Thursday, March 10, 2016

துணைத் தெரிவு எவ்வாறு நடைபெறல் வேண்டும்?

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்கள் விடை தேட வேண்டிய கேள்விகளுள் மூன்றாவது கேள்வி யார்? என்ற கேள்வி. அதற்கான மற்றொரு பதிலை இந்தப் பத்தி பேசுகிறது.

மனித நடத்தை குறித்த ஆய்வுகளின் அடிப்படையில், துணைத் தெரிவின் போது மனித நடத்தை எவ்வாறு தொழிற்படுகிறது என்பது பற்றி பிரபல குடும்பவியல் அறிஞர் கலாநிதி ஜாஸிம் முதவ்வஃ அவர்கள் குறிப்பிடும்போது,  பொதுவாக ஒரு இளைஞன் தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போதும் சரி,  ஒரு யுவதி தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போதும் சரி எதுவித விதிமுறைகளும் அடிப்படைகளும் இன்றி தெரிவு நடைபெறுவதில்லை. அவர்கள் தமக்கென ஏதேனும் ஒரு விதியை வைத்தே தெரிவை மேற்கொள்கிறார்கள். பொதுவாக மனித நடத்தை இவ்வாறே தொழிற்படுகிறது என்கிறார்கள்.

துணைத் தெரிவு குறித்த மனித நடத்தையை அவதானிக்கும் போது சுமார் ஆறு வகையான விதிகளின் அடிப்படையில் இத்தொழிற்பாடு நடைபெறுகிறது என்கிறார். அவை குறித்த ஒரு சுருக்கமான பார்வையை அடுத்து நோக்குவோம்.

முதலாவது விதி : பெறுமானங்கள் - ஒருவரிடத்தில் தான் வாழும் சூழல்,  குடும்பப் பின்புலம்,  பெற்ற கல்வி போன்ற பல காரணங்களினால்,  தான் என்றும் மதிக்கும்,  எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க நினைக்காத சில பெறுமானங்கள் தோற்றம் பெற்றிருக்கும். உதாரணமாக,  இயற்கையை நேசித்தல்,  உயிரினங்களை நேசித்தல்,  சுத்தம்,  நேர்த்தி,  நேரம் தவறாமை போன்றன. இங்கு துணைத் தேடல் என்பது தான் மதிக்கும் பெறுமானத்தின் தேடலாகவே காணப்படும். தான் மதிக்கும் பெறுமானத்தைக் கடைபிடிக்கும் ஒரு இளைஞனை அல்லது ஒரு யுவதியைக் சந்திக்கும் போது அந்தத் தேடல் சம்பூரணமடைகிறது.

இரண்டாவது விதி : ஒத்திருத்தல் - தன்னைப் போன்ற பண்புகள்,  குணங்களைக் கொண்ட ஒருவரின் தேடலை இது குறிக்கும். இங்கு நல்ல பண்புகள் ஒன்று போல் இருத்தல் என்ற அடிப்படையில் மாத்திரம் தேடல் நடைபெற மாட்டாது. மாற்றமாக,  எதிர்மறையான பண்புகள் ஒன்று போல் இருப்பதும் கூட இங்கு தேடலின் அடிப்படையாகக் காணப்படும். அல்குர்ஆனில் சூரதுன் நூரில் நல்லவர்களுக்கு நல்லவர்கள்,  மோசமானவர்களுக்கு மோசமானவர்கள் என்று அல்லாஹ்தஆலா கூறிய விதியும் ஓரளவுக்கு இந்த ஒத்திருத்தல்விதியை வலியுறுத்துவதாய்த் தோன்றுகிறது. ஒவ்வொருவரும் தனது பண்புகள் குணங்களுடன் இயைந்து செல்லக்கூடிய ஒருவரைத் தேடுகிறார். உதாரணமாக அமைதியான ஒருவர் அதே போன்ற அமைதியைத் தேடுகிறார். முற்போக்கான ஒருவர் தன்னைப் போன்று முற்போக்கானவரை எதிர்பார்க்கிறார். அதேபோல் உணர்ச்சி வசப்படுகின்ற ஒருவர் தன்னைப் போன்று உணர்ச்சி வசப்படுகின்ற ஒருவரைக் காணும் போது,  அவர் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மூன்றாவது விதி : முழுமைப்படுத்தல் - தன்னிடமிருக்கும் ஒரு குறைபாட்டை அல்லது போதாமையை தனது துணையின்மூலம் முழுமைப்படுத்திக் கொள்ள நினைக்கும் தேடலை இது குறிக்கிறது. உதாரணமாக உடல் பருமனான ஒருவர் உடல் மெலிந்த ஒருவரைத் தேடுவார் அல்லது எப்பொழுதும் சீரியஸான இயல்பு கொண்ட ஒருவர் சுவாரஸ்யமான நகைச் சுவையான ஒருவரைத் தேடுவார். இங்கு தன்னை முழுமைப்படுத்துவதற்கான முயற்சி இந்தத் தேடலில் நடைபெறுகிறது.

