Monday, January 20, 2014

நபியவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுதல் குறித்து இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள்…

நபியவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுவது பித்அத் என்பது சிலரது அபிப்ராயமாகும். ஏனெனில்,  அது நபியவர்கள் காலத்தில் காணப்படாத ஒரு செயற்பாடு என்பதுடன் அவர்களுக்குப் பின்னர் ஸஹாபாக்களும் அவ்வாறான ஒரு செயற்பாட்டில் ஈடுபடவில்லை, அது மார்க்கத்தில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஒரு விடயம் என்கின்றனர்.

ஆனால் வேறு சிலர்,  நபியவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுதல் ஒரு வாஜிபான செயற்பாடாகும் என்கின்றனர். ஏனெனில்,  இது நபியவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பையும்,  கண்ணியத்தையும்,  பற்றையும் வெளிப்படுத்துகின்ற ஒரு விடயமாகும். நபியவர்கள் மீது அன்பும் கண்ணியமும் பற்றும் கொள்வது எல்லா முஸ்லிம்கள் மீதும் வாஜிபானதாகும் என்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பான மிகச் சரியான நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள,  நாம் இரண்டு கேள்விகளின் அடியாக இவ்விடயத்தை அணுகவேண்டும். ஒன்று நபியவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கான தூண்டல் காரணி எது?  மற்றது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வடிவம் எது?

கொண்டாட்டத்திற்கான தூண்டுதல்,  நபியவர்கள் மீதான அன்பாகவும் கண்ணியமாகவும் அமையும் அதேவேளை கொண்டாட்ட வடிவம் என்பது பயனுள்ள ஒரு கற்றல் நடவடிக்கையாகவோ அல்லது ஏழைகளுக்குப் பயனளிக்கும் ஸதகாவாகவோ அல்லது இதுபோன்ற நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மார்க்கம் அனுமதித்த ஒரு விடயமாகக் காணப்படுகின்ற போது,  அந்தக் கொண்டாட்டம் அனுமதிக்கப்பட்ட,  நன்மை தருகின்ற ஒரு செயலாக மாறுகின்றது.

அபூ லஹப் பற்றி வந்துள்ள ஒரு சம்பவம் இதற்கு ஆதாரமாக அமைகிறது,  நபியவர்களது பிறப்பு பற்றிய செய்தியை சுவைபா எனும் அடிமைப்பெண் வந்து சொன்ன போது,  அந்த சந்தோஷத்தின் காரணமாக அபூ லஹப் அந்த அடிமைப் பெண்ணை விடுதலை செய்தான். இதன் காரணமாக அபூ லஹபுக்கான வேதனை கொஞ்சம் தளர்த்தப்பட்டதாக அந்த சம்பவம் கூறுகிறது – புஹாரி -

அடுத்து,  நபியவர்களது பிறந்த தினத்தைக் கொண்டாடுதல் என்ற அணுகுமுறை நபியவர்கள் காலத்தில் ஏன் காணப்படவில்லை? அல்லது ஸஹாபாக்கள் ஏன் செய்யவில்லை? என்பது உண்மையில் அக்கால வாழ்க்கைமுறை மிகவும் எளிமையானதாகக் காணப்பட்டமையே அதற்கான மிகப் பிரதானமான காரணமாகும். தற்காலத்தைப் போன்ற கொண்டாட்ட வழிமுறைகள் பற்றி அவர்கள் சிந்திக்கத் தலைப்படவில்லை. தமது உணர்வுகளை ஒரு வார்த்தை ஊடாகவோ அல்லது ஒரு அன்புப் பரிமாற்றத்தின் ஊடாகவோ வெளிப்படுத்துவது அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

எனவே,  தூண்டல் காரணி ஷரீஅத்திற்கு உற்பட்டதாக அமையும்போது, அதனை வெளிப்படுத்தும் வடிவமும் ஷரீஅத்திற்கு முரண்படாததாக இருக்கின்றபொழுது,  அதனைக் கூடாது என்று சொல்ல முடியாது.

மாற்றமாக,  கொண்டாட்டத்திற்கான தூண்டுதல்,  தனது பெற்றோர் அல்லது பரம்பரையினரிடமிருந்து பாரம்பரியமாகப் பெற்ற ஒரு விடயத்தைச் செய்தல் என்பதாகவோ அல்லது தனது பெருமையைப் பறைசாட்டுவதற்காக,  மக்கள் தனது செயலைப் பற்றி பெருமையாகப் பேச வேண்டும் என்பதற்காகவோ அமைகின்ற,  அதேவேளை கொண்டாட்ட வடிவமும் அல்லாஹ்தஆலா அனுமதிக்காத வீண் கேளிக்கைகளாக,  ஆட்டம் பாட்டங்களாக, அடிப்படையான கடமைகளைக் கூட மறந்து போகும் அளவுக்கு,  பிரயோசனமற்ற முறையில் நேரங்களை வீணடிக்கின்ற வகையில்,  ஆண்களும் பெண்களும் வரையறையின்றி கலந்து விடுகின்ற அமைப்பில்,  இஸ்லாம் ஹராமாக்கியவைகளும் குற்றச் செயல்களும் நடைபெறுகின்ற வகையில் காணப்படும் எனின், இந்தக் கொண்டாட்டம் நிச்சயமாக ஹராமானதாகும். இதனை மேற்கொள்பவரும் சரி,  கலந்து கொள்பவரும் சரி பெரும் பாவத்தையே சம்பாதித்துக் கொள்வார்கள். நிச்சயமாக இது நபியவர்களை அவமானப்படுத்தும் ஒரு செயலாகவே அமைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே,  இந்த விடயத்தில் முஸ்லிம்கள் கவனத்தில்கொள்ள வேண்டிய விடயம் இதுதான்,  வருடம் தோறும் வரும்,  நபியவர்களது பிறந்த தினத்தை கொண்டாடுகின்ற போது,  அது அவரது வாழ்வை அறிந்து கொள்வதாக,  பண்பாடுகளைக் கற்றுக் கொள்வதாக,  சுன்னாக்களை விளங்கிக் கொள்வதாக,  தமக்கு மத்தியில் சத்தியத்தையும் பொறுமையையும் போதித்துக் கொள்வதாக,  நபியவர்களது வாழ்வை முன்மாதிரியாகக் கொள்வதாக,  அமைத்துக் கொள்வதே மிகவும் பொறுத்தமானதாகும்.

அல்குர்ஆன் கூறுகிறது
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் எதிர்பார்த்து, அவனை அதிகமாக திக்ர் செய்வோர்க்கு நபியவர்களில் சிறந்த முன்மாதிரி இருக்கிறது, - அஹ்ஸாப் – 21.

ஹஸனுல் பன்னா
ஜரீததுல் இஃவான்

ஹி. 1352

1 comment:

  1. ஏங்க பிறந்த நாள் கொண்டாடக் கூடாது
    ஏங்க புத்தாண்டு கொண்டாடக் கூடாது அதில் என்ன தவறு என்று ஒலிக்கும் குரல்களையும் எழுதும் விரல்களையும் பார்க்கும் போது இந்த ஹதீஸ் நினைவுக்கு வருகிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்ன முன்னறிவிப்புகள் எப்படி பொய்த்துப் போக முடியும்?. எனது நபி உண்மையை மட்டும் சொன்னார்

    "உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்கள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறெவரை?' என்று பதிலளித்தார்கள்.

    அறிவிப்பாளர் :அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: புகாரி 3456

    ReplyDelete