Monday, March 21, 2016

இர்ஷாதுல் முஜ்தமஃ

எண்ணக்கருவும் மூலோபாயங்களும்

அறிமுகம்

இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது இஸ்லாமிய தஃவா பாரம்பரியத்தில் மூன்றாவது செயற்பரப்பைக் குறிக்கும் சொல்லாகும். தனிமனிதன்,  குடும்பம், சமூகம்,  நாடு, மனித குலம் என விரிந்து செல்லும் தஃவா பரப்புக்களில் சமூகம் என்ற பரப்பு முஜ்தமஃ என்ற சொல்லின் மூலம் அடையாளப்படுத்தப்படுகிறது. அங்கு நடைபெற வேண்டிய பணி என்ன என்பதை இரத்தினச் சுருக்கமாக விளங்கப்படுத்தும் சொல்லே இர்ஷாத் என்பதாகும்.

இங்கு இர்ஷாத் என்பதன் மொழி ரீதியான கருத்தைப் பார்க்கும்போது அதனுள்ளே ஒரு அற்புதமான கருத்து மறைந்திருக்கிறது. அறபுமொழியில் ருஷ்த்என்ற சொல் நல்லது என்ற கருத்தைக் குறிப்பது போலவே ஒருவித முதிர்ச்சி நிலையையும் குறிக்கிறது. மனிதன் சொத்துக்களை நிர்வகிக்கும் தகுதி நிலையை அல்குர்ஆன் ருஷ்த் என்றுதான் அழைத்தது. இதனால்தான் நல்லாட்சி என்ற கருத்தைக் குறிக்க ஹுக்ம் ரஷீத்என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நல்லாட்சியின் பொருள் பரப்பு வாசகர்கள் நன்கறிந்த ஒரு விடயம் என்பதால் ருஷ்த்என்ற சொல்லின் மூலக் கருத்தை அவர்கள் இலகுவில் புரிந்து கொள்வார்கள் என நினைக்கிறேன். அந்தவகையில் இர்ஷாத் என்பதன் மூலம் நல்லதை நோக்கி வழிநடாத்துதல் அல்லது சமூக முதிர்வு நிலையை நோக்கி வழிநடாத்துதல் என்று பொருள் கொள்ளலாம்.

இங்கு வழிநடாத்துதல்அல்லது வழிகாட்டுதல்என்ற பதப் பிரயோகங்களில் ஒரு வித மேலாதிக்கம் அல்லது திணிப்பு தொணிப்பதாக சில சமயங்களில் சிலர் நினைக்கின்றனர். அவர்களது இந்தப் புரிதலுக்கு ஒரு காரணமிருக்கிறது. அதாவது வழிகாட்டுதல்என்று சொல்லும் போது அது குறித்த ஒரு மனிதக் குழுமத்தின் பணி அல்லது குறித்த ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் பணி என்று அவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள். எனவே,  பிறருடைய சிறப்பியல்புகளைக் கருத்தில் கொள்ளாத ஒரு மேலாதிக்கம் அங்கு இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். 

ஆனால் உண்மையில் வழிகாட்டுதல் என்பது அல்லாஹ்வின் பணி அல்லது அல்குர்ஆனுடைய பணி. அதனை மேற்கொள்ளும் முயற்சியையே ஒரு மனிதக் குழுமமோ அல்லது இஸ்லாமிய இயக்கமோ செய்கிறது. இந்த அடிப்படையில் புரிந்து கொள்கிற போது அங்கு மேலாதிக்கம் என்ற கருத்துக்கு இடமில்லை. அல்குர்ஆனின் அடிப்படைப் பணியே வழிகாட்டுதலாகும். அந்தவகையில் சமூகம் என்ற பரப்பின் மீதான அல்குர்ஆனின் பணி எத்தகையது என்பதே இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் மூலம் விளங்கப்படுத்தப்படுகிறது.