நான்காவது விதி : உளப் பகுப்பாய்வு - இது ஒருவரது உள்ளத்தில் குறித்ததொரு ஆளுமை உயர்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் போது,  அந்த ஆளுமையைப் போன்றிருக்கும் ஒருவரின் தேடலைக் குறிக்கும். அநேகமாக தனது தந்தையைப் போன்ற கணவனைத் தேடுவதாகவும் தாயைப் போன்ற மனைவியைத் தேடுவதாகவும் இது அமைகிறது. இங்கு ஏற்கனவே உள்ளத்திற்குப் பிடித்தமான ஒரு ஆளுமையுடன் பகுப்பாய்வு செய்து,  அது போன்று அமைவதை தெரிவு செய்தல் நடைபெறுகிறது. ஒரு வகையில் இது ஒரு தற்காப்பு அணுகுமுறையாகும்.

ஐந்தாவது விதி : இடரீதியான நெருக்கம் - ஒருவர் தனது வாழிடம் தொழிலிடம் போன்றவற்றிற்கு ஏதுவாக அமையும் வண்ணம் காணப்படும் தேடலை இது குறிக்கிறது. ஒரே ஊர் அல்லது ஒரே பிரதேசம் அல்லது ஒரே அலுவலகம் அல்லது தனது ஊர்,  அலுவலகம் போன்றவற்றிற்கு அண்மையில் அமைந்துள்ள இடம் போன்ற காரணங்களாலும் தெரிவுகள் நடைபெறுகின்றன. திருமணத்தின் பின்னர் முக்கோண நாற்கோண வாழ்க்கை வாழ்வதை விடவும் தெரிவின் போதே இடரீதியான நெருக்கத்தை கவனத்தில் கொள்வது சிறந்தது என சிலர் நினைக்கின்றனர்.

ஆறாவது விதி : உடல் கவர்ச்சி பௌதீக உடம்பு,  புறத்தோற்றம் என்பவற்றின் மீதான ஈர்ப்பின் அடிப்படையில் அமையும் தெரிவை இது குறிக்கிறது. இன்று உலகில் அதிகமான இளைஞர்களின் தெரிவிற்கான பிரதான விதி இதுதான். கலாநிதி ஜாஸிம் முதவ்வஃ கூறுவது போல் இன்று அரசியல்,  பொருளாதார பூகோள மயமாக்கல் மாத்திரமன்றி உடன் கவர்ச்சிப் பூகோள மயமாக்கலும் நடைபெறுகிறது. அதன் பாதிப்பு குடும்ப வாழ்வின் தெரிவில் பெரிதும் தாக்கம் செலுத்தியிருக்கிறது.

