Monday, March 7, 2016

சிந்தனைப் பாரம்பரியங்களுக்கிடையே சமநிலை காணுதல்

இமாம் ஷாபியும் இமாம் ஹஸனுல் பன்னாவும் 

இது ஆய்வுக்குரிய ஒரு தலைப்பு. ஆனாலும் இங்கு நான் ஆய்வொன்றை மேற்கொள்ளவில்லை. மாற்றமாக அடிக்கடி என்னில் தோன்றி மறைந்த, சிந்தனை உதிப்பொன்றை மாத்திரமே பரிமாறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இஸ்லாமிய சட்டக்கலையைக் கற்பிக்கத் தொடங்கிய நாள் முதல் அதிலும் குறிப்பாக மத்ஹபுகள் பற்றி அண்மையில் அடிக்கடி விரிவுரைகள் நடாத்திய வேளைகளில் மனதில் இந்த விடயம் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது.

இமாம் ஷாபியின் சட்ட சிந்தனையைப் பற்றி எழுதியுள்ள நவீன ஆய்வாளர்கள் எல்லாம் ஒருமித்துப் பேசிய ஒரு உண்மை என்னவெனின்,  இமாம் ஷாபியின் சட்ட சிந்தனை,  அதற்கு முன்னர் தோன்றி வளர்ந்த ஹிஜாஸிய சட்ட சிந்தனையையும் கூபா சட்ட சிந்தனையையும் இணைத்த தனித்துவமான ஒரு சட்ட சிந்தனை என்பதாகும். இந்தக் கருத்து பல நூல்களில் வலியுறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது,  அந்தப் புள்ளியின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அதன் இரகசியம் என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள சிறியதொரு முயற்சி செய்தேன்.

உண்மையில் இமாம் ஷாபியுடைய பணியை சற்று ஆழ்ந்து பார்க்கின்ற பொழுது,  கிளைச் சட்டங்களைப் பெறுதல்,  அவற்றைக் கற்பித்தல்,  விளக்கமளித்தல் என்ற எல்லைகளைத் தாண்டி,  அல்குர்ஆனையும் சுன்னாவையும் மையப்படுத்திய சட்டவாக்கத்திற்கான பொதுச் சிந்தனை ஒன்றை இமாம் ஷாபி முன்வைத்திருக்கிறார். அதாவது இமாம் ஷாபி அவர்கள் கிளைச்சட்டங்களை மக்களுக்குப் போதிக்கும் ஒரு சட்ட அறிஞருடைய எல்லையுடன் மாத்திரம் தனது பணியை சுறுக்கிக் கொள்ளவில்லை,  அதற்கப்பால் சென்று கிளைச்சட்டங்கள் மூலாதாரங்களிலிருந்து பெறப்படுவதற்கான பொது விதிகளையும் அடிப்படைகளையும் இட்டார்,  

அப்பொது விதிகள் அவருக்கு முன்னைய மரபுகளை இணைக்கும் பாலமாக அமைந்திருந்தது. அர்ரிஸாலாஎனும் அவரது நூல் இதற்கான முதல் முயற்சியாகும். இஸ்லாமிய சட்ட சிந்தனைகளின் அடிப்படைகளைப் பேசும் முதல் நூலாக ரிஸாலா இனம் காணப்படுகிறது. ரிஸாலாவுக்கு வெளியில் இன்னும் பல நூல்களிலும் சட்டவாக்கத்திற்கான பொதுச் சிந்தனையை அவர் விளங்கப்படுத்தியுள்ளார்.

