Friday, June 22, 2018

மகாஸித் தேடல்கள் (10)


ஒரு தலைப்பின் மகாஸிதுகளை அடையாளம் காண்பதற்கான கேள்விகள்



மகாஸிதுஷ் ஷரீஆ என்பது,  உலகில் ஷரீஆ இறக்கப்பட்டமைக்கான நோக்கங்கள். அவை முழுமையாக மனித நலன் சம்பந்தப்பட்டவை. அவை இலக்கு வடிவிலும் காணப்பட முடியும் மூலோபாய வடிவிலும் காணப்பட முடியும். உலகம் சம்பந்தப்பட்ட மகாஸிதுகளும் உண்டு,  மறுமை சம்பந்தப்பட்ட மகாஸிதுகளும் உண்டு. இது மகாஸிதுஷ் ஷரீஆ என்றால் என்ன என்பதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ளும் பொதுக் கருத்தாகும்.

 இதன் மூலம் ஷரீஆவுக்கு மொத்தமான நோக்கங்கள் மாத்திரமே காணப்படுகின்றன என்று எவரும் நினைத்து விடக் கூடாது. மாற்றமாக ஷரீஆவின் ஒவ்வொரு கிளைப்பகுதிக்கும் அதுபோல் ஒவ்வொரு சட்டத்திற்கும் கூட தனியாக மகாஸிதுகள் இனம்காணப்பட முடியும்.

 அந்தவகையில் மகாஸித் எனும் சொல்லை நாம் ஷரீஆவின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக பிரயோகிக்கவும் முடியும். அதாவது மகாஸிதுல் உஸ்ரா - குடும்பத்தின் மகாஸிதுகள்,  மகாஸிதுல் இபாதாத் - வணக்கவழிபாடுகளின் மகாஸிதுகள்,  மகாஸிதுஸ் ஸலாத் - தொழுகையின் மகாஸிதுகள்,  மகாஸிதுஸ் ஸுஜுத் - ஸுஜுதின் மகாஸிதுகள் என ஷரீஅத்தின் பெரிய பரப்பு முதல் மிகச்சிறிய பரப்பு வரை ஒவ்வொன்றுக்கும் பிரயோகிக்க முடியும்.

ஆனால் இங்கு எழுகின்ற முக்கியமான கேள்வி என்னவெனின்,  குறித்த ஒரு தலைப்பின் மகாஸித்கள் எவை என்பதை அடையாளம் காண்பது எவ்வாறு? என்பதுதான். இந்தக் கேள்விக்கான எளிமையானதொரு பதிலை வழங்குவதுதான் இந்தப் பத்தியின் நோக்கம்.
குறித்த ஒரு தலைப்பின் அல்லது துறையின் அல்லது சட்டத்தின் மகாஸிதுகளை அறிந்து கொள்வதற்கு முக்கியமாக மூன்று கேள்விகளுக்குப் பதில் காண்பது அவசியமாகிறது.

1.            ஏன்?
2.            என்ன விளைவுகள் அடையப் பெற வேண்டும்?
3.            எதன் மீது எழுந்து நிற்கின்றது?

இந்த மூன்று கேள்விகளுக்கும் அளிக்கப்படும் பதில்கள்தான் குறித்த தலைப்பின் மகாஸிதுகளாக அமையும். இந்த ஒவ்வொரு கேள்வியையும் தனித்தனியாக விளங்கப்படுத்த முன்னர் இங்கு ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது,  மகாஸித்களை இனம்காண்பதற்கு இந்த மூன்று கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று ஆரம்ப கால மகாஸித் அறிஞர்களும் சரி நவீன கால மகாஸித் அறிஞர்களும் சரி தனித்துக் கூறியது கிடையாது. ஆனால் மகாஸித் பற்றிய ஆய்வுகளை தொகுத்து நோக்கும் பொழுது,  அறிஞர்கள் எவற்றை எல்லாம் மகாஸித் என்று அடையாளம் காட்டியிருக்கிறார்கள் எனின்,  அவை மிகப்பெரும்பாலும் இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களாகவே காணப்படுகின்றன. அந்தவகையில் இது எனது தனிப்பட்டதொரு இஜ்திஹாத் என்றே சொல்ல வேண்டும். மகாஸித் பற்றிய ஆய்வுகள் எல்லாமே மாற்றுப் பார்வைகளுக்கு இடம் வைத்துள்ளவை என்ற வகையில் எனது இந்த இஜ்திஹாதிலும் அதே இடம் இருக்கிறது என்பதை முதலில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

ஏன்?

