Monday, November 25, 2013

முஸக்கபுல் பிக்ர் - சிந்தனைத் தேர்ச்சி -

தனிமனித உருவாக்கப் பண்புகளில் மிக முக்கியமான மற்றொரு பண்பான முஸக்கபுல் பிக்ர்என்ற பண்பு குறித்து இன்ஷா அல்லாஹ் இன்றைய அமர்வில் சில சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ளப் போகிறோம். முஸக்கபுல் பிக்ர்என்ற சொற்றொடரை நேரடியாக அறிவுத் தேர்ச்சி அல்லது சிந்தனைச் தேர்ச்சி உடையவன் என்று மொழிபெயர்ப்புச் செய்யலாம்.
இந்தத் தலைப்பை கீழ்வரும் நான்கு உபதலைப்புகளில் ஆராய்வது பொறுத்தம் என நினைக்கிறேன்.
1.         முஸக்கப் என்பதன் பொருள்
2.         பிக்ர் என்பதன் பொருள்
3.         முஸக்கபுல் பிக்ர் என்பதன் பொருள்
4.         தனிமனித உருவாக்கத்தில் முஸக்கபுல் பிக்ர் என்ற பண்பின் முக்கியத்துவம்
முஸக்கப் என்பதன் பொருள்
ஆரம்பமாக முஸக்கப் என்ற அறபுப் பதத்தின் மொழிரீதியான கருத்தைக் கொஞ்சம் தேடிப் பார்த்த பொழுது ஒரு அருமையான செய்தியை அறிந்து கொள்ளக் கிடைத்தது. பொதுவாக முஸக்கப் என்ற சொல்,  ஈட்டி என்ற கருத்தைக் குறிக்கும் ரும்ஹ்என்ற சொல்லுடன் இணைத்துப் பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிந்தது. அர்ரும்ஹ் அல் முஸக்கப்என்றால் மிகவும் கூர்மையாகவும் உறுதிமிக்கதாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு ஈட்டி என்ற கருத்தைக் குறிக்கிறது. அதனை எறிந்தால் இலக்கு தவறமாட்டாது. இலக்கைத் தாக்கும் போது அதன் முனை பழுதடைய மாட்டாது அல்லது உடைந்து விடமாட்டாது. அல்லது வளைந்து நலிந்து விட மாட்டாது. இது போன்றதொரு ஈட்டியைத்தான் அர்ரும்ஹ் அல் முஸக்கப் என்பார்கள்.
ஈட்டி பற்றிய இந்த விளக்கம் சில விடயங்களைச் சொல்கின்றன. இங்கு குறித்த பொருள் மிகவும் கூர்மையாகவும் உறுதிமிக்கதாகவும் சமநிலைத்தன்மையுடனும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இலகுவாக இலக்குத் தவறாமல் எறிய முடிகிறது. அத்துடன் இலக்கின் மீது அது பாதிப்பை ஏற்படுத்துகிறதேயன்றி அது பாதிப்படைவதில்லை. அதன் தனித்தன்மை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த அடிப்படைக் கருத்து முஸக்கப்என்ற சொல்லின் பரிபாஷைக் கருத்திலும் தெளிவாகப் பிரதிபளிப்பதைக் காணலாம்.
முஸக்கப்என்ற சொல்லின் பரிபாஷைப் பொருள் இரண்டு பக்கங்களை முக்கியமாக வலியுறுத்துகின்றது. ஒன்று எல்லா விடயங்கள் பற்றியும் குறிப்பிடத்தக்களவு அறிந்து வைத்திருத்தல்,  மற்றது ஏதேனும் ஒரு விடயம் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருத்தல்.
இந்த இரண்டு நிலைகளிலும் வலியுறுத்தப்படுகின்ற ஒரு முக்கியமான விடயம் இருக்கின்றது. அதுதான் முஸக்கப்அல்லது ஸகாபாஎன்பது ஒரு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் கல்விச் சான்றிதழைக் குறித்து நிற்க மாட்டாது. மற்றொரு வகையில் கூறினால் பல்கலைக்கழக சான்றிதழ் பெற்றவர்கள் எல்லாம் முஸக்கபாகக் காணப்பட மாட்டார்கள். சான்றிதழ் பெற்றவர்களுள் முஸக்கப்களும் இருப்பார்கள். முஸக்கப் அல்லாதோரும் இருப்பார்கள். ஏனெனில், முஸக்கப் என்பவன் தன்னைச் சூழக் காணப்படக்கூடிய, நடக்கக்கூடியவற்றை எப்பொழுதும் அறிந்து கொள்ள முற்படுகின்றவன். தனது பார்வையையும் அறிவையும் எப்பொழுதும் விசாலப்படுத்திக் கொள்ள முற்படுபவன். இதற்காக ஒரு சுயதூண்டுதல் அவனிடத்தில் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஒரு பல்கலைக்கழகத்தில் கற்றாலும் சரி கற்காவிட்டாலும் சரி.
