Tuesday, November 5, 2013

முஹர்ரம் செய்தி

இஸ்லாமிய புதுவருடத்தின் ஆரம்பம் முஹர்ரம் மாதம்,ஷுரா எனப்படும் அதன் பத்தாவது நாள் குறித்து ஒரு ஹதீஸில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள். நபியவர்கள் மதீனாவுக்கு வந்த போது,  யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாள் நோன்பு நோற்பதை அவதானித்து, அதில் என்ன விஷேடம் எனக் கேட்டார்கள். அதற்கவர்கள் இது ஒரு சிறப்புக்குரிய நாள். அல்லாஹ்தஆலா மூஸாவையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களது எதிரியிடமிருந்து காப்பாற்றிய நாள். எனவே, மூஸா  அந்நாளில் நோன்பு நோற்றார்கள். அப்போது நபியவர்கள் உங்களை விடவும் மூஸாவில் எனக்கு உரிமை அதிகம் என்று கூறி, தான் நோன்பு நோற்றதுடன் பிறரையும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். புஹாரி, முஸ்லிம்--
மற்றோர் அறிவிப்பில், இது ஒரு மகத்தான நாள், அல்லாஹ் மூஸாவையும் அவரது சமூகத்தையும் இந்நாளில் காப்பாற்றினான். பிர்அவ்னையும் அவனது சமூகத்தையும் மூழ்கடித்தான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக மூஸா இன்றைய தினம் நோன்பு நோற்றார்கள். நாமும் நோன்பு நோற்கிறோம் என்றார்கள்.
இந்த ஹதீஸ் பிர்அவ்ன் எனும் முதல்தர அநியாயக்காரன் ஒருவனின் அழிவை ஞாபகப்படுத்துகிறது. மனித வரலாற்றில் மிகப்பெரும் நிகழ்வுகளில் ஒன்று என இதனைக் குறிப்பிடுவதில் தவறில்லை. ஏனெனில், மூஸா (அலை) அவர்களது தஃவாவுக்குத் தடையாக இருந்த இந்த பிர்அவ்னை விடவும், மிகப்பெரிய அநியாயகாரன் ஒருவனைப் பற்றி வரலாறு பேசவில்லை. அப்பேர்ப்பட்ட ஒரு அநியாயக் காரனின் அழிவையே இந்த ஹதீஸ் நினைவில் கொண்டு வருகிறது..
உலகில் அநியாயம் அழிந்து விடுகிறது. நீதியே வெற்றி பெறுகிறது. அசத்தியம் அழிந்து விடுகிறது. சத்தியமே வெற்றி பெறுகிறது, என்ற பேருண்மையை இந்த ஹதீஸ் சொல்கிறது. ஆனால் இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒரு முக்கிய உண்மை என்னவெனின், அந்த செயன்முறையை அல்லாஹ்தஆலா எவ்வாறு நிகழ்த்துகிறான் என்பதாகும். அதனை பிர்அவ்ன் அழிக்கப்பட்டு, மூஸாவும் அவர்களது சமூகமும் காப்பாற்றப்பட்ட சம்பவத்தை அல்குர்ஆன் எவ்வாறு முன்வைத்திருக்கின்றது என்பதைப் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