ஏன் என்பது எந்தவொரு விடயத்தினதும் மகாஸிதை அறிந்து கொள்வதற்கான மிக அடிப்படையான ஒரு கேள்வியாகும். இது குறித்து விரிவாகப் பேசிய நவீன அறிஞர்களில் கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் முதன்மையானவர். அவர் குறிப்பிடுவது போல்(1) ஏன் என்ற கேள்வி வரலாற்று நெடுகிலும் மனிதன் கேட்டுவந்த கேள்விதான். அந்தக் கேள்விதான் உலகில் தத்துவ சிந்தனையை உருவாக்கியது. இஸ்லாமிய பாரம்பரியத்திற்குள்ளே அல்லாஹ்வின் சட்டங்களுக்கும் செயல்களுக்கும் இந்தக் கேள்வி தொடுக்கப்படுகின்ற பொழுதுதான் மகாஸிதுகள் தோற்றம் பெறுகின்றன. 

கலாநிதி வஸ்பி ஆஷுர் அவர்கள் குறிப்பிடுவது போல்(2) அல்லாஹ்வின் அடிப்படையான பண்புகளில் ஒன்று அவன் ஹகீம் என்பதாகும். எந்த ஒன்றையும் ஒரு நியாயம்,  காரணத்துடனேயே செய்பவன் என்பதே இதன் பொருள். எனவே அல்லாஹ்வின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கிறது.  இங்குதான் அல்லாஹ்வின் நடவடிக்கைகள் குறித்து ஏன் என்ற கேள்வி கேட்கப்படுவதற்கான நியாயம் உருவாகிறது.

ஏன்? என்ற கேள்வியின் மூலம் ஒரு விடயத்தின் இருப்புக்கான நியாயம் என்ன என்பதுதான் முக்கியமாகத் தேடப்படுகிறது. இப்படி ஒரு விடயம் ஏன் இருக்கிறது? அல்லாஹ் ஏன் இவ்வாறு ஒரு செயலை வைத்திருக்கிறான்?  உதாரணமாக குடும்பம் என்ற ஒரு முறைமையை அல்லாஹ் இந்த உலகில் ஏன் வைத்துள்ளான்? உலகில் மனித இனத்தின் இருப்பும்,  அதன் கௌரவமும் பாதுகாக்கப்படுதல். இதுதான் குடும்பம் ஏன்? என்ற கேள்விக்கான பதில். இதனைத்தான் இமாம்கள் ஹிப்ழுன் நஸ்ல் எனும் கலைச் சொல் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அதுபோல் தஃவா ஏன்? உலகிலும் மறுமையிலும் மனித இனத்தின் விமோசனம். உலகில் மனித இனம் அழிவிலிருந்து காக்கப்படல். இதுதான் ஏன் என்ற கேள்விக்கான பதில். இந்தப் பதில்களும் மகாஸிதுகளில் ஒன்று என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை.

என்ன விளைவுகள்அடையப் பெற வேண்டும்?

இது மகாஸிதை அறிந்து கொள்வதற்கான மற்றொரு கேள்வி. ஒரு விடயத்தை அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக எதிர்பார்க்கப்படும் மாற்றத்தை இது குறித்து நிற்கின்றது. இது மிகப்பெரும்பாலும் குறித்த தலைப்புடன் சம்பந்தப்பட்ட வகையில் உலகத்தில் நடைபெறவேண்டிய மாற்றங்களையும் மறுமையின் பேறுகளையும் உள்ளடக்கியிருக்கும். மற்றொரு வகையில் சொன்னால் நாம் ஒரு சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் எதனை சாதிக்க விரும்புகிறோம்? எதனை விளைவாகக் கொண்டுவரப் போகிறோம்? என்ற கேள்விகளுக்கான பதில்களாக அமையும்.