இமாம் ஷாபி அவர்கள் இத்தகைய ஒரு முயற்சியை மேற்கொண்டதன் பின்புலம் என்ன என்பதை நோக்கினால்,  ஏற்கனவே குறித்துக் காட்டப்பட்ட ஹிஜாஸிய,  கூபா சட்ட சிந்தனைகள் இரண்டும்,  அன்றைய நாட்களில் அல்குர்ஆனையும் சுன்னாவையும் மையப்படுத்திய சட்டவாக்கத்திற்கான பிரதானமான இரு அணுகுமுறைகளாகக் காணப்பட்டன. ஹிஜாஸ், கூபா என்ற நில எல்லைகளைத் தாண்டி இரு வகையான சட்ட அணுகுமுறைகளும் இஸ்லாமிய சாம்ராஜ்ய நிலப் பரப்பு எங்கும் பரந்து காணப்பட்டன என்பதே உண்மையாகும். 

அவற்றில் ஒன்று பகுத்தறிவுவாத அணுகுமுறை. இதனைத்தான் கூபா சட்ட சிந்தனை என்கிறோம். உண்மையில் பகுத்தறிவுவாதம் கூபாவில் மாத்திரம் காணப்பட்ட ஒன்றல்ல. பிரதானமாக இந்த அணுகுமுறை கூபாவை மையப்படுத்தியிருந்தது. அடுத்தது வாக்கியவாத அணுகுமுறை. இதனைத்தான் ஹிஜாஸ் சட்ட சிந்தனை என்கிறோம். வாக்கியவாதமும் ஹிஜாஸில் மையம் கொண்டிருந்தாலும் ஏனைய இடங்களிலும் பரவியிருந்தது.

பகுத்தறிவு வாத,  வாக்கியவாத அணுகுமுறைகளின் வேறுபாட்டு மையம் எது எனின் அல்குர்ஆனையும் சுன்னாவையும் விளங்க முற்படும்போது அல்லது அவற்றினை மையப்படுத்தி சட்டவாக்கத்தில் ஈடுபடும் பொழுது,  ‘தஃலீல்எனும் காரணங்களைக் கண்டறிந்து அதனடிப்படையில் சட்டவாக்கம் மேற்கொள்ளப்படல் வேண்டுமா? அல்லது காரணங்களைக் கண்டறியும் முயற்சியைத் தவிர்த்து நேரடியாக சட்ட வசனங்கள் பேசும் கருத்தில் நின்று மாத்திரம் சட்டவாக்கம் மேற்கொள்ளப்படல் வேண்டுமா? என்ற இந்த மையப் புள்ளியில் நின்று தான் இந்த இரு அணுகு முறைகளினதும் வேறுபாட்டுப் பரிமாணங்கள் அனைத்தும் எழுகின்றன.

தஃலீல்எனும் காரணம் கண்டறியப்படும் பொழுது,  அந்தப் காரணமே மையப் பொருளாக இருக்கும். காரணத்தை மையப்படுத்தியே சட்டங்களில் மாற்றங்கள் நிகழும். சில சமயங்களில் நேரடி வாக்கியக் கருத்துக்கு மாற்றமாகவும் சட்டங்கள் அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் வணக்க வழிபாடுகளைப் பொறுத்தவரையில் அவற்றிற்கும் அல்லாஹ் காரணங்களை வைத்திருந்தாலும் கூட,  அவற்றினடிப்படையில் தொழிற்படுவதை விடவும் நேரடி வாக்கியப் பொருள் விளக்கத்தின் அடிப்படையிலேயே தொழிற்படல் வேண்டும் என பகுத்தறிவாத அணுகுமுறையாளர்கள் கருதுவர். காரணங்கள் கண்டறியப்படுதல் தவிர்க்கப்படும்பொழுது,  நேரடி சட்ட வசனங்களே மையப் பொருளாக இருக்கும். அவற்றின் நேரடி பொருள் விளக்கமே சட்டமாக அமையும்.