பரிபாஷைக் கருத்து

மேற்கூறப்பட்ட மொழிப் பின்புல விளக்கத்தினை வைத்துப் பார்க்கும் பொழுது,  இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் பரிபாஷைக் கருத்தை இவ்வாறு விளக்கலாம். அல்லாஹ்தஆலா மனிதனிடத்தில் எதிர்பார்க்கும் இலக்குகளை இந்தப் பூமியில் நிலைநாட்டுவதற்காக அர்த்தபூர்வமான முயற்சியில் ஈடுபடுவதாகும். இது ஒரு மக்கள் குழுமத்தின் மீது செயற்படுத்தப்படும்.

இந்த வரைவிலக்கணம் இர்ஷாதுல் முஜ்தமஃ குறித்து சில அடிப்படைகளைக் கூறுகிறது. இர்ஷாதுல் முஜ்தமஃ எனும் செயற்பாட்டுக்கு இலக்குகள் இருக்கின்றன. அவற்றை அடைந்து கொள்வதற்கான மூலோபாயங்கள் இருக்கின்றன. நெறிப்படுத்துவதற்கான அணுகுமுறைகள் இருக்கின்றன. இதற்கு ஒரு இலக்குக் குழுவினர் காணப்படுகின்றனர். இதனை செயற்படுத்துவோர் இருக்கின்றனர்.

இலக்குகள்

இர்ஷாதுல் முஜ்தமஃஇன் பரிபாஷைக் கருத்தில் அல்லாஹ்தஆலா மனிதனிடத்தில் எதிர்பார்க்கும் இலக்குகள்என்ற ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ்தஆலா மனிதனிடத்தில் என்ன எதிர்பார்க்கிறான் என்பதை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “…தீனை நிலைநாட்டுங்கள். அதிலே பிரிவிணையை ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதைத்தான் இப்றாகீம்,  மூஸா,  ஈஸா (அலை) போன்றோருக்கு சொல்லப்பட்டதும், உங்களுக்கு வஹியாக அறிவிக்கப்பட்டதுமாகும்…” (ஷுரா – 74)  இங்கு பொதுவாக நபிமார்கள் மூலம் மனித சமூகத்திடம் அல்லாஹ்தஆலா தீனை நிலைநாட்டுமாறும் அதில் கருத்தொற்றுமையுடன் காணப்படுமாறும் கேட்டுக் கொள்கிறான். 

இமாம் இப்னுல் கையிம் கூறுவது போல் தீன் நிலைநாட்டப்படுதல் என்பது உலகில் மனித நலன் காக்கப்படுகிறது என்று பொருளாகும்.
அந்த வகையில் குறித்த ஒரு மனிதக் குழுமத்தின் மீது அல்லது குறித்ததொரு நிலப் பிரதேசத்தில் தீன் நிலை நாட்டப்படுகிறது எனின்,  அதன் அடிப்படைப் பொருள் அங்கு மனித நலன்கள் மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றப்படுகின்றது அல்லது அங்கு சுபீட்சமான மனித வாழ்வுக்கு ஏற்ற சிறந்த சூழல் காணப்படுகின்றது என்பதாகும்.