இந்த ஆறு விதிகளிலும் எந்த விதி மிகவும் சிறந்தது? எந்த விதியின் அடிப்படையில் தொழிற்படுவது குடும்ப வாழ்வின் சந்தோசத்திற்கு வழியமைக்கும் என்ற கேள்வி உங்களுக்கு எழ முடியும்

உண்மையில் இங்கு எந்த விதியையும் ஒன்று சரியானது,  மற்றையது தவறானது என்று வகைப்படுத்த முடியாது. மாற்றமாக இந்த விதிகளுடன் இன்னும் சில விடயங்கள் இணைகின்ற பொழுதுதான் அவற்றின் பொறுத்தப்பாட்டை நாம் உறுதிப்படுத்த முடியும். அதாவது நபியவர்களது அணுகுமுறை இவற்றில் எந்த விதியுடனும் இணைந்து அமைகின்ற பொழுது அதுவே மிகவும் சரியான, பொருத்தமான தெரிவுமுறையாகக் காணப்படும்.

நபியவர்கள் இளைஞர்களுக்கு ஒரு வடிவிலும் யுவதிகளுக்கு மற்றொரு வடிவிலும் தெரிவணுகுமுறையை விளக்கினார்கள். இளைஞர்களைப் பார்த்துக் கூறினார்கள் ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறாள். அவளது அழகு, பரம்பரை,  செல்வம்,  மார்க்கம். மார்க்கப் பண்புள்ள பெண்ணை அடைந்து கொள். இல்லாதபோது நஷ்டமடைந்து விடுவாய்என்றார்கள். 

யுவதிகளைப் பார்த்து அல்லது அவர்களது பொறுப்பாளர்களைப் பார்த்துக் கூறினார்கள் மார்க்கம்,  பண்பாடு என்பவற்றில் நீங்கள் திருப்தி காணக்கூடிய ஒருவர் உங்களிடத்தில் பெண் கேட்டு வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள்என்றார்கள்.

இந்த இரண்டு ஹதீஸ்களும் சில உண்மைகளை வலியுறுத்துகின்றன.
இங்கு நபியவர்கள் அழகு,  பரம்பரை,  செல்வம் போன்ற அடிப்படைகளின் மீது தெரிவு அமைவதை தடை செய்யவில்லை. மாற்றமாக அந்த அடிப்படைகளுடன் மார்க்கம் என்ற அடிப்படையும் இணைந்து காணப்படல் வேண்டும் என்பதே நபியவர்களது வழிகாட்டலாகும். மார்க்கம் எனும் அடிப்படையைத் தவிர்த்து,  தனித்து அழகு,  பரம்பரை,  செல்வம் என்ற காரணிகளின் மீது மாத்திரம் தெரிவு அமையும் எனின்,  அங்கு குடும்ப வாழ்வின் நோக்கத்தை விட்டும் திசைமாறிய ஒரு நிலை ஏற்படுகிறது. இதனால்தான் அதனை நபியவர்கள் நஷ்டம் என்று அடையாளப்படுத்தினார்கள். மாத்திரமன்றி வேறு சில அறிவிப்புக்களில் எதிர்பார்ப்புக்கு மாற்றமான நிலை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தவகையில் தெரிவில் நபியவர்களது அணுகுமுறை என்பது,  மார்க்கம் என்ற அடிப்படையை மையப் புள்ளியாகக் கொண்டு ஏனைய அடிப்படைகள் அதனைச் சுற்றிச் சுழல்கின்ற வடிவில் அமைய வேண்டும். மார்க்கம் தவிர்ந்த வேறு ஒரு காரணி மையப் புள்ளி எனும் இடத்தைப் பெற முடியாது. அந்தவகையில் தெரிவின் போது மார்க்கத்துக்கு அதிகூடிய முக்கியத்துவமும் ஏனைய அம்சங்களுக்கு அவற்றிற்கு உரிய முக்கியத்துவமும் வழங்கப்படல் வேண்டும். ஏனைய ஒவ்வொரு அம்சத்திற்கும் வழங்கும் முக்கியத்துவம் தேவைக்கு ஏற்ப மாற்றமுற முடியும்.