இங்கு பகுத்தறிவுவாத அணுகுமுறை காரணத்தைக் கண்டறிவதன் அடிப்படையில் சட்டவாக்கத்தை மேற்கொண்டது. அதேவேளை வாக்கியவாத அணுகுமுறை காரணத்தைக் கண்டறிவதைத் தவிர்த்து நேரடி பொருள் விளக்கத்தின் அடிப்படையில் சட்டவாக்கத்தை மேற்கொண்டது. இந்த இரு அணுகுமுறைகளுக்குள்ளேயும் மிதவாதப் போக்கும் இருந்தது. தீவிரவாதப் போக்கும் இருந்தது. அதாவது மற்ற அணுகுமுறைக்கு நெருக்கமான போக்கைக் கடைபிடித்தவர்களும் இருந்தார்கள். மற்ற அணுகுமுறையை விட்டும் மிகவும் தூரமான அணுகுமுறையைக் கடைபிடித்தவர்களும் இருந்தார்கள்.

இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தைக் கோடிட்டுக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். மேலே குறிப்பிடப்பட்ட பகுத்தறிவுவாத,  வாக்கியவாத அணுகுமுறைகளைப் பொறுத்தவரை,  அவை முறையானதொரு ஒழுங்கில் காணப்பட்டது என்று சொல்வதற்கில்லை. அங்கு விதிகளும் முறைமைகளும் இருந்தன. ஆனால் அவற்றிற்கு தெளிவான வரையறைகள் இருக்கவில்லை. இமாம்களது மூளைகளில்தான் அவை வாழ்ந்தன. தெளிவாக எழுத்துருப் பெற்றிருக்கவில்லை. 

இதனால் ஒரு புதிய சட்ட விளக்கத்தை முன்வைப்பதற்கு ஒரு பொது முறைமை பேணப்படவில்லை. எனவே இரு அணுகுமுறைக்குள்ளேயும் மிதவாத,  தீவிரவாத நிலைகள் இயல்பாகவே தோற்றம் பெற்றன. இந்த இடத்தில்தான் இமாம் ஷாபிஈ யின் வகிபங்கு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சட்டவாக்க விதிகளில்,  முறைமைகளில் வரையறையற்ற நிலை சட்டவாக்கத் தொழிற்பாட்டில் பாரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட முடியும். இங்குதான் இமாம் ஷாபி அவர்கள் சட்டவாக்கத்திற்கான பொது சிந்தனையை ரிஸாலாவின் மூலம் முன்வைக்கிறார்கள். அதன் மூலம் பகுத்தறிவுவாதத்தின் தீவிர நிலைகள் கட்டுப்படுத்தப்பட்டதுடன்,  வாக்கியவாதத்தின் தீவிர நிலைகளும் கட்டுப்படுத்தப்பட்டன.

இமாம் ஷாபியின் இந்த முன்வைப்பு சூன்யத்திலிருந்து தோன்றவில்லை. மாற்றமாக நீண்டகால சட்டத்துறை அனுபவத்திலிருந்து தோன்றியது. இமாம் ஷாபி அவர்கள் மேற்சொன்ன இரு அணுகுமுறைகளையும் கற்றவர்,  மக்கா,  மதீனா நகரங்களில் இமாம் மாலிக் போன்றவர்களிடம் கற்றது போல் கூபாவில் இமாம் முஹம்மத் இப்னுல் ஹஸன் அஷ்ஷைபானி போன்றோரிடமும் கற்றார்கள். உண்மையில் அவர் கூபா சென்று திரும்பியதன் பின்னர் தான் ரிஸாலாஎன்ற நூலை எழுதியதாக வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. அதன் மூலம் இரண்டு அணுகுமுறைகளினது நல்ல விடயங்களைப் பாதுகாத்து,  தீவிரங்களைத் தவிர்த்து,  ஒரு புதிய சிந்தனையை நோக்கி இமாம் ஷாபி அவர்கள் நகர்ந்திருக்கிறார்கள்.