இந்தக் கருத்தைப் பிரதிபளிக்கும் வகையிலேயே இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் இலக்குகள் குறித்த இமாம் ஹஸனுல் பன்னாவின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றன. இமாமவர்கள் கூறுகிறார் : அவர்கள் பரஸ்பர அன்பு கொண்ட சகோதரர்கள், அங்கு சமத்துவம் சிறந்து பேணப்படும். அவர்கள் குடும்பங்களில் சந்தோசம் வீற்றிருக்கும், உயர் பண்பும் ஆரோக்கியமும் கொண்ட சூழல் அது. பௌதீக உழைப்பும் அபிவிருத்தியும் அங்கு முனைப்புடன் காணப்படும். அந்த சமூகத்தில் நீதி நிலை நாட்டப்படும். மக்கள் தமது உரிமைகளையும் கடமைகளையும் அறிந்து செயற்பட்டுக் கொண்டிருப்பர். அங்கு பரஸ்பர ஒத்துழைப்பும் கூட்டு முயற்சியும் மேலோங்கியிருக்கும். சத்தியத்தைப் பரப்பவும் பாதுகாக்கவும் துணிவு கொண்ட மக்கள் அவர்கள் (ஜரீததுல் இஃவான் முஸ்லிமூன் - துல்கஃதா - ஹி 1352) என்பதாக இமாமவர்கள் இந்தக் கருத்தை விளங்கப்படுத்தியிருக்கிறார்கள். இங்கு சொல்லப்பட்ட வார்த்தைகள் இமாமவர்களின் நேரடி வார்த்தைகளன்றி அவர் விரிவாகப் பேசிய விடயங்களின் சுருக்க வடிவமாகும்.

இதனை இன்னும் எளிமையாகக் கூறினால் சகோதரத்துவம்,  சமத்துவம்,  சந்தோசம்,  பண்பாடு,  ஆரோக்கியம்,  அபிவிருத்தி,  நீதி,  பொறுப்புணர்வு,  ஒத்துழைப்பு,  தஃவா போன்ற விழுமியங்களை அடைந்து கொள்வதே இர்ஷாதுல் முஜ்தமஃ என்பதன் இலக்குகளாகும்.

இங்கு மனித நலனை நிறைவேற்றக்கூடிய அனைத்து விழுமியங்களும் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளன என்று பொருள் கொள்ளப்பட மாட்டாது. மாற்றமாக முதிர்வு நிலைச் சமூகம் ஒன்றைப் பற்றிய காட்சி வடிவம் ஒன்றை எடுத்துக் காட்டும் வகையிலேயே சில விழுமியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இங்கு பிரதானமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயம் என்னவெனின்,  மனித நலன் நிறைவேற்றப்படுதல் என்பதுவே,  தீனை நிலை நாட்டுதல் என்பதாகும் அல்லது தீன் நிலை நாட்டப்படுவதால் மிகச் சரியாக மனித நலன் நிறைவேற்றப்படுகிறது. அந்தவகையில் எவையெல்லாம் மனித நலனாகக் காணப்படுகின்றதோ அந்த ஒவ்வொரு விடயமும் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற எண்ணக்கருவின் இலக்குகளாகக் காணப்படும்.

இந்தோனேஸிய அறிஞரான உஸ்தாத் அனீஸ் மத்தா அவர்கள் இது குறித்து முன்வைத்த ஒரு கருத்தையும் இங்கு பகிர்ந்து கொள்வது பொறுத்தம் என்று நினைக்கிறேன். பொதுவாக அல்லாஹ்வை நோக்கி மக்கள் அழைக்கப்படுதல் அடிப்படையானது. ஆனால் அதனை ஏற்பதில் அவர்களுக்கு தெரிவுச் சுதந்திரம் இருக்கிறது. இருப்பினும் பொதுவாக சமூகத் தளத்தில் மக்கள் மார்க்க உணர்வு கொண்டவர்களாக,  மார்க்கத்துடன் நெருக்கமானவர்களாக வாழும் சூழல் காணப்படல் வேண்டும். இதற்காக உழைக்கும்போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. 

அதில் முதலாவதும் முக்கியமானதும் சுதந்திர சூழல். ஒவ்வொரு மனிதனும் தான் சுதந்திரமாக தனது வாழ்வை அமைத்துக் கொள்ளும் சூழல் காணப்படல் வேண்டும். ஒரு மனிதனிடத்தில் ஈமான் நிர்ப்பந்திக்கப்படக் கூடாது என்பது போல் குப்ரும் நிர்ப்பந்திக்கப்படக் கூடாது. குறித்த ஒரு அரசியல் போக்கு நிர்ப்பந்திக்கப்படக் கூடாது என்பது போல் குறித்த ஒரு அரசியல் போக்குக்கு எதிரான அடக்கு முறையும் காணப்படக் கூடாது.

