில் கொள்ளாமல் விடலாம். எனவே மகாஸித் என்பது மனோ இச்சைகள் பெரிதும் ஆதிக்கம் செலுத்தி,  ஷரீஆவின் பெறுமானங்கள் வலுவிழந்த ஒன்றாக அடையாளப்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக சிலர்  நினைக்கலாம்.

இந்தக் கேள்விக்கான அல்லது அச்சத்திற்கான பதிலைக் காணும் போது,  நாம் இரண்டு உண்மைகளை ஒத்துக் கொள்ள வேண்டும். முதலாவது,  ஷரீஅதின் அடிப்படை நோக்கம் மனிநலன் என்பது,  இரண்டாவது,  எந்தவொரு மகாஸிதும் மனித அனுமானங்களில் இருந்து தீர்மானிக்கப்படுவதில்லை,  மாற்றமாக அல்குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்படுகின்ற ஒன்றே மகாஸிதாக அமையும். இந்த உண்மைகளை மகாஸித் அறிஞர்கள் எவ்வாறு விளங்கப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

முதலில் இமாம் இப்னுல் கையிம் சொல்லும் உண்மையை சற்று கவனியுங்கள்.  இம்மை மறுமை நலன்கள்,  தத்துவங்களை அஸ்திவாரமாகக் கொண்டே ஷரீஅத் எழுந்து நிற்கின்றது. அது முழுமையாக நீதியானது, அருள் நிறைந்தது,  நியாயபூர்வமானது, நலன் பயக்கக்கூடியது. எந்த விவகாரமும் நீதியை விட்டு விலகி அநீதியை நோக்கியும், அருளியிருந்து விலகி அதற்கு மாற்றமான நிலையை நோக்கியும்,  நலன்களை விட்டு தீங்கை நோக்கியும்,  நியாயத்தன்மையிலிருந்து அர்த்தமற்ற நிலையை நோக்கியும் செல்லும் எனின்,  அது ஷரீஅத்தாகக் காணப்பட மாட்டாது. அது ஷரீஅத்தினுள் வலிந்த விளக்கங்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டாலும் கூட என்றார்கள்(3). இமாம் இப்னுல் கையிமுடைய இந்த வார்த்தைகள் ஷரீஆ என்பதே நலன்,  நீதி,  அருள்,  பயன் என்றுதான் சொல்கிறது. இந்தப் பண்புகளைப் பிரதிபளிக்காத ஒன்றை ஷரீஆ என்ற வட்டத்திலேயே உள்ளடக்க முடியாது என்கிறார். எனவே மனித நலன் என்பது ஷரீஆவின் முழு மொத்தத் தத்துவம் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் மனித நலனல்லாத ஒன்று ஒருபோதும் மகாஸிதாக அமைய மாட்டாது.

அடுத்து,  இமாம் ஷாதிபி அவர்கள் தனது முவாபகாத் எனும் நூலின் முன்றாம் பகுதியான மகாஸித் எனும் தலைப்பிற்கு முன்னுரை வழங்கும் போது,  இம்மையிலும் மறுமையிலும் ஒருசேர மனித நலனை நிலைநாட்டும் வகையிலேயே ஷரீஅத் இறக்கப்பட்டுள்ளது என்றும் மகாஸிதுகள் ஒவ்வொன்றும் மனித நலனை நிலைநாட்டும் வகையிலேயே காணப்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறார். இக்கருத்தை நிறுவும்வகையில் பல்வேறு அல்குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் கொண்டுவருவதுடன், ஷரீஆவில் இவ்வுண்மை ஓரிரு வசனங்கள் மூலம் நிறுவப்படும் உண்மையன்று மாற்றமாக இஸ்திக்ராஃ எனும் ஷரீஆவின் பெரும்பாலான கிளைப்பகுதிகளை ஆய்வு செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் ஒரு பொது முடிவாகும் என்று விளக்குகிறார்(4).

கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள், இமாம் ஷாதிபியுடைய மகாஸித் சிந்தனையின் சிறப்பம்சத்தை விளங்கப்படுத்தும் போது,  இமாம் ஷாதிபி செய்த முக்கியமான பணி,  மகாஸிதை ஷரீஆவின் அடிப்படைகளுள் ஒன்றாக மாற்றியமையாகும். அது எவ்வாறு சாத்தியப்பட்டது எனின் ஒவ்வொரு மகாஸிதும்,  ஷரீஆவின் கிளைப்பகுதிகள் அனைத்தையும் அல்லது பெரும்பாலானவற்றை ஆய்வு செய்வதன் மூலம் பெறப்படும் பொது முடிவாகும். அந்த வகையில் ஒவ்வொரு மகாஸிதும் மிகவும் திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மையாக மாறுகிறது. எனவே அது ஷரீஆவின் அடிப்படைகளில் ஒன்றாக மகாஸித் மாறுகிறது,  என்கிறார்.(5) இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளும் உண்மை என்னவெனின் மகாஸித் மனித அனுமானங்களிலிருந்து தீர்மானிக்கப்படுவதில்லை,  ஷரீஆவிலிருந்தே பெறப்படுகிறது.