அடுத்து, மேற்குறிப்பிட்ட இரு நிலைகளிலும் முஸக்கப்அல்லது ஸகாபாஎன்ற சொல் குறிக்கும் மறறோர் முக்கியமான கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று பலர் ஏராளமான தகவல்களைத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அது ஒரு குறித்த விடயத்தில் மாத்திரமோ அல்லது எல்லா விடயங்கள் குறித்தும் பல விடயங்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மிகப் பெரும்பாலும் அவை ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவிலன்றி ஒரு சிதறிய வடிவத்திலேயே காணப்படுவதை அவதானிக்கலாம். இத்தகைய ஒரு மனிதனையும் நாம் முஸக்கப் என்று சொல்வதில்லை.
மாற்றமாக முஸக்கப் என்பவன்,  தன்னிடம் உள்ள தகவல்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி இணைத்து வைத்திருப்பான். அவை தர்க்க ரீதியான ஒழுங்கில் அவனது சிந்தனையில் கட்டமைக்கப்பட்டிருக்கும். இப்பொழுதுதான் அவன் புதிய சிந்தனைகளை உருவாக்குவான். அவனிடம் உள்ள தகவல்கள் மிகச் சிறந்த வடிவில் பயன்படுத்தப்படும்.
முஸக்கப் என்பவன் ஒரு நிருபர் போன்று தகவல்கள் எதுவாக இருப்பினும் அவற்றை சேகரித்துப் பரிமாறுபவன் அல்ல. மாற்றமாக தகவல்களை பகுப்பாய்வு செய்பவன். புதிய சிந்தனைகளை உருவாக்குபவன். கனவுகளைத் தோற்றுவிப்பவன்.

பிக்ர்என்பதன் பொருள்
பிக்ர்என்ற சொல் பொதுவாக இஃவானிய ஆவணங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற ஒன்றாகும். அந்த சொல் குறித்த விளக்கத்தைத் தேடியபொழுது அது ஒரு விரிந்த கருத்தைக் குறித்து நிற்பதைக் கண்டு கொள்ள முடிந்தது.
பிக்ர்அல்லது பிக்ராஎன்ற பிரயோகம் நேரடியான மொழிக் கருத்தில் சிந்தனை என்ற கருத்தைக் குறிக்கிறது. இஸ்லாமிய தஃவா பரிபாஷையில் இது சமூக மாற்ற சிந்தனையைக் குறித்து நிற்பதைக் காணலாம். இஸ்லாம் குறிப்பிடும் சமூக மாற்ற சிந்தனை என்பது மனிதப் படைப்பின் நோக்கத்தை விளங்கப்படுத்துதலாகும். அல்குர்ஆன் கூறுகிறது உங்களை எதவித நோக்கமும் இன்றி நாம் படைத்திருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?” (முஃமினூன் - 115) அல்குர்ஆனுடைய இந்தக் கேள்வி மனித வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தைக் கற்பிக்கிறது. அந்த அர்த்தத்துடன்தான் ஆதம் (அலை) அவர்கள் பூமிக்கு அனுப்பப்படுகிறார்கள். கலீபா என்ற பதவிப் பெயருடன் அனுப்பப்படுகிறார்கள். இங்குதான் அல்லாஹ்தஆலா பூமியில் ஒரு மனித நாகரீகத்தைத் தோற்றுவிக்கின்றான். அந்த நாகரீகம் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையில் இருந்து எழுகிறது. நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்பது அந்த நாகரீகத்தின் உயிர்த்தன்மையாய்க் காணப்படுகிறது. இந்தப் பணி அங்கு ஒரு சமூகப் பொறுப்பாக மேற்கொள்ளப்படுகிறது. அல்குர்ஆன் கூறுகிறது முஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கு ஒருவர் பொறுப்பானவர்கள். அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள். தீமையைத் தடுக்கிறார்கள்.”