இரண்டாவது பகுத்தறிவுச் சூழல். இஸ்லாம் தனது நம்பிக்கைகளையும் சரி ஏனைய போதனைகளையும் சரி ஏற்றுக் கொள்வதற்கான அல்லது சரி காண்பதற்கான நிபந்தனையாக பகுத்தறிவையே முன்வைக்கிறது. எந்தவொரு விடயத்தையும் கண்மூடித்தனமாக சரி காண வேண்டும் என இஸ்லாம் என்றைக்கும் போதித்தது கிடையாது. அந்தவகையில் பகுத்தறிவுச் சூழல் எந்தளவுக்கு அதிகரிக்கப்படுகின்றதோ அந்தளவுக்கு இஸ்லாத்தின் போதனைகளை நோக்கி மக்கள் வருவார்கள்.

மூன்றாவது வளமான பொருளாதாரச் சூழல். இதன் பொருள் மக்கள் பசியும் பயமும் இன்றி இருத்தலைக் குறிக்கின்றது. அல்குர்ஆன் இந்தக் கருத்தை இவ்வாறு குறிப்பிடுகின்றது. அவர்கள் இந்த ஆலயத்தின் இரட்சகனை வணங்கட்டும். அவன்தான் அவர்களுக்கு உணவளித்தான். அவன்தான் அவர்களது அச்ச சூழலிலிருந்து பாதுகாப்பளித்தான்” (குறைஷ்) இங்கு பசியும் பயமும் நீக்கப்பட்ட வளம் நிறைந்த ஒரு பொருளாதார சூழலிலேயே வணக்கம் சாத்தியப்படுவதாக அல்லாஹ்தஆலா கூறுகிறான்.
இந்த மூன்று அம்சங்களும் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற செயற்பாட்டின் முக்கிய இலக்குகள் என்பதில் சந்தேகமில்லை. அந்தவகையில் தீன் எனும் மனித நலனை நோக்கிய பயணத்தில் சமூக மட்டத்தில் அடையப் பெற வேண்டிய முக்கிய இலக்குகளாக இவை காணப்படுகின்றன.

மூலோபாயங்கள்

இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பணி எவ்வாறு மேற்கொள்ளப்படல் வேண்டும்? அதற்கான பிரதான மூலோபாயங்கள் என்ன? என்பது தொடர்பில் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் பேசும்போது பிரதானமாக நான்கு வகையான மூலோபாயங்களை முன்வைக்கின்றார்கள்.

முதலாவது நல்லவற்றை ஏவுதல் என்ற பரப்பு. அதனை இமாமவர்கள் பயனள்ளவை பரப்பப்படுதல்,  உயர்ந்த விடயங்கள் தூண்டுதல் அளிக்கப்படல்,  எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயங்கள் ஏவப்படல், என்று குறிப்பிட்டுள்ளார்கள். அல்குர்ஆன் முன்வைக்கும் அல்-அம்ரு பில் மஃரூப் என்ற கருத்தே இங்கு பேசப்பட்டுள்ளது.

இரண்டாவது தீமை தடுக்கப்படுதல் என்ற பரப்பு. இது குறித்து இமாமவர்கள் விளக்கும்போது எல்லோரும் வெறுக்கக்கூடிய விடயங்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது. அவற்றுக்கெதிரான ஒரு வேலைத்திட்டம்,  போராட்டம் எப்பொழுதும் காணப்படல் வேண்டும். அத்துடன் தாழ்ந்த விடயங்கள் அற்பமானவை அகற்றப்படல் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மூன்றாவது இஸ்லாமிய விழுமியங்களை நோக்கி பொதுக்கருத்து ஈர்க்கப்படுதல். இங்கு பொதுக் கருத்து என்பது சமூகத்தின் எல்லாத் தரப்பினரதும் கூட்டு நலனை உத்தரவாதப்படுத்தக்கூடிய ஒரு பொதுநிலைப்பாட்டைக் குறிக்கும். இது பிரச்சினைகள்,  தேவைகள் என பல விடயங்கள் சம்பந்தப்பட்டதாகக் காணப்பட முடியும். இந்த பொது நிலைப்பாடுகள் இஸ்லாமிய சிந்தனைக்கும் விழுமியங்களும் முரணாக அமையாது அவற்றினடிப்படையில் அல்லது குறைந்தபட்சம் அவற்றிற்கு நெருக்கமானவையாக அமைவதற்காக எடுக்கப்படும் முயற்சியையே இது குறிக்கிறது.