இக்கருத்தை நவீன காலத்தின் மற்றுமொரு மகாஸித் சிந்தனையாளர், கலாநிதி வஷ்பி ஆஷுர் அவர்கள் மிக எளிமையாக விளங்கப்படுத்துகிறார். மகாஸிதுகள் ஊடாகவே ஷரீஆவை மிகச் சரியாக விளங்கிக் கொள்ள முடியும். அதுபோல்,  ஷரீஆவிலிருந்தே மகாஸிதுகள் பெறப்படுகின்றன(6) என்கிறார். இந்தக் கூற்றின் முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதியே நான் பேசும் கருத்தை தெளிவாக வலியுறுத்துகிறது. அதாவது,  மகாஸித் என்பது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில், மனித அறிவை மாத்திரம் வைத்து தீர்மானிக்கும் ஒரு விடயமல்ல,  மாற்றமாக ஷரீஆவின் மகாஸிதுகள் எவை என்பதும் கூட ஷரீஆவிலிருந்தே தீர்மானிக்கப்படுகின்றன. அல்குர்ஆனும் சுன்னாவும் வெறுமனே சட்டங்களை மாத்திரம் முன்வைக்கவில்லை. மாற்றமாக அந்த சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதன் நோக்கங்கள் என்ன என்பதையும் இணைத்தே பேசியிருக்கின்றன. 

பல சமயங்களில் அல்குர்ஆனும் சுன்னாவும் ஒரு சட்டத்தை முன்வைக்கும் போதோ அல்லது ஒரு சிந்தனையை முன்வைக்கும் போதோ அதற்கான நோக்கத்தையும் நேரடியாக அதனுடன் இணைத்து முன்வைப்பதைக் காணலாம். உதாரணமாக தொழுகை பற்றி இவ்வாறு சொல்கிறது. தொழுகையை நிலைநாட்டுங்கள். தொழுகை மானக்கேடானவற்றிலிருந்தும்,  பாவங்களிலிருந்தும் தடுக்கிறது. அல்லாஹ்வை நினைவுபடுத்தலே அதில் மிகவும் பிரதானமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிகிறான் (அன்கபூத் : 45) இங்கு தொழுகை நிலைநாட்டப்பட வேண்டும் என்ற சட்டம் மாத்திரம் முன்வைக்கப்படவில்லை. மாற்றமாக தொழுகை ஏன் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற நோக்கமும் சொல்லப்படுகிறது. ஒன்று தொழுகை பாவ சூழலை பூமியில் இல்லாது செய்துவிடும். இரண்டாவது,  அது இறை சிந்தனையை மனிதனில் எப்பொழுதும் தக்க வைத்திருக்கும்.

அதுபோல்,  அல்குர்ஆனும் சுன்னாவும் நோக்கங்களை நேரடியாக முன்வைக்காமல்,  மறைமுகமாக பல்வேறு வடிவில் மனித சிந்தனையை எட்டச் செய்கின்ற அணுகுமுறையையும் கடைபிடிக்கிறது. இதனைக் கண்டு கொள்ளும் வழியைத்தான் இமாம் ஷாதிபி அவர்கள் இஸ்திக்ராஃ என்றார்கள். அதாவது,  அல்குர்ஆனின் ஓரிரு வசனங்களிலோ அல்லது ஓரிரு ஹதீஸ்களிலோ அந்த நோக்கம் சொல்லப்பட்டிருக்க மாட்டாது. 

மாற்றமாக அல்குர்ஆனும் சுன்னாவும் சடடங்களை முன்வைக்கும்போது ஒழுங்கை ஆய்வு செய்து பார்க்கின்ற பொழுது குறித்த சில பொது இலக்குகளை மையப்படுத்தி அனைத்து சட்டங்களும் அல்லது பெரும்பாலான சட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியுமாக இருக்கும். உதாரணமாக நீதி,  சுதந்திரம் போன்ற மகாஸிதுகள் மேற்சொன்ன வடிவிலேயே அல்குர்ஆனில் நிறுவப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் மனிதவாழ்வில் நிலை நாட்டப்பட வேண்டும் என்ற வகையிலேயே இஸ்லாத்தின் அனைத்து சட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இவை இஸ்லாம் முன்வைக்கும் முக்கியமான மகாஸிதுகள் என இமாம்கள் கருதுகின்றனர்.