ஈமானின் அடியாக எழும் அந்தப் புதிய நாகரீகத்தைத் தோற்றுவிக்கும் பொறுப்புதான் இஸ்லாமிய சமூக மாற்ற சிந்தனை எனப்படுகிறது. மனிதப் படைப்பின் மூலம் அல்லாஹ்தஆலா உலகில் இதனைத்தான் எதிர்பார்க்கின்றான். ஒவ்வொரு நபிமார்களும் இந்தப் பணியை மேற்கொள்வதற்காகவே அனுப்பப்பட்டார்கள். இந்தப் பின்புலத்திலேயே ஒரு முஸ்லிம் என்றும் ஒரு கொள்கைவாதியாக, இலட்சியவாதியாக அடையாளப்படுத்தப்படுகிறான். மறுமையை நோக்கிய அவனுடைய பயணத்தில்,  இந்த உலகில் அவன் சாதிக்க வேண்டிய ஒரு பணி இருக்கிறது. மறுமை வரையில் அவனுடைய இந்தப் பணி பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏனெனில்,  ஷெய்த்தானின் போராட்டம் மறுமை வரையில் காணப்படப் போகிறது. நபியவர்களும் மறுமை வரையில் ஜிஹாத் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்என்றார்கள். இது ஒரு முஸ்லிமின் அடிப்படையான பணி. இந்தப் பணியைப் புரிந்து கொள்தலையே பிக்ர்என்ற சொல் குறித்து நிற்கிறது.

முஸக்கபுல் பிக்ர் என்பதன் பொருள்
முஸக்கபுல் பிக்ர் என்பது மேற்சொன்ன இரு விடயங்களையும் இணைத்து ஒரு விரிந்த பொருளைத் தருகிறது.
அதாவது இஸ்லாமிய சமூக மாற்றச் சிந்தனை குறித்து அல்லது இஸ்லாமிய மனித நாகரீக உருவாக்கம் குறித்து மிகவும் தெளிந்த,  ஆழமான புரிதலுடனும் நிபுணத்துவத்துடனும் காணப்படுகின்ற ஒருவனையே நாம் முஸக்கபுல் பிக்ர் என்கிறோம்.
இவ்வாறு சொல்லும் போது. எல்லா மனிதர்களையும் இவ்வாறு தெளிவும் ஆழமும் நிபுணத்துவமும் கொண்டவர்களாக மாற்றலாமா? என்ற கேள்வி பலரிடத்தில் ஏற்பட முடியும். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது இலகுவானது. எனினும் அதற்கு முன்னர் சில அடிப்படையான விடயங்களை விளங்கிக் கொண்டு அந்தக் கேள்விக்கு வருவது பொறுத்தமானதாக இருக்கும். சில சமயம் அந்த அடிப்படைகளைப் புரிந்து கொள்கிறபோது,  அந்தக் கேள்வி அவசியமற்றதாகக் கூட மாறிவிடமுடியும்.
முஸக்கப் என்ற சொல்லை விளங்கும்போது அங்கு சில விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.
1.         கூர்மையான தெளிவான ஆழமான சிந்தனை கொண்டவன்
2.         பிறரில் தாக்கம் செலுத்தும் ஆற்றல் கொண்ட ஆனால் பிறரால் தாக்கமடையாத தனித்துவமான சிந்தனை கொண்டவன்
3.         உள்ளாந்த தூண்டுதலின் அடிப்படையில் தொடர்தேர்ச்சையான சிந்தனைத் தேடலை உடையவன்
4.         சிதறிய வடிவிலன்றி ஒழுங்குபடுத்தப்பட்டவகையில் தகவல்களை சேகரித்து வைத்திருப்பவன்
5.         புதிய சிந்தனைகளை உருவாக்குபவன்
6.         பொதுவாக எல்லா விடயங்கள் பற்றியும் பரிச்சயம் உடையவன்
7.         குறிப்பிட்ட ஒரு துறையில் ஆழ்ந்த நிபுணத்துவம் உடையவன்
அதுபோல் பிக்ர்என்ற விடயத்தை விளங்கும் போது, அகீதாவின் அடிப்படையில் எழுந்த ஒரு புதிய மனித நாகரீகத்தைத் தோற்றுவிப்பதற்காகச் செயற்படல். அந்த செயற்பாடு ஒரு முஸ்லிமுடைய அடிப்படைக் கடமை. மறுமை வரையில் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டிய ஒரு பணி. உலகின் முழு மனித வாழ்வையும் உள்ளடக்கிய ஒரு பணி. அதன் வடிவங்களும் வகைகளும் நிச்சயமாக பன்முகத்தன்மை வாய்ந்தவை. எனவே பன்முகத்தன்மை வாய்ந்த ஆற்றல்களும் திறமைகளும் அங்கு அவசியப்படுகின்றன. ஒவ்வொரு முஸ்லிமும் அவனது ஆற்றலைப் பிரயோகித்து பங்களிப்புச் செய்ய வேண்டிய அவசியம் இங்கு இருக்கிறது.