நான்காவது செயல் வடிவங்கள் உருவாக்கப்படுதல். அதாவது இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற செயற்பாட்டில் அடைய நினைக்கும் இலக்குகள் வெறுமனே கோட்பாட்டு வடிவமாக மாத்திரம் முன்வைக்கப்படுவதில் எந்த நேரடி மாற்றமும் சமூகத்தில் நிகழ்ந்துவிடப் போவதில்லை. மாற்றமாக அவற்றை சமூகத் தளத்தில் நிகழ்த்திக் காட்டுவதற்கான செயல்வடிவங்கள் உருவாக்கப்படுகின்ற பொழுதே நாம் எதிர்பார்க்கும் உண்மையான விளைவுகளைக் காண முடியும். நாம் அழைக்கும் அனைத்துப் பயனுள்ள நன்மையான விடயங்களுக்கும் மாதிரிகள் அவசியம். அதுபோல் நாம் அகற்ற நினைக்கும் அனைத்து தீமைகளுக்கும் மாற்றீடுகள் தேவை. இது மனித முன்மாதிரிகளாகவும் காணப்படலாம். முறைமைகளாகவும் இருக்கலாம். நிறுவனங்களாகவும் அமையலாம்.

இந்த இடத்தில் மற்றொரு முக்கிய விடயத்தையும் தொட்டுக் காட்டிச் செல்வது பொறுத்தம் என நினைக்கின்றேன். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு சமூக சூழலில் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற செயற்பாட்டை முன்னெடுக்கும் போது அங்கு அவர்களது சிந்தனையில் நிகழ வேண்டிய ஒரு மூலோபாய மாற்றம் இருக்கிறது. அது இரண்டு பரப்புக்களில் நிகழ வேண்டியிருக்கிறது.

ஒன்று சிறுபான்மை என்பது ஒரு பலவீனமல்ல. மிகப் பெரும்பாலும் நாம் சிறுபான்மை என்பதை எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே வரையறை செய்கிறோம். இதனால்தான் நாம் சிறிய தொகையினர். எம்மால் எதுவும் செய்ய முடியாது. நாம் பலவீனமானவர்கள் என்று எம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொள்கிறோம். இங்கு ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சிறுபான்மை,  பெரும்பான்மை என்பது எண்ணிக்கை சார்ந்தது மாத்திரமல்ல அது அரசியல், கல்வி,  பொருளாதாரம்,  தொடர்புகள் போன்ற பல காரணிகளை உள்ளடக்கிய ஒரு விடயம். அந்தவகையில் எண்ணிக்கையில் குறைவு என்பது பலவீனத்தின் அடையாளமல்ல. குறைந்த எண்ணிக்கையுடன் ஏனைய காரணிகளின் பலம் ஒரு சமூகத்தின் முக்கியத்துவத்தை உயர்த்துவதற்குப் போதுமானதாகும். 

அல்குர்ஆன் கூறுகிறது பூமியில் பலவீனர்களாய் ஆக்கப்பட்டவர்களுக்கு நாம் அருள்பாலிக்க விரும்புகிறோம். அவர்களை தலைவர்களாகவும்,  வாரிசுகளாகவும் நாம் மாற்றுவோம்” (கஸஸ் - 05)
இந்த வசனம்,  குறைந்த எண்ணிக்கை ஒரு பலவீனமல்ல என்ற நம்பிக்கையைத் தருகிறது. 