மேற்சொன்ன விளக்கத்தின் சாராம்சம் என்னவெனின்,  மகாஸித் என்பது ஷரீஆவிலிருந்தே பெறப்படுகின்றது. ஒரு போதும் மனித மனோ இச்சைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் ஒரு விடயமல்ல. இது மகாஸித் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு வரையறையாகும்.

அடுத்து,  மகாஸிதுஷ் ஷரீஆ என்று சொல்லும் போது நாம் புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு வரையறை இருக்கிறது. அதாவது பலர் பல சமயங்களில் மகாஸித் என்பதை முகாமைத்துவ கற்கைகளில் முன்வைக்கப்படும் கோல், ஒப்ஜெக்டிவ் போன்ற கலைச் சொற்களுக்கு சமானமானதாக விளங்கிக் கொள்கின்றனர். அதனடியாக நோக்கம் என்பது வேறு,  வழிமுறை என்பது வேறு என்று பிரித்தறிகின்றனர். இந்தப் புரிதல் அடிப்படையில் தவறானதல்ல. ஆனால் இந்தப் புரிதலில் தவறு நிகழுகின்ற ஒரு இடம் இருக்கிறது. 

அதாவது,  இஸ்லாமிய சிந்தனைப் பாரம்பரியம்,  பல சமயங்களில் முகாமைத்துவக் கற்கைகள் பேசும் வழிமுறைகள்,  அணுகுமுறைகள்,  மூலோபாயங்கள் போன்ற எண்ணக்கருக்களையும் மகாஸித் என்ற வட்டத்தினுள் உள்ளடக்கியிருக்கிறது. முகாமைத்துவக் கற்கைகளின் கோல்,  ஒப்ஜெக்டிவ் போன்ற சொற்கள் உணர்த்தும் பரிபாஷைக் கருத்தான ஒரு இலக்கு நிலையை மாத்திரம் மகாஸித் என்ற சொல் குறிக்கவில்லை. மாற்றமாக நீண்ட கால விளைவுள்ள,  நிலையான ஒரு பண்பையே மகாஸித் என்கிறது. அது ஒரு இலக்காக அமையவும் முடியும்,  மூலோபாயமாக அமையவும் முடியும்,  ஒரு வழிமுறையாக அமையவும் முடியும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது கழிவு பயனற்றப் போய்விடும்,  மக்களுக்குப் பயனுள்ளதே உலகில் நிலைத்து நிற்கும் (ரஃத் - 17)
இந்த வசனம் சொல்வது போல்,  மக்களுக்குப் பயனுள்ள ஒன்றே உலகில் நிலைத்து நிற்கும். பயனற்றவைக்கு நிலைத்த தன்மை கிடையாது. அந்த வகையில் மகாஸித் என்பதன் பொருள்,  உலகில் நிலைத்து நிற்கக் கூடிய ஒன்று மக்களுக்குப் பயன் தரக்கூடிய ஒன்று.

இந்தப் பின்புலத்தில்தான் கலாநிதி இஷாம் பஷீர் அவர்கள் ஹிக்மத் சமயோசிதம் என்பதை தஃவாவின் மகாஸித்களில் ஒன்றாக அடையாளப்படுத்துகிறார்.(7) உண்மையில் முகாமைத்துவக் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற பொழுது,  ஹிக்மத் என்பது அடைவதற்குரிய ஒரு இலக்கல்ல. மாற்றமாக அது ஒரு அணுகுமுறை. ஆனால் ஷரீஆ அதனை ஒரு மக்ஸத் என்கிறது. காரணம்,  அந்த அணுகுமுறை எல்லாக் காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய ஒரு அணுகுமுறை. கால மாற்றத்தால் மாறக்கூடியதல்ல. அதேநேரம் என்றும் பயன்மிக்க ஒரு அணுகுமுறை.

இதே கண்ணோட்டத்தில்தான்,  இமாம் முகம்மத் அத்தாஹிர் இப்னு ஆஷுர் அவர்கள் கிலாபத் கட்டமைப்பை ஒரு மக்ஸத் என்கிறார்.(8) முகாமைத்துவக் கண்ணோட்டத்தில் கட்டமைப்பு என்பது ஒரு இலக்கல்ல. ஆனால் கிலாபத் கட்டமைப்பு என்பது முஸ்லிம் உம்மத்தை ஒருங்கிணைக்கும் ஒருமைப்பாட்டுப் பொறிமுறை என்ற வகையில்,  உலகில் இஸ்லாத்தின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கான நிலையானதொரு மூலோபாயம். உச்ச பயன் தரும் ஒரு மூலோபாயம். எனவேதான் அது ஒரு மக்ஸதாக மாறுகிறது. கட்டமைப்பின் வடிவம் மாறுபடலாம். ஆனால் ஒருங்கிணைப்புப் பொறிமுறை ஒன்று இன்றியமையாதது என்பதையே அது மக்ஸத் என்பது உணர்த்துகிறது.

