Saturday, June 9, 2018

நோன்பு – தர்பியத்தும் மகாஸிதும்


மகாஸித் தேடல்கள் (11)

நோன்பு தர்பியத்தும் மகாஸிதும் என்று இந்தக் கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கிறேன். உண்மையில் நோன்பின் மகாஸிதுகளைப் பற்றித்தான் அதிகம் இந்தக் கட்டுரை பேசப் போகிறது. எனவே நோன்பின் மகாஸிதுகள் என்றே தலைப்பிட்டிருக்கலாம். மாத்திரமன்றி தர்பியத் என்பதுவும் கூட நோன்பின் மகாஸிதுகளில் ஒன்றுதான். இருந்தும் தர்பியத் என்ற கருத்து தனித்து ஹைலைட்டாகும் வகையில் நோன்பு தர்பியத்தும் மகாஸிதும் என்று தலைப்பிட்டமைக்கு என்ன காரணமாக இருக்கலாம்? நிச்சயம் ஒரு காரணம் இருக்கிறது. இந்தக் கட்டுரையின் மையப் புள்ளியே அந்தக் காரணத்தைச் சுற்றித்தான் சுழல்கின்றது.

அதாவது தர்பியத் என்பது கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்கள் குறிப்பிடுவது போல்(1) வணக்க வழிபாடுகளின் பிரதான மகாஸிதுகளில் ஒன்று எல்லா வணக்க வழிபாடுகள் ஊடாகவும் மனித சமூகத்திடம் குறித்த சில பண்புகளை வளர்ப்பதை அல்லாஹ்தஆலா நோக்கமாகக் கொண்டிருக்கிறான். வணக்க வழிபாடுகளில் ஒன்று என்ற வகையில் நோன்பின் ஊடாகவும் குறித்த மக்ஸத் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு விஷேடம் என்னவென்றால் குறிப்பாக நோன்பின் மகாஸிதுகள் என பலராலும் பேசப்பட்ட அனைத்து மகாஸிதுகளும் ஏதேனும் ஒரு வகையில் மனித சமூகத்திற்கான தர்பியத்தாகவே காணப்படுகின்றன. அதாவது,  நோன்பின் ஒவ்வொரு மக்ஸதும் மனித சமூகத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டிய ஒரு பண்பையே குறித்துக் காட்டுகின்றது. அந்த பண்புகளைப் பயிற்றுவிக்கும் வகையிலேயே நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே,  நோன்பு தர்பியத்தும் மகாஸிதும் என தலைப்பிடப்பட்டிருக்கிறது.

முதலில் மகாஸித் என்ற கருத்தை கொஞ்சம் விளங்கிக் கொண்டு அடுத்த பகுதிக்கு வருவோம். மகாஸித் என்றால் என்ன? என்ற கேள்விக்கு எளிமையாகப் பதில் சொன்னால் இந்த தீனின் நோக்கங்கள்,  அதாவது இந்த தீனின் போதனைகளை அமுல்படுத்துவதன் மூலம் என்ன விளைவுகள் அடையப் பெற வேண்டும் என்று அல்லாஹ்தஆலா எதிர்பார்த்தானோ அவைதான் மகாஸித். தீனின் நோக்கமாக அமையும் மகாஸிதின் பிரதான இயல்பு என்ன? அதனை இவ்வாறு வரையறுக்கலாம். உலகில் எது நிலைத்திருக்கக் கூடியதோ எது பயன்தரக் கூடியதோ அதுதான் மகாஸித். இதனைத்தான் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. கழிவுகள் பயனற்றுப் போய்விடும். மக்களுக்குப் பயனளிப்பவைதான் பூமியில் நிலைத்து நிற்கும் (ரஃத் - 17) அதாவது உலகில் மனிதவாழ்வு நீண்டு நிலைத்திருக்க அவசியமான அனைத்தையும் நாம் மகாஸித் என்போம்.

