Friday, November 22, 2013

அல்குர்ஆனுடனான உறவாடல் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கும்.

அல்-குர்ஆனுடன் உறவாடுங்கள், அதன் சிந்தனைகளுடன் கலந்து வாழுங்கள். நீங்கள் ஆச்சரியங்களைக் காண்பீர்கள். பல புதிய சிந்தனைகளும் கருத்துக்களும் ஊற்றெடுப்பதை அவதானிப்பீர்கள். உங்கள் சிந்தனையிலும் கற்பனையிலும் அவை பிரவாகித்து எழுவதைக் காண்பீர்கள். 
இமாம் இப்னு தைமியா அவர்கள் சிறையில் இருக்கும் போது அல்குர்ஆனைத் தவிர ஏனைய அனைத்தும் அவருக்குத் தடை செய்யப்பட்டபோது,  அவர் கண்ட அனுபவம் இதுதான். இதனால்தான் தனது முன்னைய காலங்களை அல்-குர்ஆனுடன் கழிக்காமல் அறிவு நூல்களுடன் கழித்தமைக்காக மிகவும் கவலையடைந்தார்.
அவரது மாணவரான இமாம் இப்னுல் கையிம் அவர்கள் கூறுகிறார்கள்: அல்-குர்ஆனை ஆழ்ந்து நோக்குதல் என்பது,  அதன் கருத்துக்களை நோக்கி அவனது உள்ளம் ஆழ்ந்து செல்வதுடன் அதனை  விளங்கிக் கொள்வதற்காக தனது சிந்தனைகளை ஒன்றுதிரட்டவும் வேண்டும். இதுதான் ஆழ்ந்து நோக்குதல் என்பதன் பொருளாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்டமையின் நோக்கமும் இதுவாகும். மாற்றமாக வெறுமனே ஓதுதல் மாத்திரம் நோக்கமாக இருக்கவில்லை.
 அல்லாஹ்தஆலா கூறுகிறான் உமக்கு இறக்கப்பட்ட நூல் மிகவும் பரகத் பொறுந்தியது. அதனது வசனங்கள் ஆழ்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியவைகளாகும். அறிவுடையவர்கள் அதனை அறிந்து கொள்வார்கள்.” - ஸாத் – 29-
இமாம் ஹஸனுல் பஸரீ (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் அல்குர்ஆன் ஆய்வுக்காகவும் செயற்படுத்துவதற்காகவுமே இறங்கியுள்ளது. எனவே,  அதனை ஓதுவதை செயலாக மாற்றிக் கொள்ளுங்கள்என்றார்கள்.
இமாம் இப்னுல் கையிம் அவர்கள் தொடர்ந்தும் கூறுகிறார்கள் ஒரு மனிதனுக்கு உலகிலும் மறுமையிலும் மிகவும் பயனுள்ள விடயமாகவும் மறுமையில் அவனுக்கு விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவும் அல்குர்ஆனுடனான உறவாடல் காணப்படுகின்றது. அதற்கு நிகரான ஒரு விடயத்தைக் காண்பதரிது. அல்-குர்ஆன் பேசும் சிந்தனைகளில் அவன் ஆழ்ந்து கவனத்தைச் செலுத்துகின்ற போது,  நன்மையினதும் தீமையினதும் பிரதான பிரிகோட்டை அவன் துல்லியமாகக் கண்டு கொள்வான். மாத்திரமல்ல நன்மை தீமை இரண்டிற்குமான காரணங்கள்,  நோக்கங்கள்,  வழிகள்,  விளைவுகள்,  நன்மையையும் தீமையையும் பின்பற்றுபவர்களுக்கு என்ன நடக்கப் போகின்றது? போன்ற பல விடயங்கள் அவனுக்குத் தெளிவாகின்றன. அல்-குர்ஆன் அவனது உள்ளத்தில் ஈமானை உறுதிப்படுத்துகின்றது. இம்மை-மறுமை, சுவர்க்கம் - நரகம் போன்றவற்றின் காட்சிகளை அவனது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. முன்னைய சமூகங்களை அவனுக்கு இனம்காட்டிக் கொடுக்கின்றது. அவர்களது வாழ்வில் என்ன நடைபெற்றது என்பதையும், அவற்றில் படிப்பினை பெற வேண்டிய இடங்களையும், அவர்களில் அல்லாஹ்வின் நீதி எந்த வடிவில் செயல் வடிவம் பெற்றது என்பதையும் அவனுக்குக் கற்றுக் கொடுக்கின்றது. மாத்திரமன்றி அல்லாஹ்தஆலா யார்? அவனது பண்புகள் என்ன? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? அவனுக்கு விருப்புக்குரிய விடயங்களும் வெறுப்புக்குரிய விடயங்களும் எவை? அவனை அடைந்து கொள்வதற்கான வழிகள் எவை? அவனை அடைந்து கொள்பவர்களது நிலை என்ன? போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் அல்குர்ஆன் அவனுக்குப் பதில் சொல்கின்றது. அத்துடன் மனித மனம் அதன் பண்புகள்,  அதனை உயிர்ப்பிக்கக் கூடியவைகள்,  பாழ்ப்படுத்தக் கூடியவைகள்,  சுவர்க்க வாசிகளின் நிலை,  நரக வாசிகளின் நிலை,  அவர்களது அடையாளங்கள்,  ஏனைய படைப்பினங்கள் பற்றிய செய்திகள் என மனிதனுக்கு அனைத்தையும் அல்குர்ஆன் சொல்லிக் கொடுக்கின்றது.