இங்கு இமாம் ஷாபி அவர்கள் நடைமுறையில் வாழ்ந்த இரண்டு சிந்தனைப் பாரம்பரியங்களிடையே சமநிலை கண்டிருக்கிறார்கள். அங்கு அவர் எந்தப் பாரம்பரியத்தையும் அடிப்படையில் பிழை காணவில்லை. இரண்டு பாரம்பரியங்களும் சந்திக்கும் புள்ளிகளை இனம் கண்டார். அவை இரண்டினதும் தீவிர நிலைகளை மறுதலித்தார். அதன் மூலம் இஸ்லாமிய சட்டவாக்கத்தை நெறிபிறழ்விலிருந்து பாதுகாத்தார்.

இதே வகையானதொரு பங்களிப்பைத்தான்,  இமாம் ஹஸனுல் பன்னாவிலும் நான் காண்கிறேன். இருவேறுபட்ட சிந்தனைப் பாரம்பரியங்கள், அணுகுமுறைகளுக்கிடையே சமநிலையைக் காண்பதில் இருபதாம் நூற்றாண்டில் வெற்றி கண்டவர்களில் இமாம் ஹஸனுல் பன்னாவுக்கு தனியானதொரு இடமிருக்கிறது. நம்பிக்கை மற்றும் பண்பாட்டியல் தளத்தில் சூபித்துவ அணுகுமுறைக்கும்,  ஸலபிய அணுகுமுறைக்குமிடையே சமநிலை காண்பதிலும் சரி,  சட்ட சிந்தனைத் தளத்தில் மத்ஹப்சார் அணுகுமுறைக்கும் குர்ஆன் சுன்னா சார் அணுகுமுறைக்குமிடையே சமநிலை காண்பதிலும் சரி இமாம் ஹஸனுல் பன்னா பெரிதும் வெற்றி கண்டிருக்கிறார்கள். 

இது குறித்து முன்னர் பல தடவைகள் எழுதப்பட்டிருந்தாலும் (பார்க்க : இருபது அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுதல்,  பயணம். இதழ் 46 ) இங்கு ஒரு சில விடயங்களைக் கோடிட்டுக் காட்டலாம் என நினைக்கிறேன். 

நம்பிக்கை மற்றும் பண்பாட்டியல் தளத்தில் சூபித்துவ பாரம்பரியத்திற்கும்,  ஸலபிய பாரம்பரியத்திற்கும் இடையே நீண்ட கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. அல்லாஹ் எங்கிருக்கிறான்?  அவனது பண்புகளைப் புரிந்து கொள்வது எவ்வாறு?  இல்ஹாம்,  கஷ்ப் போன்ற விடயங்களை எவ்வாறு நோக்குவது?  தாயத்து,  மந்திரித்தல் என்பன ஆகுமா?  வஸீலா தேடுதல்,  கபுருகளைத் தரிசித்தல், ஸாலிஹான மனிதர்களை நேசித்தல் போன்றவற்றை எவ்வாறு புரிந்து கொள்வது?  போன்ற பல்வேறு விவகாரங்களில் குறித்த இரு பாரம்பரியங்களும் ஏற்பு மறுப்பு என்ற இருதுருவங்களில் நிற்பதைக் காணலாம். இங்குதான் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இத்தகைய விவகாரங்களைக் கையாள்வதற்கான பொதுச் சிந்தனையை முன்வைத்தார்கள். இந்த இடத்தில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இந்த இரு பாரம்பரியங்களையும் அடிப்படையில் மறுதலிக்கவில்லை. அவற்றிடையே சந்திக்கும் புள்ளிகளை அழகாக எடுத்துக் காட்டினார்கள். இதற்கான சான்றினை அவரது  மஜ்மூஅதுர் ரஸாஇல் எனும் கட்டுரைத் தொகுப்பிலே மிகத் தெளிவாகக் காணலாம்.

