Thursday, November 28, 2013

இலங்கையில் இஸ்லாத்தை முன்வைத்தல்

பிறந்த நாளைக் கொண்டாடுதல், திருமண நாளைக் கொண்டாடுதல், ஆசிரியர் தினம், சிறுவர் தினம் போன்ற விஷேட தினங்களைக் கொண்டாடுதல் என்பன குறித்த ஒரு பார்வை

என்னிடம் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளில், ஒருவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவது, தனது திருமண நாளைக் கொண்டாடுவது, பெற்றோர் தினம், ஆசிரியர்கள் தினம், சிறியோர் தினம் போன்ற தினங்களைக் கொண்டாடுவது போன்றன முதன்மை பெறுகின்றன.
இவை குறித்து சற்று தேடிப் பார்த்த பொழுது, இரண்டு விதமான அபிப்ராயங்கள் அறிஞர்கள் மத்தியில் இருப்பதை அவதானிக்க முடிந்தது. ஒன்று இவற்றைக் கொண்டாடுவது தவறானதல்ல என்ற அபிப்ராயம், மற்றையது இவற்றைக் கொண்டாடுவது கூடாது, இவை பித்அத்கள் என்ற அபிப்ராயம்.

இந்த இருவகையான அபிப்ராயங்களுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வைத்திருக்கும் ஆதாரங்களை நோக்கும் போது, இவற்றில் முதலாவது அபிப்ராயமான இவற்றைக் கொண்டாடுவது தவறானதல்ல, இவற்றை ஹராம் என்றோ பித்அத் என்றோ கூறமுடியாது என்பதே மிகவும் சரியானதும் பொறுத்தமானதுமானதும் ஆகும் என்று தோன்றுகிறது.

ஏனெனில் இவற்றைக் கூடாது என்று சொல்வதற்கு உண்மையில் மிக வலுவான ஆதாரங்கள் இல்லை, சாதாரண ஒரு மனித நடத்தையை ஹராமானது என்று சொல்வதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்கின்ற போது, அது அனுமதிக்கப்பட்டது என்பதே, இமாம்களின் பொதுவான நிலைப்பாடாகும், இவற்றைக் கூடாது என்பவர்கள் இவற்றை மிகப் பிரதானமாக இரண்டு கண்ணோட்டங்களில் பார்க்கிறார்கள்,

ஒன்று -  
இஸ்லாத்தில் உள்ள பெருநாள் கொண்டாட்டங்களைப் போல் இவற்றை நோக்குகிறார்கள், இஸ்லாத்தில் இரு பெருநாட்களும் இபாதத்களாகும், எனவே வரையறுக்கப்பட்ட இரு பெருநாட்கள் மாத்திரமே இஸ்லாத்தில் காணப்படுகின்றன, அவற்றிற்கு மேலதிகமான ஒரு விடயத்தை நாம் கொண்டாட்டமாகக் கொள்வது பித்அத்தாகும்.

உண்மையில் இந்த வாதத்தில் முன்வைக்கப்படும் பெருநாட்கள் இபாதத்கள் என்பதிலும் அவற்றில் நாம் மேலதிக விடயங்களை சேர்க்க முடியாது, அவ்வாறு சேர்க்கப்பட்டால் அது பித்அத்தாகும் என்பதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆனால் ஒருவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடுவது அல்லது திருமண நாளைக் கொண்டாடுவது போன்றன அவா்களது தனிப்பட்ட சாதாரண மனித நடத்தைகள், அவற்றை ஒரு போதும் இரு பெருநாட்களைக் கொண்டாடுவது போன்ற இபாதத் வகையாகக் கருதமுடியாது. அதேபோல் சிறியோர் தினம் ஆசிரியர் தினம் போன்றவையும் சாதாரண சமூக நடத்தைகளேயன்றி அவை வணக்கவழிபாடுகள் அல்ல. இவற்றை வணக்க வழிபாடுகள் என்ற வகைக்குள் உள்ளீா்ப்பதற்கான எந்த அடிப்படையும் கிடையாது என்றே நான் நினைக்கிறேன். இவற்றை செய்பவா்களும் தாம் ஒரு இபாதத்தைச் செய்கிறோம் என்ற மனநிலையோடு நிச்சயமாக இவற்றைச் செய்வதில்லை.