இப்போது மேற்கூறப்பட்ட இரண்டு அடிப்படைகளில் நின்று முஸக்கபுல் பிக்ர் என்பவனை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். முஸக்கபுல் பிக்ர் என்பவன் உலகில் தனது பணியை ஆழமாகவும் தெளிவாகவும் புரிந்து கொண்டவன். அந்த சிந்தனையில் மிகுந்த உறுதியுடன் காணப்படுபவன். இவன் பிறரையும் சூழலையும் மாற்றுகின்றவனேயன்றி,  பிறராலும் சூழலாலும் தான் மாறிக்கொள்பவனல்ல. இவன் உலகில் தனது பணியை ஒரு கடமையாகவும் இலட்சியமாகவும் கொண்டவன். அவனுடைய இலக்கு அவனுக்கு மிகவும் தெளிவானதாக இருக்கும். சிறப்புத் தேர்ச்சியுடன் தனது இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பான்.
இப்பொழுது ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வருவோம். எல்லா மனிதர்களையும் தெளிவும் நிபுணத்துவமும் கொண்டவர்களாக மாற்ற வேண்டுமா?
இந்தக் கேள்வி ஏன் தோன்றுகிறது எனின்,  தெளிவு,  நிபுணத்துவம் போன்ற சொற்களின் கருத்தை நாம் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்தே அமைகிறது.
இங்கு தெளிவு என்பது உலகில் ஒரு முஸ்லிம் தனது பணியைப் புரிந்திருக்க வேண்டும். அதன் பருமனையும் பாரத்தையும் விளங்கியிருக்க வேண்டும். அதற்காக,  தான் செயற்படுவது கடமை என்பதை அறிந்திருக்க வேண்டும். நான் எங்கே போகிறேன்? என்ன செய்யப் போகிறேன் என்பது கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளாகும். இதுவே சிந்தனைத் தெளிவு எனப்படுகிறது. ஆனால் இதன் ஆழ அகலங்களைப் புரிந்து கொள்வதில் எல்லா மனிதர்களும் நிச்சயமாக சமப்பட மாட்டார்கள். ஆனால் மேற்சொன்ன அடிப்படைத் தெளிவு அனைவரிடமும் காணப்பட வேண்டியது.
அடுத்து நிபுணத்துவ தேர்ச்சியையும் எல்லா மனிதர்களும் அடைய வேண்டும் என்று நிச்சயமாக இஸ்லாம் எதிர்பார்க்கவில்லை. மாற்றமாக ஒவ்வொரு மனிதனும் தன்னிடமுள்ள திறமைகளையும் ஆற்றல்களையும் முழுமையாக இந்தப் பணிக்காகப் பிரயோகிக்க வேண்டும் என்பதே இஸ்லாம் அவனிடம் எதிர்பார்க்கும் விடயமாகும். ஒவ்வொரு மனிதனையும் அல்லாஹ்தஆலா ஏதோ ஒரு ஆற்றலுடன்தான் படைத்திருக்கிறான். அதன்மூலம் அவன் இந்த மனித நாகரீக வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதே அவனிடம் எதிர்பார்க்கப்படும் விடயமாகும். இதனைத்தான் அல்குர்ஆன் இமாரதுல் அர்ழ்பூமியை வளப்படுத்தல் என்ற சொல்லின் மூலம் விளங்கப்படுத்தியிருக்கிறது.