இதே அணுகுமுறையை சட்ட சிந்தனைத் தளத்திலும் காணலாம். மத்ஹப் சார் பாரம்பரியத்தையும் குர்ஆன் சுன்னா சார் பாரம்பரியத்தையும் இணைக்கும் பொதுச் சிந்தனையை,  இமாம்கள்,  கருத்து வேறுபாடுகள்,  இஜ்திஹாத், தக்லீத் போன்ற பல்வேறு விவகாரங்களை மையப்படுத்தி இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் விளங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

இங்கு பொதுச் சிந்தனை முன்வைப்பின் போது இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் குறித்த எந்தப் பாரம்பரியத்தையும்,  அணுகுமுறையையும் மறுதலிக்கவுமில்லை. இரத்துச் செய்யவுமில்லை. மாற்றமாக இரண்டையும் ஏற்று அதன் தனித்தன்மைகளை அங்கீகரித்து,  அவற்றின் தீவிரங்களைக் களைந்து பொது உடன்பாட்டுப் புள்ளிகளுக்கு வருவதே அவரது அணுகுமுறையாக இருந்திருக்கிறது.

எனவே,  பாரம்பரியங்களுக்கிடையே சமநிலை காணுதல் எனும் சிரமமான ஆனால் உன்னதமான ஒரு பணி இமாம் ஷாபி,  இமாம் ஹஸனுல் பன்னா ஆகிய ஆரம்ப கால,  நவீன கால இரு இமாம்கள் மூலம் நடைபெற்றிருக்கின்றமை அவர்களிடையேயான சிந்தனை ஒற்றுமையைப் பிரதிபளிக்கின்றது.

இத்தகைய ஒரு பணியை இவர்கள் ஏன் செய்ய வேண்டும்?  என்ற ஒரு கேள்வியை நான் கேட்டுப் பார்க்கிறேன். இதற்குப் பலநூறு பதில்கள் அளிக்கப்பட முடியும் என்றிருப்பினும் எனக்கு மிகவும் ஹைலைட்டாகத் தோன்றிய இரு விடயங்களை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

முதலாவது,  சமூகத்தின் வித்தியாசப்பட்ட போக்குகளிடையே சமநிலை காணுதல் என்பது ஷரீஆவின் பொது மகாஷிதுகளை அடைந்து கொள்வதற்கான வழியாகும். இமாம் ஷாபி,  இமாம் ஹஸனுல் பன்னா ஆகிய இருவரது முயற்சிகளையும் அடைவுகளையும் பார்க்கும் பொழுது அவர்கள் மிகத் தெளிவாக ஷரீஆவின் மகாஷிதுகளை அடையும் வகையிலே இந்த சமநிலைப்படுத்தலைக் கையாண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. 

உதாரணமாக நம்பிக்கை மற்றும் பண்பாட்டியல் தளத்தில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் செயலைத் தூண்டும் நம்பிக்கை குறித்துப் பேசியிருக்கிறார்கள். உள்ளத்தை உயிர்ப்பித்தலைப் பேசியிருக்கிறார்கள். உளப் போராட்டம்,  தொடர்ந்த செயற்பாடு,  இயங்குதன்மை போன்ற பல விடயங்களைக் குறித்துக் காட்டியிருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் நம்பிக்கை மற்றும் பண்பாடு சார் மகாஷிதுகள் என்பதில் சந்தேகமில்லை. இவைகளை அடைந்து கொள்ளும் வகையிலேயே உடன்பாட்டுப் புள்ளிகளை இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் இனம் காட்டியிருக்கிறார்கள்.

அதுபோல் முன்னோர்கள் பற்றிய நல்லெண்ணம்,  தஜ்தீத் எனும் புனர்நிர்மாணம்,  சமூக ஒற்றுமை,  பரஸ்பர ஒத்துழைப்பு,  கூட்டு செயற்பாடு,  சிந்தனைச் சுதந்திரம் போன்ற பல்வேறு மகாஷிதுகளை அடையும் வகையிலேயே சட்ட சிந்தனைகள் தொடர்பிலான பொது சிந்தனை முன்வைப்பு காணப்படுகிறது.

