Friday, January 10, 2014

நபியவர்களது பணி குறித்து ஒரு நினைவு கூறல்

அல்-குர்ஆன் கூறுகிறது:நபியே! உங்களை சாட்சியாளராகவும், சுபசோபனம் சொல்பவராகவும், அல்லாஹ்வின் அனுமதியுடன் அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவிளக்காகவும் நாம் அனுப்பி வைத்திருக்கிறோம் “. (அஹ்ஸாப் – 45,46)

அல்-குர்ஆன் நபியவர்களது பணியின் வடிவங்களை விளங்கப்படுத்த பல சொற்களைப் பயன்படுத்தியிருக்கின்றது. அவற்றின் முக்கியமான பகுதிகளை இந்த வசனத்தில் காணலாம்.

முதலாவதாக ஷாஹித்எனும் சொல், இது சாட்சியாளன் என்ற பொருளைக் குறிக்கிறது. அதாவது இஸ்லாம் எல்லா மனிதர்களையும் சென்றடைந்தது, என்பதற்கு மறுமையில் நபியவர்களே சாட்சியாளர். எவரும் எனக்கு இஸ்லாத்தின் வழிகாட்டல் கிடைக்கவில்லை என்று வாதம் செய்யும் நிலை ஏற்படக் கூடாது. அந்த வகையில் எல்லா மனிதர்களையும் நோக்கி இஸ்லாத்தை முன்வைத்தல் அல்லது எல்லோருக்கும் இஸ்லாம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதற்காக செயற்படுதல்,  நபியவர்களது பணியின் ஒரு வடிவம்.

இரண்டாவது முபஷ்ஷிர்எனும் சொல், இது சுபசோபனம் சொல்பவன் என்ற பொருளைத் தருகின்றது. சுபசோபனம் சொல்லுதல் என்றால் என்ன? அடிப்படையில் சுபசோபனம் என்பது ஒரு விடயத்தின் சிறப்பபைச் சொல்லுதல், அதன் பயனைச் சொல்லுதல், நன்மையைச் சொல்லுதல், ஏற்படும் நல்ல விளைவைச் சொல்லுதல்.

சிலர் முபஷ்ஷிர்’  என்பது நன்மையை ஏவுகின்றவர் என்ற பொருளையும் குறிக்கும் என்கின்றனர். அந்த வகையில் எது சரியானது? எது சொல்லப்பட வேண்டியது என்பதை தெளிவுபடுத்துவதும் இதில் உள்ளடங்குகிறது.

எனவே உலகில் மனிதர்கள் செய்ய வேண்டியது என்ன? அதன் பயன்கள் என்ன? விளைவுகள் என்ன? இஸ்லாம் உலகில் என்ன செய்யப்போகிறது? அதனால் உலகம் என்ன பலனை அடையப்போகிறது? அதனைக் கடைபிடிப்பவர்கள் என்ன நன்மைகளைக் கண்டுகொள்ளப் போகிறார்கள்? என்பதை விளங்கப்படுத்துவது நபியவர்களது பணியின் மற்றொரு வடிவம்.

மூன்றாவது சொல் நதீர்இதன் பொருள் எச்சரிப்பவன், இங்கு எச்சரிப்பவன் என்பதன் கருத்து,  எதனையிட்டு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் அவ்வாறில்லாத போது ஏற்படக்கூடிய தீய விளைவுகளையும் தெளிவுபடுத்தக்கூடியவர் என்பதாகும்.

அந்த வகையில் உலகில் மனிதன் செய்யக்கூடாதது எது? அதனை ஏன் செய்யக்கூடாது? செய்வதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் என்ன? உலகம் எத்தகைய ஒரு நஷ்டத்தை அதனால் காணப்போகிறது? செய்யக்கூடாததை செய்யும் மனிதனுக்கு என்ன நேரப் போகிறது? போன்ற விடயங்கள் குறித்த தெளிவை வழங்குவது நபியவர்களது பணியின் இன்னுமொரு வடிவம்.

நான்காவது சொல் தாஇஅழைப்பாளன் என்பது இதன் பொருள். இந்த இடத்தில் அழைப்பாளன் என்பது தன்னிடமிருக்கின்ற ஒரு முழுமையான வேலைத் திட்டத்தை நோக்கி ஏனையவர்களை அழைத்தலைக் குறிக்கின்றது. அந்த வகையில் நபியவர்களுக்கு வழங்கப்பட்ட முழுமையான வாழ்க்கை முறைதான் இஸ்லாம, அந்த வாழ்க்கை முறையை நோக்கி எல்லா மனிதர்களையும் அழைக்கின்ற பணி, நபியவர்களது பணிகளுள் மற்றுமொன்றாகும்.

ஐந்தாவது ஸிராஜ் முனீர்ஒளிதரக் கூடிய விளக்கு என்பது இதன் பொருள். நபியவர்கள் எல்லோருக்கும் ஒளிதரக்கூடிய விளக்காகத் தொழிற்பட வேண்டும், இருளான இடத்தில் ஒளியேற்றப்பட்டால் தட்டுத் தடுமாறியவர்கள் எல்லாம் சீராகச் செயற்படுவார்கள். இதுதான் நபியவர்களது பணி. ஒரு வழிகாட்டியாகத் தொழிற்படல், எல்லோருக்கும் நல்லதைக் காட்டிப் கொடுத்தல், தீயதிலிருந்து பாதுகாத்தல். இந்த விளக்கு உயர்ந்து நிற்கின்ற பொழுதுதான் முழு உலகிற்கும் ஒளிகிடைக்கிறது. அத்தகைய ஒரு வழிகாட்டலை வழங்குவது நபியவர்களது பணியின் இன்னுமொரு வடிவம்.

எல்லா மனிதர்களையும் நோக்கிச் செயற்படுதல், நல்ல விளைவுகளை எடுத்துக் காட்டல், தீய விளைவுகளையிட்டு எச்சரிக்கை செய்தல், ஒரு வாழ்க்கை முறையை நோக்கி அழைத்தல், முழு உலகிற்கும் வழிகாட்டியாகத் தொழிற்படல்,  இதுதான் நபியவர்களது பணி. இந்தப் பணிதான் அவர்களுக்குப் பின்னர் அவர்களது உம்மத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள பணி.

இதே விடயத்தைத் தான் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் வேறு வார்த்தைகளில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள். நாம் மக்களை எதனை நோக்கி அழைக்கிறோம் என்று பேசுகின்ற பொழுது,  “சத்தியத்தை நோக்கி மனித இனத்தை வழிநடாத்துதல், எல்லா மனிதர்களுக்கும் நல்லவற்றைக் காட்டிக் கொடுத்தல், முழு உலகையும் இஸ்லாம் என்ற சூரியனால் ஒளிபெறச் செய்தல்என்றார்கள்.

நபியவர்கள் பிறந்த மாதம் ரபீஉல் அவ்வல்,  இந்த மாதத்தில் அவர்களது பணியை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்வதற்கான சந்தர்ப்பமாக இதனை அமைத்துக் கொள்ள முயற்சிப்போம். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக!

No comments:

Post a Comment