முதலில் கேட்கப்பட்ட ஏன் என்ற கேள்விக்கும் இந்தக் கேள்விக்குமிடையிலான அடிப்படை வேறுபாடு என்னவெனின்,  ஏன் என்ற கேள்வியின் பதில் குறித்த விடயத்தின் இருப்பு சம்பந்தப்பட்டது,  இந்தக் கேள்வியின் பதில் குறித்த விடயத்தின் விளைவு சம்பந்தப்பட்டது.
உதாரணமாக,  குடும்ப வாழ்வின் மூலம் என்ன விளைவுகள் அடையப்பெற வேண்டும்? என்ற கேள்விக்கு,  அல்குர்ஆன் குறித்துக் காட்டுவது போல்(3) “ஸகன் எனும் அமைதியைப் பெற்றுக் கொள்ளுதல்,  ஆறுதலை அடைந்து கொள்ளுதல்,  என்ற பதிலும் ஒன்றாகும். இது குடும்ப வாழ்வின் மூலம் அடையப்பெறும் ஒரு விளைவு என்றவகையில்,  இதுவும் குடும்ப வாழ்வின் மகாஸிதுகளில் ஒன்றாக மாறுகிறது. அதுபோல் தஃவாவின் மூலம் என்ன விளைவுகள் அடையப்பெற வேண்டும்? என்றொரு கேள்வி கேட்கப்பட்டால்,  பௌதீக ரீதியாகவும் சரி சிந்தனை ரீதியாகவும் சரி,  உலகில் அடிமைத்துவம் அகற்றப்பட்டு சுதந்திர சூழல் ஏற்படுத்தப்படல் என்பதும் ஒரு பதிலாக அமையும். இது தஃவாவின் மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய ஒரு விளைவு. எனவே இதுவும் தஃவாவின் மகாஸிதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்தக் கேள்வி மகாஸிதை அறிந்து கொள்வதற்கான கேள்விகளுள் ஒன்று என்பதை முதலில் நாம் அல்குர்ஆனில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் அல்குர்ஆன் பலசமயங்களில் ஒன்றன் விளைவை அதன் நோக்கமாகக் குறிப்பிட்டுள்ளமையைக் காணலாம். உதாரணமாக தொழுகை பற்றிப் பேசும் பொழுது,  “…தொழுகை பாலியல் பாவங்களையும் ஏனைய குற்றங்களையும் விட்டுத் தடுக்கிறது…” என்கிறது. (அன்கபூத் - 45). இங்கு தொழுகை நிறைவேற்றப்படும் பொழுது,  அது தனிமனிதனிலும் சரி சமூகத்திலும் சரி பாவச் செயல்களைக் குறைக்கும் விளைவைக் கொண்டு வருகிறது.

அதுபோல் பல்வேறு மகாஸித் ஆய்வுகளிலும் இந்த அணுகுமுறையைக் காணக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்கள் நோன்பின் மகாஸிதுகளைக் குறிப்பிடும் பொழுது,  தக்வா எனும் உளநிலையை அடைந்து கொள்ளுதல் என்பார்(4). இது நோன்பு நோற்பதால் ஒவ்வொருவரிலும் ஏற்பட முடியுமான விளைவு.

எதன் மீது எழுந்து நிற்கின்றது?

மகாஸிதை அறிந்து கொள்வதற்கான மற்றொரு கேள்வி இது. இங்கு இருப்பு,  விளைவு என்ற பரப்புக்கள் அன்றி,  ஒரு குறித்த விடயத்தினை தாங்கி நிற்கும் காரணி எது? என்ற தேடல் காணப்படுகின்றது. இதனை மற்றொரு வகையில் கூறினால் ஒரு விடயத்தின் இருப்பு அல்லது விளைவு பிறிதொன்றில் தங்கியிருக்குமாக இருப்பின் அந்தப் பிறிதொன்றும் கூட குறித்த விடயத்தின் மகாஸிதுகளில் ஒன்றாகக் கருதப்படும்.