ஆனால் இங்கு ஒரு முக்கிய நிபந்தனை இருக்கிறது. குறைந்த எண்ணிக்கையினர் அல்லது சிறுபான்மையினர் பொது இலக்கும் ஒருமைப்பாடும் அற்ற சிதறிய சமூகமாகக் காணப்படுவார்கள் எனின்,  நிச்சயமாக அவர்கள் பலவீனமானவர்கள்தான். இக்கருத்தையே மேற்கூறப்பட்ட வசனத்திற்கு முன்னைய வசனத்தில் பிர்அவ்ன் பனூ இஸ்ரவேலர்களை பொது இலக்கற்ற பல குழுக்களாகப் பிரித்துவிட்டான். அதனாலேயே அவர்கள் பலவீனமடைந்தார்கள் என்று அல்குர்ஆன் கூறுகிறது.

எனவே,  சிறுபான்மைச் சூழல் ஒன்றில் இர்ஷாதுல் முஜ்தமஃ பணி வெற்றி பெற வேண்டும் எனின் அங்கு பொது இலக்கும் ஒருமைப்பாடும் முக்கியமானவை. அதுதான் அவர்களை எண்ணிக்கையைத் தாண்டி பலம் பெறச் செய்யும் காரணியாகும்.

இரண்டாவது,  நாம் செயற்படும் எல்லை குறித்த பார்வை,  குறித்த ஒரு நிலப் பிரதேசத்தில் செயற்படுகின்ற பொழுது அந்த முழு நில எல்லையும் நாம் செயற்படுவதற்கான தளம் என்ற பார்வை முக்கியமானது. அதாவது எமது தாயகத்தில் இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது இலங்கை வாழ் அனைத்து மக்களுக்குமான ஒரு செயற்திட்டமாகும். அது முஸ்லிம்களை மாத்திரம் இலக்கு வைத்த ஒரு வேலைத்திட்டமல்ல. 

இங்கு முதன்மைப்படுத்தல்கள்,  திட்டப் பரப்புக்கள் என்பன காலத்திற்கும் தேவைக்கும் இயலுமைக்கும் ஏற்ப மாற்றமுற முடியும். அது படிப்படியாக வளர்ச்சி காண வேண்டிய ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால் எமது தஃவாப் பார்வை முழு நிலப் பிரதேசத்தையும் ஒருமித்து நோக்குவதாகக் காணப்படல் வேண்டும்.

அணுகுமுறைகள்

எந்தவொரு பணியும் மிகச் சிறந்த அணுகுமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படல் வேண்டும் என்பது அல்குர்ஆனினதும் சுன்னாவினதும் வழிகாட்டல். ஒரு செயற்திட்டத்தை நெறிப்படுத்தி,  அதனை முன்னோக்கித் தள்ளும் உந்து சக்தியாகத் தொழிற்படக் கூடியவை மிகச் சிறந்த அணுகுமுறைகளாகும். அந்தவகையில் இர்ஷாதுல் முஜ்தமஃ எனும் பாரியதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்போது,  அதனை அழகுபடுத்தும். அதன் வெற்றியை உத்தரவாதப்படுத்தும் அணுகுமுறைகள் காணப்படுகின்றன.

