Monday, November 18, 2013

இஸ்லாமியத் தீர்வுத் திட்டம்

இஸ்லாம் முழு மனித இனத்திற்கும் வழிகாட்ட வந்த மார்க்கம். அதன் போதனைகள் கால, இட,  சூழல் போன்ற அனைத்துப் பரிமாண வேறுபாடுகளையும் உள்ளீர்க்கும் தன்மை கொண்டதாகும். இந்தப் பின்புலத்தில்தான் இஸ்லாத்தின் தீர்வுத்திட்டம், முழுமைத்தன்மை வாய்ந்ததாகவும், சர்வதேசப் பண்பைக் கொண்டதாகவும், சமநிலைத்தன்மை வாய்ந்ததாகவும் காணப்படுகிறது.
அதேவேளை இந்த வேலைத்திட்டத்தின் அமுலாக்கம் கால, இட,  சூழல் பரிமாணங்களின் வேறுபாட்டையும் அதன் தனித்தன்மைகளையும் கருத்தில் கொண்டதாகவே காணப்படுகிறது. ஆனால் காலத்தின் வேறுபாடு அல்லது தனித்தன்மை,  இட வேறுபாடு அல்லது இடத்தின் தனித்தன்மை,  சூழல் வேறுபாடு அல்லது சூழலின் தனித்தன்மை என்பன ஒருபோதும் குறித்த தீர்வுத் திட்டத்தின் முழுமைத்தன்மையையும்,  சர்வதேசத் தன்மையையும்,  சமநிலைத் தன்மையையும் நிராகரிப்பதாகவோ, வலுவிலக்கச் செய்வதாகவோ காணப்பட மாட்டாது. அவ்வாறு நிராகரிக்கப்படுவதோ அல்லது வலுவிலக்கச் செய்வதோ கால,  இட,  சூழலின் வேறுபாட்டையும் தனித்தன்மையையும் கருத்திற் கொள்ளல் என்பதை விடவும் அது தீர்வுத் திட்டத்தையே கேள்விக்குள்ளாக்குவதாகவோ அல்லது மறுப்பதாகவோ மாறிவிட வாய்ப்புண்டு. இஸ்லாம் எனும் தீர்வுத் திட்டத்தில் இந்த முரண்பாடு தோன்றுவது நிச்சயமாக சாத்தியமற்றது.
இதன் மறுதலையும் இதே போன்றதுதான். இஸ்லாம் முழு மனித இனத்திற்குமான தீர்வு. எல்லா நிலப்பிரதேசங்களுக்குமான தீர்வு. அது சர்வதேசமானது. முழுமையானது என்று பேசுகின்றபோது,  அங்கு ஒருபோதும் கால, இட,  சூழல் பரிமாணங்களின் தனித்தன்மைகள் மறுக்கப்பட மாட்டாது. அவ்வாறு மறுக்கப்படும் எனின், அது தீர்வுத் திட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு செயலாக அமைந்துவிடும். இந்த முரண்பாடும் நிச்சயமாக இஸ்லாமிய தீர்வுத் திட்டத்தில் இல்லை.
குறித்ததொரு சூழலுக்கான தீர்வு அல்லது குறித்ததொரு இடத்திற்கான தீர்வு அல்லது குறித்ததொரு காலத்திற்கான தீர்வு என இஸ்லாம் முன்வைக்கும் தீர்வுத் திட்டத்தைக் கையாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம் இருக்கிறது. குறித்த இடம்,  காலம்,  சூழல் என்பவற்றிற்கான தீர்வு அந்த இடத்தையும் காலத்தையும் சூழலையும் மாத்திரம் மையப்படுத்தி எழமாட்டாது. மாற்றமாக ஏனைய இடங்களின் பாதிப்பும் ஏனைய காலங்களின் பாதிப்பும்,  ஏனைய சூழல்களின் பாதிப்பும் நிச்சயமாக அங்கு காணப்படும். இஸ்லாத்தின் தீர்வுத் திட்டம் உலகின் பல பாகங்களிலும் அமுல்படுத்தப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்போது அந்த அனைத்து முயற்சிகள் ஊடாகவம் எட்டப்பட்ட விளைவுகள்,  கட்டமாயமாக நாம் தீர்வைத் தேடும் வேறோர் இடத்தின் அடைவுகளை இலகுபடுத்திக் கொடுக்கும்.
மற்றொர் வகையில் கூறினால் குறித்த இடத்தில் இஸ்லாத்தின் அமுலாக்க வெற்றி என்பது அங்குள்ளவர்களால் மேற்கொள்ளப்பட்;ட முயற்சியால் மாத்திரம் அடையப் பெற்ற ஒன்றாகக் காணப்பட மாட்டாது. மாற்றமாக ஏனைய இடங்களில் பலர் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாகவுமே அந்த வெற்றி அடையப் பெறும்.
எமது இடத்திற்கும்,  காலத்திற்கும், சூழலுக்குமான தீர்வை நாம்தான் தேட வேண்டும். ஆனால் அது ஏனைய இடங்கள்,  காலங்கள், சூழல்களை புறம் தள்ளியதாக ஒருபோதும் அமைந்து விடக்கூடாது. ஏனெனில்,  இஸ்லாமிய தீர்வு என்பது ஒரு வலையமைப்பைப் போன்றது. பிறவற்றோடு சம்பந்தமில்லாமல் ஓரிடத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமான ஒரு தீர்வுத் திட்டமல்ல. காலத்தாலும் சரி,  இடத்தாலும் சரி, சூழலாலும் சரி,  இஸ்லாமியத் தீர்வுத்திட்டம் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமுள்ளது. ஒன்று மற்றையதில் பாதிப்பு செலுத்தக்கூடியது.
பல சமயங்களில் எமக்கு இறக்குமதித் தீர்வுகள் அவசியமில்லை என்று சொல்கிற போதும்,  எமக்கு நாமே தீர்வு தேட வேண்டும் என்று சொல்கிற போதும்,  மேற்சொன்ன அடிப்படை யதார்த்தங்கள் மறக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

எமது சிந்தனைகள் சமநிலைப்பட வேண்டும். இஸ்லாத்தையும் அதன் தீர்வையும் பரந்த கண் கொண்டு பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முஸக்கபுல் பிக்ர்என்ற எண்ணக்கருவின் பரிமாணங்களில் இதுவும் ஒன்றுதான்.

No comments:

Post a Comment