உதாரணமாக,  குடும்ப வாழ்வு எதன் மீது எழுந்து நிற்கின்றது? என்ற கேள்விக்கு அல்குர்ஆன் வழங்கும் பதில்,  அன்பும் அருளும் என்பதாகும்(5). இதனால்தான் அதிகம் அன்பு செலுத்தக் கூடிய பெண்ணைத் தேர்வு செய்து திருமணம் செய்யுமாறு நபியவர்கள் இளைஞர்களுக்கு ஆலோசணை வழங்கியுள்ளார்கள்(6). இது குடும்ப வாழ்வு எழுந்து நிற்கும் காரணிகளில் ஒன்றைப் பேசுகிறது. குடும்ப வாழ்வுக்கு இந்தக் காரணி பிரதானமானது என்றவகையில் இதுவும் குடும்ப வாழ்வின் மகாஸிதுகளில் ஒன்றாகிறது.

அதுபோல் தஃவா எதன் மீது எழுந்து நிற்கிறது? என்ற கேள்விக்கு மனிதவளம்,  பொருளாதார வளம்,  ஹிக்மா எனும் ஞான அணுகுமுறை போன்ற பல காரணிகள் அல்குர்ஆனில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன(7). இந்தக் காரணிகள் ஒவ்வொன்றும் தஃவாவின் நீடித்த இருப்புக்கும் விளைவுக்கும் அத்தியவசியமானவை என்றவகையில் இவையும் தஃவாவின் மகாஸிதுகளில் அடங்குகின்றன.

ஒன்றைத் தாங்கி நிற்கும் காரணியும் அதே தரத்திலேயே முக்கியத்துவம் பெறுகின்றமையை வலியுறுத்தும் ஒரு சட்டவிதி இப்படிச் சொல்கிறது. ஒரு வாஜிப் முழுமை பெறுவது பிறிதொன்றில் தங்கியிருப்பின் அவ்விடயமும் வாஜிபாக அமையும் (மஃலமது ஸாயித் லில்கவாயித் அல்பிக்ஹிய்யா வல் உஸுலிய்யா,  விதி இல:1836).

கலாநிதி இஸாம் பஷீர் அவர்கள் தஃவாவின் மகாஸிதுகள் பற்றிப் பேசுகின்ற பொழுது,  ஹிக்மா எனும் ஞான அணுகுமுறையையும்,  ததர்ருஜ் எனும் படிமுறை அமைப்பையும் அதன் மகாஸிதுகளாக அடையாளப்படுத்துகிறார்கள்(8). உண்மையில் இவையிரண்டும் தஃவாவின் இருப்புக்கான நியாயங்களோ அல்லது தஃவாவின் மூலம் அடையப்பெறும் விளைவுகளோ அல்ல. மாற்றமாக தஃவா என்ற செயற்பாட்டின் விளைவுகள் சிறந்த முறையில் எய்தப்படுவதற்கு இந்த அணுகுமுறைகள் இன்றியமையாதவை. அந்தப்பின்புலத்திலேயே அவை இங்கு மகாஸிதுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இறுதியாக இப்பத்தியை நிறைவு செய்ய முன்னர்,  முன்னைய பத்திகளில் கூறப்பட்ட ஒரு விடயத்தை மீள்வலியுறுத்திவிட்டுச் செல்வது பொருத்தம் என்று நினைக்கிறேன். இங்கு சொல்லப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்குமான பதில்கள் மூலம் ஒரு விடயத்தின் மகாஸிதுகளை அடையாளம் காணமுடியும் என்று சொல்லும் போது,  அதன் பொருள் மகாஸிதுகள் ஒவ்வொருவரதும் மனோவிருப்பங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட முடியும் என்பதல்ல,  மாற்றமாக இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் வலியுறுத்தப்பட்டிருக்கின்ற பொழுது மாத்திரமே அவை மகாஸித் என்று கருதப்படும். அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேசப்படாத ஒரு விடயம் ஒருபொழுதும் மகாஸிதாக அடையாளப்படுத்தப்பட முடியாது. இது மகாஸித் அறிஞர்களின் ஏகோபித்த முடிவு. இங்கு முக்கியமாக வலியுறுத்தப்படும் விடயம் என்னவெனின்,  ஒரு தலைப்பின் அல்லது சட்டத்தின் மகாஸிதுகள் என்ன என்பதை அல்குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் நாம் அடையாளம் கண்டு கொள்வதற்கான பொறிமுறை என்ன என்பது பற்றியே கருத்துரைக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