சில சமயங்களில் அவர்கள் இவற்றை இபாதத் வகையில் சோ்க்க முயன்றமைக்கு, கொண்டாட்டங்கள் எல்லாம் இஸ்லாத்தில் இபாதத்கள் என்று கருதினார்களோ தெரியாது, நிச்சயமாக அவ்வாறல்ல, குறிப்பிட்ட இருபெருநாள் தினங்களிலும் கொண்டாட்டம் ஒரு வணக்கம், அந்த இரு நாட்களும்தான் இங்கு வணக்கமாகிறது, மாற்றமாக கொண்டாட்டம் என்பதே ஒரு வணக்கம் என்று இஸ்லாம் சொல்லவில்லை, அவ்வாறு சொல்வதற்கான ஆதாரங்களும் உண்மையில் இல்லை, ஆனால் மறுதலையாக இபாதத்தாக அமையாத கொண்டாட்டங்களைப் பற்றி நபியவா்கள் பேசியிருக்கிறார்கள், - உங்கள் உள்ளங்களுக்கு அவ்வப்போது ஆறுதல் அளியுங்கள் - என்று நபியவா்கள் கூறிய வாசகங்கள் கொண்டாட்டம் என்ற எண்ணக்கருவை பேசுதைக் காணலாம். பொதுவாக கொண்டாட்டத்தின் மூலம் அடைய விரும்பும் நோக்கம் என்ன என்று பார்த்தால் உள்ளத்திற்கான அமைதியும் சந்தோசமும் களிப்பும் அங்கு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த நோக்கம் வாழ்வின் பல்வேறுகட்டங்களில் மனிதனுக்கு அவசியப்படுகின்ற ஒரு அம்சமாகும் என்பதில் சந்தேகமில்லை, எனவே அதனை அவ்வப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே நபியவா்கள் இங்கு குறித்துக் காட்டியுள்ளார்கள்.

இஸ்லாத்தில் ஒரு இபாதத்திற்கு ஆதாரம் சொல்லும் போதுதான் அது தெளிவாக அல்குர்ஆனில் அல்லது சுன்னாவில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும், ஆனால் வணக்க வழிபாடு அல்லாத ஒரு விடயம் அனுமதிக்கப்படுவதற்கு அது அல்குர்ஆனிற்கும் சுன்னாவிற்கும் முரணில்லாமல் காணப்படுவது மாத்திரமே போதுமானதாகும், இதனைத்தான் இமாம்கள்  - பொருட்களிலும் மனித நடத்தைகளிலும் அடிப்படை அது அனுமதிக்கப்பட்டது என்பதாகும் -  என்ற விதியின் மூலம் விளங்கப்படுத்தியிருக்கிறார்கள். மேலே பேசப்பட்ட எல்லா செயற்பாடுகளும் சாதாரண மனித நடத்தைகள் என்ற வகையில் அவை அனுமதிக்கப்பட தனியாக அல்குர்ஆனிலோ சுன்னாவிலோ ஆதாரம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது, மாற்றமாக இவை தடுக்கப்பட்டவை என்பதற்கு ஆதாரம் இல்லாதவிடத்து இவை அனுமதிக்கப்பட்டவையாகவே கருதப்படும்.

ஆகவே இந்த செயற்பாடுகள் அனைத்தும் சாதாரண மனித நடத்தை வகையைச் சேர்ந்தனவாகும், இபாதத் வகையைச் சேர்ந்தனவல்ல, எனவே இவற்றை பித்அத்களாக கருத முடியாது.

இரண்டு
இவை மேற்குலக அல்லது பிறமதக் கலாச்சாரங்கள் என்றும் அவா்களது கலாச்சாரப் பண்புகளை முஸ்லிம்கள் பின்பற்றக் கூடாது, அவ்வாறு பின்பற்றும் போது நாமும் அந்த சமூகத்தைச் சோ்ந்தவா்களாக மாறிவிடுவோம், என்ற கருத்தை முன்வைக்கின்றனர். இதற்கு ஆதாரமாக சில ஹதீஸ்களைக் கூறுவர்.

அவர்கள் ஆதாரமாகக் கூறும் ஹதீஸ்களில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் அவற்றை விளங்கிக் கொண்டதில் ஏற்பட்ட, வேறுபட்ட நிலைப்பாடுதான் இது போன்ற ஒரு கருத்துக்கு அவர்கள் வருவதற்குக் காரணமானது என நினைக்கிறேன். இங்கு பிறமதத்தவா்கள் அல்லது பிறசமூகத்தவர்களின் எந்த விடயங்களைப் பின்பற்றுவதை உண்மையில் இஸ்லாம் தடைசெய்கிறது என்பது நோக்கத்தக்கது.