மகாஸித் என்றால் என்ன என்ற இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் தர்பியத் என்பதும் ஒரு மக்ஸதாகக் கருதப்படுகிறது. அடிப்படையில் தர்பியத் என்பது ஒரு பொறிமுறைதான். இலக்கு அல்ல. ஆனால் தர்பியத் என்ற பொறிமுறை இந்த உலகில் மறுமை வரையில் நிலைத்திருக்க வேண்டிய ஒரு பொறிமுறை. முழு மனித சமூகத்திற்கும் பயனுள்ள அத்தியவசியமான ஒரு பொறிமுறை. அந்தவகையில் தர்பியத்தும் மகாஸித்களில் ஒன்றாகிறது. மொரோக்கோ இஸ்லாமிய அறிஞரான நூருத்தீன் கர்ராத் அவர்கள்,  பொதுவாக இஸ்லாமிய ஷரீஆவினதும் குறிப்பாக வணக்க வழிபாடுகளதும் தர்பியத் சார்ந்த மகாஸிதுகளைப் பேசும் பொழுது மிகப் பிரதானமாக மூன்று விடயங்களை முன்வைக்கிறார்.(2) அதாவது,  இந்த மூன்று பகுதிகளையும் மனித சமூகத்தில் பயிற்றுவிப்பது பொதுவாக ஷரீஅத்தினதும் குறிப்பாக வணக்க வழிபாடுகளினதும்; நோக்கம் என்கிறார். இந்த நோக்கங்கள் எல்லா சமூகங்களுக்கும் பொதுவானவை என்கிறார். சம காலத்தில் இவை ஒவ்வொன்றும் வணக்கவழிபாடுகளின் மகாஸிதுகளாகவும் காணப்படுகின்றன.

1.            பலம் - உடல் ஆன்மீக அறிவு ஆற்றல் பலங்கள் அனைத்தையும் இது குறிக்கிறது.
2.            அன்பு - இந்த உம்மத் உடனான அன்பையும் கருணையையும் மனித இனத்துடனான ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் இது குறிக்கிறது.
3.            பணிவு உயர்வு,  தாழ்வு வேறுபாடுகள் நீங்கிய நிலையை இது குறிக்கிறது.

இந்த மூன்று மகாஸிதுகளையும் நோன்பு என்ற இபாதத்தில் பிரயோகித்துப் பார்த்தால் இந்த ஒவ்வொரு மக்ஸதையும் பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடு நோன்பில் இருப்பதை அவதானிக்கலாம். இதற்கு ஆழ்ந்த ஆய்வு அவசியமில்லை. சாதாரணமான மேம்போக்கான பார்வையே இந்த உண்மையை உணர்த்தக் கூடியதாகும்.

உதாரணமாக நோன்பு ஆன்ம பலத்தை அதிகரிக்கிறது. உடல் ஆரோக்கியத்தைப் பேணுகிறது என்பது குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் வலியுறுத்துகின்ற உண்மைகள். அதுபோல் நோன்பு மனிதனுடைய வினைத்திறனை அதிகரிக்கிறது. கிரகிக்கும் ஆற்றலைக் கூட்டுகிறது என்பதும் நவீன ஆய்வுகளில் வெளிவந்துள்ள உண்மைகளாகும். இங்கு பலம் என்ற மக்ஸத் நோன்பின் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது.

அடுத்து,  ரமழான் காலத்தில் ஸதகாவின் முக்கியத்துவத்தைப் பார்க்கின்ற பொழுது,  பிறிதொருவரை நோன்பு திறக்க வைப்பதன் நன்மைகளை அவதானிக்கின்ற பொழுது,  பசி,  தாகத்தில் அனைவரும் பங்கு கொள்ளும் ஏற்பாட்டைப் பார்க்கின்ற பொழுது,  மனித சமூகத்தின் மீதான அன்பும் ஒத்துழைப்பும் பயிற்றுவிக்கப்படுவதைப் புரிந்து கொள்ளலாம்.

அதுபோல்,  பசி,  தாகத்தில் எல்லோரினதும் பங்கு கொள்ளல்,  நோன்பின் நேரம் போன்ற பொது ஒழுங்குகள் இவற்றின் மூலம் உயர்வு,  தாழ்வு வேறுபாடின்மை பயிற்றுவிக்கப்படுவதைக் காணலாம்.