இறுதியாக,  மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன என்ற கேள்வியை மீண்டும் கேட்டுப் பார்த்தால்,  இவ்வாறு சுருக்கமாக அதற்குப் பதில் தரலாம்.

              மகாஸித் என்பது ஷரீஆ இறக்கப்பட்டமைக்கான நோக்கங்கள்

              அந்த ஒவ்வொரு நோக்கமும் மனிதவாழ்வில் நிலைபெற வேண்டும் என்பதையே ஷரீஆவை இறக்கியதன் மூலம் அல்லாஹ்தஆலா எதிர்பார்க்கிறான்.

              அந்த நோக்கங்கள் ஒவ்வொன்றும் மனித நலன் சம்பந்தப்பட்டவையே. ஏனெனில் மனித நலனுக்காகவே ஷரீஅத் இறக்கப்பட்டுள்ளது.

              அந்த நோக்கங்கள் ஒவ்வொன்றும் நீண்டு நிலைத்திருக்கக் கூடியவை, என்றும் பயன்தரக் கூடியவை. அந்தவகையில் மகாஸித் இலக்கு வடிவிலும்,  மூலோபாய வடிவிலும்,  அணுகுமுறை வடிவிலும் காணப்படலாம்.


(1)          கலாநிதி ஜாஸிர் அவ்தா,  மகாஸிதுஷ் ஷரீஆ தலிலுன் லில் முப்ததிஈன்,  அல்மஃஹதுல் ஆலமி லில் பிக்ரில் இஸ்லாமி,  பக்கம் 55.

(2)          கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி,  நழரிய்யதுல் மகாஸித் இன்தல் இமாம் அஷ்ஷாதிபி,  பதிப்பகம் : தாருல் கலிமா வின் நஷ்ர் வத்தௌஸீஃ, எகிப்து,  முதலாம் பதிப்பு 2010,  பக்கம் 07.

(3)          ஷம்ஸுத்தீன் இப்னுல் கையிம்,  இஃலாமுல் முஅக்கயீன்,  செம்மையாக்கல் : தாஹா அப்துல் ரஊப் ஸஃத் – பெய்ரூத்,  தாருல் ஜீல்,  1973,  முதலாம் பாகம். பக்கம் 333.

(4)          அபூ இஸ்ஹாக் அஷ்ஷாதிபி,  அல்முவாபகாத்,  ஷெய்க் அப்துல்லாஹ் தர்ராஸின் குறிப்புரையுடன்,  பிக்ருல் அரபி,  இரண்டாம் பதிப்பு 1975,  இரண்டாம் பாகம்,  பக்கம் 5, 6, 7.

(5)          கலாநிதி ஜாஸிர் அவ்தா,  முகர்ரர் திராஸாத் உல்யா ஹெளலல் மகாஸித் வல் இஜ்திஹாத்,  யூடியூப் தொடர் உரை.

(6)          கலாநிதி வஷ்பி ஆஷுர் அபூஸைத்,  மகாஸிதுஷ் ஷரீஆ வல் பத்வா,  மஅ சுவைபிஃ நிகழ்ச்சி,  முக்மிலீன் தொலைக்காட்சி சேவை,  2015

(7)          கலாநிதி இஷாம் அஹ்மத் அல்பஷீர்,  மக்ஸதா அத்ததர்ருஜ் வல் ஹிக்மா,  இஃமாலுல் மகாஸித் பில் மஜால் அத்தஅவி,  ஆய்வுகளின் தொகுப்பு,  வெளியீடு - இஸ்லாமிய முதுசங்களுக்கான அல்புர்கான் நிறுவனம்,  மகாஸிதுஷ் ஷரீஆ கற்கைகளுக்கான மையம்,  முதலாம் பதிப்பு 2016,  பக்கம் 53-79.

(8)          இமாம் முகம்மத் அத்தாஹிர் இப்னு ஆஷுர்,  மகாஸிதுஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா,  செம்மையாக்கல் : முகம்மத் அத்தாஹிர் அல்மைஸாவி,  தாருன் நபாஇஸ் பதிப்பகம்,  இரண்டாம் பதிப்பு 2001,  பக்கம் 405,  406.

No comments:

Post a Comment