இது பற்றி கலாநிதி ஸல்மான் அவ்தா அவா்கள் கூறும் போது பிற சமூகத்தவர்களின் அல்லது பிற மதத்தவர்களின் நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள் அல்லது இஸ்லாத்தின் ஒரு அடிப்படையுடன் முரண்படக் கூடிய நடத்தைகள் போன்றைவையே முஸ்லிம்களுக்குத் தடைசெய்யப்பட்டவையாகும் மாற்றமாக மேற்கூறியவற்றுடன் சம்பந்தமில்லாத ஒரு மனித நடத்தை ஒரு போதும் இஸ்லாத்தின் பார்வையில் தடைசெய்யப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக ஒருவன் தான் பிறந்த நாளை நினைவு கூர்வதும் திருமணம் செய்த நாளை நினைவு கூா்வதும் அவனுக்கு சந்தோசத்தை அளிக்கக் கூடிய அம்சங்களாகும். அந்த சந்தோசத்தை அவன் அடுத்தவா்களுடன் பரிமாறிக் கொள்வது அவனது சந்தோசம் பன்மடங்காக மாறுவதற்கு துணையாக அமைகிறது. நபியவர்களிடம் திங்கட் கிழமைகளில் நோன்பு நோற்பதற்கான காரணத்தை வினவியபோது அது நான் பிறந்த நாள் என்று கூறியிருக்கிறார்கள். இங்கு நபியவா்கள் தான் பிறந்த நாளை நினைவு கூர்ந்திருக்கிறார்கள், நோன்பு நோற்பதன் மூலம் அத்தினத்தைக் கண்ணியப்படுத்தியிருக்கிறார்கள். இதுவும் ஒருவகையில் சந்தோச வெளிப்பாடும் கொண்டாட்டமுமாகும்.

இதுபோல் சிறியோர் தினம், ஆசிரியர் தினம் போன்றவையும் வேறு சமூகத்தவர்களின் திட்டமிட்ட திணிப்பாகவோ அல்லது எல்லாக் காலங்களிலும் இவர்கள் கௌரவப் படுத்தப்படவேண்டியவா்கள் அதனை குறிப்பிட்ட ஒரு தினத்திற்குள் முடக்கிவிடக் கூடாது என்பதாகவோ நோக்க வேண்டிய அவசியமில்லை. இங்கு இது போன்ற தினக் கொண்டாட்டங்களின் மூலம் ஒரு சந்தோசப் பரிமாற்றமும் கௌரவப் பரிமாற்றமுமே அதிகம் நடைபெறுகின்றது, இதனால் குறிப்பிட்ட தளங்களில் ஒரு புத்துயிர்ப்பூட்டல் ஏற்படுத்தப்படுகிறது. இது காலத்தின் அவசியமாகும்.

அத்துடன் இன்றைய உலக வழமைப்படி ஒரு விடயம் முக்கியமானது என்று சொல்ல வேண்டும் எனின் அதற்கான ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நவீன வழிமுறையாகவே இந்த தின நியமனம் கருதப்படுகிறது. அந்தவகையில் ஆசிரியர் தினத்திலோ அல்லது பெரியோர் தினத்திலோ சிறியோர் தினத்திலோ குறித்தவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோ அல்லது பரிசில்களைப் பரிமாறிக் கொள்வதோ அல்லது அதனை மையப்படு்த்தி ஒரு விழா எடுக்கப்படுவதோ ஒரு விரிவுரை நிகழ்த்தப்படுவதோ எதுவும் இஸ்லாத்தில் நிச்சயமாக தடுக்கப்பட்டவை அல்ல.

ஆனால் ஒரு விடயத்தில் நாம் கவனத்துடனும் தெளிவாகவும் இருக்க வேண்டும், இன்றைய உலகம் முக்கியமாகக் கருதும் எல்லா விடயங்களும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவை என்று பொருளல்ல, நாம் மேலே குறித்துக் காட்டியது போல் எமது நம்பிக்கைகள் வணக்கவழிபாடுகள் அடிப்படைப் பெறுமானங்களுடன் முரண்படாமல் காணப்படவேண்டும் என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. அதே போல் ஒரு நிகழ்வை நாம் கௌரவப் படுத்தும் போது இஸ்லாம் அனுமதிக்காத களியாட்டங்களாக அவை அமைந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

2 comments:

  1. மௌலவி அக்ரம் நளீமி அவர்களே உங்களுடைய ஆக்கத்தில் தெளிவாக விளங்குவதற்கு ஒருவிடயத்தைக் கூட சுட்டிக்காட்ட முன்வரவில்லை. உங்களைப் போன்று எனது பார்வையையும் இது கூடது என்பதற்கு பலவிடயங்களை அன்றாட நடவடிக்கைகளுடன் ஒப்பீட்டு நியாயப்படுத்தலாம்.