எனவே,  தரபியத் என்பது சமகாலத்தில் ஒரு பொறிமுறையாகவும் மக்ஸதாகவும் காணப்படுகிறது. தர்பியத் மூலம் ஏனைய மகாஸித்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. எனவே, அது ஒரு பொறிமுறை,  தர்பியத் எல்லா சமூகங்களுக்கும் பொதுவான,  நிலையான,  கட்டாயமான பொறிமுறை என்ற வகையில் அது ஒரு மக்ஸதாகிறது.

அடுத்து,  நேரடியாக நோன்பின் மகாஸிதுகள் என்று இமாம்கள் பேசிய விடயங்கள் குறித்து கொஞ்சம் கவனம் செலுத்துவோம். குறிப்பாக அவை எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகின்றன? என்ற விடயம் மிகவும் முக்கியமானது. நோன்பின் மகாஸிதுகள் என்று பேசுகின்ற பொழுது,  பல்வேறு கண்ணோட்டங்களில் நின்று இமாம்கள் பல மகாஸிதுகளை அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். அவை எல்லாவற்றையும் இந்த இடத்தில் எடுத்தாள்வது எனது நோக்கமல்ல. மாற்றமாக மிகவும் முக்கியமானவை என்று நான் கருதக்கூடிய இரண்டு விடயங்களை மாத்திரம் இந்த இடத்தில் பேசலாம் என்று நினைக்கிறேன்.

முதலாவது தக்வா :- நோன்பின் தலையாய மக்ஸத் இதுதான். தக்வா என்றால் என்ன என்று பேசும்போது,  ஆரம்பகால இமாம்கள் அல்லாஹ் ஏவியவற்றை ஏற்று நடத்தலும் விலக்கியவற்றை தவிர்ந்து கொள்ளுதலும் என்றார்கள். வேறு சிலர் தக்வாவை விளங்கப்படுத்தும் போது,  தனக்கு தீங்கு ஏற்படாது தன்னைக் காத்துக் கொள்ளும் உளநிலை என்றார்கள். இதன் விளைவாகத்தான் ஒருவன் அல்லாஹ் ஏவியவற்றை ஏற்று நடத்தலும் விலக்கியவற்றை தவிர்ந்து நடத்தலும் நடைபெறுகிறது என்று விளக்கமளித்தனர். இந்த விளக்கங்களைத் தாண்டி கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனியின் விளக்கம் சற்று வித்தியானமானது. மிகவும் பொருத்தமானதாகவும் எனக்குத் தோன்றுகிறது. அவர் சொல்கிறார்(3) தக்வா என்பது ஒன்றைத் தவிர்ந்து கொள்ளும் எதிர்மறை உளநிலை அல்ல. மாற்றமாக எந்தப் புறத் தூண்டுதலும் இன்றி சுயமாய் ஒருவனை செயற்பட வைக்கும் ஒரு உளநிலை. தன் மனதுடன் தான் நீதியாய் நடக்கும் ஒரு உளநிலை என்றார்கள். நபியவர்கள் நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்து கொள் (திர்மிதி) என்றார்கள்.

இந்த ஹதீஸ் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்துக்குரிய,  அவசியமான செயலை செய்ய வேண்டும் என்பதையே குறிக்கிறது. தனது மனசாட்சிக்கு மாற்றமாக நடந்து கொள்ள முற்படக் கூடாது. பிறர் கண்ணுக்குப் புலப்படவில்லை,  யாரும் பார்க்கவில்லை,  யாருக்கும் தெரியாது என்பதெல்லாம் நாம் மனமுரண்டாக நடந்து கொள்ளக் காரணமாக இருந்துவிடக் கூடாது. அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுதல் அதாவது தக்வா என்பதன் பொருள் இதுதான் என கலாநிதி ரைசூனி அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில்தான் கீழ் வரும் நபிமொழியும் அமைந்திருக்கிறது. நபியவர்கள் கூறினார்கள் நோன்பைத் தவிரவுள்ள,  ஒரு மனிதனுடைய ஏனைய அனைத்து செயல்களும் அவனுக்குரியவை. ஆனால் நோன்பு எனக்குரியது,  நானே அதற்குக் கூலி வழங்குகிறேன். தனது ஆசையை,  உணவை,  பாணத்தை அவன் எனக்காக விட்டு விடுகிறான் என்றார்கள். (புஹாரி,  முஸ்லிம்)