முதலாவது பங்கு கொள்ளல் அணுகுமுறை,  தஃவாவில் தவறாகப் புரியப்பட்ட அல்லது தவறாக வியாக்கியானப்படுத்தப்பட்ட விடயங்களில் ஒன்று என்னவெனில்,  இஸ்லாமிய தஃவாவின் இலக்கு பிரத்தியேகமான ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதாகும் என்ற விளக்கம். அதாவது அமுலில் உள்ள சமூகக் கட்டமைப்புக்குப் புறம்பான அல்லது அதனை மறுதலித்துவிட்டு புதிய ஒரு சமூகக் கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் இன்றைய இஸ்லாமிய இயக்கங்களின் பிரதான அழைப்பு என்ற ஒரு தவறான விமர்சனம் முன்வைக்கப்படுவதைக் காண்கிறோம். உண்மையில் இது எந்த அடிப்படையும் அற்ற ஒரு விமர்சனம். நடுநிலை இஸ்லாமிய சிந்தனையை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த இஸ்லாமிய இயக்கங்களும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கவில்லை.

மாற்றமாக அமுலில் உள்ள சமூகக் கட்டமைப்பினுள்ளே முழுமையான பங்கு கொள்ளலின் அடிப்படையிலேயே எதிர்பார்க்கப்படும் இலக்குகள் அடையப் பெற வேண்டும் என்பதே அவற்றின் நிலைப்பாடாகும். இதனை உணர்த்தும் வகையிலேயே சமூக மாற்ற செயற்பாட்டுக்கு இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பரிபாஷைப் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இர்ஷாத் என்பது வழிநடாத்துதல் என்று பொருள் கொள்ளப்படுமேயன்றி,  ஒன்றை அழித்துவிட்டு புதிய ஒன்றை உருவாக்குதல் என்று பொருள் கொள்ளப்பட மாட்டாது. இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் சமூகத்துடன் என்றும் திறந்த அணுகுமுறையையே கடைபிடித்துள்ளார்கள். மூடிய அணுகுமுறையைக் கடைபிடிக்கவில்லை.

மற்றோர் புறத்தில் நாம் வாழும் சமூகக் கட்டமைப்பு தீமைகள் நிறைந்தது. அதனுடன் இரண்டறக் கலந்து விடுவது ஈமானைப் பாதித்து விடக்கூடியது என்ற நியாயத்தின் அடிப்படையிலும் சமூகத்த விட்டு ஒதுங்கிய ஒரு அணுகுமுறையை நோக்கி சிலர் செல்ல முற்படுகின்றனர். உண்மையில் இதுவும் சமூகம் குறித்த நுணுக்கமான ஒரு மதிப்பீடு அல்ல. நாம் செயற்பட வேண்டிய அடிப்படைத்தளமே அந்த சமூகம்தான் என்ற வகையில் ஒதுங்கிச் செல்வதற்கான நியாயங்களை நாம் காண முடியாது.
எனவே,  இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது அமுலில் உள்ள சமூகக் கட்டமைப்பில் பங்கு கொண்டு மாற்றத்தை நோக்கிச் செல்லும் ஒரு பயணத்தையே குறித்து நிற்கின்றது.

இரண்டாவது,  கட்டம் கட்டமான செயற்பாட்டு அணுகுமுறை,  எந்தவொரு மாற்றமும் உடனடியாக நடந்து விடுவதில்லை. அல்குர்ஆன் கூறியது போல் ஒரு வரையறுக்கப்பட்ட காலம் இல்லாதிருக்கும் எனின் அவர்களுக்குத் தண்டனை வந்திருக்கும்” (  ஹஜ் 47  ) எனவே ஒவ்வொரு விடயத்திற்கும் ஒரு வரையறுக்கப்பட்ட காலம் இருக்கிறது,  இது ஒரு பிரபஞ்ச விதி. இந்த விதிமுறைகளை மீறி ஒரே பாய்ச்சலில் சமூக இலக்குகளை அடைந்து கொள்ள முடியாது. பாய்ச்சலில் காணும் அடைவுகள் நீண்ட காலம் நிலைத்திருப்பதுமில்லை. இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது ஒரு சமூக செயற்பாடு. நீண்ட இலக்குகளுடன் பயணிக்கும் ஒரு செயற்பாடு. எனவே,  அங்கு கண்டிப்பாக இந்த கட்டம் கட்டமான அணுகுமுறை இன்றியமையாததாகும்.