    வணக்கம் என்றால் வாழ்க்கை வாழ்க்கை என்றால் வணக்கம் என்பதே “இபாதத்” பற்றிய இஸ்லாத்தின் கோட்பாடாகும். இதனால்தான் எந்தவிடயங்களையும் குர்ஆன், ஸுன்னா இவற்றை முன்நிறுத்தித்தான் அனுகவேண்டும் என்பதையே இமாம்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

    இது பற்றி கலாநிதி ஸல்மான் அவ்தா அவா்கள் கூற்றைமாத்திரம்தான் நீங்கள் இணைத்திருந்திர்கள். என்றாலும் நீங்கள் மேற்கோல் காட்டிய ஸல்மான் அல் அவ்தாவின் கருத்தை நீங்கள் முழுமையகாக் குறிப்பிடவில்லை என நினைக்கின்றேன். இதோ அவருடைய கருத்து...

    If, on the other hand, you mean celebrating personal birthdays, then this is something different, since it is not intended as a devotional act or an act of worship. Therefore, it is not as serious a matter. Still, I tend to regard it as something disliked for people who are not already accustomed to celebrating this event in their culture, but do so merely to blindly ape cultural practices that are outside of their own experience...
    (http://maqasid.wordpress.com/2008/12/20/are-wedding-anniversaries-an-innovation-2/ )

    இது அவா் கூறியுள்ள வார்த்தை மாத்திரமேயன்றி மார்க்கமாகவோ இஜ்திஹாதகவோ சுற்றிக்காட்டப்படவில்லை.மேலும் அவா் கூறியுள்ள கடைசி வார்த்தைகளைப்பாருங்கள். ஒருவரது காலாச்சாரத்தில் அது இல்லாத பட்சத்தில் அதனைக் கொண்டாடுவதை அவா் விரும்பவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார். எனவே இது யுதா்கிளினதும் நஸாராக்களினதும் கலாச்சாரம் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டுமா....?

    அறிஞர்கள் என்ற ரீதியில் உங்களுடைய கருத்துக்கள்தான் நாளைய முஸ்லிங்களின் வழிகாட்டல்களாகப் போகுன்றன. அப்படி ஒரு சமூகம் உருவாக்கப்பட்டுவிட்டது. அதையே குர்ஆன், ஸுன்னாவை முன்னிருத்தி ஸஹாபாக்கள் இப்படி அனுகியிருக்கிறார்கள், இமாம்கள் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். என்று தெளிவாகப் பேசியிருந்தாள் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    உங்களைப் போன்று இவை குறித்து சற்று மேலதிமாக தேடிப் பார்த்த பொழுதுதான் ஒருவிடயம் என்னால் ஒருவிடயம் புரிந்துகொள்ளமுடிந்தது. ஸலபி அறிஞர்கள் மாத்திரம் அல்ல ஜமாத்தே இஸ்லாமி ஏன் இஹ்வான் அறிஞர்கள் கூட ஒருமித்த கருத்தில்தான் இந்த பிறந்தநாள் கொண்டட்டத்தில் இருக்கிறர்ர்கள். இவற்றையெல்லாம் தள்ளிவிட்டு நீங்கள் ????? அல்லாஹ்தான் காப்பாற்றவேண்டும்.

    நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீர்கள்)

    ReplyDelete
  2. பிறந்த நாள் கொண்டாட்டம் என்று சொல்லும் போதே... இரண்டு வித பேத்டேக்கள் நினைவிற்கு வருகிறது,

    ஒன்று, இந்திய சினிமாக்களில் காட்டுவது போன்ற பேத்டே அதாவது... களியாட்டங்கள் நிறைந்த, மது, ஹோட்டல், Party, Girl friends or Boy friends...இப்படியான Birthday partyகளே கண்ணுக்கு முன் வருகிறது... இதனை எப்படி பார்ப்பது?

    அடுத்து, சிறு பிள்ளைகளின் Birthday partyகள் அதாவது எப்படி தரம் 5 புலமைப் பரீட்சையை பெற்றோர்கள் (தாய்மார்கள்) ஒரு Competition ஆக மாற்றி வைத்திருக்கிறார்களோ அதேபோன்று Birthday களையும் ஒரு போட்டியாக... அதாவது, அவங்கட பிள்ளைக்கு இப்படி பேத்டே எடுத்தார்கள் நாங்கள் இப்படி எடுக்க வேண்டும்.... என்றளவிற்கு என்றால் ஒரு வயது பிள்ளைகளின் பிறந்த தினத்தையே மிக அமோகமாக எடுக்கும் அளவிற்கு போய்விட்டது...

    இப்படியான களியாட்டங்களை எப்படி பார்ப்பது..?

    ReplyDelete