நோன்பு என்பது,  அல்லாஹ்வுக்கும் குறித்த மனிதனுக்குமிடையில் அவர்கள் இருவரும் மாத்திரமே அறிந்த இரகசிய வணக்கம். இதில் போலியாக நடிக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே உண்மையாக இருந்தால் மட்டுமே நோன்பு என்ற கடமை சாத்தியமாகிறது. எனவே,  புறத் தூண்டல்கள் அன்றி உள்ளார்ந்த தூண்டலின் அடிப்படையிலேயே நோன்பு நோற்றல் நடைபெறுகிறது. இத்தகைய சுய தூண்டல் உளநிலையையே தக்வாவும் பிரதிபளிக்கிறது. அந்தவகையில் நோன்பு தக்வா என்ற மக்ஸதை மனிதனில் பயிற்றுவிக்கிறது என்பதையே இந்த ஹதீஸ் உணர்த்துவதாக புரிந்து கொள்ள முடிகிறது.

மய்மூன் இப்னு மிஹ்ரான் அவர்கள் கூறுகிறார்கள் ஒரு மனிதன் தன்னைத் தானே விசாரணை செய்து கொள்ளாதவரை அவன் தக்வா உள்ளவனாக இருக்க முடியாது என்றார்கள். (முஸன்னப் இப்னு அபீஷைபா) இந்தக் கூற்றும் தக்வா என்பது ஒரு பயிற்சியின் மூலமே பெற்றுக் கொள்ளப்பட முடியும் என்பதை உணர்த்துகிறது. நோன்பின் ஒவ்வொரு செயற்பாடும் மனிதன் தனது மனோஇச்சையின் பிரகாரம் அன்றி குறித்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு நடந்து கொள்வதற்கான பயிற்சியையே வழங்குகிறது.

எனவே,  தக்வா என்பது ஒரு ஆன்மபலம். அது மனிதனை சுயமாக செயற்பட வைக்கிறது. தனக்குத்தானே நீதியாக நடந்து கொள்ள வைக்கிறது. நம்பிக்கையுடன் ஒரு விடயத்தை எதிர்கொள்ள வைக்கிறது. பின்வாங்காமல் முன்வர வைக்கிறது. இதுதான் தக்வா. இந்த தக்வாவை மனிதனில் பயிற்றுவிப்பது தான் நோன்பின் நோக்கம். நோன்பின் செயற்பாடுகள் எல்லாம் இதற்கான தர்பியத்தாகவே அமைந்திருக்கின்றன. இந்த அனைத்து சிந்தனைகளையும் பிரதிபலிக்கின்ற வகையில்தான் அல்லாஹ்தஆலா இவ்வாறு கூறினான் உங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது நீங்கள் தக்வா உள்ளவர்களாக மாற வேண்டும் என்பதற்காக?” (பகரா – 183).

இரண்டாவது பாதுகாப்புக் கேடயம் :- நபியவர்கள் கூறினார்கள் நோன்பு ஒரு பாதுகாப்புக் கேடயம் என்றார்கள். (புஹாரி,  முஸ்லிம்) இமாம் இப்னு ஆஷுர் அவர்கள் இந்த ஹதீஸ{க்கு விளக்கமளிக்கும் போது இங்கு பாதுகாப்புக் கேடயம் என்று பொதுவாகத்தான் கூறப்பட்டிருக்கிறது. எதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது என்று குறிப்பாக எதுவும் வரையறுத்துச் சொல்லப்படவில்லை. எனவே இது எல்லாவிதமான பாதுகாப்பையும் குறிக்கும். அதாவது பாவங்களில் இருந்து பாதுகாப்பு,  மறுமை வேதனையில் இருந்து பாதுகாப்பு,  முறையற்ற உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாப்பு போன்ற பல்வேறு பரப்புகள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பை இந்த ஹதீஸ் குறித்து நிற்கிறது என்கிறார்.(4)

இந்த ஹதீஸ் கேடயம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறது. கேடயம் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு கருவி. அந்தவகையில் நோன்பு நோற்பதால் மனிதன் எந்த வகையான தீங்குகள்,  பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட முடியுமோ அவை அனைத்தையும் இந்த ஹதீஸ் குறிக்கிறது. அந்தவகையில் நோன்பு ஒரு தூண்டல் சக்தி மாத்திரமல்ல அது ஒரு பாதுகாப்பும் கூட. எனவே மனிதனை தீங்குகளில் இருந்து பாதுகாத்தல் என்பது நோன்பின் மற்றொரு மக்ஸத்.