இந்த உண்மையை விளக்கும் வகையிலேயே இமாம் ஹஸன் பின் அலியின் உபதேசமும் அமைந்திருக்கிறது. ஒரு தடவை அவரிடத்தில் ஒருவர் வந்து எனது மகளை பலர் திருமணம் பேசி வந்துள்ளனர். யாருக்கு முடித்துக் கொடுப்பது நல்லது என்று கேட்டார். அதற்கவர் அவர்களில் அதிகம் அல்லாஹ்வைப் பயந்தவனுக்கு திருமணம் செய்து வையுங்கள். ஏனெனில் அவன் அவளை நேசித்தால் கண்ணியப்படுத்துவான். வெறுத்தாலும் அநியாயம் இழைக்க மாட்டான் என்றார்கள்.

நபியவர்களது இந்த தெரிவணுகுமுறையுடன் ஏற்கனவே பேசிய விதிகள் இணைவதில் எந்தவித தவறும் இல்லை. மார்க்கமும் பண்பாடும் மையப் புள்ளியாக அமைந்த நிலையில் மேற்கூறப்பட்ட எந்த விதியின் அடிப்படையில் தெரிவு அமைவதும் சரியானதே.

அடுத்து இந்த இரண்டு ஹதீஸ்களையும் இணைத்துப் பார்க்கும் போது மற்றொரு உண்மையும் புலப்படுகிறது. ஆண்களை நோக்கிப் பேசும்போது அழகு,  செல்வம்,  பரம்பரை போன்ற காரணிகளை மார்க்கத்துடன் இணைத்துப் பேசப்பட்டுள்ளது. ஆனால் பெண்களை நோக்கிப் பேசும் போது அக்காரணிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மார்க்கமும் பண்பாடும் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த வேறுபாட்டின் உளவியல் இரகசியம் என்ன?

அழகு என்பதை ஆண் அதிகமாக புற அழகாகப் பார்க்கிறான். அதாவது புற அழகில் அவன் அதிகம் திருப்தி காண்கிறான். ஆனால் பெண்ணின் அழகு பற்றிய பார்வை சற்று வித்தியாசமானது. அவள் புற அழகைத் தாண்டிய நடத்தை அழகையும் குண அழகையும் அதிகம் பார்க்கிறாள். இவற்றில் அவள் பெரிதும் திருப்தி கொள்கிறாள். இதனால்தான் மார்க்கமும் பண்பாடும் உள்ள ஒருவன் அவளது வாழ்வுக்கு சந்தோசம் தர முடியும் என நபியவர்கள் கருதினார்கள்.

அத்துடன் ஒரு ஆண் தனது வாழ்வை,  ஒரு பொறுப்பாகவும்,  பணியாகவும் பார்க்கின்றான். எனவே அங்கு செல்வமும் சமூக அந்தஸ்தும் முக்கியம் பெறுகிறது. எனவேதான் குடும்ப வாழ்வு பற்றிய தெரிவின் போதும் அவனிடத்தில் இந்த விடயங்கள் தொடர்பிலும் ஒரு கவனம் இருக்கிறது. ஆனால் பெண்ணைப் பொறுத்தவரை மேற்குறித்த விடயங்களில் மிகப் பெரும்பாலும் தனித்து நிற்பதை விடவும் ஆணுடன் இணைந்து நிற்பதையே விரும்புகிறாள். தான் பொறுப்பாக இருக்கிறேன் என்பதற்கு மேலாக தனக்கு ஒருவன் பொறுப்பாக இருக்கிறான் என்பது அவளுக்கு அமைதியைத் தருகிறது.


இறுதியாக எமது தெரிவணுகுமுறை எது என்பதை விடவும்,  அந்த அணுகு முறை எந்தளவு நபியவர்கள் காட்டித் தந்த மூலப் பெறுமானங்களை உள்ளடக்கி இருக்கிறது என்பதுவே இங்கு மிகவும் முக்கியமானது. எனவே தெரிவின் போது இந்த இடத்தில் சறுக்கி விடாதிருக்க அல்லாஹ் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக.

No comments:

Post a Comment