ஸுரதுஸ் ஷுஅராவின் 60 முதல் 68 வரையான வசனங்களில் அல்லாஹ்தஆலா இந்த சம்பவத்தைக் குறிப்பிடுகின்றான். மூஸா (அலை) அவர்கள் இரவோடு இரவாக தனது சமூகத்தை அழைத்துக் கொண்டு, பலஸ்தீனத்தை நோக்கிப் புறப்படுகிறார்கள். அதிகாலையில் விடயம் கேள்விப்பட்டு,  பிர்அவ்ன் தனது படையுடன் அவர்களைத் துரத்தி வருகிறான். இடையில் கடல் குறுக்கிடுகிறது. மூஸாவின் சமூகத்தினர் சொல்கிறார்கள். நாங்கள் மாட்டிக் கொண்டு விட்டோம். ஆனால்,  மூஸா (அலை) அவர்கள்,  இல்லை என்னுடன் எனது இரட்சகன் இருக்கிறான்,  அவன் ஒரு வழியைக் காட்டுவான் என்கிறார்கள். அப்போது கடலின் மீது தனது தடியினால் அடிக்குமாறு அல்லாஹ்தஆலா கட்டளை இடுகிறான். அங்கே பாதைகள் தோன்றுகின்றன. அவர்கள் கடலைக் கடந்து செல்கிறார்கள். பின்தொடர்ந்து வந்த பிர்அவ்னும் அவனது படையினரும் கடலில் மூழ்கி அழிந்து போகிறார்கள்.
இந்த வசனங்களை அமைதியாக வாசிக்கின்ற பொழுது, அவற்றில் மறைந்துள்ள சில அற்புதமான உண்மைகளைக் காணலாம்.
உலகில் அசத்தியம் அழிந்து சத்தியம் வெல்வதும் அநீதி அழிந்து நீதி வெல்வதும் வெறுமனே மனித முயற்சிகளிலும், அவர்களது திறமைகளிலும் மாத்திரம் தங்கி நிற்கக் கூடிய ஒரு விடயமல்ல. மாற்றமாக அல்லாஹ்தஆலாவின் கை அதில் பெரியளவில் ஓங்கியிருப்பதை இந்த வசனங்கள் வலுவாக முன்வைக்கின்றன. இங்கு மூஸாவைக் காப்பாற்றியதும், பிர்அவ்னை அழித்ததும் தானே மேற்கொண்டதாக அல்லாஹ்தஆலா கூறுகின்றான்.
இதனை மற்றொரு வகையில் கூறினால், ஒரு சமூக மாற்றம் என்பது மனிதத் திட்டமிடல்களாலும் அவனது பகுத்தறிவுச் சமன்பாடுகளாலும் மாத்திரம் நிகழ்த்தப்படும் ஒரு பணியல்ல. மாற்றமாக அங்கு அல்லாஹ்தஆலாவின் நேரடி உதவி பெற்றுக் கொள்ளப்படுவதற்குரிய ஒரு பெரிய பரப்பு காணப்படுகிறது. பௌதீகக் காரணிகள் எதுவும் துணை செய்யாத ஒரு சந்தர்ப்பத்தில் யாரும் எதிர்பாராத ஒரு கோணத்தில் அல்லாஹ்தஆலா உதவி செய்வான். இந்த விதிதான் மூஸா (அலை) அவர்களது தஃவாவிலும் நடைபெற்றது. முன்னால் கடல்,  பின்னால் பிர்அவ்னின் படை,  சாதாரண பௌதீகக் காரணிகளின் அடிப்படையில் அவர்கள் உயிர்தப்புவது சாத்தியமற்றது. இந்த இடத்தில்தான் மனிதக் கணிப்பீடுகளைத் தாண்டி அல்லாஹ்வின் உதவி வருகிறது.
மூஸா (அலை) அவர்களது நம்பிக்கையின் ஆழத்தைப் பாருங்கள். பௌதீக ரீதியாக சாத்தியமில்லை என்பது தெளிவாகத் தெரிந்த போதும், அவரது சமூகத்தினர் நாம் உயிர்தப்ப முடியாது,  வேறுவழியில்லை,  நன்றாகவே மாட்டிக்கொண்டு விட்டோம் என்று மிகவும் உறுதியாகக் கூறியபோதும். எனது இரட்சகன் எனக்கு ஒரு வழியைக் காட்டுவான் என்ற ஆழமான நம்பிக்கையுடன். தான் எடுத்த தீர்மானத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். இங்கு மூஸா அலை அவர்களின் அல்லாஹ் மீதான நம்பிக்கையும்,  கொள்கை மீதான உறுதியும்,  பிர்அவ்னுடன் சமரஸம் பேச முற்படாமையும் அரசியல் சாணக்கியமின்மை அல்லது அரசியல் முதிர்ச்சியின்மை என்று நாம் ஒரு போதும் சொல்ல மாட்டோம்.