எனவே,  சிந்தனைப் பாரம்பரியங்களுக்கிடயே சமநிலை காணுதல் என்பது ஒரு சூழ்நிலை சார் தேவையோ அல்லது ஒருவரது தனிப்பட்ட விருப்புகள் சார்ந்ததோ அல்ல. மாற்றமாக இஸ்லாமிய ஷரீஆவின் மகாஷிதுகளை அடைந்து கொள்ளும் ஒரு செயற்பாடாகும். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே இரு இமாம்களினதும் முயற்சியும் பணியும் அமைந்திருந்தன.

இரண்டாவது,  கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் குறிப்பிடுவது போல்,  ‘தர்ஷீத்எனும் சமூக வழிநடாத்தல் என்பதன் பொருளே என்னவெனின் வேறுபட்ட சிந்தனைப் பாரம்பரியங்களுக்கிடையே சமநிலை வாழ்வைக் கற்றுக் கொடுப்பதாகும். அந்தவகையில் இது ஒரு அடிப்படைப் பணி. அறிஞர்கள் மீது கடமையான ஒரு பணி. அதனைத்தான் இமாம் ஷாபியும் இமாம் ஹஸனுல் பன்னாவும் செய்திருக்கிறார்கள். ஒரு சமூகம் இவ்வாறுதான் வழிநடாத்தப்படல் வேண்டும். ஒருபோதும் ஒரு தீவிரத்தை மறுதலித்து மற்றோர் தீவிரத்தை நோக்கி சமூகத்தை இழுத்துச் சென்றுவிடக் கூடாது. சமூகத்தைக் காப்பாற்றுகிறோம்,  சமூகத்திற்கு நன்மை செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு பலர் தவறு விடுகின்ற இடம் இதுதான். எனவே,  சமநிலை காணுதல் ஒரு அடிப்படையான சமூக வழிகாட்டுதல் அணுகுமுறை என்ற வகையிலேயே இரு இமாம்களும் இந்த அணுகுமுறையைக் கடைபிடித்திருக்கிறார்கள்.

இறுதியாக,  ஒரு சிறு ஆலோசனையுடன் இந்தப் பத்தியை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன். இங்கு இந்த இரு இமாம்களினதும் அணுகுமுறை குறித்துப் பேசப்பட்டமை வெறுமனே ஒரு சிலாகிப்புக்கு அல்ல,  அல்லது ஒரு சிந்தனைச் சுவைக்கு அல்ல. மாற்றமாக இன்றைய எமது சிந்தனை,  பண்பாடு மற்றும் தஃவா தளத்தில் இந்த அணுகுமுறையின் அவசியத்தை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனை நோக்கிய காத்திரமான செயல்சார் முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பதற்காகவே,  இது குறித்து இங்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. இன்றைய சிந்தனைச் சமர்களுக்குள்ளே பல்வேறு சிந்தனைப் பாரம்பரியங்கள் முட்டி மோதுகின்றன. இவை ஒன்றை ஒன்று எதிரியாக நோக்குகின்ற நிலையிலிருந்து மீண்டு வர வேண்டும். ஒரு கருத்தியலின் இருவேறு தீவிர நிலைகள், பல சமயங்களில் அவைதான் மிகவும் சரியானவை என்பது போல் விவாதிக்கப்படுகின்றன. அவ்வாறன்றி நிதானமாக நின்று எல்லாப் பாரம்பரியங்களிலும் உள்ள தீவிரங்கள் தவிர்க்கப்பட்டு,  இணைப்புப் புள்ளிகள் இனம் காணப்படல் வேண்டும். அதனை நோக்கி மக்கள் வழி நடாத்தப்படல் வேண்டும். 

இன்றைய சகவாழ்வு சிந்தனையினதும் தனித்துவச் சிந்தனையினதும் சமநிலை தேடல் வேண்டும். தேசத்தினதும் உம்மத்தினதும் மத்தியத்துவம் எது என்று பார்க்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் எங்களுக்கு ஷாபீக்களும் பன்னாக்களும் வேண்டும். சிந்திக்கக் கடவுக.


அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

No comments:

Post a Comment