எனவே,  முஸக்கபுல் பிக்ர் எனும் போது ஒரு மனிதனது மூளையில் புதிதாகப் பல விடயங்களைப் புகுத்துதல் அல்ல. மாற்றமாக அவனது படைப்பியல்பின் அடிப்படையில் அவனிடத்தில் காணப்படுகின்ற திறமைகள் ஆற்றல்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருவதுடன்,  அவற்றை ஒருமுகப்படுத்தி பயன்மிக்கதாய் மாற்றுகின்ற ஒரு பணியே இங்கு நடைபெறுகிறது.

தனிமனித உருவாக்கத்தில் முஸக்கபுல் பிக்ரின் முக்கியத்துவம்
1.         மேலே பேசப்பட்ட சிந்தனைத் தெளிவு எனும் விடயம் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையானதாகும். எனவே,  இங்கு ஒவ்வொரு தனிமனிதனும் தனது கடமையை மிகச் சரியாக நிறைவேற்றுவதற்காகவே உருவாக்கப்படுகிறான். அந்த வகையில் முஸக்கபுல் பிக்ர் என்பது தனிமனித உருவாக்கத்தில் ஒரு முக்கிய பண்பாகவும் கட்டாயமான ஒரு வேலைத்திட்டமாகவும் மாறுகிறது.
2.         இஸ்லாமிய சமூக மாற்றம் என்பது தனிமனிதனாக மாத்திரம் மேற்கொள்ளப்படும் ஒரு பணியல்ல. அது ஒரு கூட்டு முயற்சி. ஒருமுகப்படுத்தப்பட்ட கூட்டு முயற்சி. எனவே,  அங்கு சிந்தனை ஒருமைப்பாடுஇலக்கு ஒருமைப்பாடு என்பன மிகவும் அவசியமான விடயங்களாகும். ஒரு கூட்டு முயற்சி திசை மாறுவதும்,   சிதைவுற்று இலக்கை எட்டாமல் போவதும் பல சமயங்களில் சிந்தனை ஒருமைப்பாடின்மையாலும் இலக்கு ஒருமைப்பாடின்மையாலும் ஏற்படுகின்றது. முஸக்கபுல் பிக்ர் எனும் பண்பு இதுபோன்ற அபாயங்களிலிருந்துஇஸ்லாமிய சமூக மாற்றப் பணியைக் காக்கின்றது. மாத்திரமன்றி,   தெளிவான இலக்கு நோக்கிய பயணத்திற்கும் இந்த ஒருமைப்பாடு காரணமாகின்றது. எனவே, முஸக்கபுல் பிக்ர் என்ற பண்பின் மீதான உருவாக்கம் இங்கு அத்தியவசியமான ஒரு விடயமாக மாறுகிறது.
3.         இஸ்லாமிய சமூக மாற்றம் என்பது பல்வகை ஆற்றல்கள் திறமைகளை வேண்டி நிற்கும் ஒரு பணி என்ற வகையில்,  மனிதர்களின் ஆற்றல்களும் திறமைகளும் இனங்காணப்படல் வேண்டும். அவை வளர்க்கப்படல் வேண்டும். உரிய இடத்தில் உரிய முறையில் அவை பிரயோகிக்கப்படல் வேண்டும். அப்போதுதான் சமூக மாற்றப்பணி முழுமையான விளைவை தரக்கூடியதாகக் காணப்படும். முஸக்கபுல் பிக்ர் என்ற பண்பின் மூலம் ஒரு தனிமனிதனிடத்தில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான மாற்றமாக இதனையே நாம் அடையாளப்படுத்துகிறோம். அவனது ஆற்றல்கள் இனங்காணப்படுகின்றன,  வளர்க்கப்படுகின்றன. பிரயோகிப்பதற்கான களம் அமைத்துத் தரப்படுகின்றன. ஆகவே, தனிமனித உருவாக்கத்தில் முஸக்கபுல் பிக்ர் என்ற பண்பு எந்தளவு அவசியமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக!

1 comment:

  1. அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.. ஷெய்க் தாங்கள் பயன்படுத்தும் அரபி வார்த்தைகளை அதன் மூல மொழியிலும் எழுதினால் சரியாக அந்த வார்த்தையை உச்சரிக்க பழகுவோம்..ஆழமான கருத்து கொண்ட ஒரு ஆக்கம்.

    ReplyDelete