மூஸா அலை அவர்களது பிர்அவ்னுக்கு எதிரான போராட்டம் நிகழ்ந்த அதே எகிப்திய பூமியில் இன்று ஒரு போராட்டம் நடக்கிறது,  பிர்அவ்னின் கொடூரத்துடன் ஒரு தரப்பும்,  மூஸாவின் நம்பிக்கையுடன் மற்றொரு தரப்பும் போராடுகின்றனர்.
ஒரு எகிப்திய சகோதரரிடம் கேட்கப்பட்டது தற்போதைய எகிப்திய சூழலில் தீர்வு எங்கிருந்து வரலாம்? எந்த வடிவில் வரலாம்? இது பற்றி ஏதேனும் எதிர்வு கூற முடியுமா? அவர் இவ்வாறு பதில் தந்தார். பௌதீகக் காரணிகளை விடவும் நாம் அல்லாஹ்வின் மீதுதான் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். எங்களுக்குத் தெரியும் சூழ்நிலை மிகவும் ஆபத்தானது. ஒரு பெரும் தியாகம் செய்யப்பட வேண்டியிருக்கும். ஆனாலும் நாம் நம்பிக்கையுடன் களத்தில் இறங்கியிருக்கிறோம். சத்தியத்திற்கும அசத்தியத்திற்கும் இடையிலான இறுதிக்கட்டப் போர் இது. நிச்சயமாக அல்லாஹ்தஆலா இதில் எங்களுக்கு வெற்றியைத் தருவான். அது எந்தத் திசையில் இருந்து வரும்? எந்த வடிவில் வரும்? அதனை அவன் மட்டுமே அறிவான். நிச்சயமாக அவனது தீர்வு மனிதக் கற்பனைகளுக்கு அப்பால்பட்டது. மூஸாவுக்கு கடல்களைப் பிளந்த கொடுத்தது போல்,  குகைவாசிகளுக்கு முன்னூறு வருட தூக்கத்தைக் கொடுத்தது போல்,  மனிதப் பகுத்தறிவு,  கற்பனை செய்யாத,  எதிர்பார்க்காத புறத்திலிருந்து அவனது உதவி வரும். அல்லாஹ் அவ்வாறுதான் உதவி செய்வான். அவனது தீர்வு இவ்வாறுதான் இருக்கும் என்பதை மனிதப் பகுத்தறிவால் துல்லியமாகக் கணிக்க முடியாது. அல்லாஹ் நிச்சயமாய் ஒரு தீர்வைத் தருவான் என்று நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம். எங்களது கடமை என்ன தெரியுமா? எமது கொள்கையில் நாம் உறுதியாக இருப்பதுதான். கொள்கை நிலை மாறவில்லை. தடம் புரளவில்லை என்பதுவே ஒரு மிகப்பெரிய வெற்றி என்றார்.

இந்த நம்பிக்கையைத்தான் மூஸா (அலை) அவர்கள் அன்று பிரதிபளித்தார்கள். இந்த கொள்கை உறுதியைத்தான் மூஸாவிடமும் பார்த்தோம். அவரது கொள்கையும் வெற்றி பெற்றது. பிர்அவ்னுக்கு எதிரான போராட்டமும் வெற்றி பெற்றது. நிச்சயமாக இன்றும் கொள்கையும் வெற்றி பெறும். போராட்டமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடனிருப்போம் என்ற சுபசோபனத்தை முஹர்ரம் செய்தியாய் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷமடைகின்றேன். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.

No comments:

Post a Comment