சுருங்கக் கூறினால் மனிதனுடைய இரட்சகன்,  அவனை அடைந்து கொள்ளும் வழி, அவனிடம் மீண்டு வருவோர் பெற்றுக் கொள்ளக் கூடிய கண்ணியங்கள் ஆகிய மூன்று விடயங்களையும், மறுபுறத்தில் ஷெய்த்தான் எதனை நோக்கி அழைக்கிறான் என்பதும் அவனை அடைந்து கொள்ளும் வழி என்ன என்பதும் அவனுக்கு செவிசாய்ப்பவர்கள் என்னவகையான வேதனைகளையும் அவமானங்களையும் பெறுவார்கள் என்பதும் அல்குர்ஆனில் பேசப்படும் பிரதான உண்மைகளாகும். இந்த ஆறு அம்சங்களையும் ஒரு அடியான் அறிந்து கொள்வது அவசியமாகும். அல்குர்ஆன் அவனுக்கு இதனைக் கற்றுக் கொடுக்கின்றது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் அது அவனுக்கு வேறு பிரித்துக் காட்டுகிறது. அவனது உள்ளத்தில் அது ஒரு சக்தியாக மாறுகிறது. உள்ளம் விசாலமடைகிறது. ஏனைய மனிதர்களை விடவும் இங்கு அவன் வித்தியாசப்படுகிறான் - தஹ்தீப் மதாரிஜ் ஸாலிகீன் - பக்கம் 243, 244-
இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள் கூறுகிறார்கள்: அல்-குர்ஆனை விளங்குவதற்குரிய மிக எளிய மூலம் மனிதனுடைய உள்ளமாகும். ஒரு முஃமினுடைய உள்ளம் அல்-குர்ஆனுக்கான மிகச் சிறந்த தப்ஸீர் என்பதில் சந்தேகமில்லை என்றார்கள்.
ஒருவன் அல்குர்ஆனிலிருந்து நேர்வழி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன்,  உள்ளச்சத்துடன்,  தனது சிந்தனைகளைச் சிதற விடாமல்,  அல்குர்ஆனின் கருத்துக்களை விளங்கிக் கொள்ளும் வகையில் தனது சிந்தனையை ஒன்றுகுவித்து ஓதுவதுடன்,  நபியவர்களது வரலாறு குறித்த ஒரு பரிச்சயத்தையும் பெற்றிருப்பான் எனின்,  அல்குர்ஆன் பேசும் கருத்துக்களை அவன் இலகுவான வடிவில் புரிந்து கொள்வான். அதன் பின்னர் தப்ஸீர் நூல்களை வாசிக்கின்றபோது,  பொருள் புரியாத சொற்கள்,  வசனங்களுக்கான கருத்தைப் புரிந்து கொள்வான். சில மேலதிக விளக்கங்களையும் பெற்றுக் கொள்வான். இது ஏற்கனவே உள்ளத்தில் பாய்ச்சப்பட்ட வெளிச்சத்திற்கு மேலும் பிரகாசத்தை வழங்குவதாகக் காணப்படும்.
இமாம் ஹஸனுல் பன்னாவுக்கு முன்னர் இதே உண்மையை இமாம் இப்னுல் கையிம் அவர்களும் பேசியிருக்கிறார்கள். அவர் சொல்கிறார் "அல்லாஹ்வை நோக்கிய பயணத்தில் தலையாய அம்சம் எதுவெனில்,  அல்குர்ஆனுடன் ஒன்றித்த உறவாடலும் சிந்தனையுமாகும். அந்த உறவாடல் உள்ளத்தை இயங்க வைத்து விடுகின்றது. அங்கு பல சிந்தனைகள் துளிர்விடத் தொடங்குகின்றன. இந்த நிலைதான் அவனில் செயல்களை உருவாக்கி விடுகின்றது. உள்ளத்திலிருந்து தோன்றும் இந்த செயல்கள்தான் அவனது பாதையை சீரமைக்க வல்லது. அவனிடத்தில் அமைதியையும் நிதானத்தையும் தோற்றுவிக்க வல்லது.என்கிறார்.
அவர் தொடர்ந்தும் கூறும்போது, எந்த ஒரு விடயத்தையும் மேலோட்டமாகப் பார்க்கும் போது நாம் புரிந்து கொள்பவை கொஞ்சம்தான். ஆனால் நாம் நிதானித்து ஆழ்ந்து பார்க்கும்போது கண்டு கொள்பவை மிக அதிகம். சிலர் நினைப்பார்கள் பெரும் தப்ஸீர் ஆசிரியர்களின் விளக்கங்கள் எமது கைகளில் இருக்கின்றன தானே,  இதற்கு மேல் வேறென்ன தேவை? என்று கேட்கலாம். உண்மைதான் அவர்களது விளக்கங்கள் பெறுமதி வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அல்குர்ஆன் கூற வந்த அனைத்து சிந்தனைகளும் அவர்களது விளக்கங்களுக்குள்ளே மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அல்குர்ஆன் எல்லாக் காலத்திற்குமுரிய வழிகாட்டி. அது எத்தனையோ உண்மைகளை உள்ளே வைத்திருக்கிறது. அதனை வெளியே கொண்டுவர வேண்டியது ஒரு பெரிய கடமை. அந்தக் கடமையை எல்லோரும் மேற்கொள்ளலாம். அல்குர்ஆன் எல்லோருடனும் உறவாடக் கூடியது. அவர்களது தரத்துக்கேற்ப அவர்களுடன் உறவாடும். சிந்தனைகளை அவர்களுக்கு வழங்கும். அவற்றை நாம் மறுக்காதிருக்க வேண்டும். அல்குர்ஆனுடன் தொடர்ந்தும் உறவாடுவோம். அதன் சிந்தனைகளில் வாழ்வோம்.

அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

No comments:

Post a Comment