அடிக்குறிப்புக்கள்

1.            அவ்தா,  ஜாஸிர். (2012). மகாஸிதுஷ் ஷரீஆ கபல்ஸபா லித்தஷரீஃ அல்இஸ்லாமி,  ருஃயா மன்ழுமிய்யா. வெர்ஜீனிய்யா,  அமெரிக்கா: அல்மஃஹதுல் ஆலமி லில்பிக்ரில் இஸ்லாமி. பக்கம்: 65 – 109. - (2011). மகாஸிதுஷ் ஷரீஆ தலீலுன் லில்முப்ததிஈன். வெர்ஜீனிய்யா, அமெரிக்கா: அல்மஃஹதுல் ஆலமி லில்பிக்ரில் இஸ்லாமி. பக்கம் : 9 – 14.

2.            அபூஸைத்,  வஸ்பி ஆஷுர். (2014). அஹ்காமுஷ் ஷரீஆ பைனத் தஅப்புத் வத்தஃலீல். ஆய்வுகளின் தொகுப்பு. இஃமாலுல் மகாஸித் பைனத் தஹய்யுப் வத்தஸய்யுப். லண்டன்: முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி,  மர்கஸ் திராஸாதில் மகாஸிதிஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா. பக்கம் 203.

3.            அல்குர்ஆன் கூறுகிறது உங்களில் இருந்தே உங்களுக்குரிய சோடியைப் படைத்தமை அல்லாஹ்வின் அத்தாட்சிகளுள் ஒன்று,  நீங்கள் அமைதி பெற வேண்டும் என்பதற்காக…” (ரூம் -21).

4.            ரைஸுனி,  அஹ்மத் அப்துஸ் ஸலாம். (2016). மகாஸிதுல் இபாதா. தொலைக்காட்சி உரை. வெளியீடு: அல்கனாத் அல்மக்ரிபிய்யா. உரை இல: 03.

5.            அல்குர்ஆன் கூறுகிறது உங்களில் இருந்தே உங்களுக்குரிய சோடியைப் படைத்தமை அல்லாஹ்வின் அத்தாட்சிகளுள் ஒன்று,  நீங்கள் அமைதி பெற வேண்டும் என்பதற்காக உங்களுக்கு மத்தியில் அன்மையும் அருளையும் ஏற்படுத்தினான்…” (ரூம் -21).

6.            நபியவர்கள் கூறினார்கள் அதிகம் அன்பு செலுத்தக் கூடிய அதிகம் பிள்ளைகள் பெறக் கூடிய பெண்களைத் திருமணம் செய்யுங்கள்…” (அபூதாவுத்,  நஸாஇ).

7.            அல்குர்ஆன் கூறுகிறது உங்களுக்குத் சுவர்க்கத்தைத்  தருவதாய் அல்லாஹ் உங்களையும் உங்கள் செல்வங்களையும் வாங்கிக் கொண்டான்…” (தௌபா – 111),  அல்குர்ஆன் கூறுகிறது,  உங்கள் இரட்சகனின் பாதைக்கு ஞான அணுகுமுறையைக் கொண்டு அழையுங்கள்…” (நஹ்ல்-125).

8.            அல்பஷீர்,  இஸாம் அஹ்மத். (2016). மக்ஸதா அத்ததர்ருஜ் வல்ஹிக்மா. ஆய்வுகளின் தொகுப்பு. இஃமாலுல் மகாஸித் பில் மஜால் அத்தஅவி. லண்டன்: முஅஸ்ஸஸதுல் புர்கான் லித்துராஸில் இஸ்லாமி,  மர்கஸ் திராஸாதில் மகாஸிதிஷ் ஷரீஆ அல் இஸ்லாமிய்யா. பக்கம் 53-79.

No comments:

Post a Comment