நோன்பு எந்தவகையான பாதுகாப்பைத் தருகின்றது என்பதையும் அவ்வப்போது ஹதீஸ்களில் காணலாம். உதாரணமாக நபியவர்கள் கூறினார்கள் இளைஞர்களே,  உங்களில் குடும்பப் பொறுப்பை சுமக்கத் தகுதியானவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள். அது பார்வையைத் தாழ்த்தும். கற்பைப் பாதுகாக்கும். முடியாத போது நோன்பு நோற்கட்டும். அது அவரது உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் என்றார்கள். (புஹாரி,  முஸ்லிம்) இந்த ஹதீஸ் நோன்பு ஒரு மனிதனை பாலியல் ரீதியான தவறுகளில் இருந்து பாதுகாக்கிறது என்கிறது.

மற்றொரு உதாரணம்,  நபியவர்கள் கூறினார்கள் யார் ரமழானில் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ,  அவர் முன்னர் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடும் என்றார்கள். (புஹாரி,  முஸ்லிம்). இந்த ஹதீஸ் நோன்பு ஒரு மனிதனது மறுமை வாழ்வைப் பாதுகாக்கிறது என்கிறது.

பொதுவாக ரமழான் காலத்தில் ஷைத்தான் விலங்கிடப்படுகிறான். எனவே தனிமனிதனது பாதுகாப்பு மாத்திரமன்றி சமூகப் பாதுகாப்புக்கு அங்கு உத்தரவாதம் கிடைக்கிறது. குழப்பங்கள்,  பிளவுகள்,  சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு தடுக்கப்படுகிறது. தன்னுடன் ஒருவன் பிரச்சினைக்கு வர முற்பட்டால் கூட,  தான் நோன்பு நோற்றிருக்கிறேன் என்று கூறி தவிர்ந்து கொள்ளுமாறுதான் நபியவர்கள் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவனையும் உபதேசம் செய்திருக்கிறார்கள். இது வெறுமனே பாதுகாப்பு என்பது மாத்திரமல்ல,  நிரந்தரப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு தர்பியத்தாகவும் அமைகிறது.

எனவே நோன்பின் மகாஸிதுகள் ஒவ்வொன்றும்,  வணக்கவழிபாடுகளின் பிரதான மக்ஸதான தர்பியத்தை நிறைவேற்றக் கூடியனவாகவே அமைந்திருக்கின்றன. ரமழானில் இந்த உண்மைகளை உளப்பூர்வமாக உணர்ந்து செயற்பட அல்லாஹ் எம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக.

(1)          ரைஸுனி,  அஹ்மத் அப்துல் ஸலாம். (2016). மகாஸிதுல் இபாதாத்,  விரிவுரை இல.01. மொரோக்கோ: அல்மகாரிபிய்யா தொலைக்காட்சி சேவை.
(2)          கர்ராத்,  நூருத்தீன்.(2016). மின் மகாஸிதிஸ் ஸியாம் பில் இஸ்லாம். கட்டுரை. ஹுனா வஜ்தா வெப்தளம்.
(3)          ரைஸுனி,  அஹ்மத் அப்துல் ஸலாம். (2015). அஸ்ஸெளமு மத்ரஸதுத் தக்வா. உரை,  யூடியூப். வெளியீடு: ஹரகதுத் தௌஹீத் வல் இஸ்லாஹ்.
(4)          இப்னு ஆஷுர்,  முகம்மத் அத்தாஹிர். (1984). அத்தஹ்ரீர் வத்தன்வீர். தூனிஸிய்யா: அத்தாருத் தூனிஸிய்யா லின்நஷ்ர். பாகம் 02,  பக்கம் 158.

No comments:

Post a Comment