இங்கு ஒரு விடயத்தை நாம் முக்கியமாக மனம் கொள்ள வேண்டும். ஒரே பாய்ச்சலில் இலக்கை அடைய நினைப்பது எந்தளவு தவறானதோ அதேபோல் அமுலில் உள்ள சமூக ஒழுங்கினுள் நுழைந்து அடிப்படை இலக்குகளை மறந்து போவதும் தவறானதாகும். இந்த இரண்டு நிலைகளும் சமநிலை தவறிய நிலைகள் என்பது போல் இலக்குகளை நோக்கி நகராத ஒரு பயணமாகவும் இவை காணப்படுகின்றன.

யார் மீது கடமை?

கலாநிதி அஹ்மத் அர்ரைஸுனி அவர்கள் குறிப்பிடுவது போல், அல்லாஹ்தஆலா கூட்டுக் கடமைகளை சமூகத்தின் மீதே பொறுப்பாக அமைத்திருக்கிறான். அரசு என்பது சமூகத்திலிருந்து தோன்றுகின்ற,  சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு அலகு. அந்தவகையில் ஒரு சமூகத்தில் நிகழ வேண்டிய அனைத்து மாற்றங்களுக்கும் அரசை மாத்திரம் பொறுப்பாக்கி விட்டு,  சமூகம் மௌனமாக இருந்து விட முடியாது. அரசும் தனது அதிகாரத்தை சமூகத்திடமிருந்தே பெற்றுக் கொள்கிறது. எனவே,  சமூகத்திற்கே அடிப்படைப் பொறுப்பு காணப்படுகின்றது.

அந்தவகையில்,  சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒவ்வொரு அமைப்பினதும் நிறுவனத்தினதும் தவிர்க்க முடியாத கடமையாக இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பணி மாறுகின்றது. சமூகத்தின் இயங்கு சக்தியாகத் தொழிற்படுகின்ற இஸ்லாமிய இயக்கங்களின் பொறுப்பு இங்கு இரட்டிப்பாக மாறுகின்றது. யார் தொழிற்பட்டாலும் தொழிற்படாவிட்டாலும்,  யார் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும் இஸ்லாமிய இயக்கம் இந்தப் பணியிலிருந்து பின்வாங்க முடியாது. இது ஒரு அடிப்படைக் கடமை. இது சமூக மட்டத்தில் கூட்டு வடிவில் தோன்றுகின்ற கடமை.

இந்நிலைக்கப்பால் இர்ஷாதுல் முஜ்தமஃ என்பது ஒவ்வொரு தனிமனிதனதும் கடமை. ஒரு இயக்கத்தையோ நிறுவனத்தையோ சார்ந்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனிமனித வடிவில் ஒவவொரு முஸ்லிம் மீதும் கடமையான ஒரு பணி இது. இயக்கங்களை அல்லது நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் சில சமயங்களில் இயக்கம் செய்யட்டும் நிறுவனம் செய்யட்டும் என்று சும்மா இருந்து விடுகின்றனர். குறித்த சூழலில் தனக்கு இருக்கும் தனிமனிதக் கடமையை உணரத் தவறி விடுகின்றனர். இது ஆரோக்கியமான நிலையன்று. இஸ்லாமிய தஃவா என்பது ஈமானின் விளைவாகத் தோன்றுகின்ற கடமை. அதற்கு ஒரு கூட்டு வடிவம் காணப்படாத போதும் தனிமனிதனாக எந்த நிலையிலும் தன் மீது ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.


அந்தவகையில் இர்ஷாதுல் முஜ்தமஃ என்ற பணி கூட்டு வடிவில் சமூகத்தின் மீதும்,  தனித்த வடிவில் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையானது. இப்பணியை சிறந்த முறையில் மேற்கொள்பவர்களாக அல்லாஹ் எம்மை ஆக்குவானாக. 

No comments:

Post a Comment